முடிச்சிட சொல்லி ஆர்டர்!
"எங்களுக்கு வேற மாதிரி மோசமான தகவலா வருது. எப்படியும் இன்னைக்கு முடிச்சிடு வோம்னு சொல்றாங்களாம்''னு சொன்னார். "முடிச்சிடுவாங்கன்னா என்ன?''ன்னு அவர்ட்ட கேட்டேன்.
"அதாண்ணே... உங்களையும் சரி, நக்கீரன் ஆபீசையும் சரி, ஒண்ணும் இல்லாம ஆக்கிட ணும்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்க. அங்க இருந்து எங்களுக்கு இந்தத் தகவல்தாண்ணே வருது. இதை உங்ககிட்ட சொல்லணும்னுதான், வெளில இருக்குற போலீஸ்காரங்களக் கெஞ்சிக் கூத்தாடி, உள்ள வந்திருக்கேன். வெளில பாத்தீங்கன்னா, போர்ஸ் ஃபுல்லா இருக்கு. ஒவ்வொருத்தனும் வர்றான். நான் 136-ஆவது வட்டம்னு சொல்றான். டம்மு டம்முன்னு கல்லால ரெண்டு அடி அடிக் கிறான். ரெண்டு நக்கீரனை எடுத்துக் கொளுத்து றான். அப்புறம் அவன் நகர்றான். அடுத்து இன்னொருத்தன் வர்றான். நான் 146-ஆவது வட்டம்னு சொல்றான். அதே மாதிரி ஆபீச அடிச்சிட்டு, நக்கீரனை எரிச்சிட்டு நகர்றானுங்க. அதனால நீங்க இங்க இருக்காதீங்கண்ணே''ன்னு படபடப்பு மாறாமலே சொல்றார்.
தம்பி அசோக் பரபரப்பாய் போட்டோ எடுத்துட்டு இருந்தவரு, நமக்கு போன்ல "அண்ணே... நம்ம தெரு முக்குல இருக்கிற அ.தி. மு.க.காரங்களும் சேர்ந்து நம்மள அடிக்கிறாங்க. எனக்கு நல்லா அடையாளம் தெரியும்''னார். எனக்கு கொஞ்சம் ஷாக்... ஏன்னா இந்த தெருவுல நம்ம வந்த பிறகு சிமெண்ட் ரோடு போட முயற்சி எடுத்தவரு அப்ப நம்ம ஆடிட்டரா இருந்த மோரிஸ்தான். அடுத்து.... இதே தெருவுக்கு மின் சப்ளை நிறைய ஆக... ஆக... டிரான்ஸ்பார்மர் தேவைப்பட்டப்ப... நம்ம தெருவுலயே நெறைய இடம் காலியா வச்சிருந்த சர்ச்காரங்க இடம் கொடுக்க மறுத்துட்டாங்க. கடைசியில... நம்ம ஆபீஸ் முன்னாடியே இடம் ஒதுக்கிக் குடுத்தோம். அதெல்லாம் நினைவுக்கு வந்துச்சு. அதெல்லாம் விடுங்க, இது துரோகக் கணக்குலயே வராது. அதவிட மிகப்பெரிய துரோகம்லாம் நடந்துக்கிட்டி ருக்கு... அதப் பாக்கையில இதெல்லாம் ஜுஜுபி.... அது என்னன்னா, நம்மகூட இருந்து நம்மளாலயே வளர்ந்து அவங்களுக்கு கல்யாணம், காடாத்து, பிள்ளைங்க படிப்பு, வீடு, வண்டி வாகனம் லொட்டு லொசுக்குன்னு எல்லா வசதியும் செஞ்சு பெரிய அங்கீகாரத்த குடுத்து... தாயா பிள்ளையா கூடப் பொறந்த உறவு மாதிரி இருந்தவய்ங்களே முதுகுல குத்திட்டுப் போயிட்டாய்ங்க... தெருக்காரங்களச் சொல்லி என்ன குத்தம்னு ஒருகணம் மனசு ரொம்ப வேதனையாப் போச்சு. இருக்கட்டும்... இருக்கட்டும்... நம்ம அடுத்த கதைக்கு வருவோம்.
அப்ப வாசல்ல, பத்திரிகைக்காரங்க எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. வந்து, அ.தி.மு.க.காரங்க போடுற பேயாட்டத்த எல்லாம் கவர் பண்ணிக்கி ட்டு இருக்காங்க. சிலபேர் இந்த பில்டிங்க ஏர்றான். சிலபேர் பக்கத்து பில்டிங்ல ஏர்றான், எல்லாத்தயும் அவங்க கவர் பண்றாங்க. நாங்க வேற ஆளாளுக்கு தலைக்கு மேல ரீல் அட்டை (ரவுண்டா இருக்கும்) ஒவ்வொண்ண புடிச்சிக்கிட்டு அந்தக் கொடுமை யை பார்த்துக்கிட்டு நடுவுல நின்னுருந்தோம். ஒரு கட்டத்துல பத்திரிகைக்காரங்க எல்லாம் நம்ம ஆபீசுக்குள்ள வரணும்னு முயற்சி எடுக்கறாங்க. வெளில இருந்த போலீஸ் அதிகாரிகள்ட்ட, ”எங்களை உள்ள விடுங்கன்னு அவங்க வாக்குவாதம் பண்றாங்க. ஒரே பரபரப்பாகுது.
அவங்க வரிஞ்சிகட்டி நிக்கிறதப் பார்த்த போலீஸ் டீமால், பத்திரிகைக்காரங்கள சமாளிக்க முடியல. அப்ப வெளிப்பக்கம் இருந்த செந்தில் குமார்ங்கிற ஏ.சி., ”சார் பத்திரிகைக்காரங்களாம் உள்ள வரணும்னு சொல்றாங்க சார்னு எனக்குத் தகவல் கொடுக்குறாரு. அவங்க சாக்கில் எதிரிகள் புகுந்துட்டா என்ன பண்றதுன்னு உள்ளுக்குள்ள உதப்பா இருக்கு. இருந்தாலும் பத்திரிகை நண்பர்கள எப்புடி வரவேணாம்ன்னு சொல்றது? அதனால அவங்கள உள்ள அழைச்சிக்கலாம்ங்கிற முடிவுக்கு வந்தோம்.
வாசல் கேட்ல, சின்னதா திறப்புப் பாதை ஒண்ணு இருக்கும். அதுவழியா, போலீஸ் பாதுகாப்போட ஒவ்வொருத்தரா வரவழைக்க முயற்சி நடக்குது. அதுக்காக கதவுக்கு அரணா நின்னுக்கிட்டிருக்கும் நம்ம தம்பிகள் 20 பேரையும், அவுங்களும் ரொம்ப நேரமா கதவ தாங்கிப்பிடிச்சி நிக்கிறதால கை வலிக்கும்னு ஷிப்டு போட்டு ஆட்கள மாத்திக்கிட்டாங்க. மேற்படி தம்பிகள கொஞ்சம் ஒதுங்கி நிக்கச் சொல்லிட்டு, அவங்கள ஒவ்வொருத்தரா உள்ள அனுமதிக்கிறோம். .
அப்ப தினகரன்ல இருந்த தம்பி மோகன், அவர் இப்ப இல்லை. காலமாயிட்டார். அவர் எம்.யு.ஜே. தலைவராவும் இருந்தவர். அவர்தான் முதல்ல உள்ள வந்தார். அவர் என்னைப் பார்த்த துமே, இங்க இருக்காதீங்கண்ணே, கிளம்புங்க. வர்ற செய்தியெல்லாம் நல்லால்லண்ணேன்னு அவரும் சொல்லிவச்ச மாதிரியே சொல்றாரு.
”எப்படித் தம்பி, இங்க இருந்து போறது? வெளில ஒரே களேபரமா இருக்கு. இந்த நிறு வனத்தை விட்டுட்டு எப்படி நகர்றது? ஆபீஸ்குள்ள பாத்தீங்கன்னா... 60, 70 பேரு இருக்காங்க. அவங்களை எப்படிக் காப்பாத்தப் போறோம்?”ன்னு அவர்ட்ட என் கவலயச் சொன்னேன்.
அவர், “நிலம ரொம்ப மோசமா இருக்கு. அவனவனும் குரூப்பு குரூப்பா வர்றான். அவனுங்க மூஞ்சப் பாத்தா, கட்சிக்காரங்க மாதிரியே தெரியலை. என்னவோ தப்பா நடக்கப்போற மாதிரி இருக்குண்ணே... நீங்க கிளம்புங்க. அதுக்கு முன்ன, மீடியாக்கள்ட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போங்கன்னு சொன்னார். ஏன்னா, பத்திரிகைக்காரங்க, வெளியில் நடக்குறதை எல்லாம் கவர் பண்ணிட்டாங்க. என் கருத்து வேணுமேன்னுதான் காத்திருக்காங்க. அதனால், அவங்ககிட்ட இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் நான் தெளிவா சொல்ல வேண்டியதச் சொன்னேன்.
“நக்கீரன் வெளியிட்ட செய்தியில் தப்பு இருக்குன்னு நினைச்சா, அதுக்கு முறையா மறுப்பு தெரிவிக்கலாம். இல்லைன்னா சட்டப்படி அதை எதிர் கொள்ளலாம். அதையெல்லாம் விட்டுட்டு, அரச பயங்கரவாதத்த ஏவிவிடறது சரியில்லை. இப்பன்னு இல்லை, அ.தி.மு..க. ஆட்சி எப்பல்லாம் வருதோ, அப்பல்லாம் இதே போல் நக்கீரன் குறிவைக்கப்படுது. நக்கீரனை அழிக்கணும், அதைத் தரமட்டமாக்கணும்னு குறி வச்சிக்கிட்டுதான் அவங்க பதவிக்கே வர்றாங்கன்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்ப விழுந்துது பாருங்க ஒரு முரட்டுக் கட்டத் துண்டு டமால்னு. மறுபடியும் மண்டகப்படிய ஆரம்பிச்சிட்டாய்ங்க பரதேசி நாய்ங்க. எல்லாருக்கும் கொஞ்சநேரம் இதயத் துடிப்பே நின்னு போச்சு.
பத்திரிகைக்காரங்க இருக்கும்போது இப்படி அட்டாக் நடக்குதேன்னு நமக்கு உள்ளுக்குள்ள ஒரு அற்ப சந்தோசம். அப்படி நினைக்கிறது தப்புதான். ஆனாலும், அந்தத் தாக்குதலோட தன்மைய அவுங்க அனுபவப்பூர்வமா உணர்றதுக்கு அது ஒரு வாய்ப்புதான. அப்பதான் வெயிட்டா எழுதுவாங் கன்னு நினைச்சேன். ஆனா நடந்தது வேற. இந்து (ஐண்ய்க்ன்)தான் ப்ரண்ட் டஹஞ்ங்-ல 4 ஈர்ப்ன்ம்ய் பண்ணுச்சு. அதுக்கும் அவுங்க மேல கேஸ் போட்டுச்சு அந்த புண்ணியவதி. மத்த டி.வி.காரங்க எல்லாம் செய்தி பண்ணாங்க. இதுக்கிடைல, உள்ள இருக்க பயந்துக்கிட்டு பத்திரிகையாளர்கள்ல சிலபேரு, பக்கத்து காம்பவுண்ட்ல ஏறிக் குதிச்சி, தப்பிச்சி ஓட ஆரம்பிச்சாங்க. அதப் பாக்கும் போதுதான் நாம எவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கிக்கிட்டு இருக்கோம்ங்கிறது தெரிஞ்சது. கமிஷனர் ஆபீசுக்குத் தகவல் கொடுத்தப்ப... Yes Sir... இதோ, இப்ப போர்ஸை அனுப்பறோம்னு தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க. அனுப்புனபாட காணோம். எல்லாத்துட்டயும் சொல்லிட்டுத்தான் இந்த பொறுக்கிங்க இறங்கியிருப் பாய்ங்கன்னு பின்னாடிதான் தெரிஞ்சது. நாமதான் வெள்ளந்தியா அவிய்ங்கள நம்பிக்கிட்டிருந்தோம். ஒரு விளக்கெண்ணெய்யும் நடக்கல. இதுக்கிடைல, வெளில இருக்கும் போலீசின் பாதுகாப்போட சிலரை பாதுகாப்பா வெளில அனுப்புச்சோம். அவங்க வெளில போறவரைக்கும், கலவரக் கும்பலோட தாக்குதல போலீஸ் நிறுத்தி வச்சிருந்துச்சு. ஆக போலீஸ் கையிலதான் எல்லாம் இருந்துருக்கு.
கலைஞர் தொடங்கி, தினகரன் மோகன், கலைஞர் டி.வி.ஆனந்த ரத்தினம் வரை எல்லாருமே எச்சரிச்சத நினைக்கும்போது, சூழ்ந்திருந்த ஆபத்து எப்படிப்பட்டது? எவ்வளவு மோசமானது?ன்னு அப்ப ஓரளவு புரிஞ்சிக்கிட் டாலும், அவங்களோட எச்சரிக்கைக்குப் பின்னால இருந்த பயங்கரத்த, இப்பதான், இப்பன்னா... இப்ப மூணு மாசத்துக்கு முன்னாலதான்... முழுசா தெரிஞ்சிக்க முடிஞ்சிது. அதாவது 12, ஜூன் 2021 அன்று. பாருங்க... ஒரு அநியாயம் நடந்தா அது எத்தன வருஷம் ஆனாலும் உண்மை வெளிய வந்துரும்ங்கிறதுக்கு ஆதாரம்தான் இது. கிட்டத்தட்ட 9 வருஷம் கழிச்சு நமக்கெதிரான ஒரு பெரிய கொலைச் சதிக்கான ஆதாரம் இப்ப வாக்குமூலமா கிடைச்சிருக்கு.
நம்ம சென்னை ரிப்போர்ட்டர் தம்பி அரவிந்த், மூணு மாசம் முன்னாடி ஒரு ஆடியோவ எனக்கு அனுப்புனார். ஒரு அரசியல்புள்ளியின் முக்கிய உதவியாளர் ஒருத்தரோட நம்ம நிருபர் உரையாடிய குரல் பதிவுதான் அது. அந்த அரசியல் புள்ளி யாருன்னா, ஜெயலலிதா ஆட்சிக் காலத்துல தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ.வா இருந்த அண்ணன் கலைராஜன்.
(புழுதி பறக்கும்)