நூற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அகில இந்திய பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சார்ந்த தோழர் டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு தொடர்பணிகளுக்கிடையே நக்கீரனின் கேள்விகளுக்குப் பதில் தந்தார் டி.ராஜா.
நக்கீரன்: தமிழகத்திலிருந்து சி.பி.ஐ.யின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
டி.ராஜா: இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். வேலூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு, இந்த நாட்டுக்காக, மக்களுக்காக தியாகங்கள் புரிந்த இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறுவயதிலிருந்தே நான் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெரும
நூற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அகில இந்திய பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சார்ந்த தோழர் டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு தொடர்பணிகளுக்கிடையே நக்கீரனின் கேள்விகளுக்குப் பதில் தந்தார் டி.ராஜா.
நக்கீரன்: தமிழகத்திலிருந்து சி.பி.ஐ.யின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
டி.ராஜா: இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். வேலூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு, இந்த நாட்டுக்காக, மக்களுக்காக தியாகங்கள் புரிந்த இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறுவயதிலிருந்தே நான் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் என வளர்ந்தவன். படிப்படியாக வளர்ந்து அகில இந்தியக் குழுவில் இருபதாண்டுகள் பணியாற்றி இப்போது பொதுச்செயலாளராக தேர்வாகியிருக்கிறேன். கட்சிதான் என்னை தத்துவார்த்த ரீதியாக வளர்த்தது. அந்தளவில் எனக்கு மகிழ்ச்சி.
நக்கீரன்: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவதற்கான முன்னெடுப்பு எந்த நிலையில் உள்ளது?
டி.ராஜா: சி.பி.ஐ.க்கு தோழர் இந்திரஜித் குப்தாவும் சி.பி.எம்.முக்கு தோழர் சுர்ஜித்தும் பொதுச்செயலாளர்களாக இருந்தபோதிலிருந்து அந்த முன்னெடுப்பு நடந்துவருகிறது. அப்போது மாநில அளவில் இணைந்து செயல்படும் சூழல் உருவாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் இடதுசாரிகள் ஒற்றுமை மிக அவசியமானது.
நக்கீரன்: கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான சமயத்தில் தோன்றிய ஆர்.எஸ்.எஸ்., ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறதே?
டி.ராஜா: 1925 காலகட்டத்தில் உருவான ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளையான பா.ஜ.க. இப்போது ஆட்சியைக் கைப்பற்றி நடத்திக்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மதவெறி கொண்ட ஒரு பாசிஸ்ட் அமைப்பு. அதன் கிளையான பா.ஜ.க. கார்ப்பரேட்மயமாக உள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்காக இயங்குகிறது. உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்கள் வெற்றி பெறவில்லை. ஆட்சி அதிகாரத்தை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கைப்பற்றவில்லை. ஆனால், இந்திய மக்களின் நலனில் இணைந்தே உள்ளது.
நக்கீரன்: நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை மிகவும் சரிந்திருக்கிறதே?
டி.ராஜா: இந்தச் சரிவை மீட்டெடுப்போம். ஒவ்வொரு மாநில அளவிலும் அரசியல் களத்தில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் இது. பா.ஜ.க. மதவெறி ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி கள வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. சரிவு என்பது நிரந்தரமல்ல.
நக்கீரன்: பா.ஜ.க. அரசு தொடர்ந்து மாநில உரிமைகளில் கை வைக்கிறதே...
டி.ராஜா: இந்தியாவின் பன்முகத்தன்மையே மாநிலங்களுக்கான உரிமைதான். மாநிலங்களை நகராட்சிகளாக்கும் முயற்சியை ஜனநாயக இயக்கங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்.
நக்கீரன்: கட்சிக்குள் உங்களுக்கு சவாலான விஷயமாக எதைப் பார்க்கிறீர்கள்?
டி.ராஜா: இது ஒரு நெருக்கடியான காலகட்டம். இந்திய மண் முழுக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தை அமைப்பு ரீதியாக வலுவாக கட்டவேண்டும். இளைஞர்கள், பெண்களை இயக்கத்திற்கு கொண்டுவந்து அவர்களை பயிற்றுவிக்க வேண்டும். தத்துவார்த்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மக்களிடம் சென்று இயக்கத்தைக் கட்டவேண்டும் என்பதோடு இந்த பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக பகுதி சார்ந்த போராட்டங்களை நடத்தவேண்டும். இந்த அரசு ஒடுக்கப்பட்ட, பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானது. ஆங்காங்கே மக்கள் தங்களின் உரிமைகளைக் காக்க தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். அவர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து களப்பணியாற்றிக்கொண்டே இருக்கும்.
-ஜீவாதங்கவேல்