பா.ஜ.கவின் மாநில நிர்வாகி யான நெல்லை பாளையைச் சேர்ந்த அந்த புள்ளி செய்த பம்பர் மோசடிதான் மாவட்டத்தின் அதிர்ச்சியான ஹாட் டாபிக்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள கனையர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், அரியலூரிலுள்ள தனியார் வங்கியின் கிளை மேலா ளர் பதவியிலிருப்பவர். ஆசை யாரைத்தான் விட்டது. இவர் தனது கூகுளில் வந்த லிங்க் மூலம் ஒரு டிரேடிங் குரூப்பில் இணைந் திருக்கிறார். வங்கிக் கணக்கு வழக்குகளில் அன்றாடம் புழங்கு கிற மோசடி, ஏமாற்றுகிற பேர்வழிகளின் பாதைகள் அனைத்தையும் அறிந்த மேலாளர் ராஜசேகர், வரப் போவதை யறியாமல் அந்தக் குழுவைச் சேர்ந்த அட்மின்களின் வசியப் பேச்சில் மயங்கியிருக்கிறார்.
ஆன்லைன் டிரேடிங் மூலம் 500 சதவீத லாபமடையலாம் என்று அந்தக் குழுவின் அட்மின்கள் கூறியதையடுத்து, தன் செல்போனில் தனியார் செயலியைப் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வர்த்தகத் தில் ஈடுபட்ட ராஜசேகருக்கு ஆரம்பத்தில் 3.45 லட்சம் வருமானம் கிடைக்க, அதை தன் வங்கிக் கணக்கின் மூலம் எடுத்துக்கொண்டவர், பின் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, அந்த நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக 46.90 லட்சம் செலுத்தியிருக்கிறார். இதையடுத்து அந்த செயலியில் 25 கோடி வரை சேர்ந்திருக்கிறது. அந்தப் பணத்தை ராஜசேகர் எடுப்பதற்கு முற்பட்டபோது, 2 சதவிகிதம் சேவைக் கட்டணமாக 50 லட்சம் தரக் கேட்டுள்ளனர் அந்த நபர்கள்.
இதனால் சந்தேகப்பட்ட ராஜசேகர் 1930 என்கிற சைபர் க்ரைம் எண்ணைத் தொடர்புகொண்டு நடந்தவை களைப் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் அரியலூர் மாவட்ட எஸ்.பி.யான விஸ்வேஸ் பா.சாஸ்திரி உத்தரவின்படி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் இசைவாணி வழக்குப் பதிவு செய்து தனது டீமோடு விசாரணை நடத்தியிருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் இசைவாணி டீம், சைபர் க்ரைம் கணக்குகளை அலசி ஆராய்ந்ததில், இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளர் நெல்லையிலுள்ள பாளை பகுதியின் புதுப்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த வேலு என்பது தெரியவந்திருக்கிறது.
பாளை. காவல்துறையின் உதவியோடு அக்டோபர் 05 அன்று அதிகாலை பாளை பகுதிக்குள் புகுந்த இன்ஸ்பெக்டரின் சைபர் க்ரைம், அங்கிருந்த வேலுவை வளைத்ததுடன் அங்கு சோதனை நடத்தியதில் வேலுவிடமிருந்து ஐந்து லட்சம் ரொக்கப் பணம், 2 செல்போன்கள், 6 காசோலை புக்குகள், 5 ஏ.டி.எம். அட்டைகள், ஆபீஸ் சீல்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி, அரியலூர் கொண்டுவந்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், வேலுவை திருச்சி சிறையிலடைத்திருக்கிறார்கள்.
இது செய்தியாய் வெளியே வர, மாவட் டத்தில் மட்டுமல்லாமல் பா.ஜ.க.விற்குள்ளேயும் பரபரப்பாகிவிட்டது என நம்மிடம் பேசிய நெல்லை மாநகர பா.ஜ.க.வின் புள்ளிகள், "வேலு சாதாரண நபரல்ல. பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர். பா.ஜ.க.வில் அ.மலையின் மூலம் பதவியைப் பெற்று அவரது விசுவாசியானவர். அவர்மூலம் கடந்த எம்.பி. தேர்தலின்போது நெல்லைக்குப் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்ற நெல்லை பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வேலுவும் இணைந்து படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அ.மலையின் கட்சிப் பதவி காலாவதி யானதையடுத்து புதிய மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட நயினார் நாகேந்திரனைச் சந்தித்து வாழ்த்துடன் சால்வையும் போர்த்தி யிருக்கிறார்.
இப்படி தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களைக் காட்டி, மாநகரின் பெரிய பெரிய புள்ளிகளை அணுகியவர், தனக்கு மாநிலம் முழுக்க செல்வாக்கு இருப்பதால் கோடிகள் அளவு பைனான்ஸ் தேவைப்பட்டால் உடனே ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு இத்தனை சதவிகிதம் தனக்கான கமிசன் என்று டீல் பேசியும் வந்திருக்கிறாராம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, நெல்லை பா.ஜ.க.வைத் தொடர்பு கொண்ட மாநில பா.ஜ.க. தலைமை, நெல்லை மேலப்பாளையம் பகுதியின் முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் வேலுவின் மீது பதிவான சீட்டிங் எப்.ஐ.ஆர். பற்றியும் விசாரித்திருக் கிறார்கள். அதன்பின் அவர்மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி எடுக்கப்பட்டிருந்தால் இத்தனை பெரிய மோசடி நடந்திருக்காது'' என சொன்னார்கள் தாமரைப் புள்ளிகள்
பா.ஜ.க. புள்ளி வேலுவைக் கைதுசெய்த அரியலூர் மாவட்ட காவல்துறையினர், வேலுவின் பிற மோசடிகள், அவரது ஆன்லைன் மோசடிக் கூட்டாளிகள் பற்றிய விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆன்லைன் கிரிமினல்கள்!
-ப.இராம்குமார்