poorkalam

(69) கலைஞரின் மனிதாபிமானம்!

ர்நாடக அதிரடிப்படை தேடுதல் வேட்டையை நிறுத்திட்டாலும்.... தமிழக அதிரடிப்படை தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டிருந்துச்சு. நான் சொன்னேன் பாருங்க அல்வா கொடுத்தாங்கன்னு... அதேதான். நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்குறதுன்னு ஜெயலலிதாவோட பிடிவாத குணம் இருக்கே... அதுக்கு இதுவும் ஒரு சாம்பிள்.

Advertisment

இது சம்பந்தமா கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததுல மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஜெயலலிதாவ சந்திச்சாரு. மத்திய உள்துறை அமைச் சர் தமிழக அரசை கேள்வி கேட்டுட்டு அதோட Why you are not send the emissary to rescuing Ex-Minister Nagappa?--ன்னும் கேட்டுருந்தாங்க. தேடுதல் வேட்டைய நிறுத்துறதா மட்டும் அறிவிச்சது தமிழ்நாடு அரசு. கூடவே "தூதரை அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை'ன்னு ஜெயலலிதா பதில் அனுப்புச்சு. ஜெயலலிதாவா... கொக்கா?

இவங்க அரசியலால, தன் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுருமோன்னு பயந்து போன நாகப்பா மனைவி பரிமளா, மகள், மகன், மருமகன் எல்லாரும் மறுபடியும் சென் னைக்கு வந்து ஜெயலலிதாவைச் சந்திச்சு உதவி செய்யுங்கன்னு உருக்கத்தோடு கேட்டாங்க.

அந்த சமயத்துல கர்நாடக அதிகாரி களோட மறுபடியும் வந்து ஜெயலலிதாவ சந்திச்சாரு கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே. தொடர்ந்து தூதரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி நாகப்பாவை உயிருடன் மீட்பதற்கான முயற்சியில தாங்கள் ஈடுபட்டு எப்படியாவது எங்க நாகப்பாகாருவ காப்பாத்துங்க... காப்பாத்துங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுனாங்க. மனுசங்கன்னா இரங்குவாங்க... இதுதான் ஜெயலலிதா தி கிரேட் ஆச்சே...!

Advertisment

ff

மல்லிகார்ஜுன கார்கே என்ன நெனச்சாருன்னா...

முன்னாள் முதல்வர் கலைஞர் மாதிரி, ராஜ்குமார் கடத்தல் விஷயத்துல ரொட்டீன் வேலைகள மட்டும் செஞ்சுட்டு, முழுநேரமும் ராஜ்குமார காப்பாத்தணும், கர்நாடகாவுல இருக்கிற நம்ம சொந்தங்கள காப்பாத்தணும்... ஒரு சின்ன கீறல் கூட விழுந்துறக்கூடாதுன்னு தூது போன எங்க மேலயும் அக்கறை காட்டி, கர்நாடகா அமைச்சர்கள், அதி காரிகளுக்கு என்ன கௌரவம் கொடுக்கணுமோ கொடுத்து, ஒண்ணுக்கு 10 தடவ உக்காந்து பேசி... அவங்க இங்க வந்தாங்க. கலைஞர் அங்க போய் ஆறுதல் சொன் னாரு. இது மனிதாபிமானம்.... மனுசனா இருக்கிறவங்க செய்றது.

ராஜ்குமார் கடத்தல் நடந்தப்ப தூதுப் பயணம் தொடர்ந்துக்கிட்டிருந்தது. காட்டுல இருந்து திரும்பி வந்து, ஒருநாள் இரவு 7:00 மணி இருக்கும்... ஆழ்வார் பேட்டை வீட்டுல அண்ணன் கலைஞர சந்திச்சோம். அப்போ, வீரப்பன் விவகாரத்தைக் கையாளும்போது ஒரு உயிர்கூட போயிறக்கூடாதுங்கிறதுல, அத்தனை கவனமாகவும் உறுதியாகவும் இருந்தாரு கலைஞர். கலைஞ ரோட நடந்த அந்த நெகிழ்வான சந்திப்புல.. அப்போ நக்கீரன்ல இருந்த தம்பி காமராஜும் நம்மோட கூட இருந்தாரு. (தற்போது தம்பி காமராஜ் பணியில் இல்லை) அந்த நேரத்துல கலைஞர் எங்ககிட்ட, "என்ன செய்வீங் களோ கோபால், என்னோட வாழ்க்கையில, என்னோட சரித்திரத்துல, இந்த வீரப்பன் விவகாரத்துல ஒருத்தர்கூட செத்ததா வந்துறக்கூடாது...''ன்னு நா தழுதழுக்கச் சொன் னப்ப... "முதலமைச்சர்'ங்கிற உயர்ந்த நிலையில இருந்து இறங்கி வந்து, தனது உடல்மொழிய அவர் வெளிப் படுத்துன விதத்த கண்டு, நாங்க பதறிப் போனோம். ‘

"என்னண்ணே நீங்க வந்து.... என் தலைய அட மானம் வச்சாவது உங்க நம்பிக்கைய காப்பாத்து வேன்''னு அவருக்கு உறுதியளிச்சேன். இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கைல, கலைஞருக்குள்ள ரத்தமும் சதையுமா ஊறிப்போயிருந்த மனிதாபிமானம் மெல்லக் கசிஞ்சது... எங்கள சிலிர்க்க வச்சது. நான் உசுரோட இருக்கிறவரைக்கும், அந்தக் காட்சி என் மனத்திரைய விட்டு அகலவே அகலாது. கலைஞர் எப்பேர்ப்பட்ட தலைவருங்கிறத, நான் முழுசா உணர்ந்த அந்தத் தருணம் அற்புதமானது.

அதுவும் முதலமைச்சர் பொறுப்புல இருக் கிறதுனால எல்லாருக்கும் அவருதான முதலமைச் சர்... அந்தப் பக்குவம் கலைஞர்ட்ட மட்டும்தான் இருந்தது. அதனாலதான் அவர, 'ஏழ்ங்ஹற் ஙஹய்'னு ராஜ்குமார் மீட்பு விஷயத்துல கிருஷ்ணா பாராட்டுனது. அப்ப நானும் கூட இருந்தேன்.

இங்கதான் ஒரு மண்ணும் கிடையாதே... மனிதாபிமானமா? கிலோ என்ன விலைன்னு கேக்குற புண்ணியவதி கீழதான அப்போ தமிழ்நாடு இருந்துச்சு. அப்ப பாருங்க... எல்லாரையும் கால்ல விழவச்சு... விழவச்சு சந்தோஷப்பட்டுச்சு. கடைசியில என்னாச்சு... அந்தம்மாவுக்குத் தெரியாமலே அவங்க ரெண்டு காலையும் எடுத்த பிறகுதான் உயிர் போயிருக்கு. இத சாபமா சொல்லல.... இப்படி ரெண்டு காலயும் எடுத்ததுக்கு ஒரு பயலும் பதில் சொல்லமாட்டேங்கிறானே.... அப்ப, யாரோ ஜெயலலிதான்னுதான விட்டுட் டாய்ங்க. அந்த மனுஷி 3 தடவ முதலமைச்சரா இருந்து நம்மள ஆண்டவங்களாச்சேங்கிற நெனப்பும் எவன்ட்டயும் இல்ல. சரி... நம்மள உசுரோட சட்னி ஆக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்ச ஜெயலலிதாதானே... எக்கேடும் கெட்டுப் போகட்டும்னு விட்டுட்டும் போக மனசு வரமாட்டேங்குது நமக்கு... இருக்கட்டும், இருக்கட்டும்!

ff

இந்த நிலையிலதான்...

8-12-2002 அன்னிக்கு நான் பாண்டிச்சேரியில இருந்து ஈ.சி.ஆர். ரோடு வழியா மகாபலிபுரம் நோக்கி வந்துக்கிட்டிருந்தேன். சாயங்காலம் 4:30 மணி இருக்கும். ரோட்டோரமா இருக்கிற கடைகள்ல ஸ்டால் போஸ்டர் தொங்குதான்னு பாத்துக்கிட்டே வருவேன். வழக்கமா செவ்வாய், வெள்ளின்னா நக்கீரன் கடைகளுக்கு வரும். நான் கார்ல வரும்போது ரெண்டு பக்கத்துலயும் உள்ள கடைகள பாத்துக்கிட்டே வந்துக்கிட்டிருப்பேன். அப்போ கடைகள்ல நம்ம நக்கீரன் போஸ்டர் தொங்குதான்னு பாப்பேன். அப்படி தொங்குதுன்னா நக்கீரன் சரியான நேரத்துக்கு விற்பனைக்குப் போயிட்டு இருக்குன்னு அர்த்தம். ஒருசில கடைகள்ல இல்லன்னு வச்சுக்குங்களேன்... டக்னு அது எந்த கடை, எந்த ஏரியான்னு நோட்பண்ணி, உடனே ஆபீஸுக்குப் போன் பண்ணி, எங்க ஜி.எம். சுரேஷ், சர்க்குலேஷன் மேனேஜர் மலைக்கண்ணன், உதவியாளர் லாரன்ஸ், பார்த்தி எல்லாரையும் லைன்ல புடிச்சு... "தம்பி இந்த ஏரியாவுல உள்ள கடையில போஸ்டர் இல்ல, என்னான்னு பாருங்க''ன்னு அவங்களுக்குத் தகவலச் சொல்லுவேன். ஏன்னா, பத்திரிகை வெளியான நாள்ல கண்டிப்பா போஸ்டர் இருக்கணும். அப்ப தான் இந்தப் பத்திரிகை உசுரோட இருக்குன்னு நெனப் பாங்க. இல்லன்னா... முடிஞ்சது கதன்னு கண்டுக்காம விட்ரு வாய்ங்க.

சாயங்காலமானா மாலை மலர், மாலை முரசு, தமிழ் முரசு, வீணாப் போன மக்கள் குரல்.... இந்த பேப் பர்கள்லாம் வரிசையா கடைகள்ல போட்டு ருப்பாங்க. அப்போ பளிச்னு மாலை மலர் பேப்பர் என் கண்ணுல பட்டுச்சு. அதுல அதிரடியா ஒரு செய்தி போட்டுருந் தாங்க. அதப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம்தான்... நாகப்பா விடுதலை!

சூப்பர்... உண் மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் அது. நாகப்பாவோட மனைவி குடும்பத் தோட எவ்வளவோ மன்றாடி ஜெயலிதாவ தேடி வந்தாங்க. கர்நாடகாவுல உள்ள அமைச்சருங்க, அதிகாரிங்க எல்லாரும் வந்தாங்க. வந்து ஜெய லலிதாட்ட கால்ல விழாத குறையா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சியும்கூட... "தூது என்கிற பேச்சுக்கே இடமில்லை'...ன்னுட் டாங்க.

தூதுங்கிற வார்த் தையை சொன்னதே கலைஞர்தான். கலைஞர் தமிழ்நாட்டுல எதச் செஞ்சாலுமே அந்தம்மாவுக்கு எட்டிக்காய்தான். அதுவும் தூதுன்னு சொன்னாலே அந்தம்மாவுக்கு அறவே புடிக்காது. ஏன்னா... வீரப்பனுக்கு தூதா? அந்தம்மா அந்த வார்த்தைய அசிங்கமா நெனைக்குது. தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்த... அண்ணன் விஜயகாந்த் ஒரு படத்துல சொல்ற மாதிரி, அந்தம்மாவுக்கு புடிக்காத வார்த்தை தூது. அப்போ நடந்த மீட்டிங்லயே அந்தம்மா, "இத மட்டும் ஞாபகம் வச்சிக்கிங்க... தூது மட்டும் நான் அனுப்பமாட்டேன்''னு அடிச்சி சொல்லிட்டு படக்குன்னு எந்திரிச்சுப் போயிருச்சு.

நாகப்பா மனைவிய பாக்கவே பாவமா இருக்கும். அவங்க ஜெயலலிதாவ பாத்துட்டுப் போகணும்னு வந்திருந்தாங்க. போன இதழ்ல நாம இதச் சொல்லியிருந்தோம். இந்த இதழ்லயும் அந்தப் படத்த வெளியிடுறோம். அதப் பாருங்க... ஜெயலலிதா முகத்துல வருத்தமே இருக்காது. ஆனா... அதேநேரம் நாகப்பா மனைவியோட முகத்த பாருங்க... அவங்க முகத்த பார்த்தாலே இரங்காத பேயும் இரங்கும்பாங்க. ஆனா பேயை விட உச்சத்துல இருக்குற ஜெயலலிதா எப்படி இரங்கும்?

"நாகப்பா விடுதலை'ங்கிற தலைப்ப பார்த்ததுமே, பரவால்ல... அந்தம்மா பட்ட கஷ்டம் வீணாகல... நான் சொன்னது நாகப்பா மனைவிய. நாகப்பா உசுரோட வந்துட்டாருன்னு நெனைச்சு நான் சந்தோஷப்பட்டேன். உடனே தம்பி ஓசூர் ஜெயப்பிரகாஷுக்கு போன்பண்ணி, "தம்பி நல்ல செய்திய சாயந்திரம் மாலை மலர்ல பாத்தேன். ரொம்ப நல்ல விஷயம். நாம போகாட் டாலும் நல்லது நடந்திருக்கு. நாகப்பா விடுதலைன்னு செய்தி வந்தி ருக்கு... அதப் பத்தி விசா ரிங்கன்னு சொன்னேன்.

இன்னொரு பக்கம் மத்த தம்பிகளுக்கும் போன்பண்ணி, "நாகப்பா விடுதலையப் பத்தி நல்லா டீடெய்லா செய்தி கலெக்ட் பண்ணுங்க''ன்னு சொன்னேன்.

8-12-2002 "மாலை மலர்' பேப்பர்ல தமிழக அதிரடிப்படை தாக்குதல்! நாகப்பா விடுதலை!

வீரப்பன் தப்பி ஓட்டம்! எட்டுக்காலம் செய்தியா போட்டு இன்ரோ.

"தமிழக போலீஸ் நடத்திய அதிரடித் தாக்குதலில் நாகப்பாவை விட்டுவிட்டு, வீரப்பன் தப்பி ஓடிவிட்டான். நாகப்பா விடுதலையானதாக தெரிய வந்துள்ளது' அப்படின்னு போட்டிருந் தாங்க.

நாகப்பா விடுதலை நமக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். நான் உள்ளூர எங்க ஆபத்துல போய் முடிஞ்சுருமோன்னு பயந்துக் கிட்டேதான் இருந்தேன்.

ஏன்னா வீரப்பனும் பிடிவாதக்காரரு. ஜெயலலிதாவும் யாரா இருந்தாலும் பிடிவாதத் தால ஆட்டிப்படைச்ச ஒரு பொம்பள. அந்தம்மா நாகப்பா விஷயத்துல இவ்வளவு பிடிவாதமா இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. எப்படியாவது நாகப்பாவ காப்பாத்திறணும்னு நமக்கும் ஒரு நப்பாசை இருக்கும்ல. ஆனா... கிட்டத்தட்ட 100 நாளுக்கு மேல ஆயிருச்சு. கடத்துனது 8-வது மாசம், 12-வது மாசம் வர்ற வரைக்கும் அது இழுபறியாவே போயிட்டிருந்தது. ஒருவழியா நாகப்பா விடுதலைன்னதும் நமக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

ஆனா...

(புழுதி பறக்கும்)