poorkalam

(43) வெடிகுண்டு அலர்ட்!

த்தாடி.... பொழுது விடியறதுக்குள்ள இங்கன இருந்து ஏறக்கட்டணுமே... டக்குன்னு ஐயப்பன்னு ஒரு தம்பிக்கு போன் போட்டேன். ஸ்ரீபெரும்புதூர்ல டாக்டர் தர்மலிங்கம், ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையெல்லாம் வச்சிருக்காரு. அவர்கிட்ட ஐயப்பன் உதவியாளரா இருந்தாரு. நம்ம அருப்புக்கோட்டதான் சொந்த ஊரு. பெரிய குடும்பத்த சேர்ந்தவரு. அவங்க அப்பா நம்ம ஊருல ஒரு பெரிய ஹோட்டல் நடத்திட்டு இருந்தவரு. நடனத்தேவர் ஹோட்டல்னா ஊருல எல்லாருக்குமே தெரியும்... அவ்வளவு பரிச்சயமானவரு.

Advertisment

ஐயப்பன் திருவான்மியூர்ல இருக்காரு. நடந்த கலவரத்தயெல்லாம் டி.வி.யில பார்த்துட்டு, எனக்கு காலைல போன் பண்ணுனாரு. அப்போ, அவர ஆபீஸ் பக்கம் வரவேணாம்னு சொல்லியிருந்தேன். இப்போ அவர்ட்ட, "தம்பி, டூவீலர எடுத்துக்கிட்டு உடனே திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் பக்கமா வந்துரு''ன்னேன்.

உடனே, எந்த மறுப்பும் சொல்லாம "சரிண்ணே...''ன்னாரு ஐயப்பன்.

எல்லாமே ஒரு சாய்ஸ்தான்... எப்பவுமே நாம ரெண்டு, மூணு சாய்ஸ் வச்சிருப்போம்ல இதுமாதிரி.

Advertisment

மோகன்ட்ட வேன எடுக்கச் சொன்னோம், வேன எடுக்க முடியல. ஆனா மோகனிடம் "விடிஞ்சதும் நீங்க, நம்ம பார்வேடிங் பாபு, நம்ம வேன் டிரைவர் கண்ணன், தம்பி லாரன்ஸ் நாலு பேரும் சர்ச்ல நிக்கிற வேன் டாப்பு, ஃப்ரண்ட் சைடுல தெரியுற நக்கீரன் பேரு மேல பேப்பர வச்சு ஒட்டிருங்க. நக்கீரன் ஸ்டிக்கர் தெரியுற மாதிரி ஸ்டேஷனுக்குப் புக்க எடுத்துட்டுப் போனா... அது பிரச்சினையாயிரும். அதனால பேரு வெளிய தெரியாத மாதிரி பாத்துக்கங்க''ன்னேன்.

நம்ம பேர நாமளே மறைச்சு... திருட்டுத் தனமா புக்க எடுத்துட்டுப் போறதுங்கிறது... புண்ணியவதி ஆட்சியில நமக்குப் பழகிப்போச்சு. 4 பேரும் சட சடன்னு அந்த வேலைய பண்ணிட்டாய்ங்க.

இதுக்கிடையில... லாட்ஜ் ஓனரு வேற...!

இனிமே... ஒரு நிமிஷம்கூட இங்கன நாம தங்கக்கூடாதுடா சாமி. அது நமக்கு நல்லது இல்ல. மீறி இருந்தோம்னா... அது தற்கொலைக்கு சமமா ஆயிரும்.

இப்ப... நம்ம தலைக்கு மேல எத்தன பிரச்சினை பாருங்க மக்களே...!

ஒண்ணு, முதல்ல நான் இந்த எடத்த விட்டு தப்பிச்சுப் போகணும். எங்க போறது, எப்படிப் போறதுன்னு இப்ப வரைக்கும் நோ ஐடியா.

ff

ரெண்டாவது, ஜெனரேட்டர விடியறதுக்குள்ள ஆபீசுக்கு உள்ள கொண்டுபோய் நுழைச்சி வைக்கணும். அதுக்கு தம்பி ஆனந்த்தும் பெருசு சுந்தரும் பொறுப்பெடுத்துக்கிட்டாலும்... நமக்கு திக்... திக்...னு நெஞ்சு அடிச்சுக்குது.

மூணாவதா, நமக்கு எதிரா கலவரம் பண்ணுனவய்ங்க நேத்து நடந்ததோட விட்டுத் தொலைச்சிட்டாங்களா...? இல்ல... அவிய்ங்கள்ல கொஞ்சபேரு தண்ணி போட்டுக்கிட்டு, மட்டையாகுற அளவுக்கு ஓவர்போதையில ஓ....தான்னு மெட்ராஸ் பாஷையில திட்டிக்கிட்டே... இன்னிக்கும் எதையாவது பெருசா பண்ணித் தொலைச்சா...? அவிய்ங்க விட்டாலும் அந்த ஆங்காரம் புடிச்ச பொம்பள வேற என்ன எழவக் கூட்டப் போகுதோ...ன்னு நெனச்சு நெஞ்சு பதறுது.

நாலாவதா... தமிழ்நாடு பூரா எத்தன ஸ்டேஷன்ல எவ்வளவு எப்.ஐ.ஆர நம்ம மேல போட்டுருக்கானுகளோ... அதுவும் நமக்கு சரியா தெரியல. அ.தி.மு.க.காரன்கிற பேர்ல எவ்வளவு அடியாளுங்க நம்மள தேடிக்கிட்டு அலையுறாங்கன்னும் தெரி யாது. எவன், எவன் அந்தம்மாகிட்ட நல்ல பேரு எடுக்கணும்னு கிறுக்குத்தனமா என்னென்ன கூத்துப் பண்ணப்போறானு களோ... அதுவும் தெரியாது. இப்படி... பிரச்சினைகள் வரிச கட்டி ஏதோ சினிமா தியேட்டர்ல க்யூ நிக்கிற மாதிரி ஜிங்கு... ஜிங்கு...ன்னு நிக்குது.

இப்போ மணி விடியக்காலைல 4:30க்கு மேல ஆயிருச்சு.

ஆபீஸ்லயும் பிரச்சினை எதுவும் வந்துறக் கூடாது... அப்படி எதாவதுன்னா... அய்யய் யோ... மண்டயெல்லாம் சூடாயிருச்சு..

ஏன் இவ்வளவு யோசனைன்னா... நேத்து சாயங்காலமா எனக்கு ஒரு போன். போன் வந்த விஷயத்த யார்ட்டயும் மூச்சு விடல. அதுல நக்கீரன் ஆபீசுக்கு பாம் போடப்போறதா ஒரு பகீர் தகவல். நமக்கு உளவு சொல்லுற பட்சி சொல்லுச்சு. இத நம்ம தம்பிக யார்ட்டயும் நான் சொல்லல. தொடர படிக்கிற உங்ககிட்டயும் சொல்ல மறந்துட்டேன். எத்தன எழவத்தான் எழுதுறது...? இப்ப என்ன டைம்...? இது வரைக்கும் அப்படி ஒரு அசம்பாவிதம் நடக் கல. நடந்ததாவும் தகவல் இல்ல. இனியும் அந்த ஆபத்து நடக்காதுன்னு நெனைக் கிறதா? இல்ல இனிமேல் நடந்தாலும் நடந்துருமோன்னு பயப்படுறதா...?

பாட்டில்ல பெட்ரோல வீசி ஆபீஸ எரிக்கிற அளவுக்கு வந்தவனுங்க... அடுத்து என்ன பண்ணலாம்னும் கொடூரமா திட்டம் போட்டிருப்பானுகள்ல. அப்படி நமக்கு எதிரா என்ன பண்ணுனாலும் அத தட்டிக் கேக்கிறதுக்கு நாதியும் இல்லன்னு "ஜெ.'வுக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.

ஒண்ணு ரெண்டு பெருசுகளத் தவிர மத்தவங்கள்லாம் வெறுமனே வேடிக்கை மட்டும்தான பார்த்தாங்க. நம்மள ஆபீஸ்ல போட்டுத்தள்ள வந்த நாதாரிகளுக்கு, நக்கீரன் ஆபீஸ் ஒரு பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆகிப்போச்சு. நெனைச்ச நேரம் கண்டவனும் வர்றான்... போறான்... போலீசும் எதையுமே கண்டுக்கல.

இப்ப இந்த இக்கட்டுல இருந்து நம்மளச் சேர்ந்தவங்கள எப்படியாவது காப்பாத்தியாகணும்? இல்லன்னா... பெரிய உயிர் சேதங்கள சந்திக்க வேண்டிய நெலம வரும். என்ன பண்ணலாம்னு மனசுக் குள்ளயே புலம்பிக்கிட்டு உலாத்திக் கிட்டிருக்கேன். மனசுபூரா ஐயோ... ஐயோ...ன்னு அடிச்சிக்குது.

இப்போ ஆபீசுக்கு போன் பண்ண ணும். அதுக்காக ஏற்கனவே வேற போன் வாங்கிட்டோம். அதுல பேசும்போது, அத டேப் பண்ணிட்டாங்கன்னு வச்சிக்குங் களேன்... அதோட முடிஞ்சது நம்ம கத. ஏன்னா... ஜெயலலிதா பீரியடுல போன் ஒட்டுக் கேக்குற சம்பவம் நெறைய தடவ நடந்திச்சு. அப்படி உளவு வேல பார்க்கிறவனுக நம்மள சுத்திட்டான்னா என்ன பண்றது?

என்னடா வாழ்க்கை இப்படி வந்து மாட்டிக்கிட்டோமேன்னு நெனைப்பு வருது. இன்னொரு பக்கம் மனசுக்குள்ள, "விட்டுறாதடா கோவாலு... எத்தனையோ கடந்துட்டோம். இத கடக்கமாட்டோமா...ன்னு "தங்கப்பதக்கம்' படத்துல சிவாஜி சார், மனைவி கே.ஆர்.விஜயா இறந்த செய்தி கேட்டு மனசுக்குள்ள துடிச்சாலும், கெத்த விடாம ஸ்டேஷன்ல... வீராப்பா நடப்பாரு பாருங்க.... அது மாதிரி விரைப்பா நின்னேன்.

இந்த மாதிரி பிரச்சினைகள் வரும்போது எங்க அப்பா என்மேல கோவப்படுவாங்க. கோவம்னா என்னை பாதிக்காத ஒருவகை கோபம் அது. அதையும் எங்கிட்ட நேரடியா காமிக்க மாட்டாங்க. எப்பவாவது தெய்வச்சிலை அண்ணன்கிட்ட பேசும்போது, சொல்லிக் காட்டுவாங்க. அண்ணன் தெய்வச்சிலை கூட்டுறவுத் துறையில பெரிய அதிகாரியா இருந்து ரிட்டையர்டு ஆனவங்க. அப்பாவும் அவரும் ஒரே ஊர்க்காரங்களா இருக்கிறதுனால அப்பப்போ நம்மளப் பத்தி பேசிக்குவாங்க.

அவர்ட்ட அப்பா சொல்லியிருக்காங்க... "பக்கி... பக்கி... ஊருல இருக்கிற பத்திரிகைக் காரன்லாம் இவன மாதிரிதான் கொழுப் பெடுத்து திரியுறானுகளா? இவன் மட்டும் ஏன் இப்படி இவள எதுத்து எழுதிக்கிட்டுத் திரியுறான்? பொதுவா நாலு நியூஸ போட்டமா, நல்லபடியா நாலு காசு சம்பாதிச்சமான்னு இல்லாம.... ஊரு நியாயம், உலக நியாயம்னு உண்மைய எழுதுறனால அவங்களுக்கு வேண்டாதவனா நிக்கிறான். இவிய்ங்களோட சேர்ந்து நானும் ஓடி ஒளியவேண்டியதாப் போச்சு. அத விடுங்க... பாவம், அவன் பொண்டாட்டி புள்ளைங்கள்லாம், அவ்வளவு கஷ்டப்படுதுங்க. எவன் நாம சொல்றத கேக்குறான்? மாணிக்கம் இருந்துச்சு... அது அவனுக்கு எப்பவுமே சப்போர்ட்டாதான் இருந்துச்சு... அதுனால அவன் மேக்கொண்டு எழுதுனானே... ஒழிய மடங்கல, மடங்கவே மாட்டானுட்டான். (மாணிக்கம்னு எங்க அம்மாவ சொல்றாரு) அவதான், இவன இவ்வளவு தூரத்துக்கு இழுத்துவுட்டுட்டுப் போயிட்டான்னு எங்க அம்மாவுக்கு வேற திட்டு. இதையெல்லாம் அப்பா எங்கிட்ட பேசிக்கிட்டிருந்தாங்க அண்ணே''ன்னு தெய்வச்சிலை அண்ணன் ஒருமுறை எங்கிட்ட சொன்னாரு.

வீட்டுல இருக்கிறவங்க என்ன நெனைக்கி றாங்க அப்படிங்கிறது, இவங்கள மாதிரி யாராவது சொல்லும்போதுதான் நமக்கும் தெரியவரும்.

அப்பா இவ்வளவு கோவப்படுறதுலயும், ஆதங்கப்படுறதுக்கும் ஒரு விஷயம் இருக்கு.

1992... 93. அப்பா ஹைவேஸ்ல பியூனா வேலை பார்த்த சமயம்.

ஒருநாள் காலையில 11:00 மணிக்கு...

(புழுதி பறக்கும்)