poorkalam

(47) போயஸ் நாய்கள்!

8-1-2012 அன்னிக்கு தந்தியில் வந்த அண்ணன் பொன்னையன் அவர்களோட அறிக்கையில அளப்பரிய புகழுடன் விளங்கிய அவங்க அம்மாவுக்கு, எம்.ஜி.ஆர். கொ.ப.செ.வாக பதவி கொடுத்ததுக்கு மூவர் எதிர்ப்பு தெரிவிச்சத மறுத்திருந்தார்.

Advertisment

"ஜெ.' ஆட்சிக்கு வந்த 91-வது வருஷம் கடைசியில... போயஸ் கார்டன்ல நடந்த ஒரு கொடுமைய அப்பவே நக்கீரன்ல வெளியிட்டி ருந்தோம்...

பணக்காரங்க இரண்டு, மூணு நாய்கள வீட்டுல வச்சு வளப்பாய்ங்க. லட்சாதிபதிங்கள்ட்ட பத்து நாய்களுக்கு மேல இருக்கும். கோடீஸ் வரய்ங்க, நாய் பண்ணையையே வச்சு, அத பாத்துக்கிறதுக்கு காவல் காரய்ங்க, நேரத்துக்கு நேரம் சோறு போட கூலியாளுங்க, ஊசி போட டாக்டரு, முடி வெட்ட தனி ஆளுன்னு பொழுதுபோக்குக்கு நாய்கள வளர்க்க... பணத்தை வாரியிறைப் பாய்ங்க. இது அவிய்ங்களுக்கு ஒரு டைம் பாஸிங்.

அப்ப சி.எம்.மா இருந்த ஜெயலலிதா எந்த ரகமோ... யாம் அறியோம் பராபரமே! ஆனா... அவர்ட்ட இருபதுக்கும் மேல நாய்க இருக்குற நாய்ப்பண்ணையே இருந்துச்சு. போயஸ் தோட்டத்துலயே இருந்த அந்த பண்ணை, "ஜெ.வோட நேரடிப் பார்வையில அமைச்சாங்களாம்.

Advertisment

"வேதா' இல்லத்துல நாலு பக்கமும் கழிகளால் அரண் போல அமைக்கப்பட்டிருக்கும். (ராணி இருக்குற அரண்மனைதான் அப்படி இருக்கும். உதாரணத்திற்கு, வேலூர் கோட்டை மாதிரி அங்க நாலா பக்கமும் தண்ணீர் இருக்கும். அந்தக் காலத்துல அதுக்குள்ள முதலையெல்லாம் விட்டிருப்பாய்ங்க) நாய் பண்ணைக்கின்னு தனி இடம், அதுக்கு தனிக் கதவும் இருந்துச்சு.

ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடிச்சது ஐஸ்கிரீமும், கோல்ட் ஸ்பாட்டும்தான். மூடு வந்துவிட்டால் ஒரே நேரத்தில் மூணு, நாலு கோல்ட் ஸ்பாட்டை ஒரே மூச்சுல குடிச்சிடுவாராம். ஐஸ்கிரீமும் அதிகமாவே சாப்பிட்டிரு வாராம்.

pookalam

உடல் பருமனைத் தடுக்க இரண்டையும் குறையுங்கன்னு டாக்டர்க கட்டாயப்படுத்துனாலும் "ஜெ.'வால் விட முடியவில்லையாம்.

தினமும் சோழா ஹோட்டல்ல இருந்து ஸ்பெஷலா தயாரிச்சு கொண்டு வரப்படுற ஐஸ்கிரீமையும் கோல்ட் ஸ்பாட்டையும் எந்த அளவிற்கு ஜெயலலிதா விரும்புறா ரோ, அதே அளவுக்கு நாய்கள் மேல பாசமும், நேசமும் கொண்டி ருப்பாராம். (இப்ப ஏன் ஐஸ்க் ரீமையும், கோல்டு ஸ்பாட்டையும் சொன்னேன்னு தெரியுதா? அப்பப்ப "ஜெ.'வோட பழக்க வழக்கத்தையும் சொன்னாத்தான் ஒரு ராணி எப்படி வாழ்ந்தாங்கன்னு தெரியும்)

முதல்வர் ஆவதற்கு முன்னாடி காலை, மதியம், இரவுன்னு மூணு வேளையிலும் நாய்கள போய்ப் பார்க்குற வேலைய சரியா செஞ் சுட்டு வந்த ஜெ.வுக்கு தற்பொழுது நாய்களை முன்னாடி மாதிரி கவனிக்க முடியலையேங்கிற வருத்தம் இருந்துச்சாம்.

அல்சேஷன் நாய் வகையறாக்களையே வளர்க்கும் "ஜெ.' பரணி, சீமா, கார்த்திலின்னு நாய்களுக்கு பேர் வச்சிருக்கார்.

மேப்படி நாய்களுக்காகவே, ஸ்பெஷலாக மட்டன் கொண்டுவந்து தருவாராம் இஸ்லாமியர் ஒருத்தர் தினமும் ஆடு, மாடுன்னு கொண்டு வர்ற மட்டன்க ஆறு கிலோவாம். இவ்வளவும் நாய்களுக்கு மட்டும்தான்.

போயஸ்ல நாய்கள் சாப்பிடுறதுக்காகவே, தனியா ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்துச்சு. மூணு பேர், நாய்ங்க சாப்பிடுறத அக்கறையோட கவனிச்சுக்க நியமிக்கப்பட்டிருந்தாய்ங்க.

சில நேரங்கள்ல ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்தே மட்டன் துண்டுகளை நாய்களை நோக்கி வீசியெறிவாய்ங்க.

இந்த நாய்களுக்குன்னு தனி டாக்டர் ஒருத்தரு, ஆழ்வார்பேட்டையில இருக்கார். நடராஜனோட ப்ரண்ட்டான இந்த டாக்டரோட வேலை, உடம்பு சரியில்லாத நாய்களுக்கு ஊசி போடுறது, மருந்து மாத்திரை குடுத்து பாதுகாக்குறது. இதுக்காக டாக்டருக்கு தனி மாசச் சம்பளமும் உண்டு.

மாம்பலத்திலிருந்து வரும் ஒருத்தருதான், நாய்களை அழகுபடுத்துவாரு. அதாவது... அளவுக்கதிகமான முடிகள வெட்டுறது மாதிரி சில விஷயங்க. இதுக்குன்னு தனியா மாச சம்பளம் அவருக்கு.

poorkalam

இப்படி... போயஸ் தோட்டத்துல சொகுசா வளர்ந்து வர்ற நாய்களுக்கு மாசந்தோறும் பல லட்ச ரூபா செலவழிக்கப்பட்டு வர்றதா தோட்டத்துல கணக்கு எழுதுவாய்ங்களாம் மகராசனுக.

பாக்க பயங்கரமாயிருக்கிற நாய்க... ராத்திரியானா ப்ரீயா சுத்த ஆரம்பிக்குமாம். போயஸ் தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வர்ற இந்த நாய்களோட பார்வையில இருந்து தப்பித் தவறி எவனும் உள்ள போயிற முடியாது.

அடுத்து வந்த தி.மு.க. ஆட்சிக் காலத்துல... அதாவது 96. எம். நடராஜன, கலைஞர் அரசு கைது செஞ்சப்ப... போயஸ் தோட்டத்துல பயங்கர பீதி. ஜெயலலிதாவையும் கலைஞர் அரசு கைது செய்யப் போகுதுன்னு பெரிய வதந்தி பரவுச்சு. அந்த வதந்தியைக் கேட்டுப் பயந்துபோன ஜெயலலிதா எல்லாருக்கும் ஆணையிட்டார். "என்னை இரவு நேரத்தில்தான் கைது செய்வார்கள், அதனால் பாதுகாப்பிற்கு எல்லோரும் வந்துவிடுங்கள்''ன்னு ஒரே கத்து கத்துச்சாம்.

அவ்வளவுதான்... நம்ம அண்ணன்கள் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கே.ஏ.கே., மதுசூதனன் எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு அடியாட்களைக் கொண்டாந்து இறக்கிட்டாய்ங்க.

போயஸ் தோட்டத்தோட வராண்டாவுல இதுக்குன்னு வந்த எக்ஸ் மினிஸ்டர்களும் அடியாட்களும் பாயை விரிச்சு கைய தலைக்கு வச்சுக்கிட்டு காவலுக்கு படுத்திருக்காய்ங்க.

ஆளுக படுத்திருக்கிறத கவனிக்காத போயஸ் தோட்டத்து வேலைக்காரய்ங்க, நாய்கள அவுத்து விட... முறுக்குன மீசையோட, கைய சுருட்டி விட்ட சட்டைகளோட மொரட்டு சைசுல படுத்துக் கிடந்த ஆளுகளப் பாத்த நாய்க, வெறிபிடிச்சு பாஞ்சு ஓடியார... நாய்களப் பாத்த அத்தன அ.தி.மு.க. அடியாளுங்களும் துண்டக் காணோம் துணியக் காணோம்னு அங்க... இங்கன்னு ஓடி ஒளிஞ்சிட்டாய்ங்க.

இப்படியான... இந்த வௌங்கொண்ட நாய்க மேலதான் "ஜெ.'வுக்கும் சசிகலாவுக்கும் அளவு கடந்த பிரியம்.

இதச் சொன்னா கொஞ்சம்பேரு கடுப்பாவாய்ங்க. (இப்ப எதுக்கு இந்த கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றேன்னு நக்கலடிப்பானுக) அதுக்காக உண்மையச் சொல்லாம விட முடியாதுல்ல. கத வேற பக்கம் போகுதுன்னு நினைக்காதீங்க... ஜெயலலிதா சாம்ராஜ்யத்துல என்னென்னவெல்லாம் கூத்துக நடந்துச்சுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்ல...

அதே 1991-ல ஜெ. ஆட்சிக்கு வந்த சமயம்....

ஜெயலலிதாவை பட்ஜெட் சம்பந்தமா விளக்கம் கேட்க போயஸ் தோட்டம் போயிருக்கிறாரு, அந்த ஆட்சியின் வருவாய்த்துறை அமைச்சர். அவருதான் நம்ம அண்ணன் எஸ்.டி.எஸ். போன நேரமோ ராத்திரி 9:15. நாய்கள அவுத்துவிட்ட நேரம்... கேட்டுக்கு முன்ன காரை நிறுத்தி அமைச்சர் ஹாரன அடிச்சப்பவும் கதவ திறக்கல. விருட்டுன்னு வண்டியில இருந்து இறங்கி, கதவுக்குப் பக்கத்துல போய்... "நான்தான் எஸ்.டி.எஸ். வந்திருக்கிறேன், கதவைத் திற''ன்னு குரல் குடுத்துருக்கார்.

கதவ படார்னு திறந்தாய்ங்க. கார் உள்ளே போச்சு. மறுபடியும் கதவு படார்னு சாத்தப்பட்டுச்சு. கார்ல இருந்து இறங்குன எஸ்.டி.எஸ்., அவசர அவசரமா கக்கூஸ் போறதுக்கு வீட்டுக்குப் பின்னாடி இருக்குற லெட்ரினுக்கு அரக்கப் பரக்கப் போயிருக்காரு மனுஷன்.

அங்கே ஆட்டுக் கறி, மாட்டுக் கறி, மீனும், பிஸ்கட்டும் தின்னு கொழுப் பெடுத்து சுத்திக்கிட்டுத் திரிஞ்ச நாய்க, அண்ணன் எஸ்.டி.எஸ்.ஸை பாத்து உர்ர்...ன்னு முறைச்சிருக்குக... அதுகளுக்கு எப்படித் தெரியும், வர்றவரு நம் தமிழ்நாட்டோட வருவாய்த்துறை மந்திரின்னு. பழக்கப் பட்ட நாய்கதானே, அடையாளம் தெரியாமயா போயிரும்னு நம்ம எஸ்.டி.எஸ். அண்ணன் கொஞ்சம் அசால்ட்டா நடந்து போயிருக்காரு.

திடீர்னு ஒரு நாய்க்கு என்ன தோணுச்சோ... (நாயின் பேரு கார்த்தியாம்) அண்ணன் எஸ்.டி.எஸ்.ஸ பாத்து பாய... கொஞ்சத்தான் வருதுன்னு அமைச்சர் நினைச்சிருக்காரு போல. அவரும் கொஞ்சம் விளாட்டா இருக்க... அண்ணனோட கால பாத்து பாய்ஞ்சிருக்கு கார்த்தி.

விபரீதத்த தெரிஞ்சுக்கிட்ட அண்ணன் எஸ்.டி.எஸ். இளம் பருவத்துல ஓட்டப்பந்தயம் மூலமா தமிழ்நாடு சேம்பியன் சீஃப் பட்டம் வாங்குனவரானதால.... தலை, கால் புரியாம "சசி... சசி...''னு கத்திக்கிட்டே ஓட... விடாம கார்த்தியும் துரத்தியிருக்கான். அமைச்சரும் பாய்ஞ்சு ஓட... வேட்டி மட்டும் கார்த்தியோட வாயில. அமைச்சர் வேட்டியப் பத்தி கவலையே படாம, "சசி! சசி!'' என அலறிக்கிட்டே ஓடி, ஆபீசுக்குள்ள புகுந்துக்கிட்டாராம். (சசிகலாவுக்கு ஒரு வகையில் உறவு முறை என்பதாலும் சசிகலா, எஸ்.டி.எஸ்.ஸுக்கு நல்ல மரியாதை கொடுப்பாராம். அதனாலதான் உரிமையில் சசிகலாவை சசி... சசி...ன்னு கூப்பிட்டிருக்கார்.)

சத்தம் கேட்டு மாடியிலிருந்த சசிகலா பதறிப்போய் கீழ ஓடி வந்திருக்காரு. அமைச்சரோட கோலத்தப் பாத்து, "என்ன மாமா இது?'' என சத்தம் போட்டுச் சிரிச்சாராம். (எஸ்.டி.எஸ்.ஸை சசிகலா, மாமா என உரிமையோடு அழைப்பது நீண்டகாலப் பழக்கம்).

வெடவெடத்தபடி நின்ன அமைச்சருக்கு புது வேட்டிய கொண்டு வந்து தந்துருக்காரு சசிகலா.

வேட்டியக் கட்டிக்கிட்டு "ஜெ.'வை, எஸ்.டி.எஸ். சந்திக்க...

நடந்ததை சசிகலா சொல்ல...

"ஜெ.' விழுந்து... விழுந்து.... சிரித்தாராம்.

வேட்டியை மட்டும் விட்டுட்டு... காயம் ஏதும் இல்லாம தப்பிச்ச எஸ்.டி.எஸ்.ஸுக்கு அப்பவும் நடுக்கம் குறையலயாம்.

அண்ணன் எஸ்.டி.எஸ்.ஸின் வேட்டிய உருவுன நாய்க்கு, ஜெயலலிதா புது பேர் சூட்டி, அழைச்சாராம்.

அந்த பேரு... "ஜெ.' ரொம்ப... ரொம்ப வெறுக்குற அரசியல் தலைவரோடது.

(புழுதி பறக்கும்)