கொரோனா கொண்டு வந்த பயத்தால் இந்தியாவில் நடக்க வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் துபாயில் ரசிகர்களே இல்லாத காலி மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் பார்வையாளர்கள் இல்லாத ஆடிட்டோரியத்தில் பிக்பாஸ் 4-வது சீசனை விஜய் டி.வி.யில் நடத்த களம் இறங்கிவிட்டார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
இதற்கு முன் நடந்த பிக்பாஸ் சீசன்கள் மூன்றுமே ஜூலை அல்லது ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்டன. 90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டிற்குள் பல்வேறு வகையான டாஸ்க்குகள் நடக்கும். பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான பத்தே நாட்களில் வெளியேறிய போட்டியாளர்களும் உண்டு, எண்பது நாட்களில் வெளியேற்றப்பட்ட போட்டி யாளர்களும் உண்டு. தீபாவளி நெருங்கும் சமயத்தில் வெற்றியாளர் ஒருவருக்கு மெகா பரிசு வழங்கப்படும்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் காதல் காட்சிகள், வாய்ச்சண்டைக் காட்சிகள், வார்த்தைவீச்சுகள், கண்ணீர்க் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்ட திரைக் கதைப்படி பக்காவாக நடக்கும். ஷோ கொஞ்சம் டல்லடிக்கும் நேரத்தில் ஆரவ்வுடனான காதல் தோல்வியில் ஓவியா கண்ணீர்விட்டுக் கதறுவார், சேரனை மீராமிதுனும் வனிதா விஜயகுமாரும் தாறுமாறாகப் பேசி தெறிக்க விடுவார்கள், கத்தியால் கையைக் கிழித்துக் கொள்வார் மதுமிதா. இப்படியெல்லாம் டெம்போ ஏற்றி, டி.வி.யில் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் டெம்பரேச்சரைக் கூட்டுவார்கள்.
போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக, மெகா ஆடிட்டோரியத்தில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், இருநூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்பு, கமல்ஹாசன் காலில் விழுந்தோ, கைகுலுக்கியோ, ஆரத்தழுவிய பின்புதான் உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த 4-வது சீசனில் எல்லாமே தலைகீழ். நோ டச்சிங், நோ ஹேண்ட் ஷேக்கிங், நோ ஹக்கிங்.
செப்டம்பர் 07-ஆம் தேதியிலிருந்து லாக் டவுன் தளர்வுகள் ஆரம்பனாலும் அதற்கு முன்பே போட்டியாளர்கள் செலக்ஷனில் குதித்துவிட்டது விஜய் டி.வி. அதேபோல் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, பிக்பாஸ் வீடு செட் போடும் வேலைகளும் ஆரம்பமானது. ஆனால் சினிமா ஷூட்டிங்கிற்கு 75 பேர்தான் அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசாணையால் விக்கித்துப் போய்விட்டது விஜய் டி.வி.
எப்போதுமே விஞ்ஞானத்தின் வளர்ச்சி யோடு தன்னைப் பொருத்திக் கொள்ளும் கமல் அசரவில்லை. இப்போது இருக்கவே இருக்கு ஜூம் செயலி. பார்வையாளர்களை செலக்ட் பண்ணி அந்த செயலியுடன் அடாப்ட் பண்ணுங்கள், ஆளே இல்லாத ஆடிட்டோரியத்தில் லைவ் எஃபெக்ட் டுக்கு நான் க்யாரண்டி என கமல் ஊக்கம் கொடுத்த பிறகே உற்சாகத்துடனும் விறுவிறுப்புடனும் களம் இறங்கியது விஜய் டி.வி. போட்டியாளர்கள் அனை வரும் செலக்ட் செய்யப்பட்டபின், கொரோனா காலம் என்பதால் சென்னையில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். அதேபோல் டெக்னிக்கல் டீமில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். கமலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா நெகடிவ் ரிசல்ட் வந்த பிறகுதான் ஷூட்டிங்கிற்கு சம்மதித்துள்ளார்.
கடந்த அக்.04-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை இனிதே ஆரம்பமானது பிக்பாஸ்-4. கொரோனா காலத்தில் சேவையாற்றிய தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கொரோ னாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்களே பயந்து விலகிய நிலையில், அந்த உடல்களை வாங்கி நல்லடக்கம் செய்த நல் இதயம் படைத்தவர்களை வாழ்த்தி வணங்கினார் கமல். முதல் போட்டியாளராக அறிமுகமானார் டி.வி. பிரபலம் ரியோ ராஜ். ஜூம் செயலியுடன் அடாப்ட் செய்யப்பட்டிருந்த பார்வையாளர்களை மெகா ஸ்கிரீனில் பார்த்து வழக்கம் போல் சிரித்தார் கமல். ரெகார்டிங் செய்யப்பட்டிருந்த கைதட்டலும் விசிலும் ஆடிட்டோரியத்தில் எஃபெக்ட் கொடுத்தன.
கமலுடன் ‘புன்னகை மன்னனில் ஜோடி போட்ட ரேகா, அறந்தாங்கி நிஷா, மாடலிங்கும் நடிகையுமான சனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண் டியன், இன்ஸ்டா கிராமில் தினம்தோறும் கிளாமர் விருந்து படைக்கும் டி.வி.சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி அருஜுனன், பாடகர் வேல்முருகன் உட்பட 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியானார்கள், ஷோவும் ஆரம்பமானது.
இந்த சீசனுக்கு டி.வி. ரசிகர்களின் வரவேற்பு எதிர் பார்த்தபடி இருக்குமா என யோசித்த விஜய் டி.வி., ஆரம்பித்த முதல் நாளிலேயே ஸ்கிரீன் ப்ளேவில் ஃபயரைப் பற்ற வைத்து, போட்டியாளர் சனம் ஷெட்டியை வைத்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
அதாவது விஷயம் என்னன்னா மக்களே, பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த மாடலிங் நடிகரான தர்ஷன். இந்த தர்ஷன் சென்னைக்கு வந்து ஒரு வருடம் கழித்து சனம் ஷெட்டிக்கு அறிமுகமாகி, அதன்பின் நெருக்கமான காதலாகி, நிச்சயதார்த்தம் வரைக்கும் போனது. இந்த நிலையில் தான் சனம்ஷெட்டிக்கு பிக்பாஸ்-3 வாய்ப்பு வந்த போது, கர்நாடக பா.ஜ.கவில் செல்வாக்கான தனது சித்தப்பா மூலம், தர்ஷனுக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். தர்ஷன் ஹீரோவாகவும் தான் ஹீரோயினாகவும் நடிக்கும் படத்தை சொந்தமாக தயாரிக்கும் அளவுக்கு லவ்வில் விழுந்தார் சனம் ஷெட்டி. தர்ஷனுக்கு சனம் ஷெட்டி கிடைத்திருப்பது நல்ல யோகம் என அதே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ஃபாத்திமா பாபுவே புளகாங்கிதம் அடைந்தார்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சனம் ஷெட்டியை அலட்சியப்படுத்தினார் தர்ஷன். உடனே வெறுப்பான சனம் தன்னை காதலித்து ஏமாற்றிய தர்ஷன் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என கடந்த வருடம் சென்னை போலீஸ் கமிஷனிரிடம் புகார் கொடுத்து, மீடியாக்களிடம் பேட்டியும் கொடுத்து பரபரப்பு கிளப்பினார். பதிலுக்கு தர்ஷனும் சனம் ஷெட்டிமீது ஏடாகூட புகார்களை மீடியாக்கள் முன்பு அள்ளி வீசினார்.
சனம் ஷெட்டி ஒரு வருடத்திற்கு முன்பு தர்ஷன்மீது கொடுத்த புகாரைத்தான் தூசு தட்ட வைத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ், வழக்குப் பதிய வைத்துள்ளது விஜய் டி.வி. ப்ளான் பண்ணிப் பண்ணிய இந்த சர்ச்சை கடந்த 05-ஆம் தேதி காலையி லேயே சில பிரிண்ட் மீடியாவில் மட்டும் பளிச்சிட்டது. நாம் தர்ஷனிடம் விளக்கம் பெற அவரது பி.ஆர்.ஓ.வைத் தொடர்பு கொண்ட போது, "அவர் இப்ப இலங்கையில இருக்கார், செல்ஃபோன் நம்பரையும் மாத்திட்டார்' என்றார்.
நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலேயே சனம் ஷெட்டி மூலமாக சர்ச்சையக் கிளப்பிவிட்டுள்ளது பிக்பாஸ் டீம். முந்தைய சீசன்களை மிஞ்சும் வகையில் செமத்தியாக செட் போடப்பட்டிருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் சினிமா, டி.வி. பிரபலங்களைக் கடந்து சமூக வலைத்தள பிரபலங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மிக்சிங், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது விஜய் டி.வி. இதுபோக, வீட்டிற்குள் புதிதாக நுழையப் போகும் பிரபலங்கள் இருக்கிறார்கள். இவர்களால் என்னைக்கு என்ன சர்ச்சை கிளப்பிவிடப்பட்டு, டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைக்கப் போகிறார்களோ? அதைவிட முக்கியமான சங்கதி என்னன்னா, அசால்ட் பார்ட்டியான கவர்ச்சி இளவரசி ஷிவானி நாராயணன் மூலம் எப்படிப்பட்ட திடுக் மேட்டர்களை கிளப்பப் போகிறார்களோ?
பிக்பாஸ்...…நீங்க பெரிய ஆளு தான் பாஸ்.
-ஈ.பா.பரமேஷ்வரன்