சட்டமன்றத்தில் முதன் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்து, அதை வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கையாக்குவதாக அறிவித்த கையோடு, மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்சட்டங்கள் விவசாயி களுக்கு பேராபத்தை உண் டாக்கிவிடும் என தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளும் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ் தான், ஹரியானா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட விவசாயிகள் தலைநகரான டெல்லியை முற்றுகையிட்டு இன்றுவரை போராடிவருகின்றனர்.
இந்த சட்டத்தை எதிர்த்து கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்குவங்காளம், டெல்லி ஆகிய ஆறு மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்திருந் தனர். இந்நிலையில் ஏழாவது மாநிலமாக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் வெளி யேறினர். எனினும், விவசாயி களின் நலனை கருத்தில்கொண்டு குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தை நிறைவேறச் செய்து வரலாற்றுச் சாதனையில் இடம் பிடித்தார் முதல்வர் ஸ்டாலின்.
வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது, தமிழகத்தை அன்றைக்கு ஆண்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரி வித்திருந்தால் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராமலே போயிருக்கும். அதை முந்தைய அரசு செய்யத் தவறியிருந்த நிலையில், ஏழாவது மாநிலமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சட்டமன்றத்தில் தீர் மானத்தை கொண்டுவந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "வேளாண் தொழில் பெருகவும், விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டுவந்தது. அதேநேரம் ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவந்துள்ள, மூன்று சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. அதனை ஒன்றிய அரசு ரத்துசெய்யவேண்டும் என பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்று கூறினார். தீர்மானத்தை நிறைவேற்றும்போது முதல்வர் ஸ்டாலினின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
எதிர்பார்த்தபடி, "இது அறிவாலயத்தின் கண் துடைப்பு நாடகம்'' என விமர்சித்து பேட்டியளித்தார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அ.தி.மு.க. தரப்பி லிருந்து விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன் கூறுகையில், "மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களை அறியா மல், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு விரோதமான மூன்று சட்டங்களை கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கொண்டுவந்தது. முதலாளித்துவ பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பதினோருமாத காலமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதை விவசாயிகள் சார்பாக முழுமனதோடு பாராட்டுகிறோம்; வாழ்த்துகிறோம். இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு விடியல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம், இந்த சட்டம் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்த, பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்து சட்டத்தைக் கொண்டுவர உதவிபுரிந்த அ.தி.மு.க. ஆட்சி, தமிழக விவசாயிகள் உலக அரங்கில் தலைகுனியும் நிலையை ஏற்படுத்தியது. இப்போது வேளாண் சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றுகிற தீர்மானத்தை ஆதரித்திருந்தால் செய்த தவறை திருத்திக்கொண்டது என விவசாயிகள் அ.தி.மு.க.வை மன்னித்திருப்பார்கள்.
மீண்டும் அந்த சட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியிருப்பது வேதனையளிக்கிறது. அ.தி.மு.க.வின் நிலைப்பாடு வண்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனை மன்னிக்கமுடியா வரலாற்றுப் பிழையாக பார்க்கிறோம், அ.தி.மு.க. தொடர்ந்து தமிழக விவசாயிகளிடமிருந்து அன்னியப்படுவதை அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்''’என்றார்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த காவிரி தனபாலன், "டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம் அரசியலாக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. அதே நிலைமை தமிழகத்திலும் அரங்கேறுகிறது. தி.மு.க .தேர்தல் வாக்குறுதியாக கூறியதுபோல சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்திருக்கு, அதை ஒட்டுமொத்தமாக ஆதரிக்காமல் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து அரசியல் செய்கிறது, இதனால் பாதிக்கப்படுவது என்னவோ விவசாயிகள்தான்'' என்றார் வருத்தமாக.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பெருவிவசாயியும், விவசாய சங்க பிரமுகருமான வீரமணி கூறுகையில், "ஜெய லலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. பலகூறுகளாக பிரிந்து கிடக்கிறது. ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சி விவசாயிகளின் ஆட்சியாக இருக்கிறது, வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக இருக்கிறது, விவசா யத்திற்கு தனி பட்ஜெட் கொண்டுவந்து கெத்தாக நடந்துகொண்டிருக்கிறது. மாறாக, மத்திய முதலாளிகளுக்கு அ.தி.மு.க.வினர் விசுவாசமாக இருப்பதை அவர்களது வெளிநடப்பு வெளிச்சம் போட்டுக் காட்டி யிருக்கிறது'' என்கிறார்.