(333) "ஜெ.வின் நடவடிக்கையால் மனம் நொந்த எம்.ஜி.ஆர்!'' -முத்துசாமி
கொங்கு மண்டலத்தோட பிரபலமான அரசியல்வாதி; எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமா இருந்தவர், எம்.ஜி.ஆர் அமைச்சரவைல டிரான்ஸ்போர்ட் மந்திரியா இருந்தவர். இப்போ தி.மு.க.வில் அண்ணன் மு.க.ஸ்டாலினோட அமைச்சரவையிலும் இருப்பவர்... ஈரோடு முத்துசாமி. அவரோட பழைய பேட்டி ஒண்ணுல... ஜெயலலலிதாவால எம்.ஜி.ஆர்., தன்னோட இறுதிக்காலத்துல பட்ட மனவேதனைகளச் சொல்லியிருக்கார். இதவிட முக்கியமான, அதிர்ச்சிகரமான செய்தி ஒண்ணயும் அந்த பேட்டியில சொல்லியிருந்தார்.
முத்துசாமி சொன்னது இதோ...
"எனது தந்தை இறந்த சமயம், புரட்சித் தலைவர் ஊட்டியில் ஓய்வுக்காகத் தங்கி யிருந்தார். அப்பாவின் உடலை எடுத்துக் கொண்டு, நாங்கள் சென்னையிலிருந்து கிளம்பி எங்கள் கிராமத்தை அடைந்தோம். அப்பொழுது முதல்வர் மறுநாள் வருவதாக போலீஸ் எஸ்.பி. சொன்னார். ஊட்டியிலிருந்து புரட்சித் தலைவர் நேராக ஊருக்கு வந்தார். வீட்டிற்குப் பக்கத்தில் எங்கள் தோட்டத்தி லேயே அப்பா உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்தோம். அந்த இடம் வரை வந்து குழியில் முதல் மண்ணைத் தலைவர் தள்ளினார். குடும்பத்தில் ஒரு மூத்த மகன் செய்ய வேண்டிய காரியம் அது. அதைப் பார்த்ததும் நான் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன்.
எனது தந்தையார் சமாதியில் நான் ஏழு கோடி ரூபாய் பணத்தை புதைத்து வைத்துள்ள தாகவும், அதை சி.பி.ஐ. தோண்டி எடுத்து விட்டதாகவும் ஜெயலலிதா அணியைச் சேர்ந்த குழந்தைவேலு எம்.பி. புகார் கூறியிருக்கிறார். என் தந்தையாரின் சமாதி ரோடுக்குப் பக்கமாகத் திறந்தவெளியில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அங்கு போகலாம். வரலாம். அவ்வளவு பணத்தை அங்கே எப்படி புதைத்து வைக்க முடியும்?
ஏழு கோடி ரூபாய் என்னிடம் இருந் திருந்தால் குழந்தைவேலு ஜெயலலிதாவிடம் போயிருக்கமாட்டாரே. மீண்டும் குழந்தைவேலு அதே புகாரை ஜெயலலிதா முன்னிலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் கூறினார். சுத்த பைத்தியக் காரத்தனமான குற்றச்சாட்டு! சி.பி.ஐ. தோண்டி எடுத்திருந்தால் பொதுமக்களுக்குத் தெரியாமல் எப்படிச் செய்திருக்க முடியும்? அப்போது... குழந்தைவேலுவும் எம்.பி. ஜெயலலிதாவும் எம்.பி. இருவரும் மத்திய அரசில் தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். சி.பி.ஐ. ஒரு மத்திய அரசு நிறுவனம். என் தந்தையாரின் சமாதியைத் தோண்டியிருந்தால் அதை மத்திய அரசு வெளியிடட்டும். நான் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். திறந்த வெளியில் எந்த மடையனாவது ஏழு கோடி ரூபாயை வைத்திருப்பானா?
நான் கட்சியில் சேர்ந்த நெடுநாட்கள் வரை ஜெயலலிதாவிடம் எந்தப் பழக்க வழக்கமும் கிடையாது. ஜெயலலிதா கட்சியில் சேர்ந்து கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனதற்கு முன்பு அவரை வைத்து ஈரோட்டில் ஒரு கூட்டம் போடுமாறு புரட்சித்தலைவர் சொன்னார். பிரச்சாரம் அதிகமாக நடக்கவேண்டுமென்பதற்காக ஜெயலலிதாவை அவர் பயன்படுத்தினார். தனக்குப் பதிலாக ஜெயலலிதாவைக் கட்சியில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமோ, அல்லது கட்சியில் ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உருவாக்க வேண்டுமென்ற நோக்கமோ தலைவருக்குக் கிடையாது. இப்பொழுது மற்ற கட்சிகளில் சினிமா கலைஞர்களை வைத்துக் கூட்டம் சேர்க்கப் பயன்படுத்தி வருகிறார்களே -அதேபோல் அவர் ஜெயலலிதாவைப் பயன்படுத்தினார். ஈரோடு கூட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஏமாற்றம்.
மேடையில் ஜெயலலிதா மட்டுமே இருக்கவேண்டும்; அவருக்காக ஒரேயொரு நாற்காலி போட்டிருக்க வேண்டும். இப்படித்தான் ஜெயலலிதா பல ஊர்களில் கூட்டம் பேசினார். ஆனால்... ஜெயலலிதா எதிர்பார்த்த மாதிரி அவருக்கு தனி சேர் போடாமல், மேடையில் வேறு யாரும் உட்காரக்கூடாது என்பது போன்ற அவரது நியாயமற்ற அரசியலில் எனக்கு விருப்பம் கிடையாது. எனவே கட்சியின் மாவட்ட பிரமுகர்கள் முதல், ஒன்றியச் செயலாளர்கள் வரை மேடையில் அனைவருக்கும் நாற்காலி போட்டிருந்தோம். ஜெயலலிதாவுக்கு அது பிடிக்கவில்லை. அதை தலைவரிடம் சொன்னாரோ என்னமோ, எனக்குத் தெரியாது. ஆனால் புரட்சித் தலைவர் என்னைக் கூப்பிட்டு எதுவும் சொல்லவில்லை..
1987-ல் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜெயலலிதாவுக்காக ஈரோட்டில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தைத் தள்ளிப் போட்டோம். அது குறித்து அவரிடம் நான் போனில் பேசினேன். அவருக்கு ஏகப்பட்ட கோபம் வந்துவிட்டது. "எனக்குத் தெரியும் மிஸ்டர் முத்துசாமி, 1984-லிலிருந்து நீங்கள் இப்படித்தான் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று வெடித்தார். எனக்கும் கோபம் வந்துவிட்டது. "என்னிடம் பேசிப் பிரயோஜனமில்லை அம்மா, தலைவரிடம் கேட்டுக் கொள்ளுங் கள்' என்று பதில் சொன்னேன். உடனே முதல்வரிடம் சென்று எனக்கு எதிராகக் கோள் மூட்டினார். பிறகு நான் அவரிடம் விளக்கிச் சொன்னேன்.
ஆனால்...
ஜானகி அம்மாவுடைய குணமே வேறு மாதிரியானது. தலைவருடன் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வந்தார்கள் என்றால், மேடையில் உட்காராமல் கீழேயே உட்கார்ந்து கொள்வார் கள். தலைவர் பக்கத்தில் நாங்கள் மேடையில் உட்கார்ந்திருக்கும் பொழுது ஜானகி அம்மாள் மேடைக்குக் கீழே உட்கார்ந்திருப் பதைப் பார்த்தால் எங்களுக்கு மேடையில் அமரப் பிடிக்காது. மனதுக்கும் சங்கடமாக இருக்கும். அவர்களைக் கட்டாயப்படுத்திக் கூப்பிட்டாலும் ’வரவே முடியாது’ என்று கூறிவிடுவார்கள். தலைவரும் அந்தநேரத்தில் இரண்டு வார்த்தையாவது வாழ்த்திப் பேசு, என்று சொல்வார்கள். பிறகு காரில் போகும்பொழுது, "நீங்கள் இருக்கையில் என்னை வேறு வாழ்த்தச் சொல்கிறீர்களே'’ என்று கேட்பார். தலைவர் வேறு; ஜானகி அம்மாள் வேறு என்கிற நிலை அப்பொழுது இல்லாததால், அவரைக் கட்சிப் பணிகளில் தலைவர் ஈடுபடுத்தவில்லை. இப்போது தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதால், ஜானகி அம்மாள் கட்சிக்குத் தலைமை வகிக்கிறார்கள்.
ஜப்பானுக்கு நாங்கள் சென்றிருந்தபோது கூட தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு அம்மாதான் பெயர் வைக்க வேண்டுமென்று அங்கிருந்தவர்கள் விரும்பினார்கள். அப்பொழுது அம்மாவை அழைத்துப் பெயர் வைக்கச் சொன்னார். அம்மா அப்பொழுது முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார்கள் பிறகு தலைவர் அவரை வற்புறுத்திய பிறகே, அதற்குச் சம்மதித்து "தமிழ் அண்ணா'’ என்கிற பெயரை கப்பலுக்குச் சூட்டினார். அம்மாவின் சுபாவமே இப்படித்தான்.
ஜெயலலிதாவைப் பற்றி புரட்சித் தலைவர் அப்படிச் சொன்னார்... இப்படிச் சொன்னார்’ என்று சொல்வது அவரவர் களைப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும்’என்பதற்காகத்தான். பொதுவாக ஜெயலலிதாவைப் பற்றி தலைவர் அப்படிக் கூறியது கிடையாது. ’கூட்டம் போடுவதற்கு இன்னாரை அழை’ என்று கூறுவார். ’ஆர்.எம்.வீ.யைக் கூப்பிட்டுக் கூட்டம் போடு, பாக்கியராஜைக் கூப்பிட்டுக் கூட்டம் போடு’ என்று சொல்லியிருக்கிறார்... அவ்வளவுதான். ஒரு கல்யாணத்திற்குப் போவதாக இருந்தாலும் யார், யார் கூட வரவேண்டுமென்று தலைவர்தான் லிஸ்ட் போடுவார். இது ஒரு கட்சித் தலைவருடைய பணிதான். அதை வைத்துக் கொண்டு ’நான்தான் அவருக்கு நெருக்கமானவர்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது தவறு. நான்கு பேரோடு ஐந்தாவதாகத்தான் ஜெயலலிதாவைப் புரட்சித் தலைவர் வைத்திருந்தாரே தவிர தனிப்பட்ட எந்த முக்கியத்துவமும் அவருக்குக் கொடுத்ததில்லை. ஜெயலலிதாவை அவரது வாரிசு என்று புரட்சித் தலைவர் கருதி இருந்தால் அவரை கட்சியின் பொதுச் செயலாளராகவே ஆக்கியிருக்கலாம்.
ஜெயலலிதா கட்சிக்குள் வந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு சில கூட்டங்களில் கலந்து கொண்டார். 1984-ல் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் போனபோது அவரது நடவடிக்கைகள் மாறின. சட்டமன்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆதிக்கம் செலுத்த நினைத்தார். ஒரு தொகுதிக்கு ஐந்துபேரை தேர்ந்தெடுங்கள். அவர்களில் நான் ஒருவரை செலக்ட் செய்கிறேன் என்று பேசத் தொடங்கினார். எம்.எல்.ஏ.வாக அவருக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்ற முயற்சிகள் எடுத்தார். ஆனால் அது முறியடிக்கப்பட்டது. பிறகு ஆட்சி மன்றக் குழுவால் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அது அமெரிக்காவிற்கு அனுப்பப் பட்டது. புரட்சித் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அது வெளியிடப்பட்டது. அதில் எல் லாம் ஜெயலலிதாவுக்குக் கடுமையான கோபம்.
ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா ஒரு கோபக்கார அம்மா, அவரைச் சமாளிக்க முடியாது என்பது தெரியும். என்னைக்கூட ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் ஆதரவாளன் என்ற முத்திரை குத்தப் பார்த்தார்கள். நான் எந்தக் கோஷ்டியும் இல்லை என்பதே உண்மை. முதல்வர் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வது ஒன்றே எனது லட்சியமாக இருந்தது.
என்னைப் போன்றவர்கள் ’முதல்வரின் மனதை நோகடிக்கக் கூடாது’ என்பதற்காகத் தான் அவருக்குப் பிடிக்காதவைகளைப் பேசமாட்டோம். ஆனால் ஜெயலலிதா அப்படிப்பட்டவர் அல்ல. புரட்சித் தலைவரின் மனதை புண்படுத்துவார். தலைவரது கடைசிக் காலத்தில் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் மிகவும் மனம் நொந்துபோய் இருந்தார். தலை வரை அவர் முன்னால் எடுத்தெறிந்து பேசும் தைரியம் ஜெயலலிதாவுக்குக் கிடையாது. ஆனால்...
(புழுதி பறக்கும்)