தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறது தமிழகம். போட்டி என்பது ஆளும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கும்தான். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க மற்றுமுள்ள கட்சிகள், அவர்கள் போட்டியிடாத இடங்களிலும் தங்களின் கொடி மற்றும் கரைவேட்டி, துண்டு போன்ற அடையாளத்துடன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரித்தனர்... களப்பணியாற்றினார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரின் சுயஅடையாளத்தைக் காட்டாமல் அவர்களுக்கும் காவி ஆடை அணிய வைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை காவிப்படையாக மாற்றிவிட்டது. பா.ஜ.க.
குறிப்பாக, மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் அரவக்குறிச்சி, தாராபுரம், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டது. இதில் கோவை தெற்கு தொகுதியைத் தவிர பா.ஜ.க.வுக்கு தொண்டர்களோ, அமைப்பு பலமோ மற்ற மூன்று தொகுதிகளிலும் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.வினர்தான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்தனர். இதில்தான் பா.ஜ.க.வின் சூது வெளிப்படையாகத் தெரிகிறது. பெயர் சொல்ல விரும்பாத, தற்போது சீட் கிடைக்காத சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் வேதனையுடன் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
""கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த நான்கு தொகுதிகளிலும் பா.ஜ.க தனியாக நின்றால் ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டா யிரம், ஐயாயிரம், அதிகபட்சம் பத்தாயிரம் வாக்குகளைத் தான் அவர்களால் பெற முடியும். ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியான 30 சதவீதத்தை அப்படியே பெற வாய்ப்புள்ளது. அந்த அளவுக்கு அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்காக களப்பணியாற்றினர். எங்களது ஊராட்சி கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், நாங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பூத் கமிட்டியினர்... அதாவது ஒரு பூத்துக்கு ஆண்கள் 25, பெண்கள் 25 பேர் என எல்லோரையும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் முதல் பதவி பொறுப்புக்குத் தகுந்தாற் போல் சிலருக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் வரை வேட்புமனுத் தாக்கலுக்கு அடுத்தநாளே பா.ஜ.க.வினர் வாரி வழங்கிவிட்டனர்.
அதுதவிர ஒவ்வொருநாளும் செலவுக்குத் தனியாகத் தந்தனர். இதுதவிர ஒரு ஓட்டுக்கு தலா இரண் டாயிரம் முதல் மூவாயிரம் வரை தாராளமாகக் கொடுத்தார்கள். பா.ஜ.க தொகுதிகளுக்கு பல கோடி ரூபாய் கர்நாடகாவிலிருந்துதான் இறக்குமதியானது. இப்படியெல்லாம் கொடுத்து எங்க நிர்வாகிகள், தொண்டர்களை பணத்தால் மயக்கி மக்களிடம் எப்படி ஓட்டுக் கேட்க வைத்திருக்கிறார்கள் பாருங்கள்? அதாவது நம்ம ரெட்டை இலை சின்னம்தான் இப்ப தாமரை... இனி தாமரைதான் நம்ம சின்னம். ரெட்டை இலைக்கு பதிலா தாமரை தான் என பிரச்சாரம் செய்ய வச்சாங்க. கூட்டணிக் கட்சி சின்னம்னு எங்கேயும் சொல்றதில்லே. மொடக்குறிச்சியில பூந்துறையில இருக்குற தலித் காலனியில ஓட்டுக் கேட்கும்போது ஒரு மூதாட்டி ""ஏப்பா எம்.ஜி.ஆரு, ஜெயலலிதாம்மா சின்னம்தானே ரெட்டை இலை. அது இல்லையா?''னு கேட்டது. அதுக்கு எங்க ஆளுக, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா சின்னமான ரெட்டை இலைதான் இப்போ தாமரை சின்னம்'னு அந்தம்மாவுக்கு புரிய வெச்சாங்க.
சரி, பா.ஜ.க. ஓட்டு வாங்கறதுக்குத்தான் இப்படியெல்லாம் பேச வைக்குதுனு ஒதுங்க முடியலே. காரணம் எங்க நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோருக்குமே காவித்துண்டு போட்டுவிட்டார்கள். கருப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை என்ற கரைபோட்ட துண்டுகள் யார் கழுத்திலும் இல்லை. சிலர் வேட்டியே காவி கலர்லேதான் கட்டிக்கிட்டு வந்தாங்க. அந்த அளவுக்கு பணம் கொடுத்து மூளைச்சலவை செய்திட்டாங்க. ஓட்டுக் கேட்கப் போகும் போது அ.தி.மு.க. அடையாளமான துண்டு அணியாமல் காவித்துண்டு போடுவது வேதனை யளிக்கிறது. பாருங்க, தாராபுரத்துல பிரதமர் மோடி கலந்துக்கிட்ட கூட்டத்துலகூட முதல்வர், துணைமுதல்வர் கலந்துக்கிட்டாங்க, ஆனா அதுலகூட அ.தி.மு.க. அடையாளம் இல்லாமல் எல்லாமே காவிமயமாகத்தான் இருந்தது.
இவுங்க தேர்தல்ல ஜெயிக்கறாங்களோ, தோக்கறாங்களோ... ஒண்ணுல உறுதியா ஜெயிச்சுட்டாங்க. அ.தி.மு.க. நிர்வாகிகள், அடி மட்டத் தொண்டன், வாக்காளர்கள்வரை எல்லோரையும் காவிமயமாக்கிவிட்டனர். இவர்கள் போட்டியிடும் இருபது தொகுதி களிலும் அ.தி.மு.க. அமைப்பு பா.ஜ.க.வுக்குள் கலந்துவிட்டது. இது ஒன்றரைக் கோடி தொண்டன் உள்ள அ.தி.மு.க.வுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது'' என பரிதாபமாகக் கூறினார்.
வெற்றி, தோல்வி ஒருபுறம் இருந்தாலும் காவியையும் தாமரையையும் கிராமங்கள் தோறும் கொண்டு சென்றதும், அ.தி.மு.க.வினர் பலரை பா.ஜ.க. சிந்தனைக்குக் கொண்டுவந்தும் இந்தத் தேர்தல் மூலம் அமைப்புரீதியாக பலம் பெற்றிருக்கிறது பா.ஜ.க. என்பதை மறுப்பதற்கில்லை.