இந்தித் திணிப்பைத் தடுக்கும் தமிழகத்தில் இந்திக்காரர்களை திணிக்கும் சதி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய தவறினால் மிகப்பெரிய ஆபத்தை தமிழகம் சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள் அரசியல் தலைவர்கள். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்கிற பெயரில் பட்டியலிலிலிருந்து வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கைகளை பீஹார் மாநிலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். இதனை கடுமையாக கண்டித்து அதனை தடுக்கும் முயற்சியில் குதித்துள்ளன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 22 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி கட்சிகள் குரலெழுப்பியபோது, அரசியலமைப்பு சட்டத்தின்படி தனித்து இயங்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை நாடாளு மன்றத்தில் விவாதிக்க இயலாது” என்கிற காரணத்தைக் கூறி அனுமதி தர மறுத்துள்ளது மத்திய மோடி அரசு.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீதும், அதனைத் தூண்டிவிடும் மோடி அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து எதிர்க்கட்சிகள் போராடத் துவங்கியிருக்கின்றன. குறிப்பாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டங்கள் முன்னெடுக் கப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இத்தகைய சூழல்களில் பீஹாரைப் போலவே தமிழ்நாட்டிலும் இந்த தீவிர வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்துக்கு மறைமுகமாக உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. இதனையேற்று, அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், ஜனவரி 1-ந்தேதியை இலக்காக வைத்து இந்த திருத்தத்தை செய்யத் திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இதற்கான முதல்கட்டமாக, ’மாநிலங்களிலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்கள், அவர்கள் குடியேறிய மாநிலங்களிலேயே வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை இணைத்துக் கொள்ளலாம்” என்று சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இதனை நடை முறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சீக்ரெட்டாக நடந்துவருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாடுதான் தமிழகத்தின் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தப் போகிறது என்கின்றனர்.
இது குறித்து பேசும் காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. அவர்களில் 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர் களாக இணைக்கப்படவிருக்கிறார்கள். இது தமிழ் நாட்டிற்கு பேராபத்து. தனது அதிகாரத்தை தேர்தல் ஆணையம் துஷ்பிரயோகம் செய்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளையும், தேர்தலின் அடிப்படை நோக்கத்தையும் சிதைக்க முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து சட்டரீதியாக போராடவேண்டும்''” என்கிறார்.
பீஹார், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களி லிருந்து கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தொழில் நிமித்தமாக சுமார் 1 கோடியே 50 லட்சம் இந்திக்காரர் கள், தமிழகத்தில் குடியேறியிருக்கிறார்கள் என ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் 65 லட்சம் பேர் பீஹாரிகள். அவர்களின் பெயர்கள்தான் தற்போது வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவர்களில் முதல் கட்டமாக 6 லட்சத்து 50 ஆயிரம் பீஹாரிகளை தமிழக வாக்காளர்களாக சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் குடியேறியுள்ள 1 கோடியே 50 லட்சம் இந்திக்காரர்களையும், தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பயங்கர சதி டெல்லியில் போடப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் குடியேறியுள்ள இந்திக் காரர்களுக்கு, அவர்களின் சொந்த மாநிலத்தில் வாக்குரிமை இருக்கிறது. அந்த வாக்குரிமை நீக்கப்பட்டால்தான் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறமுடியும். அதனால்தான், புலம்பெயர்ந்தோர் என இவர்களை வகைப்படுத்தி பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். அப்படி நீக்கப் பட்டவர்கள் தமிழக வாக் காளர்களாக சேர்க்கப்பட விருப்பது தமிழர்களின் வாக்குரிமைக்கு ஆபத்து.
இதுகுறித்து பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பேரில் லட் சக்கணக்கான வாக்காளர் களை நீக்குவதும் சேர்ப்பதும் மக்களாட்சி முறையை கேலிக்கூத்தாக்குகிற செயல். பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம், பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதவர்களை பட்டியலிலிருந்து நீக்குவதும், பா.ஜ.க.வுக்கு ஆதரவானவர்களை புதிதாக சேர்ப்பதும் எதேச்சதிகாரம்.
கிட்டத்தட்ட 2 கோடி இந்திக்காரர்களை தமிழக வாக்காளர்களாக திணிக்கும் முயற்சி நடக்கிறது. இப்படிப்பட்ட சதியால், எதிர்காலத்தில் தமிழகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மையின ராக மாற்றப்படுகிற சூழல் உருவாகும். வட மாநிலத்தவர்களை இணைப்பதன் மூலம் பா.ஜ.க.வை வெற்றிபெற வைக்கலாம் என்பதும், தமிழர்களின் வாக்குரிமை பெரும்பான்மையை தமிழகம் இழக்கவேண்டும் என்பதுமே இந்த சதியின் அடிப்படை!
தமிழ்நாட்டில் தினந்தோறும் நடக்கும் வடமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல், சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதியாக மாறும் நிலை உருவாகும். தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வடமாநிலத்தவர் மாறுவார்கள் என்கிற பேராபத்தை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்'' என்கிறார் மிக ஆவேசமாக.
வடமாநிலத்தவர்களின் வருகையை பல ஆண்டுகாலமாக எதிர்த்துவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், "தமிழ்நாட்டில் ஒவ்வொருநாளும் மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் அலை அலையாக வந்திறங்கு கின்றனர்.
தமிழ்நாட்டின் இந்திய அரசுப் பணிகளிலும், அரசுத்துறை நிறுவன வேலை வாய்ப்பிலும், உடல் உழைப்புப் பணிகளிலும் இவர்கள் பெரும் எண் ணிக்கையில் அமர்ந்து விடுகின்றனர். தமிழ் நாட்டு இளையோரின் வேலை வாய்ப்பு இதன் மூலம் பறிக்கப்பட் டுள்ளன.
அடுத்தகட்ட மாக, தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை காலி செய்யும் நோக் கத்தில் களமிறங்கியுள்ள மோடி அரசாங்கம், தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த ஒன்றரைக் கோடி வடமாநிலத் தவரையும் வாக் காளர்களாக்கும் சூழ்ச்சியில் இறங்கி யுள்ளது.
தமிழக வாக் காளர்களாக மாற்றுவதற்காகத்தான் திட்ட மிட்டே இந்திக்காரர்களை தமிழகத்திற்கு பல ஆண்டுகளாக அனுப்பி வைத்தபடி இருக்கிறது மோடி அரசு. இவர்களின் சதியையும் சூழ்ச்சிகளையும் நம்முடைய ஆட்சியாளர்கள் உணராமலிருக் கின்றனர்.
இலங்கையில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்த ஈழத்தமிழர்களின் பெரும்பான்மையை எப்படி சிங்கள குடியேற்றத்தின் மூலம் சிறுபான்மையாக சிங்கள அரசு மாற்றியதோ, அதேபோன்ற நிலையை தமிழ்நாட்டில் திட்டமிட்டு உருவாக்குகிறது மோடி அரசு. இதற்கு தேர்தல் ஆணையம் உடந்தை. வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்தால் ஈழத்தில் நடந்ததுதான் தமிழகத்திலும் நடக்கும்.
அதனால், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை தமிழர்களின் ஆதரவுடன் பெறமுடியாது என்பதால், இப்படிப்பட்ட சூழ்ச்சிகளின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கிறது மோடி அரசு. அதனால் வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்''’ என்கிறார் வேல்முருகன்.
விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், "பீகாரில் நடைமுறைப்படுத்தியுள்ள தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழகத்திலும் அமல்படுத்த திட்டமிடப்படுவதால், இதனை தடுக்கும் முறைகளைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டவேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் போன்றவர்களின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இதுபற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. இரு அவைகளையும் தள்ளி வைப்பதிலேயே குறியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையம் முயற்சிப்பது தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் அரசியலே தலைகீழாக மாறும். இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக.
இந்த நிலையில், "அரசியல் சாசனத்தின் 19(1)(இ)-யின் படி இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் குடியேறவும் வசிக்கவும் உரிமை இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 19(பி)-யின்படி, அவர்கள் வாழும் பகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள முடியும். தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. 6.5 லட்சம் பீஹாரிகள் தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுவது அபத்தமானது'’என்று தெரிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
சட்டத்தின் ஷரத்துகளை வைத்து தேர்தல் ஆணையத்தின் மூலம் விளையாட்டை தொடங்கி யிருக்கும் மத்திய மோடி அரசின் அரசியலை எப்படி முறியடிக்கப் போகின்றன என்பதில்தான் இருக்கிறது எதிர்க்கட்சிகளின் பலம்!