பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் நெருப்பென பற்றிக்கொள்ள, தேர்தல் ஜுரம் இறங்கி தேசப்பற்று ஜுரம் கொதிக்கிறது ஹாட்டாக.
குண்டுபோட்ட மகிழ்ச்சியை சரிவர அனுபவிக்கவிடாமல் நெஞ்சில் சுமையாய் அழுத்துகிறது, தமிழகத்தைச் சேர்ந்த விமானப் படை விங் கமாண்டரான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் சிக்கிய தகவல். இதனால் இந்தியாவின் உற்சாகம் விரைந்து சோகமாகவும் கவலையாகவும் மாறியது.
இந்திய ராணுவத்தின் பாலக்கோட் தாக்குதலுக்கு பதிலடியாக, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை ஆரம்பித்தன. அந்தத் தாக்குதலை தடுத்துநிறுத்தி பாகிஸ்தான் விமானங் களை இந்திய விமானங்கள் விரட்டிச்சென்று தாக்கின. இம்முயற்சியில்தான் அபினவ், பாகிஸ் தான் எல்லைக்குள் சென்று மாட்டிக்கொண்டதாக, இந்தியத் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. தவிரவும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 விமானப் படையினர் உள்பட ஏழுபேர் உயிரிழந்திருக்கின்றனர்.
அபிநந்தன் பாகிஸ்தானில் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்த படங்கள் வெளியான சிலமணி நேரத்தில் அவர், தேநீர் அருந்திக்கொண்டே, ""நான் நல்லவிதமாக இருக்கிறேன். வீரர்கள் முதல் கேப்டன் வரை என்னை மரியாதையாகவே நடத்துகிறார்கள்'' என்று பேசும் வீடியோ வெளியாகியிருப்பது சற்று ஆறுதலளித்தது. இந்திய ராணுவத் தரப்பும் அரசியல் தரப்பும் அபிநந்தனின் விடுதலைக்கான முயற்சிகளில் மும்முரம் காட்டியது.
பிப்ரவரி 26-ஆம் தேதி அதிகாலை 3 மணி. குவாலியர், ஆக்ரா, அம்பாலா ராணுவத் தளங்களில் இருந்து பதினாறு விமானங்கள் கிளம்புகின்றன. குவாலியரிலிருந்து முழுக்க மிராஜ் ரக விமானங்களும், அம்பாலாவிலிருந்து சுகோய் ரக விமானங்களும் கிளம்பின. இந்த விமானங்களின் முன்புறம் அவாக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டி ருந்தது. இந்த சிஸ்டம் 16 கிலோமீட்டர் தொலை வுக்கு ரேடார் எங்கிருந்தாலும், கண்டறிந்து அதை செயலிழக்க வைத்துவிடும். தவிரவும் மிராஜ் விமானங்கள் அனைத்திலும் அருகில் எங் காவது ரேடார் இருந்தால் அடையாளம் காட்டித்தரும் ஜி.பி.ஆர்.எஸ். சிஸ்டம் இருந்தது.
ஒன்றுக்கொன்று தொலைதூரமான, மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து விமானங்களை வீரர்கள் கிளப்புகிறார்கள். அவாக்ஸ் சிஸ்டம், மிராஜ் விமானத்திலுள்ள ரேடாரை அடையாளம் காட்டும் வசதி இவற்றின் துணைகொண்டு, எதிரிகளின் கண்ணுக்குச் சிக்காமல், பாலக்கோட் முசாபராபாத் தீவிரவாத தளங்களின்மீது வெற்றிகரமாக குண்டுவீசி திரும்பியிருக்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் டிபன்ஸ் கரஸ்பாண்டன்ட் கிஷோர் குப்தா, ""இங்கிருந்து மொத்தம் 16 விமானங்கள் போனது. அப்படி போறப்ப இந்திய விமானப் படை மொத்தமும் ஹை அலர்ட்ல இருந்துச்சு. அதாவது நூற்றுக்கணக்கான விமானங்கள் ஆயத்தமா இருந்துச்சு. இந்த தாக்குதலுக்காக சுமார் 400 கோடி ரூபா செலவு பண்ணியிருக்காங்க. 12 நிமிட தாக்குதலுக்கான செலவு இது. முழுக்க முழுக்க டாப் சீக்ரெட் ஆபரேஷனா நடந்துருக்கு. பாது காப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதா ராமனுக்கே இந்த ஆபரேஷன் நடக்கப்போவது தெரியாது. இதைப்பற்றி விவரம்தெரிந்த ஒரே நபர் இந்தியப் பிரதமர் மோடி மட்டும்தான். அவரைத் தவிர்த்து இந்திய ராணுவத் தளபதிகளுக்குத் தெரியும்.
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரா இருந்தபோது இந்திய பாராளுமன்றத்து மேல தீவிரவாதத் தாக்குதல் ஒண்ணு நடந்துச்சு. அதுக்கெதிரா வாஜ்பாய் ஒரு ஆபரேஷன் மேற் கொண்டார். பராக்ரமம்கிறது அந்த ஆபரேஷன் பேர். இதுக்கு வாஜ்பாய் 11 மாசம் அவகாசம் எடுத்துக்கிட்டார். பாகிஸ்தான் எல்லை முழுக்க இந்திய ராணுவத்தை நிறுத்திவெச்சாங்க. இந்த ஆபரேஷனுக்கு முன்னால வாஜ்பாய் எதிர்க்கட்சித் தலைவர்களை கலந்தாலோ சித்தார். அனைவரையும் கலந்தாலோசித்துவிட்டுதான் முழு அளவிலான போருக்குப் போனார்.
ஆனால், வெறும் 12 நாட்கள் மட்டுமே திட்டமிட்டு 400 கோடி செலவுல பாகிஸ்தான் எல்லைக்குள்ள போய் பாம் போட்டுத் திரும்பி வந்துருக்கு இந்திய ராணுவம். இந்திய ராணுவத் தரப்புல இருந்து அதுசம்பந்தமா எந்த ஒரு புகைப்படமும் வெளியிடப்படலை. இந்தத் தாக்குதலை நேரா பார்த்தவங்களை பி.பி.சி. தொலைக்காட்சி நேர்காணல் பண்ணி வெளியிட்டிருக்கு. "விமானங்கள் வந்தன. குண்டு போட்டன. வேறொண்ணும் தெரியாது எங்களுக்கு' அப்படினு சொல்றாங்க.
ஏன் தாக்குதல் புகைப்படத்தை இந்தியா வெளியிடலை? தாக்குதலுக்காக இந்திய ராணுவம் இந்திய- பாகிஸ்தானிய எல்லைக்கோட்டை க்ராஸ் பண்றாங்க. இது போர் விதிமுறைகள் குறித்த ஜெனீவா ஒப்பந்தத்தை மீறிய செயல். அதனால தான் அதை இந்தியா ரிலீஸ் பண்ணமுடியலை. பண்ணவும் முடியாது. "எங்க எல்லையில ஒண்ணும் பாதிப்பில்லை. நாலைஞ்சு மரம் வீழ்ந்திருக்கு. இதைப்பத்தி சுற்றுச்சூழல் தொடர்பான பாரிஸ் மாநாட்டுல புகார் பண்ணப்போறோம்'னு பாகிஸ்தான் ராணுவம் முதல்ல சொன்னாங்க. ஆனால் அதன்பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமத் குரேசி இந்திய ராணுவம் எல்லைக்கோட்டை தாண்டிவந்ததா ஐ.நா.வுல புகார் பண்ணியிருக்கார்'' என்கிறார். புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் இந்தியா எப்படியும் பதிலடி தரும்கிற முன்னெச் சரிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ல இருந்து உட்பக்கமாக நகர்ந்து பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலக்கோட் பக்கம் நகர்ந்துவிட்டனர் தீவிரவாதிகள். மௌலானா மசூத் அசாரோட உறவினர் யூசுப் அசார்தான் காந்தகார்ல ஐ.சி. 814 விமானத்தைக் கடத்தி, மசூத் அசாரை விடுவிக்க வெச்சது. அவரை அழிக்கத் தான் இந்தியா இந்தத் தாக்குதலை நடத்தியது.
""பாகிஸ்தானின் அபோடா பாத் பகுதியில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அடிச்சுத் தூக்கிக் கொண்டு வந்து உயிரோட கடலில் இறக்கியது அமெரிக்கா. அந்த மாதிரி தாக்குதலை மேற்கொள்ள இந்தியாவும் தகுதியானது என்பதை நிரூபிக்கத்தான் இந்தத் தாக்குதல்'' என்கிறார் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
ஆனால் இந்தியா 12 நாள் கால அவகாச மெடுத்து 400 கோடி செலவில் திட்டமிட்ட தாக்குதலுக்கான பதிலடியை 24 மணி நேரத்தில் தந்துள்ளது பாகிஸ்தான். மூன்று எஃப் 16 ரக போர் விமானங்கள் காஷ்மீர் எல்லைப் பகுதியில் குண்டுவீசிவிட்டு திரும்பிச் சென்றிருக்கின்றது பாகிஸ்தான் ராணுவம். அவர்களது விமானங்களில் ஒன்றை சுட்டுவீழ்த்தியதாக மார்தட்டுகிறது இந்திய ராணுவம். நமது தரப்பிலோ 7 உயிர்கள் போயுள்ளதோடு, விங் கமாண்டர் அபிநந்தனும் சிறைபிடிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற ரிட்டயர்டு ஏர்மார்ஷலான கிருஷ்ணசாமி பாகிஸ்தான் வசமிருக்கும் எஃப் 16- விமானங்களைச் சுட்டிக்காட்டுகிறார். ""எஃப் 16 விமானம் என்பது பெராரி கார் மாதிரி. மிராஜ் என்பது அம்பாசிடர் கார் மாதிரி. விரைந்து தாக்குதல் நடத்திவிட்டு எஃப் 16-னால் திரும்ப முடியும். எஃப் 16-ஐ விஞ்சுவதென்பது, ரேசில் அம்பாசிடர வெச்சு பெராரியை ஜெயிக்கிற மாதிரி.
இந்திய பாதுகாப்புத் துறையில் 20, 30 வருட காலத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் விபத்துக்கு உள்ளாகியிருக்கு. இவற்றில் பெரும்பாலானவை மிக் ரக விமானங்கள். இதுதான் இந்திய விமானப் படைக்கும், பாகிஸ்தான் விமானப் படைக்குமான வித்தியாசம்'' என்கிறார்.
இந்தத் தாக்குதல் விவகாரத்தில் தொழில் நுட்பரீதியாக இந்தியாவுக்கு வெற்றிதான். இலக் கைத் தாக்கிவிட்டது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்திவிட்டது. நேரடியாகச் சொல்லாவிட்டா லும், ராய்ட்டர், பி.பி.சி., டெலிகிராப் போன்ற வெளி நாட்டுப் பத்திரிகைகள், இந்தியாவின் தாக்குதலில் ஒருவர் காயம்பட்டதைத் தவிர பெரிய இழப்பில்லை என்றே சொல்கின்றன. மாறாக, 350 பேர் இறந்ததாக அல் ஜஸீரா தொலைக்காட்சிதான் முதலில் செய்தி வெளியிட் டது. அதைத்தான் பெரும்பாலான இந்திய தொலைக்காட்சிகளில் சொன்னார்கள். ஆக, இது வெறும் யூகச் செய்தியல்ல என்கிறார்கள் வெற்றி யைக் கொண்டாடுபவர்கள்.
""போர் தொடங்கிவிட்டால், அதை நிறுத்துவ தென்பது யார் கையிலும் இல்லை'' என புதிய பாகிஸ்தானிய அதிபரான இம்ரான்கான் அடக்கி வாசிக்க, பாகிஸ்தான் ஜெனரல் பாஜ்வாவோ, ""யாருமில்லாத இடங்களில் இந்தியா குண்டு போட்டு வந்துருச்சு. ராணுவம் தொடர்பான அமைப்புகள் மேலயோ, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலோ இந்தியா குண்டு போட்டிருந்தால், பாகிஸ்தான் உரிய பதிலடியை அணு ஆயுதத்தால் கொடுத்திருக்கும்'' என மிரட்டும் தொனியில் சொல்லியிருக்கிறார்.
44 வீரர்கள் பலியான புல்வாமா தாக்குதல் முதற்கொண்டே போர் மேகம் இருநாடுகளையும் சூழ்ந்துள்ள நிலையில், "போர் வேண்டாம்' என்ற குரலும் சமூக ஊடகங்களில் சற்று உரக்கவே கேட் கிறது. கொடநாடு கொள்ளை விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்த பத்திரிகையாளரான மாத்யு சாமுவேல், பாதுகாப்பு விவகாரங்களிலும் விரிவான பார்வையுடையவர். அவர், ""அமெரிக்கா எது செய் தாலும் பாகிஸ்தான் கண்டுகொள்ளாது. பாகிஸ் தானின் பக்கத்திலிருக்கும் ஆப்கானிஸ்தானின் பெஷாவர் நகரில் தினமும் குண்டுபோடுகிறது அமெரிக்கா. அதில் சில குண்டுகள் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயும் விழும். பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்தே தூக்கிச் சென்றது அமெரிக்கா. இது எதனையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளாது. அதற்கு ஈடாகத்தான் எஃப் 16 விமானங்கள் முதல் ராணுவத் தளவாடங்கள் வரை பாகிஸ்தானுக்கு தாராளம் காட்டும் அமெரிக்கா.
பாகிஸ்தானை, வீடில்லாமல் நடை மேடையில் குடியிருக்கும் ஒருவனின் நிலைக்கு ஒப்பிடலாம். சண்டை என்று வந்தால் அவர்களால் ஒரு வாரம்தான் தாக்குப்பிடிக்க முடியும். அவர்களிடம் இருக்கும் லிக்விட் கேஷ் அவ்வளவுதான். இந்தியா பெரிய அளவில் பொருளாதார வலிமை உடையது.
நவீன விமானங்கள் நம்மிடம் இல்லையென் பதால்தான் 126 ரஃபேல் விமானங்களை வாங்க முடிவுசெய்தோம். பத்து வருஷமா நாம் ஒப்பந்தம் போட்டுக்கிட்டிருக்கோம். நம் கையில் விமானம் வந்துசேரவில்லை.
போர் வந்ததுனா இந்தியாவின் பொருளா தாரம் 25 முதல் 30 வருஷம் பின்னோக்கிப் போயி டும். ஆனால் பாகிஸ்தானில் ஏற்கெனவே வளர்ச்சி யில்லை என்பதால் போரின் விளைவுகள் அவர் களை பெரிதும் பாதித்துவிடப் போவதில்லை. பிளாட்பாரத்தில் கத்தியுடன் நிற்கும் ஒருவனை கார்னர் பண்ணினா, கத்திக்குத்து அபாயமிருக்கு. கத்திங்கிறது பாகிஸ்தான்கிட்ட இருக்கிற அணு ஆயுதங்கள். அதனால் போர் என்பது இந்தியா வுக்கு பாதகம்தான்'' என்கிறார். பொதுவாகவே அரசியல் எதிர்காலம் வீக்காக இருக்கும் நிலையில், யுத்த நெருக்கடியை அரசியல் மைலேஜ் பெறு வதற்கு பயன்படுத்துவது உலகெங்கும் இருக்கும் நடைமுறைதான். மோடியும் அதற்கு விதி விலக்கில்லை என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.
புல்வாமா தாக்குதல் விவகாரத்தை தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறார் மோடி. முன்பு 220 சீட் ஜெயிக்கும் என கணக்கிடப்பட்ட பா.ஜ.க. பாலக்கோட்டில் இந்திய விமானங்கள் குண்டுபோட்ட பின் 260 சீட் வரைக்கும் வரலாம் என சிலர் கணக் கிடுகிறார்கள். வெற்றி அல்லது வீரமரணம் என்பது செயல் வீரர்களின் தாரக மந்திரம். இந்திய வீரர்களின் மரணத்தை, தனது வெற்றிக்கான சூட்சுமமாக மோடி மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற எதிர்க் கட்சிகள் கூட்டாக தெரிவித்த கருத்து முக்கிய மானது. ராணுவ வீரர்கள் தாய்நாட்டின் மானம் காக்க தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பவர்கள். இந்நிலையில், அமைதியை ஏற் படுத்த அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ் தான் பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.
உண்மையான அமைதி என்பது தீவிரவாதத்தை யும் போர்வெறியையும் முற்றிலுமாக ஒழிப்பதில் இருக்கிறது என்பது இம்ரானுக்கும் தெரியும்.
-தாமோதரன் பிரகாஷ்
-க.சுப்பிரமணி