அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன், சிலருக்காக செல்போனில் பேசிய பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், அவருக்கும் பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கும், விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில், செப்டம்பர் 10-ஆம் தேதி வரையிலும் காவலை நீட்டித்து உத்தரவிட்டார் நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி.
இதனைத் தொடர்ந்து, மாடியிலிருந்த நீதிமன்றத்திலிருந்து, படிக்கட்டு வழியாக வெளியே அழைத்து வரப்பட்டபோது, ஆவேசமானார் முருகன். "சார்.. ஒரு ஆரோக்கியமான விசாரணைக்கு என்னை அலோவ் பண்ணுங்க. எனக்கும் ஒரு வக்கீல் வைக்கிறதுக்கு, வந்து வாதாடுறதுக்கு வாய்ப்பு கொடுங்க. நீங்க உள்ளே அடைச்சு வச்சு, என்னைத் தற்கொலைக்குத் தூண்டி, இதோட என் வாழ்க்கையை க்ளோஸ் பண்ணுறதுக்கு பார்க்கிறீங்க. நான் உள்ளேயிருக்கிறதுனால லாபம், ஆதாயம் அடைபவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கோர்ட்ல போட்டு நிரூபிங்க. நான் பார்க்கிறேன். கோர்ட் இதற்கான வழியை சொல்லட்டும். கோர்ட் என்னைக் குற்றவாளி என்று சொல்லட்டும். நீங்கள் யார் என்னைக் குற்றவாளி என்று சொல்வதற்கு?'’என்று கூச்சல் போட்டார்.
முருகனின் இந்த ஆத்திரத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டோம். "எங்களை வெளியில் விட்டால், மேலிடத்து (ராஜ்பவன்) சமாச்சாரங்களை அம்பலப்படுத்திவிடுவோம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்குச் சந்தேகம்.
சிறை மரணமெல்லாம் தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடக்கிறது. நிர்மலாதேவியை சரிக்கட்டிவிட்டார்கள். நாங்கள் அப்படி கிடையாது. எங்களை எப்போது என்ன பண்ணுவார்கள் என்றே தெரியவில்லை'’என்று சிறைக்குள் புலம்பிவந்த முருகன், இப்போது கோர்ட் வளாகத்திலும், பத்திரிகையாளர்களிடம் தன்னுடைய சந்தேகத்தைப் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக, குமுறித் தீர்த்துவிட்டார்''’என்கிறார்கள் முருகன் தரப்பில்.
சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்திலும், “""என்ன இவன் (முருகன்), ரொம்ப நல்லவன் மாதிரி பேசுறான். இப்படியே விட்டால், இந்த வழக்கில் கவர்னர் பெயரைக்கூட சொன்னாலும் சொல்லிருவான். இந்த வழக்கில் யாருக்கு ஆதாயம்னு இவனும் இவன் கொழுந்தியாவும் வாயைத் திறக்க ஆரம்பிச்சிருக்காங்க. ராஜ்பவன் ஆடிப்போய்க் கிடக்கு. தேரை இழுத்துத் தெருவுல விட்ருவாங்க போல. மொத்தத்துக்கு இது சரியில்ல''’என்று முணுமுணுக்கிறார்கள்
. -சி.என்.இராமகிருஷ்ணன்