ஒன்றிய அரசுக்கு எதிரான கட்சிகள், உண்மைகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரின் ஃபோன்களும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், அவற்றை ஒன்றிய அரசின் உளவுத்துறை சேகரித்து வைப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தேசத்தை உலுக்கியிருக்கின்றது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு எதிராக, மாநில கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள் சூடுபிடித்தன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், பிரதமர் மோடியை மீண்டும் மிரட்டத் துவங்கியிருக்கிறது இந்த பெகாசஸ் ஸ்பைவேர்.
பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாட்டின் கண்டுபிடிப்பு. அந் நாட்டின் தகவல் தொழில் நுட் பத்துறையில் கோலோச்சும் என்.எஸ்.ஓ. என்ற அமைப்பின் உதவியிடன் இந்த மென் பொருளை உருவாக்கியிருக் கிறது மொஸாட். உலகளவில் எதிரிகளை வேவு பார்ப்பதில் இஸ்ரேலின் இந்த உளவு அமைப் பிற்கு தனி இடம் உண்டு. மொஸாட் டின் புலனாய்வு களால் இஸ்ரேலின் ராணுவ நடவடிக் கைகள் எப்போதும் அதிரடியாகவே இருந்துவரு கின்றன.
தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை அடைந்துவரும் சூழலில், தீவிரவாதிகளிடமிருந்தும், போதை கடத்தல்காரர் களிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும், தனது ஆட்சியையும் மக்களையும் பாதுகாக்க, தகவல் தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடுகிறது இஸ்ரேல். அந்த வகையில், ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மொபைல் ஃபோன்களை ஒட்டுக்கேட்கும் மென்பொருளை என்.எஸ்.ஓ. அமைப் பின் உதவியுடன் உருவாக்க திட்ட மிட்ட மொஸாட், கடந்த 2010-ல் அதி நவீன ஒரு உளவு மென்பொருளை உருவாக்கி அதற்கு பெகாசஸ் என பெயரிட்டது. பெகா சஸ் என்றால் ரக சியமாக ஊடுருபவன் என்று பொருளாம்.
பெகாசஸ் உருவாக்கப்பட்டதும் தங்கள் உளவு அமைப்புக்குள்ளேயே அதனை பரிசோதித்துப் பார்த்தனர் மொஸாட் அதிகாரிகள். அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிபுத்திசாலியாக இருந்தது பெகாசஸ். குறிப்பாக, எந்த மொபைல் ஃபோனுக்குள் பெகாசஸை நுழைக்கிறார்களோ அந்த ஃபோனுக்குள் இப்படி ஒரு வைரஸ் இருப்பதை எந்த சூழலிலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ரகசியமாக அமர்ந்துகொள்ளும். எங்கிருந்தாலும் அந்த ஃபோனை கண்காணிக்க முடியும். நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களால் உணரவே முடியாது.
உயரிய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும் மிகுந்த பாதுகாப்பு ரகசியங்களை கொண்டுள்ள ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்களை ஹேக் செய்யவே முதலில் பெகாசஸ் வடிவமைக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட போனில் உள்ள ரகசியங்களை திருடவும், உரையாடல்களை ஒட்டுக்கேட்க வும், வீடியோக்களை பதிவு செய்யவும் உள்ளிட்ட அனைத்து விசயங்களையும் சேகரிக்கும் வகையில் மெருகேற்றப்பட்டன.
ஒரு போனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜாகவோ, மிஸ்டுகால் மூலமாகவோ, வழக்கத்தில் இயல்பாக இருக்கும் ஒரு லிங்க் மூலமாகவோ பெகாசஸை அனுப்பி வைக்க முடியும். அதனை ஜஸ்ட் டச் பண்ணினாலே போதும், அந்த ஃபோனுக்குள் பெகாசஸ் பத்திரமாக இறங்கிவிடும். அதாவது டெலிட் பண்ணுவதற்காக டச் பண்ணினாலும் கூட பெகாசஸிலிருந்து தப்பித்து விட முடியாது என்கிறார்கள் தகவல் தொழில் நுட்பத்துறையினர்.
அந்த வகையில், இஸ்ரேல் அரசுக்கு ஆபத்தானவர்கள் என ஒரு பட்டியலைத் தயாரித்து அவர்கள் பயன்படுத்தும் வழக்கமான மற்றும் ரகசியமான ஃபோன்களின் எண்களை சேகரித்தது மொஸாட். அந்த எண்களுக்கு பெகாசஸை அனுப்பினர். நல்ல ரிசல்ட் கிடைத்தது. இதனையறிந்த பல நாடுகளின் அரசாங்கமும் இஸ்ரேல் அரசு மூலமாக என்.எஸ்.ஓ.வை அணுக, பெகாசஸை ஒரு வர்த்தகப் பொருளாக மாற்ற முடிவு செய்தது. விலையையும் நிர்ணயித்தது. இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமானால் சுமார் 30 கோடி ரூபாய். ஒரே நேரத்தில் 50 செல்ஃபோன்களை கண்காணிக்க முடியும் என்கின்றனர்.
அந்த வகையில், தனி நபருக்கோ தனி அமைப் பிற்கோ பெகாசஸை விற்பனை செய்வதில்லை என்றும், ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் புலனாய்வு அமைப்புக்கும் (ஏஜென்சிகளுக்கும்) மட்டுமே விற்பனை செய்வது என தீர்மானித்தது. இந்தியா, மெக்சிகோ, பஹ்ரைன், சவுதி அரேபியா, கஜகஸ்தான், அரபு எமிரேட்ஸ், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஹங்கேரி, அஜர்பைஜான் என 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பெகாசஸை வாங்கியிருப்பதாக சர்வதேச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியிருக்கிறதா என்று கடந்த 2019-ல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன். இதற்கு உள்துறை அமைச்சர் அமீத்ஷா நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், என்.எஸ்.ஓ. அமைப்பு பாதுகாப்பாக வைத்திருந்த 50,000 ஃபோன் களின் எண்களை அந்த அமைப்பிடமிருந்து பிரான்சை சேர்ந்த ஃபோர்பிட்டன் ஸ்டோரிஸ் என்ற நிறுவனமும், சர்வதேச மனித உரிமை அமைப் பான அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பும் ரகசியமாக வாங்கின. இதற்காக பல கோடிகளை அந்த அமைப்புகள் செலவிட்டுள்ளன. ரகசியமாக பெற்ற செல்ஃபோன் எண்களை இந்தியாவின் தி வயர், இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட 16 செய்தி நிறுவனங்களு டன் பகிர்ந்துகொண்டன. அந்தப் புலனாய்வில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், ஊடகத் தினர், சமூக செயற்பாட் டாளர்கள் என உலக அளவில் 1,400 பேர்களின் செல்ஃபோன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தற்போது அம்பல மாகியிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜியின் உதவியாளர், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத்சிங், தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர்கள் ககந்தீப், ஹரி மேனன், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்மணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, பிரபல பத்திரிகையாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளிப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் முக்கியமான 2 போன் எண்கள், அவருக்கு நெருக்கமான நண்பர்களின் எண்கள் ஆகியவை பெகாசஸ் ஸ்பைவேரால் உளவு பார்க்கப்பட்டதாக அம்பலமாகியுள்ளது.
பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து காங்கிரஸ், திருணாமூல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கூடி விவாதித்தனர்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஆவேசமாக பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவும் பதவி விலகவேண்டும் என குரல் கொடுத்தனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சபை முழுக்க ஒரே ரண களமாக இருந்தது. சபாநாயகர் ஓம்பிர்லா எவ்வளவோ வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் அமைதியாகவில்லை. இதனால், சபையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார் ஓம் பிர்லா. அதே கொந்தளிப்பு ராஜ்யசபாவிலும் எதிரொலிக்க, சபையில் தினசரி அலுவல்கள் தடைப்பட்டன. இதனால் சபையை ஒத்திவைத்தார் சபா நாயகர் வெங்கையா நாயுடு. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்களான காங்கிரஸ் ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், திருணாமூல் காங்கிரசின் டெரிக் ஓ பிரைன், தி.மு.க.வின் திருச்சி சிவா உள்ளிட்டவர் களை அழைத்து சமாதானப்படுத்தும் வகையில் அமைதிப்படுத்தினார் வெங்கையா நாயுடு.
காங்கிரசின் மூத்த எம்.பி.க்களில் ஒருவரான சசிதரூர், "அரசாங்கத்திற்கு மட்டுமே பெகாசஸ் விற்கப்பட்டுள்ளதால் இந்திய அரசுதான் உளவு பார்த்திருக்க முடியும். இது, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக. போன்கள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட தயாராக இல்லாத எதிர்க்கட்சிகள், மோடிக்கும் அமித்ஷாவுக்கும் எதிரான கண்டனங்களை அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், "எங்கள் மீதான இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மத்திய அரசு எந்த உளவு வேலையிலும் ஈடுபடவில்லை. போன்கள் ஒட்டுக்கேட்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. யாருடைய போனையும் நாங்கள் ஒட்டுக்கேட்கவில்லை. இந்தியாவில் செல்போன் எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதா? என்பதை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது''‘ என்கிறார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்.
இதற்கிடையே, தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க. அரசில் பெகாசஸ் ஸ்பைவேரை அப்போதைய உளவுத் துறையின் உயரதிகாரி இஸ்ரேலி-ருந்து தருவித்ததாகவும் உளவு வட்டாரங்கள் சொல்கின்றன. குறிப் பாக, வாட்ஸ் அப் கால்களை ஒட்டுக்கேட்பதற்காக, பெகாசஸ் என்ற ஸ்பைவேர் இஸ்ரேலில் உருவாக்கப் பட்டிருக்கிறது என்று கிடைத்த தகவலின்படி அதனை தமிழக அரசுக்காக வாங்கியிருக்கிறார் அந்த அதிகாரி. அந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோரை வேவு பார்த்திருக்கிறார் அந்த அதிகாரி என்கிறார்கள்.
இது பற்றி பிரசாந்த்கிஷோர் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களிடம் பேசியபோது, ஐ-பேக் நிறுவனத் தையும் அவரையும் தமிழக உளவுத்துறை வேவு பார்ப்பதாக எங்களை எச்சரித்தார் பிரசாந்த் கிஷோர். பல முறை அவரது போன் ஹேக் செய்யப்பட்டது.
குறிப்பாக, தி.மு.க.வுக்காக வேலை பார்த்த தேர்தல் காலத்தில், தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார திட்டங்கள், அதற்கான வியூகங்கள் என அனைத்தும் உளவு பார்க்கப்பட்டன. அதனை நிரூபிப்பதுபோல ரகசிய திட்டங்கள் ரிலீஸ் ஆனபடி இருந்தன.
இதனால் சுதாரித்துக்கொண்ட பிரசாந்த் கிஷோர், அது குறித்து எங்களிடம் விவரித்துவிட்டு, தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நேரத்தில், லேப்டாப் மற்றும் வாட்ஸ் ஆப்கள் மூலம் ரகசியங்கள் பரிமாறிக்கொள்வதை நிறுத்து மாறும், நேரடியாக மட்டுமே விவாதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன்படி, வாட்ஸ்ஆப் கால்களில் உரை யாடுவதை தவிர்த்தோம்''‘’ என்கிறார்கள். இதற்கிடையே, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் என்.எஸ்.ஓ.வுக்கும் நடக்கும் தொழில் போட்டியில் இந்த விவகாரம் பூதாகரமாக்கப்படுவ தாகவும் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் தனி மனித உரிமைகள் தொடர்ச்சியாக நசுக்கப்படுகின்றன. மோடி அரசிடம் இது கூடுதலாகவே இருக்கிறது என்கிறார்கள் உளவுத் துறையினர். இதில் அதிகம் குறிவைக்கப்பட்டிருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்.