பூட்டை உடைத்த போலீஸ்!
ஆக... நைட்டு என்ன செஞ்சு தொலைக்கப் போறாய்ங்கன்னுதான் தெரியல...?
அட்வகேட் பெருமாள் சார் எனக்கு போன்ல வர்றாரு... "அண்ணாச்சி ஒரு குட் நியூஸ். சீஃப் எல்லாத்தையும் பார்த்துட்டாரு. ஏ.ஜி.கிட்டயும் பேசிட்டாரு. நீங்க குடுத்து அனுப்பியிருந்த போட்டோஸ் எல்லாத்தையும் சீஃப்ட்ட காமிச்சு விளக்கமா பேசியிருக்காரு வாசு சார். அதனால எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்காரு. ஆ.ஏ.யும் நைட்டுக்குள்ள எல்லாத்தையும் க்ளீயர் பண்ணிடுறேன்னு சொல்லியிருக்காராம்.... அதனால நீங்க பயப்பட வேணாம், இனிமே எந்த அசம்பாவிதமும் நடக்காம பாத்துக்க லாம்னு சொல்லியிருக்காங்கன்னாரு.''
"ரொம்ப நன்றி ஸார். ஒரு விஷயம் கவனிக்கணும் சார். இன்னைக்கு நைட்டு விட்டுட்டு நாளைக்கு சரிபண்றேன்னு ஆ.ஏ. சொல்றாருன்னா அது மட்டும்தான் சார் இடிக்குது? சரி, சார்... அடுத்து என்ன செய்யப் போறீங்க?''ன்னேன்.
"அண்ணாச்சி ஆ.ஏ.ய திரும்பவும் பார்க்கணும். அவங் கள பார்த்து நம்மட்ட எவி டென்ஸா இருக்குறதயெல்லாம் அவங்களுக்கும் ஒரு காபி குடுக்கணும். எங்கள ஹைகோர்ட் டுக்கு வரச்சொல்லியிருக்காங்க... அவங்களும் அங்க வந்துர்றோம் னாங்க. அப்ப இதப்பத்தி பேசுறேன்.
அங்க கௌம்புறோம்''னு பெருமாள் சார் எங்கிட்ட சொல்லிட்டு அவரும் அவரோட டீமும் அங்க இருந்து கிளம்புறாங்க. அவங்க கௌம்பிப் போறோம்னு சொன்ன பத்து நிமிஷத்துக்குள்ள எனக்கு நம்ம பெருசு சுந்தர்ட்ட இருந்து ஒரு போன் வருது... "அண்ணே ஆபீஸுக்கு போட்டி ருந்த பூட்ட ஏ.சி. இரும்பு ராட வச்சி நெம்பி ஒடைச்சி எடுத்துட்டாரு''ன்னாரு.
அட்றா சக்க, அட்றா சக்க... போலீஸ் இப்பதான் வேல பாக்க ஆரம்பிச்சிருக்கா, இல்ல இதுலயும் ஏதாச்சும் உள்ள சொருகி வக்கிறாய்ங்களான்னு தெரியாம... கண் இமைக்கிற நேரத்துல பூட்ட உடைச்சிட்டாய்ங்களாம். ஆக... பெருமாள் சார் சொன்னது சரியாத்தான் போச்சு. ரட்ஹற் ண்ள் ஞ்ர்ண்ய்ஞ் ர்ய்-னு தலைமை நீதிபதி கேட்ட இந்த வார்த்தை ஒர்க்அவுட்டாகி யிருக்கு. தலைமை நீதிபதி ஏ.ஜி.க்கு போன்பண்ணி சொல்லியிருக்காரு. ஏ.ஜி., டி.ஜி.பி.க்கும் கமிஷனருக்கும் போன்பண்ணி சொல்லியிருக்காரு. அப்போ கமிஷனரா இருந்தது திரிபாதி.
"உட்கார்ந்தவன் காலில் மூதேவி, ஓடுபவன் காலிலே சீதேவி'ன்னு ஒரு பழமொழி இருக்கு. ஓடியோடி வேலை செய்யுறவன் கால்ல சீதேவி இருப்பாங்களாம்... அதுதான் கொஞ்சம் இடிக்குது. சீதேவின்னா பணம். பணம் எங்க நம்மகிட்ட இருக்கு. எப்படியோ தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு நிக்காம ஓடிக்கிட்டே இருக்கோம். அப்படி ஓடுறது னாலதான் பெரிய பெரிய பத்திரிகை ஜாம்பவான்கள் அடிச்சு ஆடற ஆட் டத்துல இன்னைக்கு வரைக்கும் நின்னு ஆடுறோம். அப்படி ஆடாம உக்காந்து இருந்திருந்தா... பழமொழில சொன்ன மாதிரி மூதேவி புடிச்சி.... அட்ரஸ் இல்லாம போயிருப் போம். சீதேவிங்கிற செல்வம் இருக்கோ இல்லியோ... நக்கீரன் குடும்பத்தோட சோம்பல் இல்லாத உழைப்புதான் இன்னைக்கும் இந்த "போர்க்களம்' எழுதுற ஊக்கத்த குடுக்குது..
பூட்டு விஷயம் கொஞ்சம் பெருசா யிருச்சு. நக்கீரன் ஆபீசுக்கு பூட்டு போட் டுட்டோம்னு கொக்கரிச்சுட்டு எந்த வேளச்சேரி அசோக் ஆட்டம் போட் டுட்டுத் திரிஞ்சானோ, அந்த பூட்டை, போலீஸ்காரங்களே கேட் பக்கத்துல போலீஸையே கும்பலா சுத்தி நிக்க வச்சு ஏ.சி. செந்தில்குமார் பூட்ட தொறந்திருக் காரு. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சவுடனே... இன்னொரு குரூப் திபுதிபுன்னு ஆபீஸ பாத்து ஓடிவந்திருக்கு. அப்போதான் மேலிடத்துல இருந்து போலீசுக்கு ஸ்ட்ரிக்ட்டா ஒரு தகவல் வந்திருக்கும்னு நெனைக்கிறேன். அதுனால அவங்கள போலீஸ்காரங்க தடுத்து நிறுத்தியிருக் காங்க. பார்த்தீங்கன்னா அதுக்கப்புறம்தான் போலீஸ் வேன் எல்லாம் சடசடன்னு வந்து ஆபீஸ் பக்கத்துல நிக்குது. நிறுத்துனதோட விடாம, அவிய்ங்கள கொத்தா புடிச்சி அந்த வேனுக்குள்ள திணிச்சிட்டாய்ங்க. அந்த அசோக் எம்.எல்.ஏ., ஓ.பி.எஸ். பையன் ரவீந்திர நாத், மறுபடியும் ஆபீசுக்கு வந்திருந்த அந்த கரூர் செந்தில், அவிய்ங்க ளோட வந்த எடுபிடிங்க எல்லாரையும் அமுக்கி வேன்ல ஏத்திட்டாங்க. இப்பதான்... இந்த விஷயங்கள் லாம் மத்த பத்திரிகைகாரங்க காதுகள்ல விழுந்திருக்கு. இவ்வளவு பெரிய அநியாயம் நடந்தப்ப ரெண்டு, மூணு தலைவர்கள்ட்ட இருந்து மட்டும்தான் நமக்கு ஆதரவா அறிக்கை வந்துச்சு. வேற எந்த தலைவர்களும் அறிக்கையோ, ஆதரவோ காட்டல. நமக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாதுங்கிற மாதிரி நடந்துகிட்டாங்க. அதே மாதிரி சக பத்திரிகைகளும், போட்டி பத்திரிகைகளும் யாருமே ஆதரவா இருக்கல. ஒண்ணு ரெண்டு பத்திரிகைக்காரங்க டி.வி.யில பேசும்போது, "அவங்க அப்படிப்பட்ட நியூஸ போட்டுருக்கக் கூடாதுல்ல'ங்கிற கோணத்துல பேச ஆரம்பிச் சிட்டாய்ங்க. பெரிய பத்திரிகைல வேலை பார்க்கிறோம்ங்கிற எண்ணத்துல நியாயமா பேச வேண்டியத விட்டுட்டு வெட்டியா பேசிக்கிட்டுத் திரியுற ஒரு குரூப்பும் இங்க இருக்கு. அவிய்ங்க லாம் டி.வி.யில டிபேட்ல உக்காந்துட்டு இவங்க இப்படி செய்தி போட்டது தப்புன்னாய்ங்க.
முக்கியமா ஒருத்தர் எப்பவுமே ஜிப்பாவுல பூட்டோடவே திரியுற, சங்கரா... சங்கரான்னு ஆணி அடிச்ச மாதிரியே ஒவ்வொரு ஆபீசுக்கும் வேலைக்குப் போய், கையோட பையில இருக்கிற பூட்டவச்சி பூட்டிட்டு தீம்தரிகிட போடுவார். இன்னொருத்தர், நாரதர் மாதிரியே இருப்பார். "பெண் பத்திரிகைக்காரங்கள தேவை யில்லாம பேசி எதையோ புண்ணாக்கிக்கிட் டியே சேகரு' -இப்படி கொஞ்சம்பேர்... பத்திரிகைய இழுத்து மூடணும்னு பேசுனாய்ங்க.
இந்த இக்கட்டான நேரத்துல அநீதியை எதுத்து நிக்கிறதுதான் நீதின்னு "இந்து' ராம் சாரும், ஜவகர் அண்ணனும், மூத்த பத்திரிகையாளர் கோலப்பனும் நமக்கு ஆதரவா ரொம்ப துணையா இருந்தாங்க. கனிமொழி, அவங்க அப்பா மாதிரி ஒரு பத்திரிகையாளரா இருந்ததுனால... அடிக்கடி தொலைபேசியில நிலவரம் கேட்டுக்கிட்டிருந்தாங்க. ...
மற்றபடி அந்த சம்பவத்த கண்டிச்சி எந்த பத்திரிகையும், பத்திரிகைக்காரங்களும் அறிக்கை விடல. அவங்க எல்லாருக்கும் நம்ம மேல வெறுப்பான பார்வை ஒண்ணு இருந்துக் கிட்டேயிருக்கு. எப்படின்னா...? எந்த விஷயமா இருந்தாலும் மொதமொதல்ல இவங்களால மட்டும் எப்படி வெளிய கொண்டு வர முடி யுதுன்னு. அதுக்காகத்தான நாம நேரங் காலம் பாக்காம நாயா... பேயா... அலையுறோம். மக்க ளுக்கு எதிரான எந்த ஒரு சமூகப் பிரச்சினையா இருந்தாலும், சவாலான பிரச்சினையா இருந் தாலும் நாமதான் அத தோலுரிச்சிக் காட்டி வெளிக்கொண்டு வர்றதுக்கு முன்ன வந்து நிக்கிறோம். அதுக்காக உயிரக்கூட பணயம் வச்ச எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அப்பவாவது நம்மள பாராட்டலாம்ல... அதை யும் செய்யமாட்டாய்ங்க. ஏன்னா இவனுவ மட்டும் இதையெல்லாம் ரொம்ப கரெக்ட்டா பண்றானுங்களேங்கிற வயித்தெரிச்சல் அவங் களுக்கு. எப்பவுமே நமக்கு போட்டியா இருக்குற பத்திரிகைக்காரங்க அப்படித்தான நினைப்பாங்க.
சாயங்காலம் 5:00... 5:30... மணி இருக்கும் அந்த நேரத்துல "ஓ...ஓ...'ன்னு ஓலம் போட்டுட்டு பெரிய குரூப் ஒண்ணு என்னோட கொடும்பாவி ஒண்ண எடுத்துட்டு வர்றாய்ங்க. அவங்கள நம்ம ஆபீசுக்கு நாலு வீடுகளுக்கு முன்னாடி தடுத்து நிறுத்துறாய்ங்க. அந்த நேரத்துல நம்ம ஆபீஸ் கேட்டுக்கு முன்னால போலீஸ்காரங்கள வரிசையா போட்டுட்டாய்ங்க.
காலைல நடந்ததுக்கு... சாயங்காலமா போலீஸ வரிசையா நிக்க வச்சு யாரும் உள்ள போகாதபடிக்கு பாத்துக்கிட்டாய்ங்க. சூப்பர்... சூப்பர்..., எல்லாத்தையும் அவங்க பண்ணிமுடிச் சிட்டாய்ங்கள்ல, அதுக்குப் பிறகு போலீஸ் வந்து...? அதான்... நம்ம தமிழ் சினிமாவுல கடைசி ஸீன்ல போலீஸ் வர்றதா காட்டுவாங்கள்ல... அதுமாதிரி. (இது பழைய உதாரணம்தான்)
இப்போ ஒருபக்கம் போலீஸ் வரிசையா நம்ம ஆபீஸ் கேட் முன்னாடி நிக்கிறாய்ங்க... முண்டியடிச்சுட்டு வந்த குரூப் எல்லாத்தையும் அரெஸ்ட் பண்ணி கொண்டுபோயிட்டாங்க... கொடும்பாவி எரிச்சவங்கள தடுத்து நிறுத்திட் டாய்ங்க. இதுக்கு முன்னாடி குறைஞ்சது 25 கொடும்பாவியாவது எரிச்சிருப்பாய்ங்க. கடைசியா 26-ஆவதா இது... சரி, இருக்கட்டும்...!
மணி 5:30...
மணி 5:40...
6:00....
இன்னமும் ஆபீச நோக்கி அ.தி.மு.க. குரூப்பு வந்துக்கிட்டேதான் இருக்கு. நம்ம தெருவுல ரெண்டு பக்கமும் டிராபிக்க குளோஸ் பண்ணுனது குளோஸ் பண்ணுனதாவே இருக்கு...
இப்ப வந்த குரூப்போட பொம்பளைங் களும் கூட்டமா வராளுக...!
அவங்க கையில...?
(புழுதி பறக்கும்)