அன்றைய எம்.எல்.ஏ.வுடன் அராஜகம் செய்த இன்றைய எம்.பி!
"உள்ளதச் சொல்லுறதுக்கும் சல்லடை வேண்டியிருக்கு'ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. எப்பவுமே அ.தி.மு.க.காரங்க "நக்கீரனுக்கு வேற வேலையே கெடையாது. எப்ப பாரு... எங்கம்மா வையே எதுத்து எழுதிக்கிட்டு இருப்பானு வோ'ன்னு சொல்லுவாய்ங்கன்னு நமக்குத் தெரிஞ்ச நண்பர்கள் எங்கிட்ட சொல்லுவாங்க. எப்பவும் அதையே செஞ்சுக்கிட்டிருந்தா அப்படித்தான் எழுதுவோம். சரின்னு ஒரு சேஞ்சுக்கு, ஆடியோ ஆதாரத்தோட மேற்படி செய்தி வந்ததால வெளியிட்டோம்.
இந்த விஷயத்த பின்னாளில் டி.டி.வி. தினகரன் "தந்தி' தொலைக்காட்சிக்கு குடுத்த ஒரு பேட்டியில "எங்க அம்மா (ஜெ.வைத்தான்) நல்லா விரும்பி நான்-வெஜ் சாப்பிடுவாங்க. அவுங்க சாப்பிடுற நேரத்துல... நாங்க வியாழன், சனினு நான்-வெஜ் சாப்பிடமாட்டோம்னு சொன்னா, எங்கள சத்தம் போடுவாங்க. "சும்மா சாப்பிடுங்க... நானே நான்-வெஜ் சாப்பிடுறேன்...'னு அதட்டி எங்கள சாப்பிடச் சொல்லுவாங்க'' அப்படின்னு சொல்-யிருப்பாரு. அடக்கொடுமையே... நாங்களும் இந்த எழவத்தானே அட்டைப்படக் கட்டுரையா எழுதியிருந்தோம். அதுக்குத்தான் இப்படி பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க படுபாவிங்க.
ஒரு விஷயம்... நான் பெரிய காந்தி கிடையாது. எழுதுற தொடரும் அவர் எழுதுன சுயசரிதை மாதிரி கிடையாது. அதேநேரம், எதார்த்தம் விலகாம பார்த்துக்கணும்ங்கிறதுல தெளிவா இருக்கேன். அதனாலதான் தெரியாத்தனமா ஒரு செய்திய நக்கீரன்ல வெளியிட்டோம்னு போன இதழ்ல சொன்னேன்.
சரி விஷயத்துக்கு வர்றேன்...
"அடேய்... இது அந்த ஆளுல்ல...?''ன்னு திரும்பவும் ரொம்ப கூர்ந்து போட்டோவ பார்த் தேன். எம்.எல்.ஏ. அசோக்குக்கு பின்னாடி உக்காந் திருக்கிறது... எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு யோசிச்சா, அட... இது நம்ம ஓ.பி.எஸ்.ஸோட மூத்த பையன்.... இப்ப அ.தி.மு.க. தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத். மத்த போட்டோ எல்லாத்த யும் பார்க்குறேன். அதுல அ.தி.மு.க.காரங்க வந்தது, ஒழிக கோஷம் போட்டது, கல்லெறிஞ்சது, ஆபீஸ் "கேட்'ட ஒடைச்சது.... தீ வைச்சது... இப்படி எல்லாத்துலயும் அவங்க செஞ்ச அராஜகத்துல ரவீந்திரநாத்தும் கூட சேர்ந்து இருக்கறது பதிவாகியிருக்கு.
வந்தது ஓ.பி.எஸ். பையன்தானான்னு ஆபீஸ் தம்பிகள்ட்ட கேட்டு நான் கன்பார்ம் பண்ணிக் கிட்டேன். அவனேதான்... அவனேதான்...னு சொன்னாங்க. உடனே தம்பி கணேஷ்ட்ட அந்தப் படத்த ஸ்கேன்பண்ணி ரிப்போர்ட்டர் திண்டுக்கல் சக்திக்கு அனுப்பி கன்பார்மும் பண்ணிக்கிட்டேன்.
ஒண்ணு ரெண்டு போட்டோவுலதான் அவரு தென்படல. அசோக் எம்.எல்.ஏ. ஜெயல-தா படம் போட்ட நக்கீரன் புத்தகத்த கால்ல போட்டு மிதிப்பாம் பாருங்க. நக்கீரன் புக்ல போட்டுருக்கிறது ஜெயல-தா படம்தான... ஜெ.வ அம்மா, நொம்மா, எங்க குலதெய்வம், எங்க இதயதெய்வம்னுல்லாம் சொல்றாங்கள்ல... (இப்ப பிள்ளையார் சாமி படமோ, இல்ல வேற மதத்தோட சாமி போட் டோவோ கீழ கெடந்திச்சின்னா, டக்குனு கால எடுத்துட்டு, அத பவ்யமா தொட்டு கும்புட்டுட்டு, எடுத்து கையிலயோ, பையிலயோ வச்சுக்குவாங்க. இதுதான வழக்கம்.) அந்த நக்கீரன் புக்குல போட்டிருந்த படத்தப் பார்த்தீங்கன்னா, ஜெயல-தாவோட மூஞ்சி மொழு மொழுன்னு இருக்கும். அது தெரிஞ்சும் சதக்... சதக்குன்னு சாணி மிதிக்கிற மாதிரி போட்டு மிதிச்சாய்ங்க. (போன அத்தியாயத்துலயும் இத நான் சொல்-யிருப்பேன்.)
இவுங்க இவ்வளவு வசதி வாய்ப்புகளோட இருக்குறதுக்கு காரணமே அந்த அம்மாதான்னு இவனுங்க நெனைக்கணும்ல. ஆனா அதப்பத்தி கொஞ்சமும் நினைக்காம போட்டு மிதிச்சதுல ரவீந்திரநாத்தும் ஒருத்தனாத்தான் இருந்திருக்கான். இப்படி ஆபீஸ அட்டாக் பண்ண வந்த ரவுடி கோஷ்டியோட, ஆரம்பத்துலயிருந்து பூட்டு போடற வரைக்கும் அவிய்ங்க கூடவே இருந்திருக்கான். அப்படின்னா அதுக்குக் காரணம், ஜெயல-தா போட்ட உத்தரவு. ஓ.பி.எஸ்.ஸோட பையனே அப்போ இவ்வளவு தூரம் வந்திருக்கான்னா... இன்னும் தமிழ்நாடு பூரா என்னவெல்லாம் ஆட்டம் போட்டுருப்பாங்க.
தமிழ்நாடு முழுக்க இருந்து எவ்வளவோ அ.தி.மு.க.காரய்ங்க வந்திருக்காய்ங்க.. இந்த ஆள பார்த்து மட்டும் ஏன் நான் பரபரக்கிறேன்னா... "ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம்'னு சொல்லுவாங்கல்ல, அதுமாதிரி நமக்கு எதிரா யார், யாரெல்லாம் பின்னாடி இருக்காங்கன்றத தெரிஞ் சுக்கணும்ல? அந்தம்மாட்ட நல்ல பேரு எடுக்க ணும்னு நக்கீரனுக்கு எதிரா அவனவன் வெளையாடி யிருக்கான்... அட்டூழியம் பண்ணியிருக்கான். அப்படி யோசிச்சிப் பார்த்தா நாமளும் இதுல நல்ல பேரு எடுக்கணும்னு, ப்ளான் பண்ணி, ஓ.பி.எஸ். தன்னோட பையன அனுப்பியிருப்பார். அந்த மாவட்டத்தோட "ஜெ.' பேரவை செயலாளர் பதவியில் இருந்த ரவீந்திரநாத்த, ஏதோ பிரச் சினைன்னு பதவியி-ருந்து ஜெயல-தா கழட்டி விட்டுருச்சு. இப்ப அத திரும்ப வாங்கணும்னா நக்கீரன அடிச்சாத்தான் கிடைக்கும்னு வந்திருக்கலாம்.
இந்த நேரத்துல, என்னைய பார்த்தே ஆகணும்னு பதறிக்கிட்டு வந்த ஒருத்தர ஆபீஸ் சந்து வழியா கூட்டிட்டு வந்தாங்க தம்பிங்க. அவரு நம்ம வெல்விஷர். எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியவாதி, சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சி யாளர்னு (நம்ம பதிப்பகத்துக்கு நெறைய நூல்கள் எழுதியிருக்காரு) பன்முகத்தன்மை கொண்ட அண்ணன் ஜெகாதா. "ஓம்' பத்திரிகைக்கு பொறுப் பாசிரியரா இருந்த அண்ணன் முருகனுக்கு ரொம்ப நெருக்கமானவரு.
சென்னைக்கு வேற ஒரு விஷ யமா வந்தவரு, விஷயத்த கேள்விப் பட்டு ஆபீசுக்கு வந்திருக்காரு. வந்தவுடனே, "நான் வெளிய நின்னுக் கிட்டிருந்தேன். இந்த ஜனநாயக நாட்டுல உண்மையான பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரா, ஒரு பத்திரிகை ஆபீசுக்கு பூட்டு போட்டு புரட்சி செல்வியோட எடுபிடிக அரங்கேத்துன அராஜக கொடுமைய... இந்த நூற் றாண்டுக்கே ஆவணமா காமிச்சிட்டுப் போறத நேர்லயே பார்த்தேன் அண்ணாச்சி. அவங்க, இதுமூலமா நக்கீரனுக்குத்தான் பெருமை சேர்த்திருக்காங்க''ன்னு சொன்னாரு.
"என்னண்ணே... ஜனநாயக நாடு, பத்திரிகை சுதந்திரம், ஆவணம், கீவணம்னுட்டு, நாமளே இப்ப முழி பிதுங்கிட்டு உக்காந்திருக்கோம்... உக்காருங்கண்ணே மொதல்ல''
அவரே சொல்றாரு... "வெளியில நடந்த அநியாயத்த பார்க்கும்போது எனக்கு ஒண்ணு தோணுது அண்ணாச்சி. "அறச்சீற்றம் மிக்க ஒரு கொற்றவை ஆலயத்தின் கோட்டைச் சுவருக்கு முண்டியடித்துக் கொண்டு பூமாலை சாத்த மக்கள் கூட்டம் நிற்பதைப் போல தோன்றுகிறது அண்ணாச்சி''ன்னு அவரது ஸ்டைல்ல சொன்னாரு. நீங்க வேற... இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனா... அவரு சொன்ன வார்த்தை ஜாலத்தின் அழகு... என் குரு, அண்ணன் வலம்புரி ஜான் அவர்களை நினைவுக்கு கொண்டுவந்தது.
ரீ-கலெக்ட் பண்ணிப் பாருங்க...
ஒரு சின்ன பத்திரிகைய, மிருகத்தனமா கொடூரமா ஆயிரம் கைகள வெச்சிட்டிருக்கிற, கொஞ்சங்கூட தர்மமே இல்லாம, ஒவ்வொரு கையிலயும் கொடூர ஆயுதம், பொய் கேஸ், அடிதடி, கொடூரத் தாக்குதல்னு எல்லா கெட்டதுகளையும் கையில மொத்தமா வச்சிட்டு அரக்கித்தனமான ஒரு அரசாங்கம் நம்மள நசுக்க நெனைக்குதுன்னா... நாம எவ்வளவுதான் பொறுத்துட்டு சமாளிக்க முடியும்... ஆனாலும் சமாளிச்சோம்.
இதுக்கிடையில தம்பி ஜி.எம். சுரேஷ் பதறிக்கிட்டு வந்தாரு, "அண்ணே... நம்ம புக் ஸ்டால்ல யிருந்து தனுஷ் பேசுறாரு'ன்னு சொல்லி போன குடுத்தவரு, "அண்ணே கடையையெல்லாம் பூட்டச் சொல்றாங்களாம்'ன்னாரு. நம்ம ஆபீசுக்கு முன்னாடி இடது பக்கத்துல நம்ம நக்கீரன் புக் ஸ்டால் ஒண்ணு இருக்கு. அத இந்த சம்பவம் நடந்த உடனே பூட்டிட்டோம். ஆனா கடைக்கு மேல ஏறி அதுல மாட்டியிருந்த போர்ட குத்திக் கிழிக்கிறாய்ங்க பரதேசி நாய்ங்க. (காண்க படம்:) நான் என்ன நெனைச்சேன்னா... "கடைக்குள்ள பல டைட்டில்கள்ல நம்ம பதிப்பகம் வெளியிட்டிருந்த நெறைய புக்கெல்லாம் இருக்கும்... அத ஏதாவது பண்ணிட்டாங்களோ'ன்னு பதறுறேன்.
அப்போ சுரேஷ், "அந்தக் கடை இல் லண்ணே... நாம புத்தகச் சந்தை போட்டுருக்கோம்ல அது'ன்னாரு. ஒவ்வொரு வருஷமும் "பபாசி'ங்கிற அமைப்பு மூலமா புத்தகச் சந்தை நடக்கும். காயிதே மில்லத் காலேஜ், பச்சையப்பா காலேஜ் பக்கத்துல இருக்குற செயின்ட் ஜான்ஸ் பள்ளி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. இப்படி இடம் மாறிக்கிட்டே இருக்கும். எல்லா பதிப்பகத்துல உள்ளவங்களும் இதுல பங்கெடுத்துப்பாங்க. நாமளும் அதுல பங்கெடுத்து குலுக்கல் மூலமா ஒதுக்கப்பட்டிருந்த எடத்துல நக்கீரன் சார்பா மூணு கடைகள் போட்டிருந்தோம். நக்கீரன் ஸ்டால கொஞ்சம் பிரம்மாண்டமா டெக்கரெட் பண்ணி வச்சிருப்போம்
நம்ம. ஆபீஸ்ல பிரச்சினைன்னு தெரிஞ்சவுடன தம்பி சுரேஷ் இங்க வந்துட்டாரு. அவருதான் என்கிட்ட போன குடுத்து, தம்பி தனுஷ் பேசுறாருன்னு சொன்னது.
"என்னாச்சி தம்பி''ன்னு கேட்டேன்.
அப்போ தனுஷ், "அண்ணே... கீழ்ப்பாக்கம் ஏ.சி. தலைமையில ரெண்டு இன்ஸ்பெக்டர், நாலு எஸ்.ஐ., போலீஸ், பொம்பள போலீஸ் எல்லாம் பெருங்கூட்டமா வந்து எங்கள... ''
(புழுதி பறக்கும்)