(49) பொய்களை நொறுக்கும் புகைப்படம்!
ஒரு ஆதாரம் வெளியிடுவேன்னு முந்துன அத்தியாயத்துல சொல்லியிருந்தேன்.
அந்த ஆதாரம் என்னன்னா...?
ஜெயலலிதாவ தெரிஞ்ச எல்லாருக்குமே தெரியும்... அந்தம்மா நான்வெஜ் சாப்பிடும்னு. அண்ணன் டி.டி.வி.யே அதுக்கு ஒப்புதல் வாக்குமூ லமா தந்தி டி.வி.க்கு பேட்டி குடுத்ததயும் சொல்லியிருக்கோம்.
நம்மள குறிவச்சி அடிக்கணும்னு ஜெயலலிதா முடிவெடுத்துடுச்சு. அதுக்கு சாக்கா, நாம ஒரு மேட்டர் போட்டத எடுத்துக்கிச்சேயொழிய, அதுக்கு வேற காரணம், அதான்... "இவன 91-ல இருந்து நாமளும் விடாம தொரத்தி தொரத்தி அடிச்சாலும் விடமாட்டேங்கிறானே இந்த மீசைக்காரப்பய... இந்தவாட்டி இவனுக்கு ஒரு பாயாசத்த போட்டுற வேண்டியதுதான்.... (சங்கு ஊதுறது) அதுக்கப்புறம் தான் மத்த வேலையெல்லாம்'னு நினைச்சுதான், பவர் மொத்தத்தையும் நம்ம மேல காட்டுச்சு.
உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக் கிறேன். 2001-ல இதே மாதிரி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன, மத்த எல்லா வேலையையும் விட்டுட்டு... கலைஞருக்கு சங்கு ஊதணும்னு பார்த் துச்சு. புண்ணியவான் மாறனால அவரு தப்பிச்சாரு.
அதே மாதிரி 2011-ல ஆட்சிக்கு வந்தவுடன... மொதல்ல நம்ம கதய முடிக்கப் பாத்துச்சு.
பொன்னையனண்ணன் அறிக்கைக்கே மறுபடியும் வர்றேன்.
"என்னய்யா... இது பொன்னையன் அறிக்கைய விடமாட்டீங்க போலிருக்கே'ன்னு நெனைச்சுறாதீங்க.
ஒரு பொய்ய திரும்பத் திரும்பச் சொன்னா... அதுவே பின்னால உண்மையாகுற அளவுக்கு மாறிப்போகும்.
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயமாவே இருந்தாலும், அதுக்கான ஆதாரத்தோட நாம செய்திய வெளியிட்டாதான்... உண்மை என்னங்கிறது மக்களுக்குத் தெரியும். அது பத்திரிகையோட கடமையும் கூட.
அந்த அறிக்கைல பொன்னையனண்ணன் சொன்னது, "ஒருக்காலும் நடைபெறாத செய்தியை திட்டமிட்டு கெட்ட நோக்குடன் வெளியிட் டுள்ளார்கள். ஜெயலலிதா அவரது வீட்டிலேயே கொள்கை ரீதியாக ஒருபோதும் இதை அனுமதிப்பதே இல்லை. இதுதான் உண்மை நிலை''ன்னு சொல்லியிருப்பாரு.
ஒரு விஷயத்த மறுத்தே ஆகணும்கிற பேர்ல மறுக்கிறது ஒருபக்கம், வேற வழியியே இல்லாம மறுப்பு தெரிவிக்கிறதுங்கிறது இன்னொரு பக்கம். அவரு எந்த நோக்கத்துல மறுப்பு தெரிவிச்சாருங் கிறது நமக்குத் தெரியல. அது பொன்னையனண்ண னுக்கு மட்டும்தான் வெளிச்சம்.
நாம வெளியிடற ஆதாரம்...
1987, டிசம்பர் 24. எம்.ஜி.ஆர். இறந்த நாள். இது எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்.
1982-ல ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். முன்னிலை யில அ.தி.மு.க.வுல சேருது. சேர்ந்த கொஞ்ச நாள்லயே சத்துணவுத் திட்ட ஆய்வுக் குழு தலை வர் பதவியில எம்.ஜி.ஆர். நியமிச்சாரு. அந்த நேரத் துல அதுக்கு பலத்த எதிர்ப்புகளும் இருந்துச்சு.
அந்தப் பதவியில இருந்தப்ப ரொம்ப சிறப்பா அந்தப் பணிய செஞ்சிது ஜெயலலிதா. என்ன ரொம்ப சிறப்பான பணின்னு கேட்டுறாதீங்க. எம்.ஜி.ஆருக்கு சிறப்பா தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சதால... அடுத்த வருஷமே அந்தம்மாவ அ.தி.மு.க. கட்சியோட கொள்கைப் பரப்பு செயலாளரா நியமிக்கிறாரு. பெரிய தலைகள்ட்ட இருந்து அந்த நேரத்துலயும் முனங்கல் சத்தம் வரத்தான் செஞ்சது. முனகி என்ன ஆகப்போகுது? எம்.ஜி.ஆர்.ட்ட எதுவும் நடக்காது, அவரு ஒரு முடிவு எடுத்தா எடுத்ததுதான். ஆனா, ஜெயலலிதா... எப்பவுமே ஒரு விஷயத்த மனசுல வச்சுக்கும். யார், யாரெல்லாம் எதுத்து குரல் குடுத்தானோ, அவனுகள விடக்கூடாதுன்னு, அதோட அக்கவுண்ட்ல போட்டு வச்சிருச்சு. அந்தமாதிரி விஷயங்கள்ல அது யானை மாதிரி. பழிவாங்குறதுல அந்தம்மா, யானைய எல்லாம் தூக்கி சாப்புட்டுரும்.
1983-ல ஜெயலலிதா கொள்கைப் பரப்புச் செயலாளரா ஆனவுடன, ஒவ்வொரு மாவட்டமா சுத்துப்பயணம் போறாங்க. எல்லா மாவட்டத்துல யும் ஜே... ஜே...ன்னு ஜெ.வுக்கு நல்ல வரவேற்பு குடுக்கிறாய்ங்க. ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க. "அரசாங்கத்து முட்ட அம்மிக்கல்லயும் ஒடைக்கும்'னு. ஜெயலலிதா அரசாங்கத்து முட்ட... அது, எந்த அம்மிக்கல்லா இருந்தாலும் அத உடைச்சிரும், உடைச்சிக்கிட்டும் இருந்துச்சு. .
முக்கியமான ஊருல எல்லாம் தொடர்ச்சியா அந்தம்மாவ வச்சு பொதுக்கூட்டம் போடுறாங்க. அந்த வரிசையில மதுரையில பொதுக்கூட்டம் போட ஏற்பாடு ஆகுது. அண்ணன் பழக்கடை பாண்டியோட சேர்ந்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம், வரவேற்பு ஏற்பாடெல்லாம் செஞ்சவரு அண்ணன் சோ.நவநீதகிருஷ்ணன்.
நவநீதகிருஷ்ணன் அண்ணனப் பத்தி சொல்லணும்னா... அவங்க குடும்பம் ஒரு பாரம் பரியமான குடும்பம். மதுர பக்கம் போனீங்கன்னா... அண்ணன் குடும்பத்த, "பாரத விலாஸ்' குடும்பம்னு சொல்லுவாங்க. அவங்க அப்பா சோலைஅழகு. அவருக்கு நவநீத கிருஷ்ணன் அண்ணனோட சேர்த்து மொத்தம் அஞ்சு பசங்க. மூத்தவரு சோ.சுந்தர்ராஜன், காங்கிரஸ் கட்சியில இருக்காரு. ரெண்டாவது, தனுஷ்கோடி கம்யூனிஸ்ட் கட்சி. மூணாவது பால்ராஜ், அவரு தி.மு.க.வுல இருந்தாரு. நாலாவதுதான் நவநீதகிருஷ்ணன் அண்ணன், அ.தி.மு.க. இன்னொரு தம்பி பரமநாதன்... அவரு அ.ம.மு.க.வுல இருக்காரு. அஞ்சுபேரும் அஞ்சு கட்சியில இருக்காங்க. இப்ப எந்தக் கட்சியில யாரு இல்லன்னு கேட்டுறாதீங்க...?
எம்.ஜி.ஆர். செத்துர்றாரு. அந்த நேரத்துல அ.தி.மு.க. கட்சி... "ஜா'., "ஜெ.'ன்னு ரெண்டா ஒடையுது. அப்போ பழக்கடை பாண்டி அண்ணன், "ஜா'. அணி பக்கம் போறாரு. நவநீதகிருஷ்ணன் அண்ணன், ஜெயலலிதா அணிக்கு வந்துடுறாரு.
அண்ணன் நவநீதகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். பீரியடுல மாவட்ட துணை மேயரா இருந்தாரு ஜெயலலிதா மதுரைக்கு வந்தப்ப பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் போடவும், அசோகா ஓட்டல்ல ஜெயலலிதாவ தங்குறதுக்கு ஏற்பாடு செஞ்சு நல்லா கவனிச்சிக்கிட்டாரு. கிட்டத்தட்ட அந்த நேரம் 1 லட்ச ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருப்பாரு.
அவரோட உழைப்ப பார்த்தும், கட்சிக்காக தாராளமா செலவு செய்றத வச்சும்... அவர அந்தம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போக... நட்புரீதியா அவங்க வீட்டுக்கு பல தடவை போயிருக்காங்களாம்.
1987-88கள்ல கிட்டத்தட்ட மூணு தடவ நவநீதகிருஷ்ணன் அண்ணன் வீட்டுக்கு அந்தம்மா ஜெயலலிதா போயிருக்காங்க. அவங்க வீடு எப்பவு மே ஒரு பல்கலைக்கழகம் மாதிரி இருக்கும். அப்பா, அம்மா, அஞ்சு பசங்க அவங்க மனைவி, குழந்தைங்க, பேரன் பேத்திங்க... அதோட சொந்தக்காரங்கன்னு எப்பவுமே ஜே... ஜே..ன்னு இருக்கும் அந்த வீடு.
எங்க மாமி நல்லாவே நான்வெஜ் சமைப் பாங்கன்னு டி.டி.வி. தினகரன் சொன்னது மாதிரி ... நவநீதகிருஷ்ணன் அண்ணனும், "எங்க அம்மா நான்வெஜ்லாம் ரொம்ப நல்லா சமைப்பாங்கன்னு சொல்லியிருந்தாராம். அதனால விரும்பி அந்தம்மா அவங்க வீட்டுக்குப் போயிருக்கு.
அப்படி ஒருமுறை நவநீதகிருஷ்ணன் அண்ணன் வீட்டுக்கு ஜெயலலிதா போனப்ப, அவங்களுக்கு பெரிய அளவுல விருந்து வச்சிருக் காரு. அந்த விருந்துல கோழிக்கறி இருக்கும்... மீன் இருக்கும்... முட்ட இருக்கும்... அதோட அண்ணன் ஒரு பீஸ் கறிய எடுத்து இலையில வைப்பாரு. அதையெல்லாம் அந்தம்மா ரசிச்சு சாப்பிடுறதயும், நவநீதகிருஷ்ணன் அண்ணன் தாராள மனசோட பரிமாறுறதயும் பார்க்க முடியும். அவரு குடுத்த விருந்துல அந்தம்மா நான்வெஜ் சாப்பிடுறத படம் எடுத்துருக்காரு. அந்தப் படத்துல பாத்தீங்கன்னா ஜெயலலிதா ரசிச்சு சாப்பிடுறது ரொம்ப நல்லாத் தெரியும்.
எதுக்கு இத சொல்ல வர்றேன்னா? பொன்னையனண்ணன் "உண்மைக்கு மாறான, ஒருக்காலும் நடைபெறாத செய்தியை, திட்டமிட்டு கெட்ட நோக்கத்தோடு நக்கீரன் பரப்புது'ன்னெல்லாம் சொன்னாருல்ல.
அப்படியெல்லாம் கிடையாது. அந்தம்மா நல்லாவே நான்வெஜ் சாப்பிடும்கிறதுக்கு இந்தப் போட்டாவ பார்த்தாலே போதும். அதுக்கான ஆதாரத்ததான் நாம அரும்பாடுபட்டு இப்போ வெளிக்கொண்டு வந்திருக்கோம்.
பக்கத்துல உள்ள இன்னொரு படத்த பார்த்தீங்கன்னாலும் தெரியும்... அந்தப் படத்துல நவநீதகிருஷ்ணன் அண்ணன்... கூட அவங்க அம்மா, அப்பா... அண்ணன் தம்பிகள்லாம் பின்னாடி நிப்பாங்க.... ஜெயலலிதா மடியில ஒரு குழந்தைய வச்சிருப்பாங்க. இப்படி அந்த வீடு கோலாகலமா இருக்கிறத அந்தப் படத்த பார்க்கும்போது தெரியும்.
அண்ணன் நவநீதகிருஷ்ணன் மதுரை அ.தி.மு.க.வுல ஒருங்கிணைந்த மாவட்ட செயலா ளர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மன்ற பிரதிநிதி, துணை மேயர்... இப்படி பல பதவிகள்லயும் இருந்திருக்காரு. அதனாலதான் ஜெயலலிதா முக்கியத்துவம் குடுத்து, அவரோட வீட்டுக்குப் போய் அசைவ உணவு சாப்பிட்டிருக்காங்க.
நமக்கு அவரு இத்தன பதவி வகிச்சது, இந்தம்மா அவரோட வீட்டுக்குப் போனதெல்லாம் கணக்கே இல்ல. அதுல நமக்கு கெடைச்ச விஷயமே அந்தம்மா நான்வெஜ் சாப்புடுது... அவ்வளவுதான்!
எப்படி மகாபாரதத்துல அர்ஜுனன், கிளியோட கண்ணு மாத்திரம் தெரியுதுன்னு சொல்வானோ... அதேபோல, குறிவச்சு அடிச்சது தான் இந்த போட்டோ. அந்த போட்டோ ஒண்ணு எடுத்து வெளியிட்டே ஆகணும்னு கிட்டத்தட்ட 5 வருச போராட்டத்துல எடுத்ததுதான் இந்த ஆதாரமான போட்டோ.
மேற்படி விருந்து விஷயத்தப் பத்தி, மதுரைல இருக்கிற நம்ம தம்பி நிருபர் அண்ணல் நவநீதகிருஷ்ணன் அண்ணன நேர்ல போய் பாத்து கேட்டுருக்காரு.
"1988...ன்னு நினைவுல வச்சு சொல்லியிருக்காரு. மூணு முறை அம்மா, எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. எம்.ஜி.ஆரும் எங்க வீட்டுக்கு ஒருமுறை வந்திருக்காங்க. நான் எம்.ஜி.ஆரோட பயங்கர வெறியன்னு கூட சொல்லலாம். எங்க அம்மா எம்.ஜி.ஆருக்காக விறால் மீன் சமைச்சு... எம்.ஜி.ஆரும் சாப்பிட்டிருக்காங்க. அதேமாதிரி தான்... இந்தம்மாவும் மீன் வகைய ரொம்ப விரும்பிச் சாப்பிடுவாங்க''ன்னு சொல்லியிருக்காரு அண்ணன் நவநீதகிருஷ்ணன்.
அந்தம்மா ரசிச்சி சாப்பிடுறதயும், அவருக்கு அண்ணன் நவநீதகிருஷ்ணன் சந்தோஷமா பரிமாறுறதயும்தான் நீங்க படத்துல பாத்திருப்பீங்க.
அடுத்ததா...?
(புழுதி பறக்கும்)