poo

(82) வாசகர்கள் தந்த பலம்!

"நைட்டு முழுக்க இன்ஸ்பெக்டர், ரைட்டரு எல்லாரையும் உக்கார வச்சு எல்லா ஊர் போலீஸ் ஸ்டேஷன்லயும் ஒங்க மேல கேஸ் பதிவு பண்ணுறாங்களாம்ணே. இப்போதான் எனக்கு பல இடத்துல இருந்தும் செய்திகள் வந்துக்கிட்டிருக்கு'ன்னு சேகர் பதர்றாரு.

Advertisment

விழுப்புரத்துல தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரா இருந்த முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் பாபு, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு.... இந்த மூணுபேரும் வண்டிய ஒரு இடத்துல போட்டுட்டு... ஒரே வண்டியில ஏறி கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், கச்சராபாளையம்னு... இந்த நாலு ஊர்களுக்கும் நேர்ல போய் ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் புகார் குடுத்துருக்காங்க. ஸ்டேனுக்குத்தான் மேலிடத்துல இருந்து டைரக் ஷன் வந்துருச்சே... அதனால உடனே பரபரப்பா நம்மமேல வழக்குப் பதிவு பண்ணிட்டாங்க.

"என்னென்ன செக்ஷன்ல வழக்கு போட்டுருக் கீங்கன்னு கேட்டேன்ணே... ஆனா எதுவுமே சொல்லமாட்டேங்கிறாங்க. ஆனா... கள்ளக்குறிச்சி யில நண்பர் செல்வநாயகம்னு இருக்காரு அவருதான் எல்லாத்தையும் சேகரிச்சு நமக்கு குடுத்துக்கிட்டிருக்காருண்ணே. நான் எல்லாத் தையும் கேட்டு வாங்கி ஆபீசுக்கு அனுப்பிச்சு வைக்கிறேன்'' அப்படின்னு சொன்னாரு.

அதோட, "உளுந்தூர்பேட்டையில ரமேஷ்னு எனக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தரு இருக் காருண்ணே. இந்த சைடுலயும் நெறைய வழக்கு நக்கீரன் மேல பதிவாகியிருக்கு... அதுக்கான எல்லா டீடெய்லயும் எடுத்து அனுப்புறேன்னு அவரு சொன்னாருண்ணே''ன்னாரு.

Advertisment

விழுப்புரம் தெற்கு மாவட்டத்துல மொத்தம் 30 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் இருக்கு. விழுப்புரம் தெற்கு மாவட் டத்துல இருக்கிற தெற்கு காவல் நிலையங்கள்ல மட்டும்தான் நக்கீரனுக்கு எதிரா அதிகமான புகார்கள வாங்கி பதிவு பண்ணுனாங் களாம். மத்தபடி விழுப்புரம் வடக்கில் உள்ள 19 காவல் நிலையத்துலயும் ஒரு கேஸ்கூட பதிவாகலையாம்.

"அப்படியா... ஆச்சரியமா இருக்கே சேகரு''ன்னேன்.

"ஆமாண்ணே, எனக்கும் இது ஆச்சரியமாத்தான் இருக்கு''ன்னு சொல்லிட்டு, சேகரும் போன கட் பண்ணுனாரு.

ii

தமிழ்நாடு பூராவும் எல்லா இடத்துலயும் நம்ம மேல வழக்குப் பதிவாகுது. விழுப்புரம் வடக்கு மாவட்டத்துல உள்ள 19 ஸ்டேஷன்கள்ல மட்டும் ஒரு வழக்கு கூட பதிவாகலங்கிறது ரொம்ப ஆச்சரியமாத்தான் இருந்துச்சு. ஒருவேள, அங்க உள்ள ஸ்டேஷன்கள்ல பொறுப்புல இருக்குறவங்க நம்ம வெல்விஷரா இருக்கணும்... அல்லது வேற ஏதாவது இருக்கணும்... இல்லன்னா நமக்கு முழு விவரமும் தெரியாம இருக்கணும்.

நமக்கு எதிரா எல்லா இடத்துல இருந்தும் கல்லு வருது... ஒரு இடத்துல இருந்து மட்டும் வரலன்னா நாம ஆச்சரியமா பாப்போம்ல. நமக்கு அப்படித்தான யோசன போகும். அதனால அத தெரிஞ்சுக்கணும்ங்கிறதுல ரொம்ப ஆர்வமா இருந்தேன். அதனால "கொஞ்சம் டீடெய்லா விசாரிச்சு சொல்லுங்க''ன்னு சேகர்ட்ட கொஞ்சம் அழுத்தம் குடுத்து சொல்லிட்டு போன ஆப் பண்ணுனேன்.

அடுத்ததா, டக்குன்னு சிவகாசியில இருக்கிற சீனியர் ரிப்போர்ட்டர் தம்பி ராமகிருஷ்ணனுக்கு போன் போட்டேன்.

அவரு, "அண்ணே... சாத்தூர்ல அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.பி.உதயகுமார் தலைமையில பஸ் ஸ்டாண்ட் கிட்டக்க நக்கீரன் பத்திரிகையை எரிச்சு ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. திருச்சி எம்.எல்.ஏ. பரஞ்ஜோதி தலைமையிலயும், வேலூர்ல அமைச்சர் விஜய் தலைமையிலயும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கு. சிவகாசி பேருந்து நிலையம் எதிர்ல அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அ.தி.மு.க.காரங்க புடைசூழ நக்கீரன் புக்குகளயெல் லாம் தீவைத்து கொளுத்துனாரு.

நான் இப்ப சென்னைக்கு வந்துட்டேன்ணே. எடிட்டோரியல்ல வேல இருக்கு, உடனே வரச்சொல்லுங்கன்னு நீங்க சொன்னதா ஆபீஸ்ல சொன்னாங்க, அதனால புறப்பட்டு வந்துட்டேன். இப்ப நம்ம ஆபீஸ் இருக்குற ரோட்டுலதான் நடந்து வந்துக்கிட்டிருக்கேன்ணே. எதுத்தாப்பல உங்க தம்பி குருசாமி சார் வெளிய கிளம்பிப் போய்க்கிட்டிருந்தாரு. என்னைப் பார்த்ததும், "என்ன அடி வாங்குறதுக்குன்னே ஊருல இருந்து வந்திருக்கீங்களா?'ன்னு வழக்கம்போல கிண்டலடிச் சாரு. அவரு சொல்றதும் நியாயம்தான.

இங்க இருக்குறவங்க நேத்து ராத்திரி உசுர கையில புடிச்சிக்கிட்டு எப்ப, என்ன நடக்கும்னு பயந்துக்கிட்டே இருந்தத வச்சு அப்படிச் சொல்றாரு. எனக்கும் கொஞ்சம் பக்... பக்...னுதான் இருக்கு. நம்ம ஆபீஸ் இருக்கிற ஏரியா சுடுகாடு மாதிரி கெடக்கு. எங்க பாத்தாலும் நக்கீரன எரிச்ச தடயம், கொடும்பாவி எரிச்ச தடயம்னு... பாக்க... பாக்க எனக்கு கண்ணீரே வந்துடுச்சு அண்ணே...''ன்னார்.

poorkalam

"சரி என்ன பண்றது? இதையெல்லாம் கடந்து போய்த்தான ஆகணும். நீங்க தைரியமா இருங்க''ன்னு சொன்னேன். தொடர்ந்து... அவரே, "அண்ணே சிவகாசி, சாத்தூர் ரெண்டு ஊருலயும் ஒங்க மேல கேஸ் போட்டுட்டாங்களாம்... அந்த விவரங்களத்தான் எடுத்துக்கிட்டிருக்கேன், எடுத்து சீக்கிரமா குடுத்துர்றேன்''னாரு.

அதோட, "அண்ணே, எனக்கு சென்னை சோர்ஸ் ஒருத்தரு போன்பண்ணி, அண்ணாசாலையில அ.தி.மு.க.காரங்க 100 பேரு சேர்ந்து, உங்க உருவ பொம்மைய இன்னைக்கு காலையில அண்ணா சிலைக்குப் பக்கத்துல எரிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணுனாங்களாம். எல்லாம் முடிஞ்சதும், தூரத்துல இருந்து வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த போலீஸ்காரங்க வந்து அவங்கள கிளப்பிவிட்டாங்கன்னும் சொன்னாருண்ணே''ங்கிற தகவலையும் சொன்னாரு.

போச்சா...நேத்தாவது காலைல 11 மணிக்கு மேலதான் ஆரம்பிச்சாய்ங்க... இன்னிக்கு காலைல ஏழு ஏழரைக்கெல்லாம் பொங்க வைக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க சண்டாளப் பாவிங்க. இன்னும் என்னென்ன கூத்துகள பண்ண காத்துக்கிட்டி ருக்காய்ங்களோ...?

அடுத்து சிவகுமாருக்கு போன் போட்டு. "என்ன நிலவரம்?'' தம்பின்னு கேட்டேன்.

"அண்ணே... திரும்பவும் ஆபீஸ அடிக்கிறதுக்கு கும்பலா வரிசையா வந்தாங்க. வேன்ல வந்த இன்னொரு கும்பல் எதையோ ஆபீஸ நோக்கி எறியறதுக்கு முயற்சி பண்ணு னாங்க... ஆனா, போலீஸ்காரங்க இருக்கிறதப் பாத்துட்டு அப்படியே பின்வாங்கிப் போயிட்டாங்க. அவங்க வந்த டாடா சுமோவுல பெரிய ஆளு ஒருத்தரு உக்காந்திருந்தாரு. (படத்த பாருங்க உங்களுக்கே தெரியும்...) உள்ள இருந்தவங்க கட்சிக்காரனா இல்லாம... வேற மாதிரி டிரஸ்கோடுல இருந்தாங்க. எதுவும் பண்ணிருவாங்களோன்னு நாங்க பரபரப்பா நின்னுக்கிட்டிருந்த நேரத்துல...

தமிழ்நாடு பூரா இருக்குற நம்ம நிருபர்கள் எல்லாரும் வரிசையா போன் பண்றாங்க. எல்லா ஊருலயும் நம்மமேல தொடர்ச்சியா எஃப்.ஐ.ஆர். போட்டுக் கிட்டிருக்கிறதா செய்தி வந்துக்கிட்டேயிருக்கு.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருச்சி... திருச்சியில மாத்திரம் ஒரே இடத்துல 4 வழக்கு பதிவாகியிருக்காம். ஊட்டியில இருந்தும் போன் வந்தது. அதுமட்டுமில்லாம எல்லா ஊர்லயும் வழக்குப் போடுறாங்களாம். எனக்கு கெடைச்ச தகவல்படி இதுவரைக்கும் நம்ம மேல 40 வழக்கு பதிவாகியிருக்கு''ன்னு சொன்னாரு.

poorkalam

நான் உடனே, "லோக்கல்ல ஒவ்வொரு ஏரியா ஸ்டேஷன்லயும் எவ்வளவு கேஸ் பதிவாகியிருக்குன்னு ஒவ்வொரு ரிப்போர்ட்டரையும் ஸ்டேஷனுக்குப் போய் பாத்து விவரம் சொல்லச் சொல்லுங்க. ஒவ்வொருத் தரும் அவங்களுக்கான ஒரு சோர்ஸ அந்தந்த ஸ்டேஷன்ல வச்சிருப்பாங்க. அத வச்சி விசாரிச்சு, எத்தன வழக்கு பதிவாகியிருக்குன்னு நீங்க நோட் போடுங்கன்னு சொல்லிட்டு... நேத்து ஆபீஸ அ.தி.மு.க. கபோதிக அடிச்சு நொறுக்கிட்டிருந்த நேரத்துல தம்பி லெனினை ஒரு அறிக்கை ரெடிபண்ணச் சொன்னேன்.

பொதுவா நக்கீரனுக்கு எப்போல்லாம் தாக்குதல் வருதோ... அப்ப, உடனே நாம தாக்குதல் சம்பந்தமான அறிக்கைய ரெடிபண்ணி, டெல்லி பிரஸ் கவுன்சில், டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மெட்ராஸ் ஹைகோர்ட் தலைமை நீதிபதி, அதோட எதிர்க்கட்சித் தலைவர்கள் + எல்லா பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்புவோம். அந்த ரீதியில் உடனே ஒரு அறிக்கையை தம்பி லெனினை தயார் செய்யச் சொல்லி ஒரு பார்வை பார்த்துட்டு எல்லாருக்கும் அனுப்புனோம்.

அடுத்த நாள், அந்த அறிக்கையின் சாராம் சம்... குறிப்பா தினத்தந்தி, தினமலர், தினகரன், தி இந்து...ன்னு கொஞ்சம் காலை பேப்பர்கள்ல மட்டும் வெளிவந்தது.

அண்ணன் கலைஞரும், அ.தி.மு.க.காரய்ங் களோட அராஜகத்த கண்டிச்சு கடுமையான அறிக்கை குடுத்திருந்தாங்க. அந்த அறிக்கை எல்லா பத்திரிகைகள்லயும் பதிவாகியிருந்துச்சு.

ஒரு பத்திரிகைக்கு இக்கட்டு வரும்போது... அவங்களுக்கு ஆதரவா கலைஞர் எப்பவும் இருப்பார்.

அடுத்ததா "உடனே ஆனந்த்த என்கிட்ட பேசச் சொல்லுங்க''ன்னு சொல்லவும்... கொஞ்ச நேரத்துல எனக்கு லைன்ல வந்தாரு ஆனந்த்.

"தம்பி ஜென்செட் ஓட ஆரம்பிச் சிட்டுதா?''ன்னு கேட்டேன்.

"ஓட ஆரம்பிச்சிடுச்சிண்ணே... வேலையெல் லாம் சரியா போய்க்கிட்டிருக்கு''ன்னு சொன்னாரு.

இரவோடு இரவா பத்திரிகைக்கான எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சு, பத்திரிகைய பிரஸ்ல ஓட்டி முடிச்சாகணும். ஏன்னா... இந்த மாதிரி எந்த ஒரு கொடூரத்த நக்கீரன் சந்திச்சாலும், நக்கீரன் வெளியாகுறதுல எப்பவுமே தாமதம் இல்லாம பார்த்துக்குவோம். அப்படி வகை... வகையா நெறைய கொடுமைகளச் சந்திச்சிருக் கோம்.

poorkalam

அடுத்து எப்படியும் சும்மா இருக்கமாட் டாய்ங்க...

ஒருமுறை பாத்தீங்கன்னா... மொத்த நக்கீரனையும் கிட்டத்தட்ட 3 1/2 லட்சம் புத்தகங்களையும் சீஸ் பண்ணிட்டாய்ங்க. அடுத்த ரெண்டு நாள்ல மறுபடியும் 3 லட்சம் புக்குகள பிரிண்ட் பண்ணி கடைகளுக்கு கொண்டுவர்றோம். அந்த மாதிரி எந்தப் போராட்டத்துலயும் நக்கீரன் கடைகள்ல விழுறது நிக்காது. அதுதான் நம்மோட பலம்... அதுக்குக் காரணம் நம்ம வாசகர்கள் நமக்குத் தர்ற பலம். "எந்த இடி விழுந்தாலும் அத தாங்கிட்டு, பத்திரிகை வெளிவந்துரும்'ங்கிற நம்பிக்கை நம்ம வாசகர்கள்கிட்ட இருந்துச்சு.

அதுவும் ஒருவகையில நல்லதுதான். ஏன்னா... கஷ்டம் வந்துருச்சேன்னு எப்பவுமே ஒப்பாரி வைக்கமாட்டோம். "நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதால் இந்த இதழை வெளியிட முடியவில்லை... இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வெளியிடுவோம்'னு சொல்றதுக்கு இன்னிக்கு வரைக்கும் நான் இடம் கொடுக்கல, அப்படிச் சொன்னதும் இல்ல.

ஆனா அடுத்த துன்பம் நம்மள ஏரோப்ளேன் வேகத்துல துரத்துது...

(புழுதி பறக்கும்)