(55) பரிதவிப்பில் தமிழர்கள்! பழிவாங்கத் துடித்த ஜெ.!
ஆஸ்திரேலிய பொண்ணு விவகாரத்தச் சொல்லி... "தேவாரத்த சஸ்பெண்ட் பண்ணுங்க'ன்னு கலைஞர்ட்ட சொன்னேன்.
இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம்தான். ஆனா... நான் தேவாரத்த இப்படி சஸ்பெண்ட் செய்யச் சொன்னதப் படிக்கிறவங்க சந்தோஷப்படத்தான் செய்வாங்க. என்ன... தேவாரத்துக்கு வேண்டிய போலீஸ் கொஞ்சபேரு இருக்காங்க. அதுவும் எஸ்.டி.எஃப்.ல இருந்து தேவாரம் மாதிரியே பொம்பளைங்களத் தின்னவங்க அதிகம்பேர் இன்னும் இருக்காங்க. அதுல இருந்த கொஞ்சம் நேர்மையானவங்கள நான் சொல்லல.
அண்ணன் கலைஞர் என்ன பண்ணுனாரு தெரியுமா...?
எல்லாத்தையும் கேட்டுட்டு "சரி... சரி... உக்காருங்க... டீ குடுப்பா...''ன்னு உதவியாளர்ட்ட சொன்னாரு.
சுடச்சுட டீ வந்துச்சு.... குடிச் சிட்டிருக்கும்போதே... "அடப் போறார்ய்யா... ரிடையர்டு ஆகப் போறாரு பாவம்...'' அப்படின்னாரு.
பாவம்! தேவாரம் பாவமாம்... கலைஞரோட இரக்கத்துக்கு அளவே இல்ல, என்ன பண்ண... "சரி''ன்னுட்டு வந்துட்டேன்.
அந்த ஆள மன்னிச்சி விட்டாரு கலைஞர். அந்த ஆளுதான், 2000-லயும் "காட்டுக்குப் போனா... அவன சுட்டுக் கொல்லுவேன்'னு என்னப் பத்தி சொல்லிட்டுத் திரிஞ்சிருக்காரு.
நான் ஒண்ணும் சும்மா சொல்லல. இதே தொடர்ல அடங்காத அம்மா, பத்திரிகைக்கு குடுத்த அறிக்கைய வெளியிட்டுருக்கோம்... அத படிச்சீங்கன்னா உங்களுக்கே புரியும்ண்ணே...
இந்த விஷயத்ததான் நமக்கு மனசாட்சி இருக்குற நேர்மையான ஒரு போலீஸ் ஆபீஸர், சின்ன குத்தூசி ஐயாவோட அறைக்கு மெனக்கெட்டு வந்து தேடிப் புடிச்சி சொல்லிட்டுப் போறாரு.
மறுபடியும் குத்தூசி ஐயாட்ட, "பார்த்தீங்க ளாய்யா... எனக்கு ஏதோ ஒண்ணு இடிச்சுக்கிட்டே இருந்துச்சு. இந்த ரெண்டு ஸ்டேட் எஸ்.டி. எஃப்.காரய்ங்கள நம்ப முடியாது, அதனாலதான் நான் போகலன்னு ஒங்ககிட்ட சொன்னேன்''னேன்.
"நீங்க சொன்னது சரிதான்...''ன்னாரு.
அண்ணன் ரஜினி அடுத்தடுத்து குறைஞ்சது 10 போனாவது பண்ணிருப்பாரு எனக்கு. உடனே அவர நான் காண்டாக்ட் பண்ண முடியல.... அதனால அவரு திரும்பத் திரும்ப எனக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்திருக்காரு.
இதுக்கிடையில... ராஜ்குமார் சாரோட பையங்க சிவண்ணாவும் (சிவராஜ்குமார்) ராக வேந்திராவும் ரஜினி சார் வீட்டுக்கு வந்துட்டாங்க.
திரும்பவும் ரஜினி சார் லைனுக்கு வந்தாரு...
"சொல்லுங்கண்ணே...''ன்னேன்.
"கோபால், நான் உடனே உங்களப் பார்க்கணுமே...''ன்னாரு.
"சொல்றேண்ணே... சொல்றேண்ணே...''ங் கிறேன் நான்.
மத்தியானம்... 6 ல 8 சைசுல இருக்கிற குத்தூசி ஐயாவோட சின்ன ரூம்ல சாப்பிடக்கூட போகாம அப்படியே ஒக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். பயத்துலயும் கலக்கத்துலயும் பசி எல்லாம் பறந்தே போச்சு.
இதுக்கிடையில தம்பி ஜெயப்பிரகாஷ் மறுபடியும் போன் பண்றாரு. "அண்ணே நீங்க ராஜ்குமார் மீட்பு விஷயமா காட்டுக்குப் போக மாட்டீங்கன்னு தகவல் வெளியானதா ரொம்ப பரபரப்பா இருக்கு. ஒரு தமிழன் கடத்துவான்... இன்னொரு தமிழன் காப்பாத்த போகமாட்டா னாமா?ன்னு பேசிக்கிறாங்க. போகாம மட்டும் இருக்கட்டும்... இன்னிக்கு ராத்திரி என்ன நடக்கு துன்னு பாருங்க... குறைஞ்சது ஒரு லட்சம் பேரை யாவது தமிழ் பேசுறவனுகள சாகடிக்கிறோமா இல்லையானு பாருங்க...ன்னு சொல்லி அவன்... அவன் வெறியோட... அங்க உள்ள கன்னட ஆளுங் கள திரட்டிக்கிட்டிருக்காங்கன்னு செய்தி வருதுணே... இப்ப என்னண்ணே பண்றது?''னு கேட்டாரு.
அந்த விஷயத்த கேள்விப்பட்டதும், "சார்... நீங்க பிடிவாதமா இருக்க வேணாம்... நீங்க போய்த்தான் ஆகணும்... நீங்க போங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும்''னு சின்ன குத்தூசி ஐயா அழுத்தமா சொன்னாங்க.
சில விஷயங்கள் நம்மள அறியாமலே நடக்கும். நம்ம காட்டுக்குள்ள போறதால ஒரு லட்சம் பேர் காப்பாத்தப்படுறாங்கன்னா, அட... ஒரு லட்சம்பேர விடுங்க... ஒரு நூறு பேர காப்பாத்துனாலே அது பெரிய விஷயம்தான...! எவ்வளவு பேர காப்பாத்துனாலும் அது நமக்கு லாபக் கணக்குலதான வரும். நல்ல விஷயம்தான... இல்லியா? என்ன தேவாரத்தாலயும், அந்தாளோட போலீஸாலயும் நம்ம உசுருக்குத்தான் உத்தரவாதம் இல்ல. சரி... சரி... நம்ம முடிவு காட்டுலதான்னா அத யாரால மாத்த முடியும்? அதவிட இப்ப நான் ஒத்துக்கிட்டாலே இவ்வளவு உயிர் காப்பாத்தப்படும்னா... அத செய்துதான் தீரணும்னு முடிவு பண்ணி கலைஞருக்கு போன் பண்ணுனேன்.
"அண்ணே... தூதரா நான் காட்டுக்குப் போறேண்ணே''ன்னு என்னோட முடிவ கலைஞருக்கு தெரியப்படுத்துனேன்.
சாயங்காலம் 6:20க்கு நான் போறதா சொன்னதுதான்...
6:30க்கு எல்லா டி.வி.யிலயும் பரபரப்பா செய்தி போடுறாய்ங்க.
அப்போ 6:30க்கு நியூஸ் புல்லட்னு போடுவாய்ங்க. குறிப்பா சன் டி.வி.யில அந்த நேரத்து செய்திய மக்கள் நெறைய பேரு பார்ப்பாய்ங்க. இப்போ செய்திய பார்த்துட்டு திரும்பவும் எல்லா பத்திரிகைக்காரங்களும், டி.வி.க்காரங்களும் ஆபீசுக்கு வந்து குவிஞ்சிட்டாய்ங்க. இத எதுக்கு இந்த இடத்துல சொல்றேன்னா...
"நான் சொன்னேன் பாருங்க... நான் போறதா முடிவுபண்ணியிருந்தாலும் கூட இந்தம்மா பீரியடுல போகமாட்டேன்''னு.
ஏன்னா...?
14-08-2000 அன்னிக்கு ஜெயலலிதா, எங்கே நான் ராஜ்குமார் சார காப்பாத்திட்டு வந்துருவேனோன்னு நெனைச்சு வௌங்கொண்டு ஒரு அறிக்கை விட்டுருக்கும். அந்த அறிக்கையில முக்கியமான பகுதிகள கீழ படியுங்க... அப்புறம் பேசுறேன்!
நாளை கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை நடத்தினால், சன் டி.வி.யின் மிகப் பெரிய பங்குதாரர் கடத்தல்காரன் வீரப்பன்தான் என்று கண்டுபிடித்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை என்றும், இதற்கெல்லாம் ஏஜெண்ட் நக்கீரன் கோபால்தான் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
சந்தன மரக் கடத்தல்காரன் வீரப்பன் என்கிற கொடிய கொலைகாரன் கடந்த 16 நாட்களாக இரண்டு மாநில அரசுகளையே ஆட்டிப் படைத்து வருகிறான். டாக்டர் ராஜ்குமார் அவர்கள் பாதுகாப்புக்கும் விடுதலைக்கான முயற்சிக்கும் எந்தவிதமான குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் இதுவரை நான் எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் சாதித்தேன்.
ஆனால் சந்தன மரக் கடத்தல்காரன் வீரப்பனின் கோரிக்கைகளுக்குத் தமிழக -கர்நாடக மாநில முதலமைச்சர்கள் கோழைத்தனமாக சரணடைந்து வருகிற கேவலமான காட்சி இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை உண்டாக்கி இருக்கிறது. எனவே இருமாநில அரசுகளின் கோழைத்தனமான செய்கைகள் பற்றி கருத்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஜனநாயகத்திற்கு அடையாளமான சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தத் தவறிய இரண்டு மாநில அரசுகளும் நீடிப்பது இனியும் தேவைதானா என்ற கேள்வி என்னை ஆச்சரி யத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இதே ஆச்சரி யத்திற்குரிய கேள்வியை நாட்டு மக்களும் எழுப்புவார்கள் என்று நான் கருதுகிறேன்.
கடத்தல் நாடகம் நடந்துவரும் வேளையில் இரண்டு மாநிலங்களின் காவல் துறை மற்றும் அதிரடிப் படையினரின் கைகள் கட்டப்பட்டு அவர்கள் செயல்பட விடாமல் தடுக்கப்பட்டி ருப்பதும், அவர்கள் ஆற்றவேண்டிய பணிகளை ஆற்ற விடாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதும் வேதனைக்குரியது.
இந்தச் செயலை அரசு தூதுவராக நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்றபோதே அவனை பின்தொடர்ந்து அதிரடிப்படையை அனுப்பி சாதித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. நக்கீரன் கோபால் மீதே கிரிமினல் குற்றம் உள்ளது. அவனே ஒரு பிளாக்மெயில் ஆசாமி. வீரப்பன் பெயரைச் சொல்லி மிரட்டியே அவனுக்காக காசு பறிக்கும் ஏஜெண்ட். அத்தகைய நபருக்கு இரு மாநில அரசுகளும் தூதர் அந்தஸ்து அளித்து ஊக்கம் அளிப்பது கேவலமானதாகும்.
தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற்றால்தான் கடத்தல்காரன் வீரப்ப னிடம் தூது போக முடியும் என்று நக்கீரன் கோபால் சொன்னதை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டதும், நக்கீரன் கோபால் மீது உள்ள கிரிமினல் வழக்குகளை கர்நாடக அரசு வாபஸ் பெற்றிருப்பதும், அதைவிட கேவலமானது.
சந்தமன மரக் கடத்தல்காரன் வீரப்பன் புகழ் பாடி சில பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் இந்த சமுதாயத்திற்கு தீய சேவையே புரிந்திருக்கின்றன.
சந்தனமரக் கடத்தல்காரன் வீரப்பன், தமிழ் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழ் தேசிய மீட்புப் படை ஆகியவற்றின் சொல்படி செயல்படுகிறான் என்பது தெரிகிறது. வீரப்பன் கல்வி அறிவு இல்லாதவன். ஆனால் அவனைச் சுற்றியுள்ள தீவிரவாதிகளுக்கும் கூட சட்டம் பற்றி எதுவுமே தெரியவில்லை என்றே தோன்றுகிறது.
காவிரி நதி நீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச் சினையைத்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியுமே தவிர, ஒரே நாட்டி லுள்ள இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை எடுத்துச் செல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி என்று கேட்டிருக்கிறார்கள். 5-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி என்பதிலேயே அதை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள மேல்முறையீடு நிலுவையில் உள் ளது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.
மேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக, கர்நாடக மாநில அரசுகள் வீரப்பன் பதுங்கியுள்ள காட்டிற்குள் அதிரடிப் படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி அவனை சுட்டுத் தள்ளுவது அவசியமாகும்.
(புழுதி பறக்கும்)