(77) உசுர பணயம் வச்சு...!
கடத்தப்பட்ட நாகப்பா வீட்டு நிலவரம், அதோட மத்த முக்கிய செய்திகள் எல்லாத்தையும் மைசூர் -மண்டியா பகுதியில இருந்து பல துன்பங்களையும் அனுபவிச்சு, தொடர்ந்து நமக்கு அனுப்புனவரு அப்ப நிருபரா இருந்த ஓசூர் ஜெ.பி.
நாகப்பா சுட்டுக் கொல்லப்பட்ட அன்னிக்கு ராத்திரி அவருக்கு போன்ல பேசி, "என்னாச்சு தம்பி... நீங்க எங்க இருந்தாலும் ஸ்பாட்டுக்குப் போங்க. இப்ப பேப்பர்ல குழப்பமா செய்தி வருது. உண்மைய ஊருக்குச் சொல்லணும்ல, லேட் பண்ணாம போங்க''ன்னு ஜெ.பி.க்கு ஆர்டரே போட் டேன். தம்பி ஜெ.பி. உடனே ஸ்பாட்டுக்கு போயிட்டாரு. அந்த நேரத்துல அவருக்கு நேர்ந்த கொடூரத்தப் பத்தி அவரே சொல்றாரு கேளுங்க...
"நாகப்பாவ, வீரப்பன் கடத்திட்டுப்போய் எம்.எம்.மில்ஸ் பகுதியில புடிச்சி வச்சிக்கிட்டிருக் கும்போது, தமிழ்நாடு அதிரடிப்படை அங்க வந்து நாகப்பாவ செக்யூர் பண்றதுக்குப் பதிலா சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு எனக்கு ஒரு தகவல் வந்தது.
அந்த நேரத்துல அண்ணன்ட்ட இருந்து போன். உடனே கிளம்பிப் போகச் சொன்னதால, பெங்களூர்ல இருந்து செய்தி சேகரிக்கறதுக்காக, டூவீலர்லயே மைசூர் போனேன். அப்போ மைசூர் போறதுக்கு சிங்கிள் ரூட்தான் இருந்தது. டபுள் ரூட் கிடையாது. சின்ன குறுகலான ரோடாத்தான் இருக்கும். ரொம்ப கவனமா போகணும். பஸ்சுல போகணும்னா குறைஞ்சது மூணு, நாலு மணி நேரமாவது ஆகும். அதனால அப்போ என்னோட டி.வி.எஸ். சுசுகி டி.என்.3469 தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிய எடுத்துக்கிட்டு கௌம்புனேன். சம்பவ இடத்துக்குப் போய் செய்திகள்லாம் கலெக்ட் பண்ணிட்டேன்.
அந்த சமயத்துல நாகப்பாவ சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு வெளிய தகவல் பரவிருச்சு. மைசூர்ல, காவிரி பெல்ட் பூராவுமே வீரப்பனுக்கு எதிராவே இருக்குற இடம். மற்ற இடங்கள்ல எப்படியோ, ஆனா மைசூர்ல இருந்து குண்டுலு பேட், சாம்ராஜ் நகர், பந்திப்பூர்...னு தொடர்ந்து பெங்களூர் வரைக்கும் வீரப்பனுக்கான எதிர்ப்பு வெறியா மாறி இருந்தது.
நாகப்பா செத்துட்டாருங்கிற தகவல் கெடைச்சு அது சம்பந்தமான செய்திய நான் உடனே ஆபீசுக்கு குடுத்தாகணும். அதுக்கு நான் பெங்களூக்குப் போகணும். அங்க இருந்துதான் செய்திய அனுப்ப முடியும். அந்த நேரத்துலயெல் லாம் பென்டிரைவ் மாதிரியான வசதிகளோ, மெயில் வசதிகளோ இல்லாத நேரம். அதனால ப்ளாப்பியில போட்டு பண்றதுக்காக வந்துக்கிட்டி ருக்கும்போது நல்ல மழை. ஸ்ரீரங்கப்பட்டினம் தாண்டி வரும்போதே மழை ஸ்டார்ட் ஆயிருச்சு. மழை பெய்தாலும் பரவால்லன்னுட்டு வந்துக் கிட்டிருக்கேன்... மண்டியா நெருங்க... நெருங்க... என்ட்ரன்ஸ்லயே எல்லா எடத்துலயும் ரோட ப்ளாக் பண்ணிட்டாங்க.
ஏன் ரோடெல்லாம் பிளாக் பண்ணியிருக் காங்கன்னு விசாரிக்கும்போதுதான் தெரிஞ்சது... நாகப்பா சுட்டுக்கொல்லப்பட்டாரு அப்படிங்கிற தகவல் கெடைச்சி மண்டியாவுல மிகப்பெரிய கலவரம் மூண்டுருக்கு.
ரோடு எல்லாம் டயர்களப் போட்டு எரிச்சி, அரசு ஜீப்களுக்கு தீ வச்சி... அந்த இடமே கலவரக் காடாயிருச்சு. நெலம சீரியஸா போனதுனால போலீஸ் வந்து கண்ணீர் குண்டுல்லாம் வீசி கூட்டத்த கலைச்சாங்க.
நெலம ரொம்ப தீவிரமாவும்... கலவரமாவும் இருந்ததுனால சந்து பொந்தெல்லாம் தாண்டி... மண்டியாவுக்கு அவுட்டர்ல... அதாவது பெங்களூர் போற வழியில வரும்போது... அந்த இடத்துல இந்தப் பக்கம் பெங்களூர்ல இருந்து போற வண்டிகள நிறுத்துறதுக்காக ஒரு மாஃப். அந்த மாஃப் பாத்தீங்கன்னா, பெங்களூர்ல இருந்த மண்டியா போற என்ட்ரன்ஸ்ல "ஷா மில்'னு சொல்ற (மரங்கள மெஷின் வச்சி அறுக்கிற ஒரு மில்) இடத்துல ஒரு பெரிய கூட்டம். தமிழ்நாட்டுல இருந்து வர்ற பஸ்கள எல்லாம் அடிச்சு நொறுக்கு றாங்க. பஸ்ஸுக்கு தீ வைக்கிறாங்க. பயணிங்க எல்லாம் அலறி அடிச்சிக்கிட்டு ஓடுறாங்க. ஜெய லலிதாவையும், வீரப்பனையும் திட்டிக்கிட்டே, பாக்குற ஆளு, ரோட்டுல போற ஆளு எல்லாரையும் அடி அடின்னு அடிக்கிறாங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியாம... ஒளிஞ்சிருந்து பாக்குறேன்... என் வண்டி வேற தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன். பக்கத்துல இருந்த ஷா மில்லுல இருந்து ரீப்பர்னு சொல்லுவோம்ல... அதாவது ஸ்கொயரா நீளமா நல்ல ஸ்ட்ராங்கா இருக்கிற கட்டைகள ஆளாளுக்கு எடுத்துட்டு வந்து கார், பஸ்... டூவீலர் எல்லாத்தையும் போட்டு அடிச்சு வெளுக்குறாங்க... மனுசங்களும் தப்பல.
அதாவது கர்நாடகா, ஆந்திரா வண்டிகள விட்டுட்டு, மத்த வண்டிகளையெல்லாம் அடிச்சி உடைச்சி சேதப்படுத்துறாங்க. அந்த நேரத்துல செய்தி கொடுக்கணும்ங்கிற அவசரத்துல டூவீலர உருட்டிக்கிட்டே பதுங்கிப் பதுங்கி கிராஸ் பண்றப்ப... மில்லுல உள்ள ஒரு கும்பல் என்னைப் பாத்துருச்சு...
அப்போ ஒருத்தன் தமிழ்நாடு வண்டின்னு கத்த... ஒருத்தன் கையில வச்சிருந்த ரீப்பரக் கொண்டு ஓங்கி அடிக்கிறான். அடி தலையில பட்டுறப்போகுதுன்னு நெனைச்சி நான் வண்டிய கொஞ்சம் ரைஸ் பண்ணிட்டு தலைய கொஞ்சம் பின்பக்கமா சாய்ச்சிக்கிட்டதுனால... அடி வண்டி மட்கார்டுல டமார்னு விழுது. அந்த நேரத்துல நான் பிரேக் போட்டு தலையமட்டும் முன்பக்கமா சாய்ச்சிருந்தா... கண்டிப்பா தலை பொளந்துருக்கும்....! பின்னாடி சாய்ச்சதுனால வண்டி தடுமாறிடுச்சி... மட்கார்டு மேல அடிபட்டதால நான் உயிர் பொழைச்சேன். வழி நெடுக வெறியாட்டம். உயிர் பொழைச்சு வந்தத இப்ப நெனைச்சாலும் பகீர்னு இருக்கு. அந்த மாதிரி பிரச்சினைகளயெல்லாம் சந்திச்சி, பெங்களூர் வந்து ப்ளாப்பியில இருந்த போட்டோஸ் எல்லாத்தையும் எடுத்து, மண்டியால நடந்த தீ வைப்பு சம்பவங்களையும் டீடெய்லா அண்ணனுக்கு அனுப்புனேன்.
"சும்மா வரல்ல சுதந்திரம்'னு சொல்லுவாங் கள்ல அதுமாதிரிதான்... நக்கீரன்ல அப்ப, அந்தப் பிரச்சினைய... அது பின்னாடி இருந்த கொடூரத்த, உசுரப் பணயம் வச்சு வெளில கொண்டுவந்தோம்ங் கிறதுக்கு இது ஒரு சாம்பிள். தமிழ்நாடு எஸ்.டி.எஃப்., கர்நாடகா எஸ்.டி. எஃப். -இந்த ரெண்டுபேரும் நீ முந்தி, நான் முந்தின்னு அடிச்சிக்கிறாங்கன்னு போன அத்தியாயத்ததுல சொல்லியிருப்பேன். மக்கள பாதுகாக்கணும், மக்களோட உசுர காப் பாத்தணும்ங்கிற எண்ணம்லாம் இவங்களுக்கு கொஞ்சமும் கெடையாது. அவனுகளுக்குத் தேவை... வீரப்பன் உசுரோடு இருக்கக்கூடாது. வீரப்பன எவன் தேடிப்போனாலும் கொன்னுறணும்.
இப்படியெல்லாம் எழவு நடக்கும்னு இங்க இருக்குற மேடத்துக்கு தெரியாம இருக்காது. இது நடக்கணும், கர்நாடகாவுல ஆட்சி மாறணும்ங்கிற தும் இவங்க போட்ட கணக்கு. இதுக்குப் பின்னால ஜெயலலிதாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் ஒரு பழைய பகை. அதுதான் ராஜ்குமார் மீட்புக்கு என்னை அனுப்பக்கூடாதுன்னு இந்தம்மா அறிக்கை விட் டுச்சுல்ல. அதுக்குப் பதிலுக்கு கிருஷ்ணா, கொஞ்சம் காட்டமா இந்தம்மாவ எதுத்து பத்திரிகைகளுக்கு பேட்டி குடுத்துட்டாரு. தன் பேச்ச மதிக்காதவங்கள கால்ல போட்டு மிதிக்கணும்... அவ்வளவுதான் இந்தம்மாவோட அன்பான ஆசை.
இது ஒருபக்கம்னா...
"மக தாலி அறுத்தாலும் பரவால்ல... மருமகன் செத்துரணும்'னு நெனைக்கிற அந்த எண்ணத்துல கர்நாடகாவோட அதிரடிப்படை.
இந்தப் பக்கம் தமிழ்நாட்ட பொறுத்த அளவுல, "அறுக்கமாட்டாதவன் இடுப்புல 58 கருக்கு அருவாளாம்'னு கிராமத்துல ஒரு சொலவட சொல்லுவாங்க பாருங்க, அந்த மாதிரி... அதாவது நேரே போயி வீரப்பன கண்டுபுடிச்சு அவர தூக்கணும்... இல்ல கொன்னுறணும் அப்படிங்கிற தைரியம்லாம் நம்ம தேவாரத்துக்கும் அவரோட அடிப்பொடிகளுக்கும் கெடையாது. ஆனா, எச்சத்தனமா அங்க இருக்கிற அப்பாவி காட்டுவாசிங்கள, ஏப்ப சாப்பையா உள்ளவங்கள உருட்டி மெரட்டி அதுல காரியம் சாதிக்கலாம்னு அவங்க பாக்குறது. அப்படி இல்லியா... இப்படி ஒரு கொல்லப்புறமா வந்து ஊடு கட்டுறது.
ஒருவழியா நாகப்பா கதைய முடிச்சிட் டாய்ங்க. தமிழ்நாடு எஸ்.டி.எஃப்.காரய்ங்கதான் முடிச்சாங்கங்கிறது எல்லாருக்குமே வெட்ட வெளிச்சம். அதுல முக்கிய பங்கு மோகன் நிவாசுக்கு இருக்கு. இந்த விஷயத்த அந்த நேரத்துலயே நக்கீரன்ல பதிவு பண்ணிட்டோம்.
ஒரு பெரிய உசுருங்கிறதப் பத்தியெல்லாம் கவலப்படாம, ஜெயலலிதாங்கிற பொம்பள அல்லி ராணி மாதிரி ஒரு சபதம் எடுக்குது.
"நானா... வீரப்பனா...? நக்கீரனா? பாத்துருவோம்...''
யாரு... யாருடா தூது போறது... பாத்துருவோம் அப்படின்னு சபதம் எடுத்ததுனால வந்த வினைதான்... நாகப்பாவோட சாவு.
முதலமைச்சரா பதவியில உக்காந்துட்டு, "எனக்கு அவன் உயிரு வேணும்... வீரப்பனோட உயிரு வேணும்... அது முடியலியா... கோபாலோட உசுரு வேணும்...'' அப்படின்னு கொந்தளிச்சது அந்தம்மா. அந்த மாதிரிதான் இடையில கிராஸ்ஃபயர்னு சொல்றோம்ல... அப்படிச் செத்தவருதான் நாகப்பா.
நான் முன்னமே சொன்னதுதான்... ரெண்டு, மூணு இதழுக்கு முன்னாடி, "மாலை மலர்' பேப்பர்... ரெண்டு பேப்பர்கள்ல வெளிவந்திருந்த செய்திகள வெளியிட்டிருப்போம். அது எப்படி வெளிவந்த துங்கிறது இப்போ ஒங்களுக்கு விளங்கும்.
அடுத்து... போன் டேப். அதாவது போன் டேப் மூலமா ஒரு உசுர எப்படி காலிபண்ணு றாய்ங்க? குறிப்பா ஜெயலலிதா எப்படி கையாண் டுச்சு அப்படிங்கிறதுக்குத்தான் இந்த உதாரணம்.
இப்படி போன் டேப் ஆகுறதுனால நாம என்ன பண்றதுன்னு ப்ளாட்பாரத்துல குத்தவச்சு யோசிச்சிக்கிட்டே... இன்னும் கூடுதலா அந்தக் கடையில இருந்த எல்லா பேப்பர்களையும் வாங்குனேன்.
(புழுதி பறக்கும்)