தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தில் மத மாற்றம் இல்லையென பள்ளியின் மாணவிகள், பொதுமக்கள், கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், மாணவியின் தாய்வழிப் பாட்டி எனப் பெரும்பான்மையானோர் கூறிய நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள் ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
இந்நிலையில், பா.ஜ.க.வால் அமைக்கப்பட்ட முன்னாள் எம்.பி. விஜயசாந்தி தலைமையி லான குழுவினர், 1-ம் தேதி மாணவியின் பெற்றோரைச் சந்தித்தனர். ஏற்கனவே மைக்கேல் பட்டி பொதுமக்கள், "அந்த குழு எங்கள் கிராமத்திற்கு வரக்கூடாது, வந்தால் எங்கள் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சிப்பார்கள்" என தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்திருந்ததால், அந்த குழுவினர் தஞ்சாவூர் வந்து ஆட்சியரை மட் டும் சந்தித்துவிட்டுச் சென்றனர்.
முன்னாள் எம்.பி. விஜயசாந்தி கூறுகை யில், "வழக்கு சி.பி.ஐ.க்கு சென்றதால் மாவட்ட ஆட்சியர் பேசுவதற்கு தயக்கம் காட்டினார். இருப்பினும் முழுமையாக நாங்கள் கூறியதைக் கேட்டுக் கொண்டார். இறந்த மாணவியின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இது போன்ற விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு பா.ஜ.க. மட்டுமே 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது" என்றார்.
ஜனவரி 31-ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப் பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் தஞ்சைக்கு வந்தனர். ரயில்வே விருந்தினர் இல்லத்தில் நடந்த விசாரணையில் எஸ்.பி. ரவளிபிரியா, வல்லம் டி.எஸ்.பி. பிருந்தா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், வீடியோ எடுத்த முத்துவேல், மைக்கேல்பட்டி கிராம மக்கள், பள்ளியின் முன் னாள், இன்னாள் மாணவி யர்கள், லாவண்யாவின் தாய்வழி தாத்தா பாட்டி, சமூக ஆர் வலர் பியூஸ்மனுஷ், வழக்கறிஞரும், கம்யூனிஸ்ட் தோழருமான ஜீவக்குமார் என 20க்கும் மேற்பட் டோரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு வந்த மாணவிகள், "மதம் மாறச்சொல்லி பள்ளியில் யாரையும் வற்புறுத்தியது கிடையாது. லாவண்யா நல்லா படிப்பா, வீட்டுக்கு போகவே நடுங்குவா, எப்பவாவது வீட்டுக்கு போயிட்டு வரும்போது தனியா அழுவா, யாரிடமும் பேசமாட்டா, வார்டன் சிஸ்டர்கிட்டதான் ரொம்ப குளோசா இருப்பா. நாங்கள்லாம்கூட பொறாமைப்பட்டு கேட்டா, பாசத்துக்காக ஏங்குறவ லாவண்யா, நீங்களும் எங்க பிள்ளைங்கதான்னு அவங்க சொல்லுவாங்க. வீட்டுக்கு அனுப்பப் போறாங்களே என்கிற பயம்தான் அவளை இப்படி மாத்தி யிருக்கும்''’என்கிறார்கள்
வீடியோ எடுத்த முத்துவேலோ, "மாணவியிடம் இரண்டு வீடியோவும், அவரது சித்தியிடம் இரண்டு வீடியோவும் எடுத்தேன். முதல் வீடியோ எடுக்கும்போது மூச்சுத் திணறல் வந்துடுச்சி. அதன்பிறகு மற்றொரு வீடியோவை எடுத்தேன். இந்த வீடியோவை மரண வாக்கு மூலமாக போலீசார் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
லாவண்யாவின் தாய்வழி தாத்தா சுப்பிர மணியம், பாட்டி மங்கையர்கரசியிடம் பேசினோம். "எங்க மகள் கனிமொழிக்கு பிறந்த புள்ளைங்க மூணு, அதுல மூத்ததுதான் லாவண்யா. எம் மகளை சித்ரவதை செய்து தற்கொலை செய்துக்க வச்சிட்டாங்க. மக இறந்த பிறகு பேரன் பேத்தியையும் எங்களோட ஒட்டவிடாம செஞ்சுட்டாரு மருமவன். கொஞ்சநாள்ல இன்னொரு பொண்ண (சரண்யா) கல்யாணம் செஞ்சுக்கிட்டார். அது வந்த கொஞ்ச நாள்லயே மாற்றாந்தாய் புத்திய காட்ட ஆரம்பிச்சிடுச்சி. மூணு புள்ளைங்களையும் ஆளுக்கு ஒரு திசைக்கு படிக்க வைக்கு றேன்னு பிரிச்சிடுச்சி. வீட்டுல இருந்த பணத்தக் காணும்னு பேத்திக்கு சூடு வச்சு கொடுமைப்படுத்தியிருக்கு. சூடத்த கையில கொளுத்தி வச்சிருக்கு. (இதை நக்கீரனில் முதல் கட்டுரையி லேயே கூறியுள்ளோம்) எங்க பேரப்பிள்ளைங்க சரண்யாவால அனுபவிக்காத கொடுமைகளே இல்லங்க. எங்களையும் அந்த பிள்ளைங்களோட சேர விடல. பேரப் பொண்ணு நல்ல பள்ளிக்கூடத்துல படிக்குது. விவரம் தெரிஞ்சி எங்களோட வந்துடும்னு நினைச்சோம். இப்படி பொணமா போகும்னு நினைக்கல" என்கிறார்கள் கண்கலங்கியபடியே.
வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழருமான ஜீவக்குமார், "மாணவிக்கு தோல் சம்பந்தமான நோய்கள் இருந்துள்ளது. வீட்டில் அவருக்கு தனி படுக்கை, தனி சாப்பாடு என்பதால் விடுமுறையில் கூட வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் விடுதியில் இருந்துள்ளார். அந்த மாணவிக்கு இயல்பான மனித வாழ்க்கையை மறுத்துள்ள கொடுமையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணையில் சட்ட மீறல்கள் இருப்பதாகக் கூறியவர், "தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோவின் விசாரணை முறைகள் சட்டப்படியானதாக இல்லை. கடந்த அக்டோபர் மாதமே தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றார் பிரியங்கா. அந்த ஆணையச் சட்டப்படி, ஆணையத்தின் தலைவரை நியமிக்க விளம்பரம் செய்து, தேர்வுக்குழு மூலம் நேர்காணல் நடத்தி நியமனம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே பதவி வகித்துவரும் ஒருவரை நியமனம் செய்யக் கருதினாலும் இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இதில் எதையுமே பின்பற்றாமல் மீண்டும் நியமிக்கப்பட்டவரைக் கொண்டு தற்போது தஞ்சாவூரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆணையம், தனது தலைமையகமான டெல்லியை விட்டு வெளியில் விசாரணை நடத்துவதானால் சட்டப்படியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மாநிலத்தில் உள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏதேனும் விசாரணையைத் தொடங்கி யுள்ளதா என்பதைக் கேட்டறிய வேண்டும். ஏனெனில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் பிரிவு 13(2)-ன்படி மாநில ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ள ஒரு பிரச்சினை தொடர்பாக தேசிய ஆணை யம் விசாரணை நடத்த முடியாது. சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அல்லது அலுவலர்களுக்கு அனுப்பும் கடிதத்தில் விசாரணைக்குரிய சட்டப்பிரிவைக் குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம், பிரிவு 14-ன்படி விசாரணை செய்யப்படவுள்ள அலுவலர்கள் மற்றும் இதர நபர்களுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும். ஆனால் இந்த சட்ட முறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை.
லாவண்யா தற்கொலை செய்துகொண்ட மறுதினமே தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களிடமும் சம்பவம் தொடர்பாக அறிக்கையைக் கேட்டுப்பெற்று அடுத்தகட்ட விசாரணையை தொடங்க இருந்ததாகத் தகவல்கள் தெரிகிறது. இந்நிலையில்தான் தேசிய ஆணையம் தஞ்சாவூருக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளது. இது சட்ட விதிமுறை மீறலாகும்.
அதேபோல தேசிய ஆணையத்திலிருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கோ, சமூக நலத்துறைச் செயலாளருக்கோ, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கோ அனுப்பப்பட்ட கடிதங்களில்கூட, விசாரணை நடத்த தேசிய ஆணையம் வருகிறது என்பதைக் குறிப்பிடவில்லை.
விசாரிக்கப்பட உள்ளவர்களுக்கு உரிமையியல் விசாரணை முறை சட்டப்படி விசாரணை நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றைத் தெரிவித்து, போதிய அவகாசம் அளித்து அழைப்பாணை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டமாகும். ஆனால், விசாரிக்கப்பட்ட எவருக்கும் அழைப்பாணை வழங்கப்படவில்லை. வெறும் கண் துடைப்புக்காக வந்து நாடகம் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்" என்றார்.
இறுதியாக, திருக்காட்டுப்பள்ளி பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில்,’"லாவண்யா விவகாரத்தை பூதாகரமாக்கி, தேசிய அளவில் கொண்டு போயாச்சி. அதோட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வந்துடுச்சி. அ.தி.மு.க.வும் கூட்டணியில் இல்ல. தனிச்சி நிற்பதால பலத்தை காட்டவேண்டி யிருக்கு. அதனால லாவண்யா விவகாரத்துக்கு விடுப்பு விட்டாச்சி. கட்சித்தலைவர் அண்ணாமலையைச் சந் தித்தோம். "சி.பி.ஐ.க்கு மாத்தியாச்சுல்ல, அடுத்த வேலையப் பாருங்க'ன்னு சொல்லிட்டார், அதான் ஓட்டுக் கேட்க கிளம்பிட் டோம்''’என்றார்.