கலைராஜன மட்டும் ஏன் இவ்வளவு அவசரமா கூப்பிடறாங்க...? அது பெரிய மர்மம்...! இடையில், "மிஸ்டர் பொன்னையன், நீங்க இந்தச் செய்திக்கு மறுப்பு அறிக்கை உடனே ரெடிபண்ணி எல்லா பத்திரிகைகளுக்கும் டி.வி.களுக்கும் அனுப்புங்க. ஜெயா டி.வி. முக்கியம். மிஸ்டர் நவநீதகிருஷ்ணன், (இவர்தான் அட்வகேட் ஜெனரல்) எந்தெந்த வகையில் வழக்குப் போடலாம்னு யோசிச்சி உடனே லிஸ்ட் கொடுங்க''ன்னு "ஜெ' வரிசையா ஆர்டர் போட்டுக்கிட்டிருக்கும்போது கலைராஜன் வந்துட்டார்.
போயஸ் கார்டனுக்கு கலைராஜன் போனதும் அங்க சில திட்டங்கள் உருவாச்சு. அது எப்படி உருவாச்சுங்கறத அப்புறம் சொல்றேன். எங்களை சுத்தி ஆபத்து சூழ ஆரம்பிச்சதை நாங்க யாரும் அப்ப நெனச்சிக்கூட பாக்கலை.
7.1.2012 சனிக்கிழமை காலை 9.30.
நம்ம ராயப்பேட்டை நக்கீரன் அலுவலகத்துல அப்ப ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு ஸ்பெஷல் மீட்டிங் நடக்கும். அதுக்கு வாரா வாரம் யாராவது ஒரு செலிபிரிட்டிய கூப்பிடுவோம். அதாவது பத்திரிகைத் துறையைச் சார்ந்த ஒருத்தரையோ, இல்லைன்னா, ஏதாவது ஒரு பெரிய ஜாம்பவானையோ வரவச்சி, நம்ம எடிட்டோரியல் தம்பிகளுக்கு லெக்சர் கொடுக்க வைக்கிறது வழக்கம். அந்தக் கூட்டத்துக்காக அன்னைக்கு எல்லோரும் மூணாவது ஃப்ளோர்ல இருக்குற மீட்டிங் ஹால்ல அசெம்பிள் ஆயிட்டோம்.
அன்னைக்கு தேதியில நமக்கு லெக்சர் கொடுக்குறதுக்காக, மூத்த பத்திரிகையாளர் அண்ணன் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் வந்திருந்தாங்க. அவங்க இப்ப, "இந்து' லெட்டர் எடிட்டரா இருக்காங்க. அவங்க லெக்சர் பண்ண ஆரம்பிச்சி, அது போய்க்கிட்டு இருக்கு. கூட்டம் நடந்துக்கிட்டு இருக்கும்போதே, கீழ அலுவலக கேட் வழியா ஒரு கலவரக் கும்பல் புகுந்துடுச்சு. அது தெரியாம கூட்டத்துல நாங்க உக்காந்திருக்கோம்.
அப்ப கரெக்டா மணி 11:00 இருக்கும்.
புயல் மாதிரி நம்ம போட்டோகிராபர் தம்பி அசோக், அந்த அறைக் கதவத் தள்ளித் திறந்துக்கிட்டு...
"அண்ணே... அடிக்கறாங்கண்ணே... கீழ எல்லாத்தையும் அடிச்சி நொறுக்குறாங்கண்ணே....''ன்னு பதறிக்கிட்டு ஓடிவந்தார். உடனே படக்குன்னு எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிட்டு, அப்படியே பறக்காத குறையா எல்லோரும் கீழே ஓடுறோம்.
அதுக்கு முன்னாடி என்ன நடந்துருக்குன்னா... ஒரு குரூப், நாலஞ்சி ஆட்டோவுல வந்து இறங்கி, நம்ம ஆபீஸுக்கு முன்னாடி டீக்கடை, பெட்டிக்கடைப் பக்கத்துல நின்னு பயங்கர திட்டத்தோட வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துருக்கு. நம்ம ஆபீஸ்ல பார்த்தீங்கன்னா மொரட்டு கேட் இருக்கும். அதன் ஹைட்டே கிட்டதட்ட 18 அடி உயரம். வெளில எதுவும் போர்டு இருக்காது. அதனால் வந்த கும்பலுக்கு, நக்கீரன் ஆபீஸ் எதுன்னு சரியா தெரியலை. ஒரு அனுமானத்துல நின்னுகிட்டு இருந்திருக்கானுங்க.
அலுவலகத்துக்குப் பக்கத்துல நக்கீரனுடைய புத்தக ஸ்டால் இருக்கும். அதுல ’நக்கீரன் பப்ளிகேசன்னு போர்டு இருக்கும். அதை அந்த கும்பல் வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்துருக்கு. அப்ப என்ன ஆச்சுன்னா, ரோட்ல வந்த ஒரு வாகனத்துக்கு வழி விடறதுக்காக, நம்ம அண்ணன் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் வந்த காரை, ரிவர்ஸ் எடுத்து நிப்பாட்டவேண்டி இருந்துருக்கு. அதுக்காக செக்யூரிட்டி சிவகுமார், நம்ம கேட்டைத் திறந்திருக்கார். அதப் பார்த்ததும், நக்கீரன் ஆபீச அடையாளம் கண்டுக்கிட்டு திடும்திடும்னு ஒரு குரூப்பு நம்ம கேட்டுக்குள்ள ஓடிவந்திருக்கு. அதுல ரெண்டு பொம்பள ஆளுங்களும் இருந்திருக்காங்க.
அவங்க எல்லார் கையிலும் இரும்புத்தடி, சவுக்குக் கம்புன்னு இருந்திருக்கு. ஆபீஸுக்குள்ள ஓடி வந்தவங்கள, செக்யூரிட்டி சிவகுமார் "ஏய்.. யாருய்யா.. யாருய்யா.. எங்க வர்றீங்க?'ன்னு தடுக்குறதுக்குள்ள, அந்த கும்பல், அங்க இருக்குற டூவீலர்களை ’படீர் படீர்னு அடிச்சி உடைச்சிருக்கு. அதோட அங்க நிறுத்தியிருந்த என் அம்பாசிடர் காரையும், அதுக்குப் பின்னாடி நிறுத்தியிருந்த தம்பி குருசாமி காரையும் ’பொடீர் பொடீர்னு அடிச்சி நொறுக்குது. அதைத் தடுத்த செக்யூரிட்டி சிவகுமாரை அந்த கும்பல்ல இருந்தவங்க நங்குனு ஒரு குத்து மூஞ்சிமேல விட... அதப்பாத்து, அங்க நின்னுக்கிட்டு இருந்த ஆட்டோ ஓட்டும் தம்பி சம்பத்குமார் தடுக்க, அவரையும் ரெண்டு போடு போட்டுட்டு, மாடிப்படியேறி அங்கயும் கண்ணாடிகளை அடிச்சி உடைக்கிறாங்க.
அதுக்குள்ள பிரிண்டிங் மிஷின்ல இருக்கும் தம்பிகள்லாம் பதறிப்போய்... ”"ஏய்....ஏய்...'னு குரல் கொடுத்துக்கிட்டே, வெளில வர்றாங்க. அதேபோல் கீழ நடக்குற அந்த களேபரத்தால, மேல கம்ப்யூட்டர் செக்ஷன்ல இருந்த தம்பிகள் நாலஞ்சு பேரு கீழ ஓடிவர்றாங்க. அதோட பர்ஸ்ட் ஃப்ளோர்ல, ஃபோர் கலர் பிரிண்டிங்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்த தம்பிகள், பைண்டிங்ல இருந்த தம்பிகள், கீழ வெப் ஆப்செட்டில் இருக்கும் தம்பிகள்னு எல்லாரும் கீழே கத்திக்கிட்டே "ஓ'ன்னு ஓடிவந்தாங்க.
அதனால் நக்கீரன் ஆளுங்க சுதாரிச்சிக் கிட்டாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு, அந்த கும்பல் அப்படியே கேட்டை நோக்கி டேர்ன் ஆகுது. அப்படி டேர்ன் ஆகும்போதும், நாலஞ்சி வண்டிகள அடிச்சி நொறுக்கிட்டுத் தான் அது வெளில ஓடுது. இதெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்துல, அதாவது ஃப்ராக் சன் ஆஃப் செகண்ட்ல நடக்குது. நானும் மீட்டிங்ல இருந்த தம்பிகளும் கீழ இறங்கி வர்றதுக்குள்ளயே இது எல்லாம் நடந்து முடிஞ்சிடிச்சி. நாங்க, கீழ வந்தப்ப எல்லாம் உடைஞ்சி கண்ணாடிகள் சிதறிக் கிடக்கறதப் பதட்டத்தோட பாக்குறோம்.
ஆபீஸ் பூந்து அடிச்சிட்டுப்போன அந்தக் கும்பல்ல, ஆயிரம்விளக்கு கற்பகம்ங்கிற பொம்பளயும், தேனாம்பேட்டை சிவராஜ்ங்கிற ஒருத்தனும் இருந்ததா அப்புறம் எங்களுக்குத் தெரியவந்துச்சு. இவங்க ரெண்டுபேரும் அ.தி.மு.க. கவுன்சிலர்களாம்.
அந்த கும்பல் வெளில போன வேகத்தில் நம்ம தம்பிகள், சுறுசுறுப்பா பண்ணிய காரியம் என்னன்னா, அந்த பெரிய டோரை ’சடார்னு அடைச்சிட்டாங்க. கதவுக்கு உள் பக்கம் பெரிய லாக் இருக்கும். அந்த மொரட்டுக் கதவை மூடி, நம்ம தம்பிகள் கெட்டிக் காரத்தனமா அதை உள்ளே லாக் பண்ணிட்டாங்க. அந்த கதவைப் பார்த்தா, பெரிய அரண்மனைக் கதவு மாதிரி, ரொம்பவும் உயரமா இருக்கும். அபிராமி ராஜன்கிற அண்ணாச்சிதான் அதை செஞ்சி கொடுத்தார்.
வெளில இருந்த கும்பல், கதவைத் தள்ளித் தொறக்கப் பார்த்துச்சு. நம்ம தம்பிகள் 20 பேர், லாக் பண்ணிய அந்த கதவுக்கிட்ட அரண் மாதிரி, முட்டுக் கொடுத்துக்கிட்டு நின்னாங்க. ராஜாக்கள் கோட்டைக் கதவை எதிரி நாட்டுப் படை தள்ளித் திறக்க நினைக்கிறப்ப, அங்க இருக்கும் போர் வீரர்கள் திறக்க முடியாதபடி முட்டுக்கொடுத்து நிப்பாங்களே, அது போலத்தான் அந்தக் காட்சி இருந்துச்சு.
இன்னைக்கும் அந்தக் காட்சி மனச விட்டு அகலல. நக்கீரன் வரலாற்றுல எத்தனையோ நல்லது, கெட்டது நடந்துருக்கு. ஆனா, இந்தச் சம்பவம்... கதவை தம்பிகள் 20 பேர் தாங்கிப் புடிச்சது... யப்பப்பா... அவங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...!
ஏதோ கண்ணிமைக்குற நேரத்துல வந்தானுவோ... சடசடன்னு நொறுக்கிட்டுப்போய் தொலைஞ்சாங்க. சரி... இத்தோட விட்டானுங் களேன்னு திண்டுல உக்காந்து யோசிச்சேன்.
வாயக் கட்டி, வயித்தக் கட்டி, சிறுகச் சிறுக குருவி சேக்குற மாதிரி சேத்து வச்சதுதான் இந்த ஆபீஸ். இங்க நிக்கிற கார்க, பைக்குக... இப்படி நொறுக்கிட்டாய்ங்களே பக்கிக... பாழாப் போனவிய்ங்க... நாசமாப் போயிருவானுங்கன்னு முனகிக்கிட்டே இருந்தேன்.
திடும்னு கதவுக்கு வெளிய... பெரிய சவுண்ட்...!
(புழுதி பறக்கும்)