சண்டிராணி ஜெ!
என்னை மட்டும்னு இல்ல... என்கூட இருக்குற தம்பிங்களயும் நரபலிக்கு ஆளாக்கியிருப்பாய்ங்க. இந்த பிசாசுத்தனமான சதித் திட்டம் நிறைவேறா மப் போனதுக்கு அவிய்ங்க கட்சியச் சேர்ந்த புண்ணியவதி அக்கா வளர்மதியே காரணமா இருந்திருக் காரு. இதுதான், நம்ம கதையில எதிர்பாராம வந்த டுவிஸ்ட்.
அன்னைக்கு, கூலிப்படைங்க வெடிகுண்டோட என்னையும், நக்கீரன் ஆபீஸையும், அங்க இருக்குற தம்பிகளை யும் சேர்த்து அழிக்க ணும்னு காத்திருக் காங்க. அந்தக் காரியம் முடிஞ்சதும் இன் னொரு பக்கம் உள்ள நுழையுறதுக்கு போலீஸ் தயாரா இருந்திருக்கு. கலவரத்துக்கு முன்ன, நம்ம ஆபீசுக்கு போலீஸ் வந்துடக் கூடாதுன்னு கவனமா, அலர்ட் பண்ணப் பட்டிருக்கு. போலீஸ் வந்த பிறகு சம்பவம் நடந்தா அது ஆட்சிக் குக் கெட்ட பெயர் ஆயிடுமாம். அதனால சம்பவத்த நடத்திப் புட்டு போலீஸ் வர ணும்னு ஐடியா பண்ணியிருக் காய்ங்க. எல்லாம் விவரமாத்தான் செஞ்சிருக்காய்ங்க.
வளர்மதியக்கா வந்து கல்ல வீசி கலாட்டா பண்ணுனதுல, வேற வழி இல்லாம போலீஸ் வந்திடுச்சி. மீடியாவும் வந்துட் டாங்க. எல்லாரும் வந்ததால, குண்டு வீச வந்த கும்பலு ஒண்ணும் பண்ண முடியாம கைய பிசைஞ்சிட்டுத் திரும்பிருச்சி. இதுக்கப்புறம், போட்ட திட்டம் தவிடுபொடி ஆயிடிச்சேன்னு வெறியான ஜெயலலிதா, வளர்மதியக்காவக் கூப்புட்டு உங்க வசவு, எங்க வசவு இல்ல... வுடு வுடுன்னு வுட்ருக்கு. கலை ராஜன் அண்ணன்கிட்டயும், ’உங்ககிட்டயும் என்ன சொன் னேன். என்ன செஞ்சிருக்கீங்க? என்ன, அங்க போய் நக்கீரன் ஆபீஸ்ல ரெண்டு கண்ணாடிய உடைச் சிருக்கீங்க. அவ்வளவு தானேன்னு?’ நக்கலா கேட்டு தன் ஆத்திரத்த ஆவேசமா கொட்டி யிருக்கார். இதல்லாம் அந்த ஆடியோ மூலமா தெரிய வந்துச்சு., அன்னைக்கு இருந்த அதே திகில்... இப்ப கேட்டப்பயும் நமக்கு நெஞ்சடைக்குது.
ஏன் நெஞ்சடைக்குதுன்னு கேளுங்க?
அண்ணன் கலைராஜன் கூட்டிட்டு வந்த அந்த ஆளுங் களப் பத்தி நம்ம தம்பி பிரகாஷ்தான், அவங்கள்லாம் ஆள் எப்படின்னு சொன்னாரு... ஆத்தாடியோவ்...
காக்காதோப்பு பாலாஜி யாருன்னா, கொலை பாதகத் துக்கு அஞ்சாத ஆளாம். வடசென்னை காக்காதோப்பு பகுதிதான் சாரோட பூர்வீகம். சின்ன வயசுல, நீ என்னவா ஆகப்போறேன்னு இவங்கிட்ட கேட்டப்ப, நான் தாதாவா ஆகப்போறேன்னு சொல்லியிருக் கான்னா, பார்த்துக்கங்க. பாலாஜி மேல 50-க்கும் மேல வழக்குகள் இருக்குதாம். அதில் கொலை வழக்குக மட்டும் 25-ஐ தாண்டு மாம். தனக்கு குருவா இருந்த ஆளுங்களையும் கூட ஈவு, இரக்கம் இல்லாமப் போட்டுத் தள்ளுன ஆளாம். அதேமாதிரி, ஒரு வீட்டின் ஓட்டப் பிரிச்சி எறங்கி, மனைவி கண்முன்னாலயே புருஷன்காரனைப் பொலி போட்ட க்ரைம் திரில்லராம் இவுரு.
அதேமாதிரி சி.டி.மணியும் ரொம்ப டேஞ்சரஸான ஆளு. இவரு மேலயும் 30-க்கும் மேல கொலை, கொள்ள வழக்குகள் இருக்குதாம். ஆரம்பத்துல தியாகராய நகர் பகுதில சி.டி. வித்ததுல இவன் பேர்ல சி.டி. ஒட்டிக்கிச்சாம். வி.ஐ.பி.கள்ட்ட கூட இல்லாத புல்லட் புரூஃப் கார மணி வச்சிருக்கான். அந்தக் கார்ல ஒரு தடவ காக்காதோப்பு பாலாஜியோட, இவன் போனப்ப, ரெண்டு பேரையும் செந்தில்ங்கிற ரவுடி, பாம் வீசி பொலி போடப் பாத்துருக்கான். புல்லட் புரூஃப் கார்ல ரெண்டு பேரும் தப்பிச்சிட்டானுங்க.
இவனுங்களத்தான் படுபாவி ஜெயல-தா, நம்ம கதைய முடிக்க அண்ணன் கலைராஜன் மூலமா ஏற்பாடு செஞ்சிருக்காரு. இப்படிப்பட்ட ஹாட்கோர் கிரிமினல்கள ஒரு பத்திரிகையாளன் மேல ஏவுன ஒருத்தர்னா, அது இந்தியாவி லேயே சண்டிராணி ஜெய லலிதாவாதான் இருக்கமுடியும்.
ஏன் வளர்மதியக்கா முந்திரிக்கொட்டை மாதிரி, நக்கீரன் ஆபீஸ தாக்க வந்துச்சுன்னா, அதுக்கு ஒரு காரணம் இருக்கு. புண்ணியவதி ஜெயலலிதாவ பொறுத்தவர, தன் எதிரிய யார் அதிரடியா அடிச்சி காலி பண்றாங்களோ அவங் களுக்குதான் அந்தம்மா நிறைய மார்க் போடும். அதாவது, ஸ்கூல் பிள்ளைகளுக்கு ரேங்க் போடு வாங்கள்ல... அது மாதிரி போடும். அப்படி நல்ல மார்க்கோ, நல்ல ரேங்க்கோ வாங்குனவங்களுக்குப் பரிசா பணத்தையோ, பதவியையோ அந்தம்மா அள்ளிக் கொடுக்கும்.
இதுக்கு எத்தனையோ உதாரணம் இருக்கு. அதுல ஒரு உதாரணம்னு பார்த்தீங்கன்னா, 1991-ஆம் வருசம் ஆகஸ்ட் மாசம், காங்கிரஸ்ல ஒன்றிய அமைச்சரா பதவி ஏத்துக்கிட்டு, ப.சிதம்பரம் தமிழகத்துக்கு வந்தாரு. அதுக்கு முன்னாடி அவர், ஜெயலலிதாவ.. நயம்பட…வாழப்பழத்துல ஊசி ஏத்தற மாதிரி, மேடையில விமர்சனம் செஞ்சிருந்தாரு. அது ஜெயலலிதாவுக்கு ரொம்ப வலிச்சிருக்கு. உடனே அவர், ப.சி. எப்படி தமிழகத்துக்குள்ள காலை எடுத்து வைக்கிறார்னு பார்ப் போம்னு சவால் தொனில சொல்லியிருந்தாரு. அதனால ப.சி.ய அட்டாக் பண்ணணும்ங் கிற எண்ணத்துல இருந்திருக்கார். இந்த விவரம் அவங்க கட்சிக் காரங்களுக்கும் தெரியும்.
ப.சி. விமானத்துல வந்து திருச்சில எறங்குறாரு. வெளில அவர் கார்ல ஏறும்போது, திடீர்னு அட்டாக் ஆரம்பிக்கிது... ரணகளம் ஆகுது. கார் கண்ணாடி உடையுது, அவருக்கு காயம் ஒண்ணும் படல. அவரை செக்யூரிட்டிக்காரங்க சேஃப்பா கொண்டு போயிட்டாங்க.
அன்னிக்கு சாயந்தரம் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு சூப்பர் அறிக்கை கொடுக்குறாங்க.
"காவிரி பிரச்சினைல வெகுண்ட விவசாயிகள் ப.சிதம் பரத்த ஏர்போர்ட்ல வச்சித் தாக்கினாங்கன்னு அறிக்கைல அந்தம்மா தெரிவிச்சார். அடுத்த ரெண்டாம் நாளு, நம்ம நக்கீரன் அட்டைல… அ.தி.மு.க. திருச்சி இளைஞரணில இருக்கும் இளவரசன் கிறவரு கைல இரும்பு ராடோட நிக்கிற படம் வருது. அவர் மட்டும் நிக்கல,… மாலான்னு ஒரு எம்.எல்.ஏ., தொட்டியம் சிவபதின்னு ஒரு எம்.எல்.ஏ., ஆரோக்கியம்னு ஒரு எம்.எல்.ஏ., இப்படி நெறைய பேரு குரூப்பா நிக்கிறாங்க. அவங்க கையிலயெல்லாம் இரும்புத்தடி, அதோட அ.தி.மு.க. கொடி. அதோட இளவரசனும் தனியா வந்து கார அட்டாக் பண்றாரு. இப்படி... படிப்படியா 6 படத்த நம்ம நக்கீரன்ல அட்டையில போட்டோம். ஜெயலலிதா முகத்திரை கிழியுது.
அந்தப் படத்த எடுத்தது, அப்ப நம்மகிட்ட போட்டோகிராபரா இருந்த அண்ணன் கதிரை துரை.
ப.சி. குரூப்பு, அந்த படத்தையெல்லாம் 300 செட்டு வாங்கிட்டுப் போயி, கோர்ட்டுக்குப் போனது தனி கதை.
அந்த இளவரசன் ஒரு வாரம் கழிச்சி நம்ம நக்கீரன் ஆபீஸுக்கு போன்பண்ணி, ஆசிரியர்கிட்ட பேசணும்னு சொல்றார். அப்ப ஆசிரியர் பொறுப்புல அண்ணன் துரை இருந்தாரு. அவர்ட்ட பேசிய இளவரசன், நக்கீரனுக்கு நன்றி. நான் ப.சி.யை தாக்கிய படத்த நீங்க நக்கீரன் அட்டையில போட்டு பெரிய விளம்பரத்த தேடிக் குடுத்துட்டீங்க. இது அம்மா காதுக்குப் போயி, அவங்க சந்தோசமாயிட்டாங்க. எனக்கு பால்வளத் தலைவர் பதவிய கிஃப்ட்டா கொடுத்திருக்காங்க. நக்கீரனாலதான் இந்த அவார்டு எனக்குக் கிடைச்சிதுன்னு பெருமையா சொல்லியிருக்காரு. அடுத்தடுத்து அவருக்கு, ஜெ. பேரவை செயலாளர், ராஜ்யசபா எம்.பி. இப்படி எக்கச்சக்கமா அவருக்கு பதவிய குடுத்துச்சு ஜெயலலிதா. இப்ப சொல்லுங்க.... ஏன் அடிக்கமாட்டாய்ங்க அவிய்ங்க. ஏன்னா... எதிரி ஒருத்தன அடிச்சா இவ்வளவு பதவி கெடைக்குதுன்னா அவன் கொலையே பண்ணுவான்ல... அதனாலதான் அவங்க அன்னிக்கு அப்படிப் பண்ணிருக்காய்ங்க. இன்னும் எத்தனையோ இருக்கு.
இன்னொரு சம்பவம்...
அதே ஜெயலலிதாவோட ஆட்சி 91-96ல, சொத்துக் குவிப்பு வழக்குல ஜெயலலிதா மேல சுப்பிரமணியசாமிதான் வழக்குப் போட்டாரு. அந்த வழக்கு சம்பந்தமா சென்னை ஹைகோர்ட்டுக்கு சு.சாமி வர்றாரு. சிதம்பரத்துக்கு ஏற்பாடு செஞ்ச மாதிரி ஒரு பெரிய ஏற்பாடோட அ.தி.மு.க. மகளிரணி, குரூப்போட உயர்நீதிமன்றத்துக்குள்ள நிக்குது. உயர்நீதிமன்றம் அப்படியொரு சம்பவத்தை இதுவரைக்கும் பார்த்திருக்காது. அதுல சு.சாமிக்கு அ.தி.மு.க. மகளிரணி தலைமையில நல்ல ஒரு வரவேற்பு கொடுத்தாங்க அக்கா அஞ்சுலட்சுமி. அப்ப குடுத்த வரவேற்புங்கிறது, இந்திய வரலாற்றிலேயே ஒன்றிய அமைச்சரா இருந்த யாருக்குமே இப்படி ஒரு வரவேற்பு கிடைச்சிருக்காது. அப்படி ஒரு வரவேற்பு. இன்னைக்கு வரைக்கும் சு.சாமி நினைச்சுக் கிட்டிருப்பாரு. அப்படி ஒரு மோசமான, அருவருப்பான, வெட்கக்கேடான, எல்லோரும் தலைகுனியுற மாதிரியான வரவேற்ப அக்கா சுப்பிரமணிய சாமிக்கு குடுத்துச்சு. இந்த மாதிரி மோசமாக நடந்துக்கிட்ட அந்த அம்மாவ, கோர்ட்டுல அநாகரிகமாக இப்படி நடந்துக் கிட்ட அஞ்சுலட்சுமி மேல ஜெயலலிதா பெரிய நடவடிக்கை எடுக்கப்போறதா எல்லாரும் நினைச்சாங்க. ஆனா அதுக்கு ஏறுமாறா ஜெயலலிதா அஞ்சு லட்சுமிய பாராட்டி, அதுக்கு பரிசா வடசென்னைல 47-வது வார்டு கவுன்சிலராக்கி அழகு பார்த்திச்சி. அதுக்கப்பறம் அந்த அக்கா, "தூள்' படத்துல வர்ற சொர்ணாக்கா மாதிரி கார்ல பவனி வந்துச்சு. அதுவரைக்கும் அஞ்சுலட்சுமின்னா யாருக்குமே தெரியாது.
இது மாதிரி நெறைய இருக்கு. ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் இவுங்கள எல்லாம் தூக்கிச் சாப்பிடுற மாதிரி மேடம் ஜெயலலிதா, நம்ம அண்ணன் கலைராஜனுக்கு ஒரு அசைன் மெண்ட் குடுக்குது. அத அரசல் புரசலா வளர்மதியக்கா தெரிஞ் சுக்குது. அவசரக் குடுக்கையா நம்மமேல அவங்க ஆட்கள் 100 பேர கொண்டுவந்து அடிக்குது. அதுலதான் சிட்லபாக்கம் ராஜேந் திரன், ஆயிரம்விளக்கு கற்பகம், எழும்பூர் வேளாங்கண்ணின்னு கொஞ்சம்பேர வச்சு மொத மொதலா வந்து நம்மமேல கல் எறிஞ்சதுனால தான் போலீஸு உடனே வந்துச்சு.
முந்திரிக்கொட்ட மாதிரி அக்கா வளர்மதி வந்து முந்திக் கிட்டு தாக்காம போயிருந்தா... அந்த படுபாவிங்க போட்ட நரபலித் திட்டம் நடந்திருந்தா... இந்தக் கதைய எல்லாம் உங்ககிட்ட சொல்லிவைக்க நான் இருந்திருக்கவே மாட்டேன்...
(புழுதி பறக்கும்)