(57) அதிரடிப்படை அட்டூழியம்!
அதுக்கு முன்னாடி இன்னொரு பாயிண்ட் டும் ஜெயலலிதா சொல்லியிருக்கு. அது...
"சன் டி.வி.யில் மிகப்பெரிய பங்குதாரர் -கடத்தல்காரர் வீரப்பன்தான் என்று கண்டுபிடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை'
"கேட்டியாடி கதைய... சன் டி.வி.க்கு வீரப்பன்தான் பணம் கொடுத்தாராம்ல. "கேப்பையில நெய் வடியுதுன்னா கேப்பாருக்கு எங்க புத்தி போச்சும்பாய்ங்க'. அது மாதிரியில்ல இருக்கு இந்த ஆத்தா சொல்றது' அப்படின்னு எங்க கிராமத்து பொம்பளைங்க கொலவு அடிச்சு சொல்றக் கதையால்ல போச்சு, அடக் கெரகமே...
இதக் கேட்டிருந்தா... கொன்டேபுடுவாரு நம்ம புகழ். கலாநிதிமாறன் அண்ணனத்தான் நாங்க புகழ்னு சொல்லுவோம். ஆரம்பத்துல புகழ்னுதான் எல்லாரும் அவர கூப்பிடுவாங்க... அதனாலதான் நானும் புகழ்னு சொல்றேன்.
"இதற்கெல்லாம் ஏஜெண்ட்
நக்கீரன் கோபால்'
-இதுவும் அந்தம்மா அறிக்கைதான்.
அய்யய்யய்யோ... முடியலப்பா...
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துல அண்ணன் பசுபதி, "யப்பா... முடியலடா யப்பா... இவன் பேச்சக் கேட்டு சுகர் ஏறிப் போச்சுடா"ம்பாருல்ல... அது மாதிரி இந்தம்மா சுகர் ஏறிப்போயி அறிக்கை விட்டுருக்குமா... கிறுக்கு எதாவது புடிச்சிருச்சா... என்னத்தயெல்லாம் உளறுதுன்னு பாருங்க....
90-கள்ல "பூமாலை'ங்கிற ஒரு வீடியோ பத்திரிகைய முதன்முதலா ஆரம்பிச்சி, அத வெற்றிகரமா கொண்டுவந்தாரு அண்ணன் புகழ். அவருக்கு அன்பும் (தயாநிதிய அன்புன்னு சொல்லு வோம்) அவரோட கூட இருந்த நண்பர்களும் உறுதுணையாக இருந்தாங்க. அதுக்காக புகழும், அன்பும் ரொம்பவே சிரத்தை எடுத்து மெனக் கெட்டிருந்தாங்க. இதையெல்லாம் கண்கூடா பார்த்தவன் நான். இன்னிக்கு உலகமே வியந்து பார்க்குற அளவுக்கு மிகப்பெரிய புகழ டி.வி. மீடியாவுல அடைஞ்சிருக்காரு புகழ். வேற யாருக்குமே அப்படி ஒரு யோசனை தோணாத நேரத்துல, இந்த யுக்திய முதல் முதல்ல கையில எடுத்து, தமிழுக்காக "சன் தொலைக்காட்சி'ன்னு ஒரு சேனல் ஆரம்பிச்சி, தமிழ் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவரு. பல மாநில மொழிகள்லயும் அவரோட "சன் நெட்வார்க்' மூலமா பெரிய வரவேற்பையும் வெற்றியையும் அடைஞ்சிருக்காருன்னா... அது எவ்வளவு பெரிய வளர்ச்சி. இந்தியாவே திரும்பிப் பாக்குற அளவுக்கு ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்காங்க.
கோழி முட்டய அடகாத்த மாதிரிம்பாய்ங் கல்ல அதுமாதிரி... இதுக்காக அவங்க ராத்திரி, பகல் பார்க்காம கடுமையா வேர்வை சிந்தி உழைச் சிருக்காங்க. அவங்க அப்பா மத்திய அமைச்சரா இருந்தவரு. அவங்க தாத்தா (கலைஞர்) தமிழக முதல்வரா இருந்தாரு. மாமா தளபதி ஸ்டாலின் சென்னை மேயரா இருந்தாரு. அவங்களோட ஆலோசனைகளும் இவங்களோட வெற்றிக்கு ஒரு காரணம்னு சொல்லலாம்.
மீடியா உலகத்துல சுயம்புவா அவங்க ஜெயிச்சி வந்திருக்காங்க. ஆனா... எழவெடுத்த இந்த பொம்பள எதக் கொண்டு எதுக்கு முடிச்சு போடுது பாருங்க...?
"சன் டி.வி.யின் மிகப்பெரிய பங்குதாரர் கடத்தல்காரன் வீரப்பன் -ஏஜெண்ட் நக்கீரன் கோபால்' -இப்படி அறிக்கையில சொல்லுது ஜெயலலிதா.
"இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது'ன்னு காமெடியா சொல்லுவாய்ங்க. அந்த மாதிரி இந்தம்மா வாய்க்கு வந்ததயெல்லாம் அறிக்கைங்கிற பேர்ல வெளியிட்டிருக்கு.
இப்போ அந்த விஷயத்துக்கு வாரேன்... …
"ஆற்ற வேண்டிய பணிகளை செயல்பட விடாமல் தடுக் கப்பட்டிருப்பதும்... அவர்கள் (அதிரடிப்படை) ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றவிடாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதும்...'
என்ன எழவ முடக்கு னோம்... கலைஞர் எத முடக்கு னாரு? எதுக்கு முடக்குனாரு?
இந்தம்மா ஏன் இத்தன முக்கு முக்குனு முக்குது தெரியுமா...?
ஒவ்வொரு முறையும் காட்டுக்கு தூது போகும்போது நான்தான் அண்ணன் கலைஞர்ட்ட, வீரப்பன் காட்டுல இருக்கிற எஸ்.டி.எப். (அதிரடிப்படை) கேம்ப் எல் லாத்தையும் பூட்டி, சாவி உங்க டேபிளுக்கு வரணும்ண்ணே'' அப்படின்னு கலைஞர்ட்ட கோரிக்கையா வச்சேன். ஏன் அந்தக் கோரிக்கைய வச்சேன் தெரியுமா? எப்படா நக்கீரன் கோவாலு காட்டுக்குப் போவான், அவன் சூ... க்குப் பின்னாடியே போய் கதைய முடிச்சுறலாம்னு நெனைச்சவய்ங்க எண்ணத்துல மண்ணப் போட்டுட்டோம். ஜெயலலிதாவோட ஆசையும் அதுதான்.
அதவிட 9 பேர காப் பாத்த நாங்க போகுறதுக்கு முன் னாடியே காடுபூரா அதிரடிப் போலீஸ் மஃப்டியில போய் அங்கங்க மலைவாழ் ஜனங்க ளோட மிங்கிள் ஆகியிருந்தத போட்டோ எடுத்து வந்து கொடுத்தாரு தம்பி சுப்பு. அவருக்குத்தான் வீரப்பன் காடு எல்லாம் அத்துப்படி.
அந்த ஆதாரங்கள அப்ப டியே கலைஞர்ட்ட காமிச்சேன்.
அதப்பார்த்து கோபப்பட்ட கலைஞர், உடனே ஆர்டர் போட்டாரு.
தூதுப் பயணம் முடியுற வரை எஸ்.டி.எப். கேம்ப் எல் லாத்தையும் மூடிட்டு இருக்குற அதிரப்படை போலீஸ் (ரெண்டு மாநிலத்தையும் சேர்த்துதான்) எல்லாரும் வெளியே வந்துறணும்னு ஆர்டர் போட் டாரு. கர்நாடக அரசும் கலைஞர் பேச்சைக் கேட்டது.
இது இந்தம்மாவோட கழிசட திட்டத்துக்கு கிடைச்ச பெரிய அடி.
இப்ப புரியுதா...? ஏன் அந்தம்மா எஸ்.டி.எப்.புக்கு வக்காலத்து வாங்குதுன்னு?
அவங்க என்ன பணியாற்றுனாங்க...? எப்ப டிப்பட்ட பணி(?!) ஆற்றுனாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்படியா நக்கீரன் கொஞ்சம் விளக்கமா சொல்லணும்ல...! இந்த அறிக்கைய இவ்வளவு நாள் நான் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்னா... அதுக்கான விளக்கத்த சொல்றதுக்கு இப்பதான் சரியான நேரம் கெடைச்சிருக்கு. அதுக்கான ஒண்ணு, ரெண்டு சாம்பிள இப்ப ஒங்களுக்கு சொல்றேன்...
"சித்ரவதை'. இந்தத் தலைப்புல நக்கீரன் பதிப்பகம் சார்பா ஒரு புத்தகத்த, புத்தகச் சந்தையில வெளியிட்டிருக்கோம்.
ரெண்டு மாநில எஸ்.டி.எப்.காரங்களும்... அம்மணி சொல்ற மாதிரி, அவங்க ஆற்றுன பணிகள... என்னென்ன மாதிரி பணியாற்றுனாங்க அப்படிங்கிறத நாங்க வரிசைப்படுத்தியிருக்கோம். அப்படி வரிசைப்படுத்துனதுல சில விஷயங்கள மட்டும் ஒங்களுக்காக சொல்றேன். ஏன்னா ஏரியா மாறிப் போயிறக்கூடாதுல்ல... ஆனாலும் இந்த சில்லறைகளச் சொல்லாமலும் போயிறக்கூடாது. சொன்னாத்தான் உண்மை என்னங்கிறது உங்களுக் கெல்லாம் விளங்கும். அத நான் சொன்னாத்தான், ஜெயலலிதா ஏன் அந்த கேவலமான அறிக்கைய குடுத்ததுங்கிறதுக்கான விவரமும் தெளிவா விளங்கும்.
ஒரு பொம்பள, என்னப் போல சாதாரண பத்திரிகைக்காரன தீர்த்துக்கட்டறதுக்காக எப்படியெல்லாம் சுத்தி வளைச்சு அடிச்சிது அப்படிங்கிறதுக்கான வரலாறுதான் இது.
வீரப்பன் -ராஜ்குமார் எபிசோடு ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 16 நாளைக்குள்ள... நாம காட்டுக்கு கல்லு, முள்ளுன்னு கரடுமுரடான பாதையில நடந்து... நடந்து களைச்சிப் போய், ராஜ்குமார உசுரோட வச்சிருக்காய்ங்களா இல்லியா? அப்படியே வச்சிருந்தாலும்... எங்க வச்சிருக்காய்ங்க, என்ன நெலமைல அவர வச்சிருக்காய்ங்க? இதுல ஒண்ணாவது தெரியுமா அந்தம்மாவுக்கு? ம்ஹும்...!
பத்து நாளா, அவருக்கு எதுவும் ஆயிறக்கூடாதுன்னு நானும் தம்பிகளும் காட்டுக்குத் தேடிப் போய்... செத்து சுண்ணாம்பாகி... நாங்க அலைஞ்ச அலைச்சல் இருக்கே.... அப்பப்பா...!
இதுல வெறும்பய ஒருத்தன் என் கையப் புடிச்சி அவன்தான் கூட்டிட்டுப் போனானாம். நானும் விரல சப்பிக்கிட்டு இவன் பின்னாடியே போனேனாம். அடேய் மூதேவி...! எனக்கென்ன... கை, காலு முடமாவாடா இருக்கேன்? இல்ல குருடா இருக்கனா...? என் கையப் புடிச்சி கூப்பிட்டுக்கிட்டுப் போறதுக்கு. நெஞ்சுல தில்லோட நாங்க நாலஞ்சு பேரு போறோம். அதுல தம்பி சுப்புங்கிறவர் அந்தக் காட்டுல ரொம்ப பரிச்சயம் ஆனவரு, பாலுவும் அதே மாதிரிதான். சரி விட்டுத் தள்ளுவோம்... கத வேற பக்கம் போயிறக்கூடாது.
காட்டுக்குப் போனப்ப நாங்க தங்கியிருந்த இடத்தப் பத்தி சொல்லியாகணும். அந்தமான் சிறைச்சாலைய விட மோசமான ஒரு இடம். அந்த எடத்துல இருந்த குடிசை ரொம்ப மோசமான நெலையில இருக்கும். அதுக்கான வாசலே நாலடிக் குள்ளதான் இருக்கும். உள்ளே போகணும்னா தலைய குனிஞ்சு ரொம்ப ஜாக்கிரதையா உள்ள போகணும். கவனிக்காம போயிட்டோம்னா... தலை பேந்துக்கும். மேல பாம்புராணி போய்க்கிட்டிருக் கும். கீழ ஒருபக்கம் பாம்பு ஊர்ந்து போன தடம். ஒரு பிஞ்சுபோன கயித்துக் கட்டிலு... அதுல ஒரு கால் ஒடைஞ்சி.... அதுக்குக் கீழ செங்கல்ல வச்சிருப் பாய்ங்க. அந்த ஆபத்தான கட்டிலுக்கு மேல நான் படுத்திருப்பேன். கீழ சொருகி, சொருகி தம்பிங்க இருப்பாய்ங்க. அந்த பொசகெட்ட நாயையும் சேத்துதான் சொல்றேன். எங்ககூட, எங்கள வெளிய இருந்து கூட்டிட்டு வந்த தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தோழர் இனியனும் இருந்தாரு. படத்துல அவரு மட்டும் முகமூடி போட்டுருப்பார்.
பாழாப் போன புளிச்ச கஞ்சிய எங்களுக்கு காலைல தருவாய்ங்க. அத சாப்புட்டு எனக்கு ஒத்த தலைவலி வேற. அதோட பெரிய சிரமம் என்னன்னா... ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போணும்னா... வெள்ளன நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சு அந்தப் பனியில காட்டுக்கு உள்ள போய், காலைக் கடன் எல்லாத்தையும் ஒரே ஒரு போத்தல்ல கொண்டுபோன தண்ணிய வச்சு கழுவியும் கழுவாமலும் பயந்துக்கிடடே பேண்டும் பேழாமலும் வருவோம். பகல்ல போலாம்னா அவ்வளவுதான்... யாராவது நம்மள பாத்து காட்டுக் குள்ள ஆளுங்க இருக்காங்கன்னு சொல்லிப்புட்டா... என் மீசையப் பாத்து, வீரப்பன்தான்னு நெனைச்சி கொன்டேபுடுவாய்ங்க...
இப்படி வார்த்தைகளால சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டு, மொத மொத காட்டுக்குப் போய் "ராஜ்குமார் உசுரோடதான் இருக்காரு' அப்படிங்கிறத பார்த்துட்டு, வெளி உலகத்துக்கு வந்து சொல்ல... இந்தம்மா என்ன நொட்ட சொல்லுது பாருங்க...
இதுல இருந்து என்ன வௌங்குதுன்னா... ராஜ்குமார் விஷயத்துல, காட்டுக்குப் போன நான் உசுரோட வரமாட்டேன்னு அந்தம்மா நெனச்சிருக்கு. அதுக்கேத்த மாதிரி தேவாரத்தோட எஸ்.டி.எப். ஆளுங்கதான் ஜெயலலிதா தலையில மொளகா அரைச்சிருக்காய்ங்க. அதனால அந்தப் பொம்பள நம்ம தலையில மொளகா அரைக்கப் பாக்குது...!
(புழுதி பறக்கும்)