"ஹலோ தலைவரே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜின் திடீர் மரணம், அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கு.''”
"ஆமாம்பா 48 வயதில் மனோஜ் மரணமடைந்திருக்கிறார். இதனால் தனது 84 வயதில் புத்திர சோகத்தைத் தாங்கமாட்டாது தத்தளித்துக்கொண்டிருக்கிறார் பாரதிராஜா''”
"ஆமாங்க தலைவரே, தமிழ்த் திரையுலகில் மகத்தான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. ஸ்டுடியோக்களில் சிறைப்பட்டிருந்த சினிமாவை, விடுவித்ததோடு, இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களுக்கு அவற்றை அழைத்து வந்த மாபெரும் கலைஞர் அவர். மிகுந்த தமிழுணர்வாளர். அதனால் அரசியல் பேதமில் லாமல் அனைத்துத் தரப்பினரின் மரியாதைக்குரிய கலைஞராகவும் பாரதிராஜா திகழ்ந்துவருகிறார். அவர் ஏராளமான நடிகர், நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்த வரிசையில், அமெரிக்காவில் நாடகக் கலை படித்து வந்த தன் மகன் மனோஜை, 99-ல் தனது "தாஜ் மஹால்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவர் அறிமுகப்படுத்தினார். மேற்கொண்டு சில படங்களில் மனோஜ் நடித்திருக்கிறார், இயக்கவும் செய்திருக்கிறார். பாரதிராஜாவால் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகர்கள் எல்லாம் பெரும்புகழோடு இருக்கும்போது, அவரது மகன் மனோஜால், எதிர்பார்த்த உயரத்தை எட்ட முடியாமல் போய்விட்டது. சினிமா மீது தீவிரக் காதல் கொண்டிருந்த மனோஜ், அது தனக்குக் கைகொடுக்காத விரக்தியிலேயே இருந்தார்னு சொல்றாங்க.''”
"உண்மைதாம்பா''”
"இந்த நிலையில் தொடர் மனஅழுத்தத்தால் இதய பாதிப்புக்கு ஆளான மனோஜுக்கு, அண்மையில் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. இதன்பின் கொஞ்சநாளாய் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவர், 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு திடீரென்று மரணம் அடைந்திருக்கிறார். இது பாரதிராஜா குடும்பத்தை மட்டும் அல்லாமல், அவரை நேசிக்கும் அத்தனைபேரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. "சாதுரியன்' என்ற படத்தில் நடிக்கும்போது, அதில் நாயகியாக அறிமுகமான மலையாள நடிகை நந்தனாவைக் காதலித்து மனோஜ் திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு மதிவதனி, அர்த்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மறைந்த மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், ஜெயக்குமார், ஓ.பி.எஸ்., நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் களும் திரைத்துறைப் பிரபலங்களும், பல்வேறு தரப்பினரும் சாரிசாரியாக வந்து அஞ்சலி செலுத் தியதுடன், மகனை இழந்த சோகத்தில் தேம்பிக் கொண்டிருந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஆறுத லும் தெரிவிச்சிருக்காங்க. மனோஜின் இறுதிச் சடங்குகள் 26ஆம் தேதி மாலை நடந்திருக்கிறது.''”
"ஆங்காங்கே நடைபெறுகிற குற்றச்செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்வதும், அதன்மூலமாக குற்றம் நடைபெறாமல் தடுப்பதும் தமிழக காவல்துறையில் உள்ள உளவுப் பிரிவின் பணி ஆனால் தொடர்ந்து எல்லாவற்றை யும் கோட்டைவிட்டு வருகிறது தமிழக உளவுப் பிரிவு என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே.''”
"அதுக்குள்ள போகுறதுக்கு முன்னாடி சென்னையில் 25-ஆம் தேதி காலை தொடர் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்தது மூலமா, சென்னை மாநகர போலீஸ் பொது மக்களிடம் பாராட்டை பெற்றிருக்கே.''”
"ஆமாம் தலைவரே, கமிஷனர் அருண் வழிகாட்டுதலில், குறிப்பா தெற்கு இணை ஆணையாளர் சிபிச்சக்கரவர்த்தி, சம்பவம் நடந்த இரண்டுமணி நேரத்திற்குள் 140-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து குற்றவாளிகள் இருவரையும் அடையாளப்படுத்தி, அவங்க விமானநிலையம் சென்றதையும் உறுதிப்படுத்தி யிருக்கார். விமானநிலைய இன்ஸ்பெக்டர் பாண்டியுடன் உள்ளே நுழைந்த சிபிச்சக்கரவர்த்தி ஐதராபாத்திற்கு புறப்படத் தயாராக இருந்த விமா னத்தை நிறுத்தி... கொள்ளையர் கள் ஜாபர் குலாம், உசேன் இரானி, மிசாம்மகாதுஷ் மேசம் இரானி ஆகியோரை வெளியே வருமாறு அழைத்துள்ளார். அப்போது ஜாபர்குலாம் "நான் மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு வேண் டப்பட்டவன். அமைச்சர் கள் பலரும் எனக்கு நண்பர்கள், நெருக்கம் உண்டு போன் போடட்டுமா...?' என இந்தியில் போலீஸ் அதிகாரி களிடம் எகிறியுள்ளான். விமான நிலைய பாதுகாப்புப் பணியிலுள்ள மத்திய போலீஸ் உதவியுடன் அவனை வெளியே கொண்டு வந்துள்ளார்கள். மும்பை செல்ல பயணிகள் காத்திருப்பில் இருந்த மற்றொரு வனைத் தூக்கியுள்ளார்கள்.''
"ரயிலில் சென்ற சல்மான்உசேன் இரானியை ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கிறார்கள்.''
" "ஏன்டா சென்னையைத் தேர்ந்தெடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டீர்கள்....?'' என்று போலீஸ் கேட்டதற்கு, தலைவன் ஜாபர்குலாம் உசேன், ‘சென்னையில் கொள்ளைச் சம்பவம் சுலப மாக நடத்தலாம், போலீசிடமிருந்து தப்பிவிட லாம் என்று எங்களுக்கு குஜராத், உத்தரப்பிர தேசத்திலிருந்து சில குழுக்கள் அசைன்மெண்ட் கொடுத்தது’ என்று கூறியிருக் கிறான். அப்படிக் கூறிய சிலமணி நேரத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். "சென்னை போலீஸ் அதிகாரி களின் அதிவேகச் செயல்பாடு போல தமிழ்நாடு முழுக்க உள்ள போலீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருந்தால் தான் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம். அதற்கு மாநில உளவுத்துறையை புனரமைப்பு செய்ய வேண்டியது முதல்வரின் பணி' என்கிறார்கள் காவல்துறையில் உள்ள அதிகாரிகளே.''”
"சரிப்பா, எடப்பாடியின் டெல்லி விசிட் பரபரப்பாகப் பேசப்படுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, எடப்பாடி டெல்லி சென்றதன் பின்னணியில் கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் அறிவுறுத்தலும், வற்புறுத்தலும் இருந்ததாம். இவர்கள் மூலம் பலமாக அழுத்தம் கொடுத்து, சம்மன் அனுப்பாத குறையாய் எடப்பாடியைத் தன்னி டம் ஓடி வரும்படி செய்த தாம் டெல்லி. அன்று சட்டமன்றத்தில் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்குக் கூட, எடப்பாடியின் டெல்லி பயணம் பற்றித் தெரியாதாம். ப்ளைட் பிடித்து தலைநகர் சென்ற எடப்பாடி, அன்று இரவு 9 மணியளவில் தன் டீமோடு அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். பின்னர் ஒரு டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் தனியாக ஒருமணி நேரம் அவர் அமித்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அமலாக்கத்துறையில் வசமாக சிக்கியுள்ள தன் சகலையும் பினாமியுமான ராமலிங்கத்துக்கு உதவும்படி அவர் கேட்டி ருக்கிறார். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தன்னையும் தன் மகனையும் கைது செய்யக்கூட அமலாக்கத்துறை அதிகாரிகள் முயலலாம். அப்படியொரு சிக்கல் வராமல் நீங்கள்தான் காப்பாற்றவேண்டும் என்றும் எடப்பாடி கெஞ்சாத குறையாய் அமித்ஷாவிடம் கேட்டுக்கொண் டாராம்.''”
"இதற்கு அமித்ஷாவின் பதில் என்னவாம்?''”
"அதெல்லாம் சரி. நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணிக்காக உங்களை அழைத்தபோது, நீங்கள் ஏன் வரவில்லை என்று எடப்பாடியிடம் சற்று குரலை உயர்த்தினாராம் அமித்ஷா. "அதெல்லாம் வேறு சூழலில் எடுக்கப்பட்ட முடிவு. இனி உங்கள் கூட்டணியில் உறுதியாக இருப்போம் என்று அமித்ஷாவிடம் வாக்குறுதி கொடுத்த எடப்பாடி, சசிகலாவையும் -ஓ.பி.எஸ்.ஸையும் எங்களுடன் இணைத்துக் கொள்ளும்படி நிர்பந்திக்காதீர்கள். அவர்களை இணைத்துதான் ஆகவேண்டும் என்றால், அதுகுறித்து எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நான் கலந்து பேசவேண்டும்' என்றும் குரலைத் தாழ்த்திச் சொல்லியிருக்கிறார். "அது குறித்துப் பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று சொன்ன அமித்ஷா, எடப்பாடியைத் தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவந்து விட்ட மகிழ்வோடு, அவரை வழியனுப்பி வைத்தாராம்.''
“"விஜய்யின் பொதுக்குழு கூட்டத்தை அவரது கட்சித் தொண்டர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கிறார்களே..''…”
"ஆமாம். விஜய்யின் த.வெ.க. கட்சி மார்ச் 28-ல் பொதுக்குழுவைக் கூட்டவுள்ளது. அதேசமயம் பொதுக்குழுவுக்கு முன்பு அவரது கட்சியைச் சேர்ந்த சிலரே "இந்த பொதுக்குழு செல்லாதென வழக்குத் தொடுக்கவுள்ளதாக' சில தகவல்கள் கிடைக்கின்றன. கட்சியின் பைலாவின்படி முதலில் கிளை, ஒன்றிய, பகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும். இவர்களெல்லாம் சேர்ந்துதான் மா.செ.வைத் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு மாறாக, முதலில் மா.செ.வைத் தேர்வு செய்துவிட்டு பிறகு கிளை, ஒன்றியச் செயலாளர்களை நியமிக்கிறார்கள். எனவே இத்தகைய மாவட்டச் செயலாளர்களை வைத்து தேர்வுசெய்யும் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாதென வழக்குத் தொடுக்க விருக்கிறார்களாம். அதேபோல பொதுக்குழுவுக்கு மாவட்டச் செயலாளர்கள் முறையாக கடிதம் எழுதி அழைக்கப்படவில்லையாம். போனிலேயே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதாம். இப்படி பல அதிருப்தி குரல்கள் எழுகின்றன. இதற்கு முக்கிய காரணம், பொறுப்பாளர்கள் நியமனம் உட்பட பல முக்கியத் தகவல்களை ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் போன்றோர் விஜய் காதுக்குக் கொண்டு செல்வதில்லை. இவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்தி விடுகிறார்கள். இதுவே இத்தகைய சிக்கலுக்குக் காரணமென்கிறார்கள்.''””
"ஒன்றிய அரசுக்கு எதிராக தி.மு.க. போராட்டக் களத்தில் இறங்குகிறதே?''”
"தமிழகத்திற்குத் தரவேண்டிய நலத் திட்டங்களுக்கான நிதியைத் தராமல் ஒன்றிய அரசு, வஞ்சித்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என பலமுறை ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இருந்தும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப் பான்மையுடனே ஒன்றிய அரசு பார்த்துவருகிறது. குறிப்பாக, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய சுமார் 4000 கோடி ரூபாயை இழுத்தடித்து வருகிறது டெல்லி. இது குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியும், கண்டித்துக் குரல் கொடுத்தும்கூட மௌனம்காத்து வரு கிறார்கள். இந்த நிலையில், பொறுமையிழந்த ஸ்டாலின், 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகளை ஒன்று திரட்டி, அவர் களுடன் இணைந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். அந்தப் போராட்டம் தமிழகம் தழுவிய அளவில் வருகிற 29ஆம் தேதி நடக்கிறது. இதன்பிறகும் நிதியைத் தராமல் மத்திய அரசு இறுக்கம் காட்டினால், நீதிமன்றத்தில் வழக்கைத் தொடரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.''”
"தமிழக முதல்வருக்கு உள்ள அதிகாரம் தனக்கு இல்லை என்று புதுவை முதல்வர் ரெங்கசாமி பகிரங்கமாகவே ஆதங்கப்பட்டி ருக்கிறாரே?''”
"புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் நடந்துவருகிறது. 26ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது புதுவை முதல்வர் ரெங்கசாமி, அங்கே தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து கேட்கப்பட்டபோது, ’தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசுகிறார். அவர்களும் தொழில் தொடங்க அங்கே வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் எனக்கில்லை. காரணம், புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காதவரை இந்த அதிகாரம் கிடைக்கப்போவதில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால், புதுவையில் ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டுமானாலும் அனுமதி பெறுவது கடினமாக இருக்கிறது. இதேநிலை நீடித்தால், எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் புதுச்சேரி பின்தங்கிய நிலையில்தான் இருக்கும்’என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தி இருக் கிறார். புதுவை சட்டமன்றத் திலேயே அம்மாநில முதல்வ ரால், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயர் உயர்த்திப் பிடிக்கப்பட்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி யிருக்கிறது.''”
"எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறு வனத்தில் சலசலப்பு தெரியுதே?''”
"தமிழக அரசின் எய்ட்ஸ் கட்டுப் பாட்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலரான மதியழகன் மீது, லஞ்சஒழிப்புத் துறைக்கு புகார்கள் ஏகத்துக்கும் சென்றுள்ளது. இவர் ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் உதவி பொதுமேலாளராக இருந்து, கடந்த ஆண்டு ஓய்வுபெற்றவராம். மதியழகன் ஆவினில் பணிபுரிந்த காலங்களில் லஞ்ச முறைகேட்டில் சிக்கி, ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளானவர் என்கிறார்கள். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆவின் அமைச்சர்களாக இருந்தவர் களுக்கும், ஆவின் நிறுவன உயரதிகாரிகளுக்கும் இடையே இவர் தரகராக செயல்பட்டவர். இந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு, பணித்திறன் அறிக்கை வழங்கவும், சங்கத்தின் பணி நியமனங்களின் பேரிலும் இவர் டீலிங் பேசி ஏகத்துக்கும் வசூலிக்கிறாராம். இது தொடர்பான புகார்கள்தான் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை உட்பட பல பக்கமும் சிறகடிக் கிறதாம்.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். தனது வீடு சூறை யாடப்பட்ட விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யையும் குற்றம்சாட்டியிருந் தார் யூ டியூபரான சவுக்கு சங்கர். இதைக் கண்டதும், காங்கிரஸில் உள்ள செல் வத்தின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த எம்.பி.க்களும், தலைவர்களும் இந்த விவகாரத்தை ராகுலின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவரும் இதை விசாரித்து ரிப்போர்ட் தரும்படி கேட்டிருக் கிறாராம். செல்வப் பெருந்தகையோ ’"நடந்த சம்ப வத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்த மும் இல்லை'’ என்று சொல்லி வருகிறார்.''”
___________
இறுதிச் சுற்று!
வஃக்பு வாரிய சட்டம்! தீர்மானம் நிறைவேற்றம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வஃக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க. அரசு, இதற்காக, 27-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மத்திய அரசின் வஃக்பு வாரிய சட்டத் திருத்தத்தின் மூலம் வஃக்பு சொத்துகளை அரசு கைப்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள். இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், வஃக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்ப தாகவும், இஸ்லாமியர்களின் மத உரிமையை பாதிப்பதாகவும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் சட்டத்தை எதிர்த்து நமது எதிர்ப்பை பதிவு செய்வது அவசிய அவசரம். அதனால், வஃக்பு வாரிய திருத்த சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெறவேண்டும்'' என்று வலியுறுத்தினார். இதனையடுத்து, தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மத்திய அரசுக்கு உடனடியாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அனுப்பி வைக்கும்.
எடப்பாடியை தவிர்த்த ஓ.பி.எஸ்!
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் புதனன்று உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக 27-ந் தேதி வியாழக்கிழமை நெல்லை சென்றிருந்த எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் அங்கிருந்து தூத்துக்குடி வந்து, ஒரே விமானத்தில் சென்னைக்கு திரும்புவதாக இருந்தது. இந்நிலையில், இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பதற்காக ஓ.பி.எஸ். பின்வாங்க, எடப்பாடி மட்டும் 1:15 மணி விமானத்தில் சென்னைக்கு வருகிறார். ஓ.பி.எஸ். மாலை விமானத்தில் சென்னை திரும்புகிறாராம்!
-இளையர்