ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அழகுமுத்துக்கோனின் 313வது ஜெயந்தி விழா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவிற்காக நெல்லை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் சிவகங்கை, ராமநாத புரம், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து 4 ஏ.டி.எஸ்.பி.க்கள், 13 ஏ.எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி.க்கள், 51 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட 1450க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
"சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. வாகனங்களின் கூரை மீது அமர்ந்துகொண்டு வரக்கூடாது' என அறிவுறுத்தப்பட்ட நிலையில், விழா நடக்கு மிடத்தில் 2 டீம், சரவணபுரத்தில் பால்குடம் எடுக்கும் பகுதியில் ஒரு டீம், 6 கி.மீ. தூரமுள்ள நுழைவுப் பகுதியான ஆர்ச் இருக்கும் சரவணபவன் ஹோட்டல் பகுதியில் ஒரு டீம் உள்ளிட்ட 4 டீம் போலீஸார், தூத்துக்குடி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலும், வெளியேறும் வழியான செட்டிக்குறிச்சி ஜங்ஷன், நாலாட்டின் புதூர் ஆகிய இடங்களில் உள்ள 2 டீம் போலீஸா ருக்கு தூத்துக்குடி மாவட்ட சைல்ட் வெல்ஃபேர் ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம் தலைமையிலும், புதூர் பாண்டியாபுரம், குறுக்குச்சாலை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் விழாவிற்கு வருபவர்களை கண்காணிக்க 5 டீம்கள் என போலீஸார் கண்கொத்திப் பாம்பாக பாதுகாவலில் இருந்தனர்.
விழாவில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்திய நிலையில், வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசு தாரர்களான வனஜா, ராஜராஜேஸ் வரி, ராணி, மீனாட்சி தேவி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌர வித்தார். அதனைத் தொடர்ந்து. அழகுமுத்துக்கோன் மணிமண்ட பத்தில் உள்ள அவரது சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் கட்சி சார்பாகவும், சமுதாய இயக் கங்கள் சார்பாகவும் ஒன்றன்பின் ஒன்றாக மரியாதை செலுத்தி வந்தனர். அமைதியாகத் தொடங்கிய நிகழ்வு பிற்பகலில் தடியடி, ஆர்ப்பாட்டமாக மாறியது.
"கோவில்பட்டி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் சந்திப்பு பகுதி யில் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மணி மண்டபம் செல்லும் வழியில் நினைவு ஆர்ச் புதி தாகக் கட்டப்பட்டு வருகிறது. சரியாக பிற்பகல் 3 மணியளவில் சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் சிலர் குடிபோதையில் மணிமண்டப நுழைவாயிலான ஆர்ச்சில் ஏறி தங்களது சமுதாயக் கொடியைக் கட்டி, கோஷங்கள் எழுப்பினர். அதுவரை அமைதியாக இருந்த போலீஸார், சட்டென சுதாரித்து, அவர்களை கீழே இறங்கி வரும்படி அதட்டி, கீழிறங்கிய இளைஞர்களை அடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சட்டென பெரிதாக உருவெடுத்து, தங்கள் சமூக ஆட்களை போலீசார் அடித்ததாகக் கூறி, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இச்சூழலில் சிலர் போலீ ஸார் மீது கற்களை வீச, கடுப்பான போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். "இப்படி பதட்டமான சூழல் உருவானதற்கு காரணமே, பாதுகாப்புப் பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதிதான்'' என கை காட்டுகிறார் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர்.
இன்ஸ்பெக்டரின் அசட்டையால் வாக்கு வாதம், தள்ளுமுள்ளு, மோதல், கல்வீச்சு, சாலை மறியல் எனத் தொடர்ந்த இளைஞர்களால், கண்ணுக் கெட்டிய தூரம் வரை 2 மணி நேரமாக போக்கு வரத்து நெரிசல். "தயைகூர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புறப்படுங்கள்! விலகுங்கள்!' என்றெல்லாம் கெஞ்சிக் கேட்டும் கலையாததால் தடியடி நடத்தப்பட்டிருக்கிறது.
உளவுத்துறை அதிகாரியோ, "குறிப்பிட்ட இந்தப் பகுதிக்கு மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ் வரன் தலைமையில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி தான் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந் தார். வாகன தணிக்கை செய்வதுதான் முக்கிய பணியே. அரசு விழா தொடங்கி, சினிமா பிரபலங்கள் வந்து செல்லும்வரை தீவிரமாக தணிக்கையில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர், மதிய வேளையில் சற்று கண் அசந்திருக்கின்றார். தங்களது சமூகக் கொடியை கொண்டு வந்திருந்த இளைஞர்கள் இருவர் ஆர்ச்சில் கட்டப்பட்டி ருந்த மரச்சாரத்தில் ஏறி, அழகுமுத்துக்கோன் தலைக்கு மேல் கொடியைக் கட்டி வாழ்க கோஷம் எழுப்பியிருக்கின்றனர். அதுவரை அங்கு பத்மாவதி தலைமையில் அசந்து தூங்கியிருந்த 57 போலீஸாருக்கும் இது தெரியாது என்பது தான் அவமானப்படவேண் டிய விஷயம். சப்தம் கேட்டு கண்விழித்தவர், அந்த இளைஞர்களை அங்கேயே அடிப்பது எவ்வகையில் நியாயம்? பதட்டமான சூழலில் இது தேவையா? இதனால்தான் தங்கள் சமூக இளைஞர்களைத் தாக்கியதாகக்கூறி தடியடி வரை கொண்டு சென்றுவிட்டார்கள்'' என்றார் அவர். சென்சிடிவான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டாமா!
படங்கள்: மூர்த்தி