ஒவ்வொரு ஊரிலும் வழக்கு!
வீரம்னும், தியாகம்னும் நெறைய பேர் வியாக்கியானம் பேசுவாய்ங்க. நான் பாக்குற வீரமும், தியாகமும் எதுன்னா, இத்தனை கொடும காலையில இருந்தே நடக்குது... அதுக்கு கொஞ்சமும் சளைக்காம, முகம் சுளிக்காம, பயப்படாம, ஆத்திரப்படாம... ஆபீசிலேயே அடபட்டு, சோறு தண்ணின்னு கூட பாக்காம கெடையா கிடந்து, இந்த நாய்ப்பசங்க பேசுன பேச்சுக்கும் ஏசுன ஏச்சுக்கும், தூக்கியெறிஞ்ச அசிங்கத்தையும் பொறுத்துக்கிட்டு, நாம படுற கஷ்டத்துலயும் பங்கெடுத்துக்கிட்டு கூடவே இருக்காங்க பாருங்க... வேல பாக்குற தம்பிக, இதத்தான்... இதத்தான் வீரம்னு நான் சொல்லுவேன்.
நானும் பெருசா ஒண்ணும் அள்ளிக் குடுத்துறல இவங்களுக்கு. கஷ்டத்தத்தான் இன்னைவரைக்கும் பங்குபோட்டுக் குடுத்திருக்கேன். எங்களுக்கும் விடியும்... ஒருநாள் விடிவுகாலம் வரும்ங்கிற நம்பிக்கையில இந்த போர்க்களத்துல சிப்பாய்களா நின்னு, "வந்து பார்... உனக்கா இல்ல எனக்கா?'ன்னு எல்லாரும் சேர்ந்து திமிறி நிக்கிறோம்.
சென்னையில இருந்து எங்கேயும் நான் தப்பிச்சிப் போயிறக் கூடாதுன்னு எல்லா பக்கமும் போலீஸ் வசமா அணகட்டிட்டாய்ங்க.
சாயங்காலம் 6:30 மணிக்கு வயர்லெஸ்ஸோட ஆபீசுக்கு உள்ள வந்த போலீஸ்காரன் ஒருத்தன் மேல போய் தேடி பார்த்துட்டு அரக்க பரக்க கீழ வந்து யாருக்கோ வயர்லெஸ்சுல பேசுனான்னு சொன்னேம்பாருங்க....
இப்ப... "ஆபீஸ்ல இருந்து நம்ம கண்ணுல மண்ண தூவிட்டு மீசைக் காரன் தொலைஞ்சு போயிட்டான்.... அவன் சென்னைய விட்டு எங்கயும் போயிரக்கூடாது... அத முழுமூச்சா தடுத்தாகணும்னு ப்ளான் பண்ணித்தான் எல்லா எடத்துலயும் தேடுறாய்ங்க''ன்னு நெனைக்கிறேன்.
அடுத்து கொஞ்ச நேரத்துல தம்பி காமராஜோட நண்பர் இம்மி ஆபீசுக்குப் பேசியிருக்காரு. "ஈ.சி.ஆர்.ல எல்லா வண்டி களையும் செக் பண்றாங்க. நக்கீரன் கோபால் இருக்காரான்னு ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி செக்பண்ணி... இல்லன்னு தெரிஞ்சதுக்கப்புறமாத்தான் அனுப்புறாங்கன்னு அண்ணன்ட்ட சொல்லிருங்க''ன்னு சொல்லியிருக்காரு.
இன்னொரு பக்கத்துல இருந்து எங்க சாருபிரபா பிரிண்டர்ஸ்ல அக்கவுண்ட்ஸ் மேனேஜரா இருந்த தம்பி குணசேகரன் போன் பண்ணியிருக்காரு. அவரு செங்கல்பட்டுல இருந்து தெனமும் வந்து போறவரு. அவரு வீட்டுக்கு போக எக்மோர் ஸ்டேஷனுக்கு போறப்ப நெறைய போலீஸ் குவிஞ்சிருக்கிறத பார்த்திருக்காரு. அந்த ஸ்டேஷன்ல இருந்து அவர்கூட நெறைய நண்பர் களும் பயணம் செய்வாங்க. அவங்க, "நக்கீரன் கோபால் எங்கேயும் தப்பிச்சிப் போயிடக்கூடாதுன்னு எல்லா கம்பார்ட்மெண்ட்லயும் போலீஸ் சீரியஸா தேடுறாங்களாம். எக்மோர்ல, சென்ட்ரல் மட்டுமில்லாம எல்லா ஸ்டேஷன்லயும் தேடிக்கிட்டிருக் காங்களாம்'னு சொன்னத, தம்பி குணசேகரன் ஆபீஸுக்கு போன்பண்ணி தகவலா சொல்லியிருக்காரு.
சென்னைய விட்டு வேற எங்கயும் நகரவிடக் கூடாது...ன்னு நாலா பக்கமும் எனக்கு செக் வைக்கிறாங்க. அப்படின்னா... நம்மள எப்படியாவது தூக்கிட்டு வந்து கதைய முடிச்சிரணும்... அதுவும் இன்னிக்கே அத செஞ்சு முடிச்சிரணும்னு வெறி கொஞ்சம் கூட அடங்காம திட்டம் போட்டு, இவ்வளவு வேலைகளையும் பண்ணியிருக் காய்ங்கன்னு தெரியுது.
லாட்ஜ் ஓனர் சொன்னத நெனச்சி எனக்கு இருப்பே கொள்ளல. "என்னடா... இந்த ஆளே சைடுல காட்டிக் குடுத்துட்டா என்ன பண்ணப்போறோம்?'னு ஒரு நெனப்பு ஓடுது. அவரு தப்பிக்கிறதுக்காக நம்மள போட்டுக் கீட்டு கொடுத்தா? என்னடா கொடும... இப்படி வகை தொகை இல்லாம தனியா வந்து மாட்டிக்கிட்டமே.
போன அத்தியாயத்துல சொன்னது மாதிரி... நெறைய பேரு "மீசை நம்மள தேடி வந்துரக்கூடாதே'ன்னு சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க.
என் துணைவியாருக்கு ரொம்ப பழக்கமானவங்க ஒருத்தரு போன்பண்ணி, "விஜி... (அவங்க பேரு விஜய லட்சுமி, சுருக்கமா விஜி'ன்னு கூப்பிடுவாங்க) இங்க காலை யிலயே ரெண்டு மூணுபேரு வந்து பாத்துட்டுப் போயிட் டாங்க விஜி... ரொம்ப கவனமா இருங்க''ன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கு என்ன அர்த்தம்னா... "தயவுசெய்து எங்க வீட்டுக்கு வந்துறாதீங்க... தப்பித் தவறி கூட அந்தப் பக்கமா தல வச்சுப் படுத்துறாதீங்க'' அப்படிங்கிறதுதான்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்துல நக்கீரன் பிரச்சினைகள சந்திக்கிறப்பல்லாம் நம்மட்ட இருந்த நெறைய விஷயங்கள பதுக்கி வச்சிருப்போம். பதுக்கி வைக்கிறதுன்னா பணம், கிணம் இல்ல. அப்படி நெனைச்சிறாதீங்க. நக்கீரன்ல வந்த செய்திக்கான ஆதாரங்கள், கேஸ் சம்பந்தமான டாகுமெண்ட்ஸ், போட் டோஸ், பத்திரிகை சம்பந்தமான அக்ரிமெண்ட் எல்லாத்தையும் அந்தப் பொம்பளைக்கு (ஜெ.) பயந்து, தெரிஞ்சவங்க யார் வீட்டுலயாவது கொண்டுபோய் குடுத்து வச்சிருப்போம்.
அப்படிக் குடுத்து வச்சிருந்த எடங்கள்லகூட சிலபேரு, இதுக்காக நம்மளத் தேடி போலீஸ், கீலீஸ் யாரும் வந்துறக்கூடாதுன்னு நெனச்சி அத, வேற எங்கேயோ தூக்கிப் போட்டுட்டு, நாம கேக்கும்போது... "இல்லியே... உங்கள்ட்ட அப்பவே தந்துட்டோமே'ன்னு கூசாம சொல்லிட்டாய்ங்க.
இந்த மாதிரியெல்லாம் நெறைய அநியாயம் நடந்திருக்கு. அந்த ஆதாரம் எல்லாம் அவங்கள்ட்ட இருந்தா என்ன ஆயிடப்போவுது? அவங்கள்ட்டதான் இருக்கும்னு யாருக்காவது தெரியுமா என்ன? என்னத்த சொல்றது...? ஒண்ணும் செய்ய முடியாது. இதுதான் உலகம்... இவ்வளுதான் மனுஷங்க!
நக்கீரனா... அய்யய்யோ... அய்யய்யோ...ன்னு எல்லாரும் பதர்ற மாதிரியான ஒரு முகத்த ஜெயலலிதா பண்ணிருச்சி.
ஒரு கட்டத்துக்கு மேல ஆபீசுக்கே திரும்ப போயிரலாம்னு யோசிச்சேன். அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு, எங்கேயோ ஒரு எடத்துல ஒளிஞ்சிருந்து, எவனோ ஒருத்தன் நம்மள காட்டிக் குடுத்து... போலீஸ் கைல மாட்டுனா அது நல்லாயிருக்காதுல்ல...
இன்னொண்ணு... நாம மறைஞ் சிருக்கிறது நமக்கு வேண்டாத எவனோ ஒருத்தனுக்கு தெரிஞ்சி, "ஒழிஞ்சான்டா எதிரி'ன்னு நம்மள போட்டுத் தள்ளிட்டான்னா... நாம இவ்வளவு நாள் இருந்ததுக்கான அடையாளமும்.... ஒண்ணுமில்லாம மண்ணோட மண்ணா புதைஞ்சு போயிரும்.
சமகால வரலாறுல மீசைக்காரங்க ரெண்டு பேரு இருந்தாய்ங்க. அதுல ஒருத்தர் வீரப்பன். அந்தாளையும் நம்ப வச்சிக் காட்டிக் குடுத்து, முதுகுல குத்தி, கொல்லப்புறமா போய் குண்டு போட்டு... அதனால நாலு நாளு மயக்கத்துல இருந்தவர கொலையா கொன்னு... மொகத்துல இருந்த மீசைய ஒண்ணு... ஒண்ணா புடுங்கி (வீரப்பன் இறந்த படத்த பாத்தீங்கன்னா தெரியும்... வீரப்பன் மீசை சின்னதா இருக்கும்) சித்ரவதை பண்ணித்தான் கொன்னுருப்பாய்ங்க. வெளிய வெண்கலம் மாதிரி ச்ஜு... ச்ஜுன்னு சுட்டோம்... செத்துட்டார்னு மார் தட்டுனதெல்லாம் பெரிய அண்டப் புளுகு... ஆகாசப் புளுகு. ஒரு மீசை அப்படிப் போயிருச்சு; இன்னொண்ணு இந்த மீசை... அதான் நான்.
இந்தப் பொம்பளைய எதுத்து மீசைக்காரன் (நான்தான்) ஒரு மேட்டர் போட்டான். அந்தப் பொம்பளைய எதுத்து வாழ்ந்துற முடியுமா? ஜெயலலிதா என்ன லேசுப்பட்ட ஆளா... ஒரே போடா போட்டுத் தள்ளி காலி பண்ணிடிச் சில்ல'ன்னு பின்னாடி ஒருநாள் போற போக்குல எவனோ ஒருத்தன் கழிச்சல்ல போறவன் எழுதவோ பேசவோ செய்வானுங்க.
எது வந்தாலும் சரி... ஆபீசுக்கே போயிரு வோம். அதிகபட்சமா என்னதான் நடக்கும்? நம்மள பொலி போடுவாய்ங்க அவ்வளவுதான...? நாலு பேருக்கு தெரிஞ்சு அது நடக்கட்டுமேன்னு மனசுல ஓடிக்கிட்டிருக்கு.
நைட் 2:00 மணி இருக்கும். லாட்ஜ்ல உள்ள பாண்டிங்கிற தம்பிய கூப்புட்டு, "தம்பி... சைக்கிள்ல நம்ம ஆபீஸ் வரைக்கும் போ... அ.தி.மு.க.காரன் இல்ல போலீஸ் யாராவது தட்டுப்படுறாங் களா?ன்னு பாத்துட்டு வா''ன்னு அனுப்பி வச்சேன்.
அந்த தம்பி போயிட்டு வந்து, "அண்ணே... தூரத்துல இருந்துதான் பாத்தேன். நாலு போலீஸ் காரங்க மட்டும் காவலுக்கு இருக்காங்க... வேற யாரும் தென்படல.... திரும்பி வந்துட்டேன்''னாரு.
சரின்னு... அந்த முயற்சிய கைவிட்டுட்டேன்.
அந்த நேரத்துல நடந்த எல்லாத்தையும் ரீ-வைண்ட் பண்ணிப் பாக்குறேன்...
நம்பிக்கைத் துரோகம் ஏன் வலிக்கிறது தெரியுமா? அதைச் செய்பவர்கள் நம் எதிரிகள் அல்ல... நாம் நம்பியவர்கள் என்பதாலும், மிகவும் நேசித்தவர்கள் என்பதாலும்.
நேரம் ஆக, ஆக பக்... பக்...னு இருக்கு. என்ன நடக்குமோ, எந்தப் பக்கம் வருவாய்ங்களோன்னு. திரும்பவும் லாட்ஜ் ஓனர் வந்து கடுப்பக் கிளப்பிறக்கூடாதேன்னு வேற வேண்டிக்கிறேன். பொழுது விடிஞ்சதும் பெரிய கும்பிடா போட்டுட்டு ஒரேயடியா துண்டக் காணோம்... துணியக் காணோம்னு கௌம்பிறணும். ஒளியுறதுக்கு ஏத்த மாதிரியான வேற எடத்தயும், ஆளையும் தேடணும்.
ஒரு விஷயம் மட்டும் தெளிவா தட்டுப்படுது. இனி யார்கிட்டயும் நன்றிய எதிர்பார்க்கக்கூடாது. அதுல வந்த சிக்கல்தான்... நாம லாட்ஜ் ஓனர்ட் முன்ன பின்ன சொல்லாம படக்குன்னு கௌம்பி வந்தது. இங்க வந்த பிறகுதான்... நமக்கு பொடதியில அடி விழுந்த மாதிரி ஆகிப்போச்சு.
தம்பி சிவகுமார்ட்ட இருந்து போன். "அண்ணே... ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன்ல கெடைச்ச தகவல் இது. "அ.தி.மு.க. அன்புங்கிறவன் கொடுத்த புகார்ல... கொலை மிரட்டல், மன உளைச்சலை ஏற்படுத்துதல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்குதல், களங்கம் ஏற்படுத்துதல்னு 6 பிரிவுகள்ல உங்க மேல வழக்குப் பதிவு பண்ணியிருக்காங்களாம். இதே மாதிரி மூணு பேரு கம்ப்ளைண்ட் குடுத்து 3 வழக்கு தாக்க லாகியிருக்காம். உடனே அதுமேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி மேலிடத்தில இருந்து உத்தரவாம்.
ஜாமீன்ல வெளிவர முடியாத செக்ஷன்கள்ல இருக்கிறதால... ரவுண்டு கட்டி உங்கள தேடுறாங்கண்ணே. இதுமாதிரி தமிழ்நாட்டுல எல்லா மாவட்டத்துலயும், எல்லா ஊருலயும் வெளிவர முடியாத செக்ஷன்ல போடச் சொல்லி ஆர்டர் போயிருக்காம். ஒவ்வொரு ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கையில அ.தி.மு.க. கொடிய ஏந்திக்கிட்டு ஊர்வலமா போய் உங்க பேர்ல புகார் கொடுத்து, உடனே எப்.ஐ.ஆர். போடச் சொல்லி உக்காந்து வாங்கிட்டுத்தான் போறாங்களாம். எப்.ஐ.ஆர். போடுற வரை நக்கீரனுக்கு எதிரா கடுமையான கோஷத்த போட்டு உங்கள ரொம்ப அசிங்கமா திட்டிக்கிட்டேயிருக்காங்களாம்''னு அடுக்கிக்கிட்டே போனாரு தம்பி சிவகுமார்.
"எல்லா ஊருலயும் கேஸ் போடுறாங்கன்னா... நாம வெளியூர்களுக்குப் போனாலும் மாட்டிக்கு வோமே தம்பி. ரொம்ப சிக்கலான நெலமையில இருக்கேன்.... உடனே பெருமாள் சார என் லைனுக்கு வரச் சொல்லுங்க''ன்னு சொல்லிட்டு, குட்டி போட்ட பூனையாட்டம் அந்த சின்ன ரூம்ல குறுக்க, நெடுக்க நடந்து... நடந்து... நடந்து.... கால் வலிக்கிற வரைக்கும் நடந்துக்கிட்டேயிருந்தேன்...
(புழுதி பறக்கும்)