(58) காடும் நாடும்!
ராஜ்குமார கடத்துன உடனே, தூதரா காட்டுக்கு நான் போகமாட்டேன்னு முதல்ல மறுத்துட்டேன்னு முன்னமே சொல்லிருக்கேன்.
நீங்க போகலன்னா... கர்நாடகாவுல ஒரு லட்சம் பேருக்குமேல வாழுற தமிழர்கள கொன்னு போட்டுருவாங்கன்னு தகவல் வர... (இதையும் போன அத்தியாயத்துல சொல்லியிருக்கேன்) அந்த மக்களுக்கு எந்த ஆபத்தும் வந்துறக்கூடாதுன்னு மறுபடியும் போறோம்.
போய்ப் பாத்துட்டு வந்து "உசுரோட இருக்காரு'ங்கிற விஷயத்த சொன்னோம்.
அந்த சமயம் நடந்த ஒரு விஷயம்... போன உடனே நானு, ராஜ்குமார் சார், அவரோட சேர்த்து கடத்தப்பட்ட நாலு பேரும் சேர்ந்து இருக்கிற படத்த படக்குனு எடுத்து தம்பி சுப்புகிட்ட கொடுத்து அவர அனுப்பி வச்சோம். சுப்புவும் அவருக்குத் துணையா பாலமுருகனும் சென்னைக்கு வந்து அப்ப இணையாசிரியரா இருந்த தம்பி காமராஜையும் கூப்பிட்டுக்கிட்டு... அங்கயிருந்து நேரா கலைஞர்ட்ட கொண்டுபோய் குடுத்துருக்காங்க.
ரெண்டு, மூணு நாளா வீரப்பன சந்திச்சி பேச்சுவார்த்தையெல்லாம் முடிச்சிட்டு, காடு கடந்து வெளிய வந்தவுடன, கலைஞருக்கு போன் பண்ணுனேன்.
அப்ப, நானும் கலைஞரும் பேசுறதுக்கு ஒரு போன் குடுத்திருந்தாங்க. அந்த போன்ல, அந்த கானகத்த விட்டு வெளிய வந்தவுடனே... கார்ல வச்சுதான் கலைஞர்ட்ட பேசுனேன்.
"அண்ணே வெற்றி! ராஜ்குமார் சார பாத்துட்டேண்ணே. உடல்நலத்தோட நல்ல சுகமா இருக்காருண்ணே...''ன்னு கலைஞர்ட்ட சொன்னேன்.
அடுத்து...
கலைஞர், எங்கிட்ட கேட்ட முதல் கேள்வி...
"கோபால், ஒரு சந்தேகம்...''னாரு.
"என்னண்ணே சந்தேகம்?''ன்னேன்.
"ராஜ்குமார வீரப்பன்தான் கடத்துனாரா?''ன்னாரு.
அப்படிப் போடு...
"ஏண்ணே இப்படி ஒரு சந்தேகம்...?''ன்னு கேட்டேன்.
"நீங்க அனுப்புன போட்டோவுல... நீங்க, ராஜ்குமார் அவரோட சேர்ந்தவங்க மட்டும்தான இருக்கீங்க... வீரப்பரைக் காணோமே?ன்னாரு.''
"அண்ணே... நான் போய் ராஜ்குமார் சார தேடி அலைஞ்சு ஒரு வழியா பார்த்துட்டேண்ணே. அவர் உயிரோடதான் இருக்காருங்கிறத பார்த்த பெறகுதான் எனக்கு நிம்மதியாச்சு. உடனே அத தெரியப்படுத்தணுமேங்கிற ஆர்வத்துல, அரக்கப் பரக்க எடுத்து அந்த போட்டோவ உங்களுக்கு அனுப்பி வச்சேண்ணே. வீரப்பன்தான் அவர கடத்தியிருக்காரு. நான் போய் சேர்ந்தவுடன வீரப்பன எப்படியாவது பார்த்துறணும்னு முயற்சி பண்ணுனேன்... முடியாமப் போச்சு. அடுத்த நாளுதான் பார்க்க முடிஞ்சதுண்ணே''ங்கிற விஷயத்தையும் கலைஞர்ட்ட சொன்னேன்.
"சரி... கோபால் வாங்க, நேரில் பேசலாம்''னு போன வச்சுட்டாங்க.
இது எல்லாமே தெரிஞ்ச பெறகும்... இந்தம்மாவும் சரி, கர்நாடகா ஸ்டேட்ட சேர்ந்த வங்களும் சரி... ஏன் நாக்கத் தொங்கப்போட்டுக் கிட்டு இருந்தாங்கன்னா... நான் உயிரோட வந்துருக்க மாட்டேன்னு நெனைச்சுத்தான்.
ஏன்னா இது மொரட்டுக் கடத்தல். இந்தக் கடத்தல்ல மீட்பு விஷயமா நக்கீரன் கோபால் காட்டுக்குப் போனா உசுரோட திரும்ப வரமாட்டான்னு நெனைச்சாய்ங்க. வீரப்பன் மேல எனக்கு நம்பிக்கை இருந்துச்சு... இவங்க மேலதான் நம்பிக்கை இல்ல. இவங்களே ஆளு வச்சு நம்மள போட்டிருப்பாய்ங்க.... அதான் விஷயம்.
எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு சொல்றது மாதிரி, அந்தம்மா அறிக்கையிலயே சொல்லுது பாருங்க...
"பின்னாடியே போய் அதிரடிப்படை சாதிச்சிருக்க வேண்டும்...'
யோசிச்சிப் பாருங்க. ஒரு பொம்பள... நான் ஏன் பொம்பளன்னு சொல்றேன்னா... என்னைய அவன்னு சொல்றவங்கள நான் பொம்பளனு சொல்லாம, வேற என்ன சொல்றது?
"அதிரடிப்படையை அனுப்பி நீங்க சாதிச் சிருக்கணும்'னா... என்னை கொன்னுருக்கணும்னு தான் திரும்பத்... திரும்ப சொல்லாம சொல்லுது.
நான் போய் அவங்கள கெஞ்சி, கூத்தாடி... ராஜ்குமார் உசுரோட இருக்காரா, இல்லையாங் கிறத தெரிஞ்சிக்கிறதுக்கு பட்டபாடு இருக்கே?
77 வயசுக்கு மேல உள்ள ஒருத்தரு, அவரு படுத்த படுக்கையா இருக்காரா, சீக்காயி காய்ச்சல்ல கெடக்குறாரா, என்ன... ஏது..., இப்ப அவரு நடக்குறாரா? இல்ல, கூட இருக்குறவய்ங்க தூக்கிட்டுப் போறாய்ங்களா... எதுவுமே புரியல. ஏன்னா காடு... அந்த இடம் அவருக்கு ரொம்பவே புதுசு. இப்படியெல்லாம் நெனைச்சி நான் படாதபாடு பட்டுட்டேன்.
ஒருவழியா அவர பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதி. என்னப் பார்த்தவுடனே... அப்படி வெள்ளை யும் சொள்ளையுமா பளார்னு அவரு எந்திரிச்சி நின்னாரு பாருங்க... அந்த தருணம்ங்கிறது வாழ்க்கை யில மறக்க முடியாத தருணம். யாராவது இத்தன வருஷம் கழிச்சும் ஒங்களால மறக்க முடியாத காட்சி எதுன்னு என்கிட்ட கேட்டா... முதல் முறையா நான் வீரப்பன பார்த்தது, ரெண்டாவது ராஜ் குமார் சார, வெள்ளையும் சொள்ளையுமா பளார்னு பார்த்ததுன்னு சொல்லுவேன். இன்னிக்கு வரைக்கும் அந்தக் காட்சி கண்ணுலயே நிக்குது.
நாம இப்படி சக்சஸா வருவோம்னு அந்தம்மா எதிர்பார்க்கல.
அதனாலதான் ஜெயலலிதா அறிக்கையில சொல்லுது... ராஜ்குமார கடத்துன 16-வது நாள்ல நம்மள கொல்லணும்னு. அதுக்காக நாளையும் குறிச்சது.
16-வது நாளுன்னா என்ன பண்ணுவாய்ங்க? இறந்து போனவய்ங்களுக்கு கருமாதி பண்றதுதான் பதினாறாவது நாள். இப்ப புரியுதா ஒங்களுக்கு...?
இது எதுல வந்து ஜாயின்ட் ஆகுதுன்னா முன்னாள் மந்திரி நாகப்பா கடத்தல் விஷயம் இருக்குதுல்ல... அதோடதான் இது ஜாயின்ட் ஆகும் (அத நான் இன்னொரு எபிசோடுல சீக்கிரமா சொல்றேன்).
அந்தம்மா சொல்ற மாதிரி.... ராஜ்குமார் கடத்தல் -அந்தம்மாவோட அறிக்கை!
-இதுக்குள்ள நான் வந்ததுக்கு காரணமே அதான். அத கட்டாயம் உங்களுக்கு நான் சொல்றேன்.
எஸ்.டி.எப். ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்குது...
இப்ப.... அவங்க பணிகள் ஆற்றுன லட்சணத்த வரிசைப்படுத்துறேன்...
இத நீங்க படிக்கும்போது உங்களுக்கு நெஞ்செல்லாம் அடைச்சிக்கும். இப்படியெல்லாமா நடந்திருக்கும்னு பதறிப்போயிருவோம்.... அந்த அளவுக்கு அநியாய கொடுமைங்களும், கொடூரங்களும், சித்ரவதைகளும்.... ஐயோ... நெனைச்சுச்கூட பார்க்க முடியல.
வெத்தலக்கார தங்கம்மா:
"வீரப்பன் தேடுதல் வேட்டை'ங்கிற பேர்ல பாதிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, உயிர்பொழைச்சு குத்துயிரும் கொலை உயிருமா இருந்த தங்கம்மா... நக்கீரனும் கலைஞரும் பண்ணுன புண்ணியத்தால உயிர் பொழைச்சி தப்பிச்சி வந்திருக்காங்க.
நெறைய பேரு நெனைக்கலாம்.... ஏன் நக்கீரன் மட்டும் வீரப்பனையே புடுச்சு தொங்குறாங்கன்னு. வீரப்பன சந்திச்சி படம், வீடியோல்லாம் எடுத்துட்டு வந்தத மட்டுமில்ல...
இந்த மாதிரியான எழவெடுத்த பிரச்சினைகள, வீரப்பன தேடுறோம்னு சொல்லி அந்த எஸ்.டி.எப். காரங்க (அதுல இருக்கிற ஒரு சில நல்லவங்களத் தவிர) பண்ணுன அட்டூழியம் இருக்குது பாருங்க அந்த நாசகாரத்தனத்த... தொடர்ச்சியா என்னாலயே சொல்ல முடியல. அந்தம்மாவே சொல்றாங்க என்ன நடந்ததுன்னு... கேளுங்க.
இப்ப வெத்தலக்கார தங்கம்மா பேசுது...
"என் ஊரு மேச்சேரி. தொண்ணூத்தி மூணுல கொளத்தூர் பஸ் ஸ்டாண்டுல வெத்தல வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்ப வீரப்பன் பெரியதண்டால இருந்தாராம். நாங்க அவரப் பாத்தது கூட இல்ல.
அப்ப மோகன் நிவாஸ் இன்ஸ்பெக்டர் பவுனு கலர்ல ஒரு பஸ்சுல வந்து, வயசான மூணு பேரு மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தவங்களப் பிடிச்சுத் தூக்கிப் போட்டாங்க. அவங்களோட என்னையும் தூக்கி வண்டில போட்டுக் கொண்டு போனாங்க. மேட்டூரு கூப்பிட்டுப் போயி பன்னெண்டு மணிக்குள்ள விட்டுறோம். நீ திரும்பி வந்துருவ, அப்டின்னு சொல்லித்தான் கூப்பிட்டுப் போனாரு. எனக்குப் பயமாகிப் போச்சு.
பஸ்சு நெறையப் போலீசா இருந் தாங்க. வேற எந்த ஆளுகளும் கிடையாது. போடியா கிழவன், வயசான கிழவனுக ரெண்டு பேரு. மேட்டூர் ஸ்கூல்லதான். மே மாசம் லீவு. அதான் முகாம்.
இங்க பாரு, எட்டாயிரம் அதிரடிப் போலீஸ் இருக்கறோம். எட்டாயிரம் பேருக்கும் இவ தாங்குவா... ஒடம்பப் பாருன்னு சொல்லிக்கிட்டே அந்த மோகன் நிவாஸ் எட்டி என் வாயிலயே ஒதைச்சார் பாருங்க. என் வாயில உள்ள பல் எல்லாம் கத்திரிச்சுப் போயிருச்சு. ஒதடு கிழிஞ்சு ஒடஞ்சி போச்சு. தொற தொற தொறனு ரத்தம் ஊத்துச்சு. (சிதிலமடைந்த வாய் பகுதிகளைக் காண்பிக்கிறார்)
மேட்டூர்ல வச்சு மூணு மாசம் பயங்கரமான கொடுமைகள்... விடவுமில்ல. ஒண்ணுமில்ல. பாத்ரூம் போக விடமாட்டாங்க. பிளாஸ்டிக் கவரு இல்லைனா, கஞ்சி கொண்டு வந்து சுடச் சுடக் கையிலயே ஊத்துவாங்க. அதையும் வாங்கிக் குடிக்கணும். செங்கல், கட்டைகள கொண்டு வந்து தரைல போட்டு அதுல முட்டி போட வச்சு அடிப்பாங்க.
மோகன் நிவாஸ் இன்ஸ்பெக்டரும் தேவாரமும்தான் இந்தக் கொடுமைகளை செய்வாங்க. ரெண்டு பேரும் என்னை ரொம்பக் கொடுமை செஞ்சாங்க.
மேட்டூர் ஐ.பி.ல என்னை பத்து நாள் வச்சி ஒடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம அஞ்சு நாலு கவுந்தே உக்காந் திருந்தேன். துணியப் பூராப் புடுங்கி மேலே எறிஞ்சிட் டாங்க. பயங்கரக் கொடும பண்ணுவாங்க. மேலெல்லாம் சிகரெட்டால சூடு வைப்பாங்க. தொடை கிடைனு எல்லா எடத்துலயும் சூடு வைப்பாங்க. என் ரெண்டு கால்களை யும் ஒடைச்சி மதுரைக்கு கொண்டு போய்ட்டாங்க. பாதி ஜனங்கள இராமநாதபுரத்துக்கும், அவங்களுக்கு தேவைப் படுறவங்கள திருநெல்வேலி செவந்திபட்டி கஸ்டடிக்கும் கூட்டிட்டுப் போயிட்டாங்க. எனக்கு நடக்க முடியல. தரையில தவந்தே பாத்ரூம் போகணும். என்னோட இருந்த ரெண்டு பேரு என்னத் தூக்கிட்டுப்போயி வேலிச்சந்துல விட்டாங்கன்னாதான் ஆயி இருக்க முடியும்.
மறுபடி கோயமுத்தூர் ஜெயில்ல கொண்டு வச்சாங்க. பத்து நாள் சோறு எதுவும் சாப்பிடல. சட்டி பானைல என்னைச் சுத்தி பத்துப்பேரு ஆயி இருப்பாங்க. குமட்டிக் கிட்டே இருக்கும். பச்சத்தண்ணியக் குடிச்சுக்கிட்டே கெடந்தேன். முட்டிக்குக் கீழே கால் சீழ் பிடிச்சுப் போச்சு. இடுப்பெல்லாம் வீங்கிப் போச்சு. சூடு வைக்கிறது... பெரிய தொன்னைக் கட்டையால கால் பாதத்துலயே அடிப்பாங்க.
"வீரப்பன் படையாச்சி, நீயும் படையாச்சி கொன்னுடு வேன்... வீரப்பனைப் பத்தி சொல்லு சொல்லு'ன்னு அடிப்பாங்க. ஈரோடு. மெட்ராஸ்னு கூட்டிட்டுப்போய் கடைசில தடா சட்டத்துல ஜெயில்ல போட்டாங்க. மூணு வருஷம் ஜெயில்ல இருந்தேன். சொந்த பந்தம் யாரும் பயந்துக்கிட்டு பாக்குறதுக்கு வரலை.
கேம்ப்ல ஒண்ணுக்குப் போகணும்னு சொன்னாக்கூட பாத்ரூம்ல தள்ளிக்கிட்டுப் போயி ரேப் பண்ணி வெளில கூட்டிட்டு வருவாங்க அதிரடிப்படை போலீசு. பாத்ரூம் போனாலே ரேப் பண்ணுவாங்க. அவங்களுக்குப் பயந்துக்கிட்டு பாத்ரூம் போகாம பிளாஸ்டிக் கவர்லயே போயி தூக்கிப் போட்டுடுவேன். வெத்தலைக் கடைதான் வச்சிருந்தேன். நல்லாத்தான் இருந்தேன். சுப்பனுக்குத் தெரியும். நக்கீரன் கோபாலுக்கும் தெரியும்.
புத்தகத்துல போட்டாங்க. இப்ப எந்த வேலையும் செய்ய முடியல. ஒடம்பே நாசமாப் போச்சு''ன்னு சொல்லி "ஓ'...ன்னு அழுகுது....
அடுத்து.... சின்னபொண்ணு சொல்றத என்னால கேக்கவே முடியல...
(புழுதி பறக்கும்)