னது 75-வது பிறந்தநாளில் (செப்டம்பர்-16) திகார் ஜெயிலில் இருக்கவேண்டிய சூழல் ப.சிதம்பரத்துக்கு. வாழ்த்துச் சொன்ன சிறைஅதிகாரிகள் மற்றும் சிறைவாசிகளுக்கு புன்னகையை மட்டுமே பரிசளித்திருக்கிறார் ப.சிதம்பரம். வீட்டுச் சாப்பாடு சாப்பிட அவருக்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது. பிறந்தநாளன்று மட்டும் வீட்டுச் சாப்பாட்டை அனுமதிக்க வேண்டும் என ப.சி.யின் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

தினசரி செலவுக்காக வாரத்திற்கு 1500 ரூபாயை தனது குடும்பத்தினரிடமிருந்து சிதம்பரம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், பணமாக அவரிடம் தரப்படமாட்டாது. பணத்தை சிறையில் கட்டிவிட்டால் அதற்கு டோக்கன் மாதிரி ஒரு கார்டு கொடுக்கப்படும். அதைப் பயன்படுத்தி சிறை கேண்டீனில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தித்தான் தனக்குத் தேவையான பேஸ்ட், ப்ரஷ் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை வாங்கிக்கொள்கிறார் ப.சி.!

pcc

சிதம்பரத்தின் கைதை கண்டித்து தமிழக காங்கிரஸார் பெரிய அளவில் கண்டன போராட்டங்களை நடத்தவில்லை என்கிற கவலை சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு இருந்தது. இதனையடுத்து சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி உள்ளிட்டவர்கள் எடுத்த முயற்சியில் கடந்த 15-ந் தேதி சென்னை சத்தியமூர்த்திபவனில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடந்த கண்டன கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் "இந்து' ராம், பீட்டர் அல்ஃபோன்ஸ், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மோடி அரசின் எதேச்சதிகாரத்தை கண்டித்தனர்.

pc

கூட்டத்தில் பேசிய சுப.வீர பாண்டியன், ""சிதம்பரத்தின் மீதான வழக்கைப் பற்றி நான் பேசப்போவ தில்லை. அதை "இந்து' ராம் அவர் கள் விரிவாக பேசுவார். அதனால் நான் அரசியல் பேசப்போகிறேன். இன்றைக்கு சிதம்பரத்தின் கைது மூலம், காங்கிரஸ் தொண்டர்கள் மீது உளவியல் தாக்குதல் நடந்து வருகிறது. இதனை உணரவேண்டும். தேர்தலில் தோல்வி அடைந்தவர் கள் மீண்டும் ஆட்சிக்கு வரவில் லையா? வீழ்வதும் எழுவதும் அரசியலில் நடந்தே தீரும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேட்பவன்தான் எழுந்து நிற்பான். அந்த கேள்வியை காங் கிரஸ்காரர்கள் கேட்க வேண்டும். சிதம்பரம் தனது பிறந்த நாளில் சிறையில் இருக்கிறார். இதற்கு முன்பு பிறந்தநாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடி யிருக்கலாம். ஆனால் இந்த பிறந்தநாள்தான் முக்கியமானதாக இருக்கும். இந்த சிறைவாசத்துக்கு சிதம்பரம் அஞ்சுபவர் இல்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிதம்பரத்திற்கு இருக்கும் ஆழமான புலமையை வியந்திருக்கிறேன். நிதானமான ஒரு அறிவாளி சிறையில் இருக்கிறார். சர்வாதிகாரிகள் ஆட்சிக்கட்டிலில் இருந்தால் அறிவாளிகள் சிறையில்தான் இருக்க நேரிடும்'' என்றார் ஆவேசமாக.

Advertisment

சிதம்பரத்தின் கைது நடந்த சூழலை விவரித்து பா.ஜ.க. அரசின் அடக்குமுறைகளை விவரித்த பீட்டர் அல்ஃபோன்ஸ், "பா.ஜ.க.வில் அண்மையில் ஐக்கியமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. அரசு தயங்குவது ஏன்?' என கேள்வி எழுப்பினார்.

கூட்டத்தில் பேசிய "இந்து' ராம், ""சிதம்பரத்தின் கைதை கண்டித்து ஒரு கண்டன கூட்டத்தை நடத்துங்கள். நான் வருகிறேன் என சொன்னேன். அதனால் இந்த கூட்டம் எனது யோசனை என்றுகூட சொல்லலாம். சிதம்பரத்தின் மீது போடப்பட்டிருப்பது அநியாயமான வழக்கு. பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி என இரண்டு பேர் கொலைக் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிறார்கள். தனது மகளையே சூழ்ச்சி செய்து கொலை செய்தார் என்பதுதான் இந்திராணி மீதுள்ள வழக்கு.

அப்படிப்பட்ட குற்றவாளிகள், தங்களுடைய ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு உதவி செய்தார் என வாக்குமூலம் தந்ததாக சொல்லப்படுவதின் அடிப் படையில் சிதம்பரத்தின் மீது வழக்குப் போட் டுள்ளனர். இதைத்தாண்டி எந்த மெட்டீரியல் எவிடென்ஸும் அவர்களிடத்தில் கிடையாது. அடிப்படையில் ஆதாரமற்ற வழக்கு. காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர் சிதம்பரம். நிதித்துறை உட்பட முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் புகழை அழிக்கவே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 7 மாதமாக கிடப்பில் வைக்கப்பட்டி ருந்தது. நீதிபதி ஓய்வு பெறுகிற நாளில் அவசரம் அவசரமாக தீர்ப்பளிக்கிறார்.

pcc

மேல்முறையீடு செய்வதற்கு சிதம்பரத்திற்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. சீனியர் அட்வகேட் துஷ்யந்த் தவே இந்துவில் எழுதிய கட்டுரையில், "நிர்வாக உத்தரவுகளை எதிர்த்து சாமானியர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது' என குறிப்பிட்டி ருக்கிறார். சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. அவரது கைது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை அமைப்புகள் தவறாக வழி நடத்தப்படுகின்றன. சிதம்பரம் கைது விவகாரத் தில் மத்திய அரசு தவறு செய்திருக்கிறது'' ‘’ என சிதம்பரத்தின் கைது விவகாரத்தை தனக்கே உரிய பாணியில் கடுமையாக கண்டித்த இந்து ராம், ""நெருக்கடி நிலை காலகட்டத்தை நாட்டில் உருவாக்க நினைக்கிறார்கள். சமீபத்தில் கூட, "இந்திதான் இந்தியாவின் ஒரே மொழியாக இருக்கவேண்டும்' என அமித்ஷா கூறியிருக் கிறார். இந்துத்துவா பேரில் நாட்டை துண்டாட நினைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை இது'' என ஆவேசப்பட்டார்.

கூட்டத்தில் பேசிய பலரும் மத்திய மோடி அரசின் உள்நோக்க அரசியலை சுட்டிக்காட்டிப் பேசினார்கள். சிதம்பரத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டம், காங்கிரஸ் தொண்டர்களை முறுக்கேற வைத்திருக்கிறது.

-இரா.இளையசெல்வன்