திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளோடு செயல்பட்டுவருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே துணைவேந்தர் பிரச்சனை ஒருபக்க மெனில், இவர்களுக்குக் கீழ் செயல்பட்டுவரும் "பிம்' என்ற கல்வி நிறுவனம் சாதியரீதியான அணுகு முறையை கையாள்வதாகவும், பேராசிரியர்கள் அவ்வப்போது பழிவாங்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்நிலையில் கடந்த மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் உயர்கல்வித்துறை  செயலாளர் சங்கர் தலைமையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், 2 பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்தும் விவாதித்தோடு, அவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

ஆனால் இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை கட்டாய பணி ஓய்வில் வெளியே அனுப்ப சிண்டிகேட் முடிவுசெய்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

இந்த சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும், குறிப்பாக, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது. 

Advertisment

அதன்படி பட்டியலிலுள்ள பல்கலைக்கழக தொலையுணர்வுத் துறையின் இணைப்பேராசிரியர் ரமேஷ் மீதும், வணிகவியல் துறை பேராசிரியர் எல்.கணேசன் மீதும் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாகா கமிட்டி மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரையும் தனித்தனியாக விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதிசெய்யப்பட்டது. அவற்றை அறிக்கையாக சிண்டிகேட் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. 

அதில் ஒரு குழுவினர், அவர்களை முழுமை யாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க, சிண்டிகேட்டிற்குள் இருக்கும் சிலரும், ஆசிரியர்கள் சங்கமும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் மனுவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையை ஆதாரமாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உயர்கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இருவருக்கும் கட்டாய பணி ஓய்வு அளிக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர். 

ஆனால் பாலியல் புகாரில் சிக்கிய 5-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள்மீது விசாகா கமிட்டி உரிய விசாரணை நடத்தி மாணவிகளிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு, விசாகா கமிட்டியின் விசாரணையும் முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே தமிழக அரசின் உயர்கல்வித்துறை அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பாலியல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.