மத்திய தணிக்கைக் குழு எனும் சி.ஏ.ஜி. அம்பலம்படுத்தியுள்ள ஏழு ஊழல்களில் மிக முக்கிய ஊழல் பாரத்மாலா திட்டத்தின் நெடுஞ்சாலை, விரைவுச்சாலை திட்ட ஊழலாகும்.
இதில் ஊழல் ஒருபுறமிருக்க, பா.ஜ.க.வுக்கு அதிக நன்கொடை அளித்த நிறுவனங்களாகப் பார்த்துப் பார்த்து திட்டப்பணிகள் வழங்கப் பட்டுள்ளதையும் சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தியுள்ளது. அதைப் பார்ப்பதற்கு முன் இந்தத் திட்டத்தில் நடந்த முறைகேடுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பாரத்மாலா திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலையமைக்க பிரதமர் மோடி தலைமை வகிக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்த தொகை ரூ.15 கோடி. ஆனால் செலவிட்ட தொகை ஒரு கிலோமீட்டருக்கு ரூ.32 கோடி. 34,000 கிலோமீட்டர் சாலை அமைக்க கணக்கிடப்பட்ட தொகை 5.34 லட்சம் கோடி. ஆனால் இதுவரை போடப்பட்ட 26,000 கிலோமீட்டருக்கே 8.46 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதிலேயே 3.12 லட்சம் கோடி அதிகமாகிவிட்டது. மிச்சமுள்ள 8,000 கிலோமீட்டரையும் சேர்த்தால் தொகை திட்டமிட்டதைவிட எங்கேயோ போய்விடும். அதிகம் செலவிடப்பட்ட தொகை, 5 சதவிகிதமோ, 10 சதவிகிதமோ இல்லை. திட்டமிட்டதைவிட நூறு சதவிகிதத்துக்கும் அதிகமாகச் செலவாகி யுள்ளது.
எந்தெந்த சாலைப் பணிகளில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன?
சூர்யாபேட்லி கம்மம் நான்குவழி தேசிய நெடுஞ்சாலை
தெலுங்கானா மாநிலத்தின் சூர்யா பேட்டுக்கும்லி கம்மத்துக்கும் இடையிலான நான்குவழி தேசிய நெடுஞ்சாலை, சூர்யாபேட்லி கம்மம் ரோடு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 74 சதவிகித பங்கை அதானி நிறுவனம் வைத்திருக்கிறது. நெடுஞ்சாலைப் பணிகளை எடுத்துச்செய்ய, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானப் பணிகளில் குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இந்த நிறுவனமோ, வேறுசில நிறுவனங்களின் அனுபவச் சான்றிதழை இணைத்தபோதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த சாலையின் மொத்த திட்ட மதிப்பு 1,566.30 கோடி. இதில் 40 சதவிகிதத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கும். மீதியை அந்த நிறுவனம் செலவிடவேண்டும். மாறாக, அந்த நிறுவனம் 25 சதவிகிதத்தை மட்டுமே செலவழித்து, மிச்சத்தொகையைக் கடனாக வைத்துவிட்டதாக சி.ஏ.ஜி. குறிப்பிட்டிருக்கிறது.
லக்னோ சுற்றுச்சாலை பணி
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ நகரத்தில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி பி.என்.ஆர். இன்போடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 2019, மார்ச் 7-ஆம் தேதி சுற்றுச்சாலை பணிக்கான ஏலத்தொகை ரூ.904.31 கோடியென முடிவுசெய்யப் பட்டது. ஆனால் பி.என்.ஆர். நிறுவனம் ஏலத்தொகையைவிட 17.44 சதவிகிதம் அதிகமாக அதாவது 1,062 கோடிக்கு வாங்கியது. அதாவது ஏலவிலை திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விடவும் 2.02 சதவிகிதம் அதிகம். இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த நிறுவனம் ஆக்ரா மேயராக இருந்த நவீன் ஜெயினுக்குச் சொந்த மானது. இவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
ஹாபூர் பைபாஸ்- மொரதாபாத் நெடுஞ்சாலை
உத்தரப்பிரதேசத்தின் ஹாபூர் பைபாஸ்- மொரதாபாத் நெடுஞ்சாலைத் திட்டத்தை ஐ.ஆர்.பி. இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் மேற்கொண்டது. முதலில் ஏல அழைப்பின்போது 22 வருட சலுகைக் காலத்துடன் வருடாந்திர பிரிமியம் தொகை 97.77 கோடி என நிர்ணயித்து நெடுஞ்சாலை ஆணையம் ஏலத்துக்கு அழைப்புவிடுத்தது. ஆனால் ஆண்டு பிரிமியம் 31.50 கோடிக்கு என முடிவுசெய்த ஐ.ஆர்.பி. இன்ஃப்ராஸ்ட்ரெக்சரின் ஏலத்தை ஆணையம் ஏற்றுக்கொண்டது. ஆனால் திடீரென ஐ.ஆர்.பி. இணையதளம் இந்தத் திட்டம் ரூ.3,345 கோடி மதிப்புடையது என கூறியுள்ளது.
ஏலத் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பார்வை மாறியதுடன், திட்டத்தின் மதிப்பீட்டில் ஏற்பட்ட பிழையை எந்த ஒரு நியாயமான காரணமும் பதிவுசெய்யாமல், மறு டெண்டருக்கும் செல்லாமல் ஆணையம் ஏற்றுக்கொண்டது என சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார விவ காரங்களுக்கான அமைச்ச ரவைக் குழு பரிந்துரைத்த தொகை ரூ.15 கோடி படி பார்த் தால் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் சாலைக் கான இதன் செலவு ரூ.1,500 கோடி வர வேண்டும். ஆனால் திடீரென சாலைப் பணி 3,345 கோடியாக உயர்ந் தது எப்படி? அதற்கு எந்த விடையும் இல்லை.
ஐ.ஆர்.பி. டெவலப்பர்ஸ் நிறுவனம் 2013 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் பா.ஜ.க.வுக்கு ரூ.65 கோடிவரை நன்கொடை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துவாரகா விரைவுச்சாலை
அடுத்ததாக வருவது துவாரகா விரைவுச் சாலையை எடுத்த ஜே.குமார் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனம். துவாரகா விரைவுச் சாலையில் சுரங்கப் பாதையும் வருவதால், அதை மேற்கொள்ளும் நிறுவனம் ஒற்றை அல்லது இரட்டைக் குழாய்களைக் கொண்ட ஒரு சுரங் கப்பாதை கட்டுமானத்தையாவது முடித்திருக்க வேண்டும் என்பது ஏல நிபந்தனைகளில் ஒன்று. இந்த நிபந்தனையை இந்நிறுவனம் பூர்த்தி செய்யாதபோதும் அதற்கு ஒப்பந்தம் கிடைத்தது.
ஜே.குமார் இன்ஃப்ரா புராஜெக்ட் நிறுவனத் தால் மும்பையில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததால், 2016-ல் பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனால் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் இந்நிறுவனத்தின் சுயாதீன இயக்குநர்களில் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராகவ் சந்திரா. இவர் 2015- 2016-ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையராக இருந்தவர். ஜி.ஆர். ஹைவேஸ் இன்வெஸ்ட்மென்டின் மேலாளராகவும் இவர் உள்ளார். அத்தோடு பல்வேறு காலகட்டத்தில் இந்நிறுவனம் பா.ஜ.க.வுக்கு 6.46 கோடி அளவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது.
தில்லிலி வதோதரா விரைவுச் சாலை
அடுத்து வருவது தில்லிலி வதோதரா விரைவுச் சாலை. கட்டுமானத்துக்கு முன் இத் திட்டத்துக்கு மதிப்பிடப்பட்ட தொகை ரூ.11,209.21 கோடி. ஆனால் பின் அது 31 திட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் மொத்தச் செலவு ரூ.32,839 கோடிக்குப் போனது. கிட்டத்தட்ட திட்ட மிட்டதைவிட 200 சதவிகிதம் செலவு அதிகரித்துள்ளது. இதனை ஜியாங்சி கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன், எம்.கே.சி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஜி.ஆர். இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஜி.ஹெச்.வி. இந்தியா ஆகிய ஐந்து நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கின்றன.
இதில் எல் அண்ட் டி நிறுவனம் 2014-15-ல் பா.ஜ.க.வுக்கு 5 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. எம்.கே.சி. இன்ஃபராஸ்ட்ரக்சர் இதுவரை பா.ஜ.க.வுக்கு 75 லட்சம் நன்கொடை அளித்துள்ளது. ஜி.ஹெச்.வி இந்தியா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய லஞ்சவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனமாகும்.
சூரசந்த்பூர்-துய்வாய் மற்றும் சித்தூர்-மல்லா வரம் திட்டங்களில், விரிவான திட்ட அறிக்கைகள் இறுதிசெய்யப்படுவதற்கு முன்பே டெண்டர் அழைப்பு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால், திட்ட விவரக்குறிப்புகள் மற்றும் பணியின் நோக்கம் ஆகியவற்றில் தெளிவின்றி இருப்பதாகவும் சி.ஏ.ஜி. குற்றம்சாட்டியுள்ளது.
ஆக, பாரத்மாலா திட்டத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான பெரும்பான்மை யான நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நிதியளித்த நிறுவனங்களாக இருக்கின்றன. அல்லது பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சில நிறுவனங்கள், சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாதபோதும் அவர்களுக்கு ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த குற்றச் சாட்டுடைய நிறுவனங்கள், மேம்பாலங்களை சரிவரக் கட்டத்தெரியாமல் தோல்வியடைந்த நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப் பட்டுள்ளன.
தவிரவும், பல சமயங்களில் முன்கூட்டியே ஆராய்ந்து திட்ட மதிப்பீடுகள் முடிவுசெய்யப் பட்டிருந்தும், பணிமுடிவில் நியாயமில்லாத அளவுக்கு செலவுகள் அதிகரித்திருப்பதை ஏற்று பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதுவரை போடப்பட்ட 26,000 கிலோ மீட்டர் சாலைக்கே 8.46 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதிலேயே 3.12 லட்சம் கோடி அதிகச் செலவு. இதில் ஒப்பந்தம் ஏலம் எடுத்தவர்களின் பையில் எத்தனை கோடி போனது... பா.ஜ.க.வின் பைக்குள் எத்தனை கோடி போனது? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வி.