jjj

ங்க இதோட முடிச்சுட்டுப் போய்த் தொலைஞ்சாங்கன்னு நினைச்சு, அலுவலகத் தம்பி பார்த்திபன்ட்ட "பார்த்தி ஒரு டீ சொல்லுப்பா, சந்து வழியா போய் வாங்கிட்டு வா''ன்னு சொல்லி வாய மூடல...

நம்ம பெருசு சுந்தர் பதட்டமா... "அண்ணே யாரும் போகல. நம்ம ஆபீஸ குறிவச்சு சாரசாரையா கரை வேட்டிங்க, பொம்பளைங்க படையெடுத்து வர்ற மாதிரியிருக்குன்னு சொல்லிக்கிட்டே இருக்கும்போது... டமால்னு சவுண்ட்... கூடவே படுபயங்கரமான சத்தம். (அதான் மெட்ராஸ் பாஷையில ஓ... போட்டுக்கிட்டே நக்கீரனையும் என்னையும் கேவலமா திட்டுனாய்ங்க பரதேசிங்க) கதவ ஒடைச்சி உள்ளவர ஒரு குரூப் டமால் டமால்னு அடிக்குது. இன்னொரு குரூப்பில் சடசடன்னு ஒருத்தன் குரங்கு மாதிரி கேட்டுக்கு மேல ஏறி... கையில ஒரு பாறாங்கல் லோட, டேய்... ஓ.... அந்தா இருக்கான்னு என்ன பார்த்து சவுண்டு விடுறான்.

அந்த மொரட்டுக் கல்லை என்மேல போடுறேன்னு பலமா தூக்கி எறியுது அந்த மூதேவி. அது முன்னாடி இருந்த என் அம்பாசிடர் கார்மேல விழுது. நம்ம தம்பிக யார் மேலயாவது விழுந்துச்சுன்னா முடிஞ்சது கத. நம்மளும் அதேமாதிரி ஏறி நின்னு அவிய்ங்கள தூக்கிப்போட்டு மிதிக்கணும்னு தோணுச்சு. நம்மதான் அடிக்கக்கூடாதே... அடிமட்டும்தான் வாங்கணும்... இதுதான் "ஜெ.'வின் சட்டம்.

Advertisment

எல்லாம் நொறுங்கிக் கிடக்கறதப் பாத்து கலங்கிப் போய் நான் நிக்கிறேன். அப்ப முதல் போனு யாருன்னா, நம்ம கோயமுத்தூர் ஏஜண்டான வெங்கடாசலம் அண்ணன்தான். (அவங்க இப்ப இல்லை.) "அண்ணே வீட்ல இருந்த நம்ம புக்கை எல்லாம் அ.தி.மு.க.காரங்க ச்சீஸ் பண்ணிட்டுப் போய்ட் டாங்கண்ணா. அங்கங்க நக்கீரன் புக்கைப் போட்டு எரிக்கிறானுங் கண்ணா'ன்னு பதறிப்போய் சொன்னாரு. ஐயய்யோ... அ.தி.மு.க.காரங்க ஊருபூராம் பிரச்சினைய ஆரம்பிச்சிட் டாய்ங்கன்னு புரிஞ்சிடுச்சி.

வெளிய கூட்டமா இருக்கிற பரதேசிங்க கதவ உடைச்சி உள்ளே வந்துரக்கூடாதுன்னு சுதாரிச்ச நம்ம தம்பிங்க 20 பேரு கதவ தாங்கிப் புடிச்சி அண்டக்குடுத்துட்டு நின்னாங்க. பாதுகாப்புக்கு தலைக்குமேல ஒரு பெரிய பலகைய வச்சிப் பிடிச்சிக்கிட்டாங்க. வெளியயிருந்து தடதடன்னு கதவ தட்டிக்கிட்டே பெரிய அளவுக்கு திரண்ட கூட்டம்... போர்ஸோட தள்ளுறாங்க. ஆனா நம்ம தம்பிக புடிகொடுக்கல.

வாசல் கேட், நிமிசத்துக்கு நிமிசம் பயங்கர ஃபோர்ஸோட இடிபடறத நான், இடிஞ்சிபோய் பாக்கறேன். அந்த நேரத்துல, இத எல்லாம் நான் வீரமாவும் தீரமாவும் எதிர்கொண்டேன்னு பொய்லாம் சொல்லமாட்டேன். ஏன்னா, அவங்க அட்டாக்ல காட்டின ஃபோர்ஸ் எல்லாரையும் நிலைகுலைய வச்சிடிச்சி. அப்படியே ஆடிப்போய் நிக்கிறேன். என் தம்பிகளும் கைய பிசைஞ்சுக்கிட்டு கூடவே நிக்குறாங்க. எவ்வளவோ கொடூரத்த சந்திச்சிருக்கோம். ஆனா இப்படி ஒரு மோசமான அட்டாக்க நினைச்சிக்கூட பாத்ததில்லை. அதவிட உள்ளே வந்து விழுகிற ஐட்டத்தைப் பார்த்தா ஒமட்டுது. சோடா பாட்டில், விளக்குமாறு, செருப்பு, சாணி, வேற வேற இத்யாதி....

Advertisment

ff

அடுத்து என்ன நடக்கப்போவுதோன்னு நான் திகைச்சி நின்னப்ப, தம்பி லெனின்கிட்ட இருந்து போன் வந்துச்சு. அவர் பர்மிஷன் வாங்கிட்டு தன் மகள் தமிழ்நிலா படிக்கிற ஸ்கூலுக்கு போயிருந்தார்.

போன்ல வந்த தம்பி... "அண்ணே, எனக்கு திருவாரூர்ல இருந்து போன் வந்துச்சு. நக்கீரன் அலுவலகத்துக்கு என்ன ஆச்சுன்னு பதட்டமா கேட்கறாங்க. நக்கீரன் ஆபீஸ்ல கடுமையா அட்டாக் நடக்குதுன்னும் ஆபீஸையே கொளுத்திட்டாங்கன்னும் சொல்றாங்களே... அவங்க சொல்லித்தான் தெரியுதுண்ணே''னு பதட்டமா சொன்னார்.

அப்ப, இங்க நடக்குற தாக்குதல் செய்தி, திருவாரூர் வரை போய், அது லெனினுக்கே திரும்பி வந்திருக்குன்னா, எல்லாப் பக்கமும் இந்தக் கொடுமை நடக்குதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சிது.

உடனே நான், "தம்பி எல்லாரும் காம்பவுண்டுக்கு உள்ளயே கீழ நிக்கிறோம். நீங்க ஜாக்கிரதை. இங்க கொலவெறி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்காங்க. நீங்க வந்தீங்கன்னா, கவனமா வாங்க''ன்னு சொன்னேன். இதற்கிடையில் இணையாசிரியர் காமராஜ், நம்ம கெஸ்ட் பன்னீர் அண்ணனை யாருக்கும் தெரியாம வெளியே கடத்துற வேலையைப் பார்த்துக்கிட்டாரு.

அதே நேரத்துல, நம்ம இரும்புக்கேட்டை உடைச்சிக்கிட்டு ஒரு மாஃப் உள்ள வர முயற்சி பண்ணுது. இதுக்கிடையில நாம் இதை டாக்குமெண்ட் ஆக்கணுமேன்னு நினைக்கும் போதே, நம்ம போட்டோகிராபர் தம்பி அசோக், நம்ம அலுவலகத்துக்கு பக்கத்துல இருக்கும் சந்துவழியா வெளியேறி, எதிர்ப்பக்கம் இருக்கும், டீக்கடையின் மாடிக் கட்டிடத்துக்குப் போயிட்டாப்ல. அங்க ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருந்து, அந்த அட்டாக் காட்சியைப் படம் எடுக்க அவர் முயற்சி பண்ணியிருக்கார். நம்ம போட்டோகிராபர் தம்பிங்க சுந்தரும், ஸ்டாலினும் பரபரப்பா படமாக்குகிறாங்க. அப்ப, அந்தக் கும்பல், இரும்புக் கம்பியக் காட்டி, "படம் எடுத்தீன்னா... கொன்னுடுவோம்'னு மிரட்டியிருக்கு. அந்தத் தம்பி அசோக் அங்கிருந்து சாதுர்யமா ரெண்டாவது ஃப்ளோருக்குப் போயி, அங்க இருந்து படம் எடுக்க ஆரம்பிச்சிட்டார். அப்ப நம்மகிட்ட பணியில் இருந்த தம்பி பெலிக்ஸும், அதேமாதிரி எதிர் கட்டடத்துக்குப் போயி, அவரும் அவர் பங்குக்கு வீடியோ எடுக்கத் தொடங்கிட்டார். இப்ப நீங்க பாக்கிற அட்டாக் வீடியோ எல்லாம் தம்பி பெலிக்ஸ் எடுத்ததுதான்.

எதிரிகள்ட்ட இருந்து நமக்கு ஒரு ஆபத்து வந்தா என்ன பண்ணுவோம்? நம்மளக் காப்பாத்துவாங்கன்னு நம்பி, முதல்ல நாம போலீஸத்தான் கூப்புடுவோம். அதுபோல, நேர்முக உதவியாளர் தம்பி சிவகுமார், பக்கத்துல இருக்கும் ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, இங்க நடக்குறத பதட்டத்தோட இன்ஃபார்ம் பண்ணினார். அப்ப அங்க ராஜேந்திரன்னு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவர்தான் போனை எடுத்திருக்கார். எடுத்தவர்,

”அப்படியா... அப்படியான்னு ரொம்பவும் சாதாரணமாக் கேட்டிருக்கார். இத்தனைக்கும் அவர், சிவகுமாருக்குத் தெரிஞ்சவர். அவரோட பதிலே, எல்லாமே ஏற்பாட்டோட நடக்குதுன்னு சொல்லாம சொல்லுச்சு.

''

இதுக்கிடையில், இங்க அடின்னா அடி... அப்படி அடிச்சிக்கிட்டே இருக்காய்ங்க. சும்மா சொல்லக்கூடாது. தாக்குதலுக்குன்னு விருது கொடுக்குறதுன்னா, இந்த நாய்களுக்குத்தான் கொடுக்கணும். அவ்வளவு கொலவெறி. அலுவலக கட்டிடத்துக்கு மேல, 6 கண்ணாடிகள் பெருசு பெருசா இருக்கும். அதை, வெளில இருந்தே குறிவச்சி, ’டம்மு.. டம்முன்னு கல்லை எறியறானுங்க. கண்ணாடி தெறிச்சி ஆபீஸுக் குள்ளே சிதறி அடிக்குது. சோடா பாட்டில் வந்து வுழுவுது... வௌக்கமாறு வந்து வுழுவுது... என்னென்ன கருமமெல்லாம் தொடர்ந்து வந்து வுழுவுது. அதோட அவனுங்க உடைச்சிட்டு மறுபடியும் பாறாங்கல்ல போட்ட கார்கள் மேல, மேக்கொண்டு அடிபடாம இருக்க, அதுக மேல அட்டைகளை வச்சிருந்தோம். அதுக்கு மேலயும் மறுபடியும் மறுபடியும் ’தொம்மு தொம்முன்னு கல்லு வந்து வுழுவுது.

அப்பதான் போலீஸ் வெளியில் வந்துச்சி. ஆனா அது வந்துச்சா இல்லையான்னு உள்ள இருக்கும் எங்களுக்குத் தெரியாது. வெளில பயங்கரமா சவுண்டு கேக்குது. உங்க சவுண்டு எங்க சவுண்டு இல்ல. ’ஓ..’ன்னு கத்துறானுங்க. அப்படியே மெட்ராஸ் பாஷைல அசிங்க அசிங்கமா திட்றானுங்க. நாராசமாத் திட்டறதுன்னு சொல்வாங்களே... அப்படி அவங்க வெளில இருந்து கேவலமாத் திட்றது நமக்குக் கேக்குது.

கதவைத் திறக்கவிடாம நம்ம தம்பிகள் இருபது பேர், அண்டக் குடுத்து ஃபோர்ஸோட நிக்கிறதப் பாத்ததும், கீழ இருக்கும் கேட்டு இடுக்கு வழியா, நக்கீரனைக் கொளுத்தி, அவங்க கால்ல போடறானுங்க. நம்மாளு ஒருத்தர் வாளியில் தண்ணியோட நிக்குறாரு, தீய அணைக்குறதுக்கு. அதேபோல் மேலே இருந்து அவங்க தலை மேல கல்லையும் எடுத்தும் போடறானுங்க. நம்ம தம்பிகள் தலைமேல பலகையும், பேப்பர் ரீல்ல வர்ற ரவுண்டு ரவுண்டு அட்டையையும் வச்சிக்கிட்டு, அவங்க வீசுன கல்லை எல்லாம் தாங்கிக்கிட்டு நிக்கிறாங்க. இதை ஏன் நான் திரும்பத் திரும்பச் சொல்றேன்னா, நக்கீரன் அலுவலகத்துக்கு அந்த நேரத்தில் அவங்க அரணா நின்னு பாதுகாக்கலைன்னா... என்ன நடந்திருக்கும்னு நினைச்சிக்கூடப் பாக்க முடியலை. இதுக்கிடையில் வெளில இருந்த கும்பல் ஆத்திரத்துல அறிவை இழந்து அவிய்ங்க அவுங்க நொம்மாவுக்கு எதிராகவே ஒரு காரியத்த செஞ்சாய்ங்க.

அது என்னன்னா...

(புழுதி பறக்கும்)