(76) மோசடி நாடகம்!
நாகப்பா கடத்தல் விஷயத்துல நோ தூது, நோ பேச்சுவார்த்தைன்னு சொன்ன அதே வாய்தான் 94-ல வீரப்பன்ட்ட பேச்சுவார்த்தைக்கு தூது, கீதுல்லாம் பேசி அனுப்புச்சு. அதுக்குள்ள நெறைய உள்குத்து எல்லாம் நடந்துச்சு. 1994-ல டி.எஸ்.பி. சிதம்பரநாதன், போலீஸ் ஏட்டு ராஜகோபால், சேகர்ங்கிற ஒரு வாத்தியார் இப்படி மூணு பேர வீரப்பன் கடத்திர்றாரு. நடக்குறது ஜெயலலிதா கவர்ன்மென்ட்.
வீரப்பனோட முதல் கடத்தல். இந்தக் கடத்தல் ஒரு பெரிய எபிசோடு. (மறுபடியும் மொதல்ல இருந்தா...ன்னு நெனைக்காதீங்க) அதுக்காக தூதுல்லாம் போனாய்ங்க. பதிலுக்கு வீரப்பனே அங்கயிருந்து அவர் சார்பா தூது அனுப்புனாரு. பேபி வீரப்பன் வந்தாரு. வந்துட்டு திரும்ப உள்ள போனதுக்கப்புறம், வீரப்பன் தம்பி அர்ஜுனன் வந்தாரு. வர்ற வழியிலயே அவர கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டாய்ங்க.
அப்ப கோவை கலெக்டரா இருந்த சி.வி.சங்கர்ங்கிற கலெக்டர் முன்னிலைல பேச்சுவார்த்த எல்லாம் நடந்துச்சு. ஒருபக்கம் பேச்சுவார்த்த, தூது... இப்படி போயிட்டிருக்கு, இன்னொரு பக்கம்.... ரெண்டு மாநில எஸ்.டி.எஃப்.காரங்களும் கிட்டத்தட்ட 12,000 பேருக்கு மேல திடுதிப்னு வீரப்பன் காட்டுக்குள்ள இறங்குறாங்க. அதுக்கு முன்னாடியே உள்ள பேச்சுவார்தைக்குப் போனவன், தூது போனவன், எல்லாத்தையும் வேவு பார்த்துட்டு... உள்ள இறங்கிட்டாங்க.
எஸ்.டி.எஃப். போலீஸ் உள்ள வர்றத சிதம்பரநாதன் லாங் ஷாட்ல பார்த்திடுறாரு. தேவாரம் போலீஸ் புத்திய காமிச்சிட்டாரு. வீரப்ப னும் இவங்கள வச்சிருந்த இடத்துல இல்ல.
அந்த நேரத்துல புத்திசாலித்தனமா ஒரு காரியம் பண்றாரு சிதம்பரநாதன். அதாவது, தனக்கு பாதுகாப்பா இருந்த வீரப்பனோட ஆளுங்க மூணுபேரோட மனசையும் கரைச்சு, அவங்களுக்கு புரியுறமாதிரி பேசி... "உங்களையும் கொன்னுருவாங்க... உங்க ளோட சேர்த்து எங்க ளையும் கொன்னுருவாங்க. எனக்குத் தேவாரத்தப் பத்தி நல்லா தெரியும். வெறி பிடிச்சு அலையுற போலீஸ் காரன். அந்த ஆளு இப்படி ஏதாவது ஏடா கூடமா திட்டம் போடுற வரு, அதனாலதான் பயந்துக்கிட்டே இருந் தேன். வீரப்பன் மேல எனக்குப் பயம் இல்ல. அதனால நீங்க எங்க கூடவே வாங்க, நாம தப்பிச்சுப் போயிறலாம். நான் ஒங்கள கூட்டிட்டுப் போயி கலெக்டர்கிட்ட சரண்டர் பண்ணச் சொல் றேன். கலெக்டர் ஒங்கள பாதுகாப்பா சரண்டர் பண்ண வைப்பாரு, என்ன நம்பி வாங்க'ன்னு அந்த மூணுபேரையும், தன்னோட கடத்தப்பட்ட ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு ரெண்டு நாளு ராத்திரி பகலா நடையா நடந்து கலெக்டர்கிட்ட கொண்டு போய் ஒப்படைக்கிறாரு.
அன்னிக்கு மட்டும் புத்திசாலித்தனமா சிதம்பரநாதன் அவங்களையும் கூட்டிக்கிட்டு கிளம்பலன்னா நாகப்பாவ கொன்ன மாதிரி சிதம்பரநாதனையும் ஒரே போடா போட்டுருப்பாய்ங்க.
அன்னிக்கு தமிழ்நாடு எஸ்.டி. எஃப்.புக்கு தேவாரமும், கர்நாடக எஸ்.டி.எஃப்.புக்கு சங்கர் பிதாரியும்தான் தலைமை.
அவங்களோட வேலையே இது தான்... தூதுக்கு போறவங்க பின்னாடியே ஆள் அனுப்பி கொன்னுர்றது. அந்தச் சாக்குல வீரப்பனையும் கொன்னுரணும்னு திட்டம் போட்டிருந்தாங்க.
அண்ணே... இப்ப புரியுதா...? நாம தூது போய் உசுரோட திரும்பி வந்தது எவ்வளவு பெரிய சாகஸம்னு! சரி... அத விடுங்க...
இவ்வளவும் நடந்ததுக்கப்புறம் சிதம்பரநாதன், அவர்கூட ஏட்டு ராஜ கோபால், வாத்தியார் சேகர் எல்லாரையும் குத்தவச்சி "நாங்கதான் இவங்கள ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்துனோம்''னு பிரஸ்மீட் குடுத்தாரு தேவாரம். எவ்வளவு பெரிய மோசடி நாடகம் இது.
ஆனா... உண்மையிலேயே சிதம்பரநாதன் தப்பிச்சு வந்தது அவரோட சுய புத்தியால. வீரப்பனோட இருந்த மூணுபேரையும் கூட்டிட்டு வந்து சரணடைய வச்சது அவரோட திறமை யால. ஆனா கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாம வெக்கமும் இல்லாம நாங்கதான் இவங்கள ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்தி கூட்டிட்டு வந்தோம்னு தேவாரம் பத்திரிகைக்காரங்கள்ட்ட புளுகு மூட்டைய அவுத்து வுட்டாரு.
பக்கத்து ரூம்ல கர்நாடக எஸ்.டி.எஃப். சீஃப் சங்கர் பிதாரி.... இவரு ஒரு பெரிய புரூடா, சும்மா இருப்பாரா...? அவரு, அவரு பங்குக்கு "வி ஒன்லி ரெஸ்க்யூ த்ரீ பெர்சன்'ன்னு சொல்லி அந்தாளு ஒரு பக்கம் பிரஸ்மீட் குடுத்தாரு.
இப்ப புரியுதா ஒங்களுக்கு...? இது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இருக்குற ஈகோ கிளாஷ்... எவன் இதுல பேரத் தட்ட ணும் அப்படின்னு துப்பாக்கி எடுத்து டுமீல்... டுமீல்னு சுட்டுக்காத குறையா சண்ட போட்டாய்ங்க.
நாமதான் சும்மா இருக்கமாட்டோம்ல. அப்ப கோவை நிருபர் மகரனை, சிதம்பரநாதன் வீட்டுக்கு அனுப்பி, "என்ன நடந்தது'ன்னு கேட்டப்ப... அவரு எல்லா உண்மைகளையும் நக்கீரனுக்கு புட்டுப் புட்டு வச்சிட்டாரு. தேவாரமும், சங்கர் பிதாரியும் ஒண்ணும் கிழிக்கலங்கிறத ஒரே போடா போட்டு உடைச்சிட்டாரு.
நக்கீரன்ல இந்தச் செய்திய வச்சு பொளந்து கட்டிட்டோம். ஏன்னா... உண்மையி லேயே வீரப்பன் ஆட்கள் 3 பேர உசுரோட கொண்டு வந்து சரண்டர் பண்ணுனது டி.எஸ்.பி. சிதம்பரநாதன்தான். அதுக்குப் பாராட்டோ, அவார்டோ குடுக்காம, உண்மைய நக்கீரன்ட்ட சொல்லிட்டாருன்னு கடுப்பான தேவாரமும், ஜெயலலிதாவும் டி.எஸ்.பி. சிதம்பரநாதன கோயம்புத்தூர்ல இருந்து ராமேஸ்வரத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாய்ங்க. இப்ப புரியுதா... ஜெயலலிதா யாரு... தேவாரம் யாருன்னு...?
இதுக்கு காரணமா இருந்த சிதம்பரநாதன் அண்ட் கோ + கலெக்டர் சங்கர் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி தேவாரமும், சங்கர் பிதாரியும் பேரெடுத்தாய்ங்க.
அடுத்து...
1995-ல மூணு ஃபாரஸ்ட் வாச்சர்கள கடத்திட்டாரு வீரப்பன். அவங்கள மீட்டுட்டு வர்றதுக்கு வீரப்பன்கிட்ட தூதெல்லாம் போனாங்க. வீரப்பன் கேட்டதுனால, சிவப்புக் கலர் புல்லட்டு, சிவப்புக்கலர் சட்ட போட்ட ஆளு, சிவப்புக் கலர் மால, வெள்ளைக்கலர் கொடி... இப்படி குண்டக்க மண்டக்க நெறைய கண்டிஷன வீரப்பன் போட... அதுபடியே எல்லாமே நடந்துச்சு. (அது ஒரு தனி கத. அதுக்குள்ள இப்ப நான் போகல.)
பேச்சுவார்த்த நடக்குது. கடத்துன 3 வாச்சருகளோட வீரப்பன் இருக்கும்போது போலீஸ் சுத்தி வளைச்சுட்டதா நியூஸ் வந்திருக்கு. அதனால நீங்க என் கஸ்டடியில உள்ள இருக்கும்போதே போலீஸ் சுத்தி வளைக்கப் போறாங்கன்னா... நீங்க செத்தாலும் பரவால்ல... ஒங்கள கொன்னுட்டு எம்மேல பழிபோடலாம்னு பாக்குது ஒங்க போலீசு. அதனால உயிர் பொழைச்சு ஓடிப் போயிருங்க அப்படின்னு சொல்லிட்டு... கரடு முரடான பாறைகளயெல்லாம் தாண்டி ஒரு மலைக்குப் பக்கத்துல விட்டுட்டு வீரப்பன் குரூப் காட்டுக்குள்ள எஸ்கேப்.
கடத்தப்பட்ட வாச்சருங்க நொந்துபோய் காட்டுக்குள்ள பொடிநடையா நடந்து வந்துட்டு இருக்காய்ங்க. அந்த நேரத்துல அங்க ரோந்து வந்த கர்நாடக போலீசு... இந்த மூணு பேரையும் பாத்துட்டு... வீரப்பன் ஆளுங்கன்னு நெனச்சி அவங்கள சுடப் போயிருக்காங்க. அப்போ அந்த மூணுபேரும் "ஐயா சுட்டுறாதீங்க... சுட்டுறாதீங்க... நாங்க கன்னடத்துக்காரங்கதான். எங்களத்தான் வீரப்பன் கடத்துனாரு'ன்னு கன்னடத்துல சொல்லியிருக்காங்க. அப்படியே அவங்கள அங்கயே நிறுத்தி ஒரு போலீஸ பாரா போட்டுட்டு, நாலாஞ்சு போலீஸ்காரங்க போய் பிரஸ்காரங்கள யாருக்கும் தெரியாம வேன்ல கூட்டிட்டு வர்றாங்க.
தமிழ்நாடு போலீஸ், தமிழ்நாடு எஸ்.டி. எஃ.ப். எல்லாரும் வேற பக்கம் இருக்காங்க. அவங்க யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா சங்கர் பிதாரியே ஸ்பாட்டுக்கு வந்து... கையோடு வேன்ல கூட்டிக்கிட்டு வந்திருந்த பிரஸ்காரங்கட்ட அந்த மூணுபேரையும் காமிச்சு... "எஸ்... நாங்கதான் காப்பாத்துனோம்... இவங்க மூணு பேரையும் நாங்கதான் ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்துனோம்''னு சொல்லி பிரஸ்மீட்ட சுடச்சுடக் குடுத்தாரு.
சரி, தமிழ்நாடு எஸ்.டி.எஃப். போலீஸ் என்ன பண்ணுனாங்கன்னு பாத்தா...?
தூர்தர்ஷனுக்கு தேவாரம் பேட்டி குடுக்குறாரு... "நாங்கதான் கடத்தப்பட்ட 3 பேரையும் கஷ்டப்பட்டுக் காப்பாத்துனோம்''னு. எங்க இருந்து...? சென்னையில இருந்து?!
இது எப்படி இருக்கு...?
ரெண்டு சைடுலயும்... அதாவது தமிழ்நாடு எஸ்.டி.எஃப்.புக்கும், கர்நாடகா எஸ்.டி.எஃப்.புக் கும் இருந்தது பெரிய ஈகோ. அதுக்காகத்தான் இந்த ரெண்டு சம்பவங்களையும் நான் ஒங்களுக்குச் சொன்னேன்.
இப்ப... இங்க கதைக்கு வருவோம்.
இவனுவோ ரெண்டு பேரும் நான் முந்தி, நீ முந்தின்னு அடிச்சுக்கிறதாலதான் மேப்படி நாகப்பா விஷயத்துல தூது அனுப்பாட்டாலும்... நாகப்பா வீட்டுலயும், கர்நாடகாவும் எடுக்குற முயற்சிகள தொடர்ந்து கண்காணிச்சாரு மோகன் நிவாஸ்...
(புழுதி பறக்கும்)