வங்கியிடம் கடன் வாங்கி, கல்லாவை நிரப்பி கைவிரித்த விவகாரத்தால் வெளிச்சத்துக்கு வந்த பிசினஸ்மேன்கள் மெகுல் சோக்ஸியும் நீரவ் மோடியும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு, அவற்றைக் கட்டாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரிகள். தவிரவும் நீரவ் மோடியும், மெகுல் சோக்ஸியும் உறவினர்களும்கூட. இதில் நீரவ் மோடி லண்டனில் அடைக்கலம் புக... மெகுல் சோக்ஸி, கரிபியன்தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஆன்டிகுவா வில் அடைக்கலம் புகுந்தார். பொருளாதார ரீதியான குற்றங்களில் ஈடுபட்டு, தலைமறைவாக விரும்பும் நபர்களுக்கு அடைக்கலம் தருவதில் பெயர்பெற்றது ஆன்டிகுவா. கிட்டத்தட்ட 1 லட்சம் டாலர் செலவிட்டால் இங்கு குடியுரிமை கிடைத்துவிடும்.
அப்படி அடைக்கலம் புகுந்த ஆன்டிகுவாவில் இருந்துதான் கடந்த பத்து தினங்களாக சலசலப்பு எழுந்துள்ளது. மெகுல் சோக்ஸி காணாமல் போனதாக அவரது மனைவி முதலில் புகார் செய்தார். பின் அவர் இந்தியர்கள் சிலரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறினார். காணாமல்போன மெகுல் பக்கத்து நாடான டொமினிக்காவில் கண்டறியப்பட அவரை பாதுகாப்பாக மீட்க வழக்கறிஞர் படையொன்று களமிறங்கியது. அதேநேரம் அவரை மீட்டு இந்தியா கொண்டுவர சி.பி.ஐ.யும் டொமினிக்காவுக்குப் பறந்துள்ளது.
என்னதான் நடக்கிறது கரிபியன் தீவுகளில்?
மெகுல் சோக்ஸியின் மனைவி ப்ரீத்தி, “"என் கணவர் டொமினிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை. ஆன்டிகுவாவில் எங்கள் குடியிருப்பு அருகே 2020-ல் பார்பரா என்பவர் வாடகைக்கு வந்தார். அவர்தான் என் கணவர் டொமினிக்காவுக்குக் கடத்தப்பட காரணம்.
அவளுடைய உண்மையான பெயர் என்ன என்பதே தெரியாது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எங்கள் வீட்டருகே குடிவந்தார். என் கணவருடன் அறிமுகத்தை வளர்த்துக்கொண்ட அவர், கடந்த மே 23-ஆம் தேதி என் கணவரை அவரது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார். திடீரென அவரது வீட்டுக்குள் பத்து பேர் நுழைந்து என் கணவரை இழுத்துச்சென்றனர். என் கணவர் படகில் கடத்திச் செல்லப்பட்டார். அதில் குர்மித், குர்ஜித் என இரண்டு பஞ்சாபிகள் இருந்ததாக என் கணவர் சொன்னார்''’என தன் கணவர் டொமினிக்காவுக்குக் கடத்தப்பட்டதை விவரிக்கிறார்.
இடையில் என்ன நடந்ததோ, டொமினிக்காவில் அத்துமீறி நுழைந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். அவரது கண்கள் சிவந்து, கைகள் காயம்பட்டு காணப்பட்டன. மெகுல் சோக்ஸியின் மீதான வழக்கு ஜூன் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சோக்ஸிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்கள், "மெகுல் சோக்ஸி, டொமினிக்கா வுக்குள் அத்துமீறி நுழையவில்லை. அழகி ஒருவர் மூலம் வலைவிரிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக டொமினிக்காவுக்குள் கடத்திவரப்பட்டிருக்கிறார். மேலும் அவரை இந்திய அரசிடம் ஒப்படைக்கக் கூடாது. 2017-லேயே மெகுல் தனது இந்தியக் குடியுரிமையை அரசிடம் ஒப்படைத்துவிட்டார். ஆன்டிகுவாவில் குடியுரிமையும் பெற்றுவிட்டார். இந்தியக் குடிமகன் அல்லாத மெகுலை இந்தியாவிடம் எப்படி ஒப்படைக்க முடியும்''’என வாதம் செய்தனர்.
மாறாக இந்தியத் தரப்பிலோ, மெகுல் சோக்ஸி மீது 11 வழக்குகள் இருப்பதையும், கைது செய்வதற்கான இன்டர்போல் உத்தரவு இருப்பதையும் குறித்து விளக்கப்பட்டது. தவிரவும் மெகுல் சோக்ஸியின் இந்தியக் குடியுரிமை ரத்தாகவில்லை என்பதும் விளக்கப்பட்டது. மெகுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு அந்நாட்டு அரசு ஆதரவளித்தபோதும், ஆன்டிகுவா மற்றும் டொமினிகா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த எதிர்ப்புக்காக மெகுல் சோக்ஸி தரப்பிலிருந்து கனமான கவனிப்பு அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தவிரவும், மெகுல் சோக்ஸி டொமினிகாவுக் குக் கடத்தப்பட்டது இந்திய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் ரகசியத் திட்டத்தால்தான் என்றும் சொல்லப்படுகிறது.
ஆன்டிகுவா சென்றது முதலே மெகுலைக் கண்காணிக்க அவரது வீட்டருகிலே பல்கேரிய அழகி ஒருவரை வாடகைக்கு குடியேறச் செய்தது என்றும், மெகுல், டொமினிக்காவுக்குக் கடத்தப்பட் டது அத்திட்டத்தின் ஒரு பகுதிதான் எனப்படு கிறது. அதற்கேற்ப, நாடு கடத்துவதற்கான உத்தரவு கிடைத்தால் மெகுலை இந்தியாவுக்குக் கொண்டு வர, இந்திய ஜெட் விமானம் ஒன்று டொமினிக் காவில் தரையிறங்கியுள்ளதாக ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரௌனி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிலிருந்து டொமினிக்கா வந்துள்ள குழுவில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவுக்கு சி.பி.ஐ.யைச் சேர்ந்த அதிகாரி யான ஷர்தா ரவுத் தலைமை வகித்துள்ளார்.
ஜாமீன் மறுக்கப்பட்டு வழக்கு ஜூன் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அதிகாரிகளும் விமானமும் நாடு திரும்பியதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அழகி…நாடு கடத்தல் விவகாரத்துக்குப் பின், மெகுல் சோக்ஸி விவகாரத்துக்கு ஒரு வசீகரம் சேர்ந்துவிட்டது. ஊடகங்களில் வரும் செய்தி களோடு கற்பனையையும் சேர்த்து, வைரம்போல நன்கு பட்டை தீட்டினால் பாலிவுட்டில் ஒரு சூப்பர் ஹிட் படத்தையோ, ஓ.டி.டி. தொடரையோ எடுத்து காசு பார்த்துவிடலாம்.