(80) போலீஸ் செஞ்ச செட்-அப்!
"வீரம்ங்கிறது அடுத்தவய்ங்களுக்கு வலிகள உண்டாக்குறது மட்டுமில்ல... மத்தவங்களுக்கு வலியை ஏற்படுத்துறபோது அதை அவுங்க ஏத்துக்கறதும்தான்...'
சரித்திரத்துல மிகப்பெரிய ஆளா தங்கள காட்டிக்கிட்டவங்களும் மிகப்பெரிய வீரர்களா தங்கள சித்தரிச்சுக்கிட்டவங்களும் போர்முனை யில எதிரிகள்ட்ட சிக்காம இருக்குறதுக்கு செய்த பிரயத்தனங்க எக்கச்சக்கம். இப்ப அந்த வேலையத்தான் நாமளும் செஞ்சிக்கிட்டிருக் கோம். ஓடி ஒளியுறோம். நாம ஒண்ணும் வரலாற்று வீரர்கள் இல்ல... பெரிய ஆட்களும் இல்ல. என்னடா... இவனையே இவன் பீத்திக் கிறானேன்னு நெனச்சுறாதீங்க.
போர்முனையில எதுத்து நின்னு எதிர் எதிரா சண்ட போட்டு ஜெயிக்கிறது வீரம்னா, இன்னொரு பக்கம்... பெரும் படையோட மிருக பலம் கொண்டவய்ங்ககிட்ட இருந்து மாட்டிக் காம தப்பிக்கிறதும் பெரிய வீரம்தான். அதுக்காக நான் வீரன்னு மார் தட்டல.
ஜெயலலிதாவ பொறுத்தமட்டுல படை பலத்த அதிகமா வச்சிருந்த ஒரு மொரட்டு மனுஷி. எத்தனையோ சேதங்கள, கொடுமைகள அப்பாவிங்க மேல ஏவி விட்டுக்கிட்டு... தன்மேல ஒரு குண்டூசி கூட பட்டுறாம பாத்துக்கிறதுல அந்தம்மா பெரிய கில்லாடி... அந்தம்மாட்ட இருந்து தப்பிக்கிறதுல நாமளும் பெரிய கில்லாடிதான்... சரி இருக்கட்டும்!
பெருசு சுந்தர்ட்ட மறுபடியும் தொடர்புல போய் பேசுனப்ப, "அண்ணே... பக்கத்துல சிவகுமார், கௌரி ரெண்டுபேரும் இருக்காங்க... அவங்கள்ட்ட நீங்க பேசுங்க... ஒரு கூட்டம் முண்டியடிச்சு வந்துக்கிட்டிருக்கு''ன்னு பதறிட்டு பெருசு நகர்ந்துருச்சு.
இருப்புக் கொள்ளல எனக்கு. மறுபடியும் கூட்டம் கூட்டமா வருதுன்னு சொல்லி பெருசு செல்போன தம்பிகள்ட்ட குடுத்துத்துட்டுப் போறாரு. சிவா, மோகன், கௌரி, செந்தில்...னு போன கை மாத்திட்டுப் போயிட்டாங்க. செந்திலும்... "அண்ணே பெரிய கூட்டமா வந்துக் கிட்டிருக்கு, நான் போய் பாக்குறேன்ணே''ன் னுட்டு அவரும் போயிட்டாரு. பேக்கிங் பாபுவும் அவங்க கூட இருந்தாரு. மற்ற தம்பிகள் எல்லாரும் ஆபீசுக்கு உள்ளே இருக்காங்க. நம்ம ஜி.எம். சுரேஷ்... கூடவே ஒண்ணு, ரெண்டு பேரு வெள்ளனமா கூட்டம் இல்லாததப் பாத்து, பின்பக்கமா உள்ள ரகசிய வழியில வெளிய வந்து, அவங்க வீடுகள்ல ஏதும் பாதிப்பு வந்துறக் கூடாதேன்னு போய் பாத்துட்டு வர்றதுக்காகப் போயிட்டாங்க.
இப்போ போன் ஒவ்வொரு ஆளு கைக்கும் ரிலே ஓட்டம் மாதிரி மாறிக்கிட்டே இருக்கு. எனக்கோ பதட்டம் கிலோ கணக்குல கூடிக்கிட்டே போகுது.
"என்னடா சனியன் இது... இதுக்கு மேலயும் பெரிசா ஏதாச்சும் வந்து தொலையப்போவுதோ... ஒண்ணும் தெரியலியே'ன்னு மனசுக்குள்ள திக்... திக்... திக்...னு எகிறிக்கிட்டே இருக்கு.
"யாராவது ஒரு ஆளாவது என்ன நடக்குதுங்கிறத சொல்லித் தொலைங்கய்யா''ன்னு கௌரிட்ட போன்ல கத்துறேன்.
"ஆபீசுக்கு கரண்ட்ட கட் பண்றதுக்கு வந்தவங்க சுத்தியிருந்த 200 வீடுகளுக்கான கரண்ட்டயும் சேத்து மொத்தமா கட் பண்ணிட் டுப் போயிட்டாங்கள்ல. அதனால தெருவே இருண்டு போச்சு. தெருவுல இருக்குற மக்கள் எல்லாருமா வந்து போராட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. (இத ஏற்கனவே கடந்த இதழ்கள்ல சொல்லியிருப்பேன்.) அதோட ரோட்ட மறிச்சி மனிதச் சங்கிலிப் போராட்டமும் பண்ணுனாங்க.
அதே மாதிரி குடிதண்ணீர் கனெக்ஷனை யும் கட் பண்ணிட்டாங்க. நம்மள பழி வாங்குறதா நெனச்சி குருட்டுவாக்குல அந்த தெருவுல யாருமே தண்ணிய பயன்படுத்தக்கூடாதுன்னு கட் பண்ணித் தொலைச்சிட்டாய்ங்க.
பிள்ளையார் பிடிக்கப்போயி குரங்காய் மாறுன கதையாகிப் போச்சே அப்படின்னு நெனைச்சுக் கையப் பிசைய ஆரம்பிச்சுட்டாய்ங்க. இ.பி. ஆபீஸ், மெட்ரோ வாட்டர் ஆபீஸ்லயும் இருந்து, நமக்கு மாத்திரம் பர்ட்டிகுலரா எல்லாத்தையும் கட் பண்றதுக்கு என்ன வழியோ அத பண்றதுக்கு ஆள அனுப்பி விட்டுருந்தாய்ங்க.
தெருவுல உள்ளவங்க எல்லாரும் கரண்ட்ட கட் பண்ணுனவங்ககிட்ட ஆர்க்யூமெண்ட் பண்ணிக்கிட்டிருந்தாங்க. (படத்த பாத்தீங்கன்னா ஒங்களுக்கே தெரியும்.) ரெண்டு மூணு ஆளுங்க பேசிக்கிட்டிருப்பாய்ங்க... கூடவே வெள்ளையும் சொள்ளையுமா ஒண்ணு ரெண்டு ஆபீஸர்ஸ் நிப்பாய்ங்க பாருங்க. "கருமமே கண்ணாயி னார்'ன்னு சொல்றது மாதிரி கரண்ட்டயும் கட் பண்ணிட்டு, அதுக்கு விளக்கமா ஒரு வியாக்யானமும் சொல்லிக்கிட்டிருப்பாய்ங்க.
அப்போ அந்தப் பக்கம் பாத்தீங்கன்னா, அதே நேரம் ஒருத்தன் வந்து புதுசா இன்னொரு எடத்துல தோண்ட ஆரம்பிக்கிறான். (அதையும் படத்த பாத்தா தெரியும்)
முதல்நாளும் (7-1-2012) அங்கங்கே கரண்ட்ட, தண்ணிய, சீவேஜ கட் பண்ணிட்டாய்ங்க. இப்படி நெறைய வீடுகளுக்கு எல்லாத்தையும் கட் பண்ணுன தாலயும், எல்லாரும் கொதிச்சு எழுந்ததுனாலயும்... "யோவ்... நக்கீரனுக்கு மட்டும் கட் பண்ணச் சொன்னா... எல்லா ஜனங்களுக்கும் ஏய்யா கட் பண்ணுனீங்க?''ன்னு அந்தந்த டிபார்ட்மெண்ட் ஆளுகளுக்கு மேலதிகாரிங்க வகையா டோஸ் விட்டுட்டாய்ங்க போல...
அதனால, குறிப்பா நமக்கு மட்டும் பண்றதுக்காக நீள, அகலம்லாம் அளந்து பாத்து தோண்ட ஆரம்பிச்சிருக்காய்ங்க. அத தடுக்குறதுக்காகத்தான் நம்ம தம்பிகள்லாம்
போன் பேசக்கூட நேரம் இல்லாம அந்த இடத்துக்கு பரபரப்பா ஓடியிருக்காங்க.... இதுதான் கத.
இப்ப என்னாகிப்போச்சு...? கொஞ்ச நேரத்துல திபு... திபு... திபு...ன்னு ஒரு குரூப் ஆளுங்க வராய்ங்க. எங்க இருந்தாய்ங்கன்னு தெரியல்ல... காலையில 7:00, 7:30-க்கெல்லாம் ஒரு குரூப் ராயப்பேட்டை, மீர்சாகிப் மார்க்கெட்ல இருந்து வந்தானுங்களாம்.
இதுல போலீஸ் டேக்டீஸ பாருங்க. இப்ப அவனுக வரானுக... அதப் பாத்துட்டு நம்ம தம்பிங்க கொஞ்சம்பேரு வெளிய நின்னு இதையெல்லாம் தடுக்குறதுக்கும், ஏன், எதுக்குன்னு கேள்வி கேக்குறதுக்கும் பெருசு சுந்தர், சிவகுமார், பரமேஷ், சம்பத் ஐயா, செந்தில் பெரியய்யா, பிரகாஷ், மோகன், கௌரி, லாரன்ஸ், இவங்க எல்லாருமே ஆபீஸ்ல இருந்து கீழ இறங்கி வந்தவங்க... அந்த குரூப் திபு திபுன்னு உள்ள வரவும் கூட்டத்துல மாட்டிக்கக் கூடாதுன்னு தெறிச்சு ஓடிட்டாங்க.
இந்தக் கூட்டம் வந்ததுக்கான நோக்கமே... கரண்ட் கட் பண்றதையும், தண்ணிய கட் பண்றதையும் எதுத்து நாம தகராறு பண்ணாம இருக்கணும்... இப்ப அந்த மாஃப் வந்ததுன்னா நாம தெறிச்சு ஓடுவோம்ல? அப்படிங்கிறதுக்கான போலீஸ் செஞ்ச செட்-அப்தான் இது.
மன ரீதியான வலியையும் உடல் ரீதியான வலியையும் பல இடங்கள்லயும் நாம சந்திக்கிறோம். நான் மட்டுமில்ல... நக்கீரன் குடும்பமே இத சந்திச்சிருக்குது.
அந்த சமயத்துல எப்படி எல்லாத்தையும் நாம துணிச்சலோட எதிர்கொள்ளுறோம் அப்படிங்கிறத வச்சுத்தான் நம்ம வெற்றியே தீர்மானிக்கப்படுது. இத நான் ஞானியா இருந்து சொல்லல. தாங்க முடியாத நெறைய வலிகள அனுபவிச்சதுனால சொல்றேன்.
"பயம் இல்லாதவன்தான் வலியில இருந்து விடுதலை பெற முடியும்'னு சொல்லுவாங்க. அந்த வகையில நக்கீரன் குடும்பம்... நக்கீரன் குடும்பத்துல உள்ள தம்பிங்க எல்லாருமே எந்தப் பயமும் இல்லாம ராத்திரி பகலா... எங்கயும் போகாம அலுவலகத்துலயே தங்கியிருந்து, நம்மள அடிக்க மூர்க்கத்தனமா வெறியா வந்தவனுகள எதுத்து நின்னு அலுவலகத்த காப்பாத்தியிருக்காங்கன்னா... அதுக்காக எவ்வளவு பெரிய நன்றி சொன்னாலும் ஈடாகாது.
நெனைச்சிப் பாருங்க...
நெசமாவே எந்த நேரத்துலயும்
ஆபீசுக்கு வெடிகுண்டு போடுவாய்ங்கன்னு மிரட்டுனாய்ங்க... போடப்போறாய்ங்கன்னு பத்திரிகைக்காரங்கள்ட்ட இருந்து தகவலும் வந்துச்சு. தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு போலீஸ் காரங்களும் காதக் கடிச்சாங்க. அந்த நேரத்த ரொம்ப சுலபமா கடந்துற முடியாது. என்ன நடக்குமோ... எப்ப நடக்குமோன்னு எல்லாருமே பதட்டத்தோட இருக்கிற ஒரு விஷயந் தான? அதையெல்லாம் சமாளிச்சுதான், எல்லாருமே ராத்திரி பூரா ஆபீஸ்லயே தங்கி கொட்ட... கொட்ட முழிச்சிக்கிட்டு இருந் துருக்காங்க.
காலையில ஆள் இல்லாத நேரமா பாத்து ஏதாவது கிருத்துருவம் பண்ணீருவானுவோன்னு நெனைச்சுதான் "யாரும் போயிற வேணாம்... எல்லாரும் அங்கேயே இருங்க'ன்னு நான் சொல்லிக்கிட்டேயிருந்தேன். என்னதான் நாம சொன்னாலும், இந்தக் கொடூரன்கள எதுத்துப் போராடுறதுக்கு அவங்கள தயார்படுத் திக்கணும்ல.
இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி, கவிப்பேரரசு வைரமுத்து அண்ணன பாத்தேன். நாங்க ரெண்டுபேரும் விமானத்துல சந்திச்சிக்கிட்டோம். போறபோக்குல அண்ணன் சொன்னாங்க... "போர்க்களம் தெறிக்குதே'' அப்படின்னாங்க அவங்க ளோட தமிழ் நடையில. "எல்லாத்தையுமே ஆதாரங்களோட, புகைப்படங்களோடு ஆவணப்படுத்தி வச்சிருக்கீங்க... அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கீங்க'' அப்படின்னு ஆதங்கத்தையும், அதே நேரத்துல "போர்க்கள'த்துக்கு ஒரு பாராட்டையும் சொன்னாங்க.
அந்தப் பெருமை எல்லாமே எங்க நக்கீரன் குடும்பத்துக்கே...
இது ஒருபக்கம்...
அதேநேரம்... வெளியூர்கள்ல நக்கீரனுக்கு நடந்த கொடும இருக்கே...? ஆத்தாடி...!
(புழுதி பறக்கும்)