அன்னைக்கு என்னை எப்படியாவது தீர்த்துக்கட்டிட்டு, ஒட்டுமொத்த நக்கீரன் அலுவலகத்தையும் தரைமட்டமா ஆக்கிடணும் என்பதுதான் "கலியுக பொம்பள இடிஅமீன்' ஜெயலலிதாவின் நோக்கமா இருந்துச்சு. அதுக்கு, ஜெய லலிதாவுக்குள்ள இருந்த உயர்சாதி மனப்பான்மையும் ஒரு பிரதான காரணம்.
நக்கீரனை தகர்த்துத் தரைமட்டமாக்கணும்னு போயஸ் கார்டன் கொலை முகூர்த்தம் குறிச்ச நாள் ஜனவரி 7, 2012.
சசிகலாவுக்கும் பிராமணக் கும்பலுக்கும் எப்பவுமே ஆகாது. கார்டன்ல யார் அதிகாரம் செலுத்துறதுங்கிற போட்டி, சசிகலாவுக்கும் பிராமணத் தரப்புக்கும் இடையே தொடர்ந்து இருந்துச்சு. அதேபோல் அந்த அதிகாரம் இரு தரப்புக்கும் இடையில், அடிக்கடி கை மாறுச்சு. இந்த லட்சணத்துல, ஜெயலலிதாவுக்கு, தான் உயர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாத்திங்கிற நினைப்பு அதிகம். அது ஒருவித ஆணவத்தையும் அவருக்குக் கொடுத்துச்சு. அதன் எதிரொலியை சட்டமன்றத்திலேயே கேட்க முடிஞ்சிது.
1991-96 ஆட்சிக் காலத்தில், தன் உயர்சாதி மனப்பான்மையை விட்டுக் கொடுக்காத ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே, "நான் ஒரு பாப்பாத்திதான். இந்த பாப்பாத்தி ஒரு திராவிட கட்சிக்கு தலைமையாக இருப்பதை நான் பெருமையா நினைக்கிறேன்''னு அகங்காரத் தோட சொன்னார். அப்படிப் பட்ட மேல்சாதிங்கிற எண் ணம் அவருக்கு அதிகம்.
அந்த நேரத்துல அன்புத் தோழிகளான ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் நடுவில் உரசல் வந்துருச்சு. அப்ப இவங்க இரண்டு பேர் கைல இவ்வளவு நாளா இருந்த பழிவாங்கும் ஆயுதம், இப்ப சசிகலாவுக்கு எதிராகவே திரும்புச்சு.
இதுக்கு முன்னாடியும் ஒரு தடவை சசிகலாவை, ஜெ.’விரட்டியடிச்சார். அதுக் குக் காரணம், அப்ப ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு சசிகலாவின் அளவு கடந்த ஆட்டமும், ஜெ.வின் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமணமும்தான்னு, அவாள் தரப்பே சொல்ல... ஜெயலலிதாவுக்கு சசிகலா மேல் கோபமான கோபம். அதனால, "இனி சசிகலாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்ல, ஒட்டும் இல்ல உறவும் இல்ல'ன்னு பேப்பர்ல எல்லாம் அறிவிச்சி, கார்டனை விட்டு வெளியே துரத்தினார். துரத்திய கொஞ்ச நாள்லயே சசிகலாவை, கார்ட னுக்குள்ள கூப்பிட்டுக்கிட்டார்.
2011, டிசம்பர் 19 அன்று பெங்களூருவில் உள்ள நட்சத் திர ஓட்டல். அங்கு மன்னார் குடி கும்பல் சேர்ந்து சதித் திட் டம் தீட்டியதாக "ஜெ.' காதுக்கு வருகிறது. அதை "ஜெ.'விடம் சேர்த்தவர் ஜம்முன்னு வேலை செய்த முன்னாள் டி.ஜி.பி.
சதி என்னன்னா?
"சட்டத்தோட பிடி இறுகுது. அக்கா உள்ள போயிரும். நானும் போயிருவேன். இத்தனை காலமா இந்தக் கட்சியை, ஆட்சியை காப்பாத்துனது நாமதான். இத அனுபவிக்கிற உரிமையும் நமக்குத்தான். அதனால நாங்க வர்ற வரைக்கும், மாமாவை (M.நடராஜனை) முதல்வராக இருக்க வைப்போம். அப்புறம் நாங்க வெளிய வந்ததும் பார்க்கலாம்''ங்கிற சீக்ரெட்ட, சீக்ரெட் இல்லாம பேசித் தொலைச் சிட்டாங்க சசிகலா. இத போன்மூலமா ஒட்டுக்கேட்டு மேற்படி டி.ஜி.பி., ஆதாரத்துடன் எடுத்து அப்படியே புண்ணியவதிகிட்ட போட்டுக் கொடுத்துட்டார்.
கேட்டதும் ஜங்கு ஜங்குன்னு குதிச்சி... ஒரு பேயாட்டம் ஆடித் தீர்த் துருச்சு. அன் புச் சகோதரி, அன்புத் தோழி தனக் காக கணவர் இனிசியலையே தொறந்தவர். இவரைத்தான் கழுத்த புடிச்சி வெளிய அனுப்பிட்டார் ஜெ. கூடவே கார்டன்லருந்து 10 பேருக்கு மேல வெளியேத்திட்டாங்க.
கார்டன்லருந்து சசியை வெளியில துரத்தியதும் "சோ'வோட காட்டுல சோன்னு மழை பெஞ்ச மாதிரி கொண்டாட்டம். சோ, சு.சாமி தரப்போட ரொம்ப நட்பு பாராட்டி னார் ஜெ. அப்ப சசி வகையறா கவனிச்சி வந்த, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கம்பெனிகளை யும், மிடாஸ் என்கிற சாராயக் கம்பெனியையும் அவாள் தரப்புக்கிட்ட ஜெயலலிதா ஒப்படைச்சார். அந்த வகையில் மிடாஸ் சாராய கம்பெனி நிர்வாகத்தை, சோவும் அவர் மகன் ஸ்ரீராமும் நிர்வாகம் பண்ண ஆரம்பிச்சாங்க.
அப்ப கட்சியையும் ஆட்சியையும் கவனிச்சி வந்த சசிகலாவுக்கு பதிலா, அ.தி. மு.க.வுல ஐவர் அணியை ஜெயலலிதா உருவாக்கி னார். அந்த ஐவர் குழுவுல, அமைச்சர்கள் ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் இவங்க தான் இருந்தாங்க. அவங்களும் ஜெயலலிதாக் கிட்ட படாதபாடு பட்டதெல்லாம் தனிக்கதை.
அந்த நேரத்திலும் பிரிவு தாங்காம, சசிகலாவை ஜெயலலிதா, கார்டனுக்கு கூப் பிட்டுக்குவார்னு எல்லாரும் நினைச்ச நேரத்தில், ஜெயலலிதாவின் கோபம் குறையலைங்கிறது மார்கழி மாசத்தில் வரும் சொர்க்கவாசல் வைபவத்தன்னைக்கு தெரிஞ்சிப் போச்சு.
சொர்க்கவாசல் திறப்பு அன்னைக்கு என்னாச்சுன்னா...?
2012 ஜனவரி 5-ந் தேதி மயிலாப்பூர் பார்த்தசாரதி கோயில்ல சொர்க்க வாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் நடந் துச்சு. ஏகப்பட்ட போலீஸ் குவிக் கப்பட்டுச்சு. காரணம் வழக் கம்போல் இந்த நாள்ல வரும் சசிகலா, இந்த முறையும் வருவார்ங்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. அதனால் பத்திரிகை யாளர்களும் அதிகமா கூடியிருந்தாங்க. ஏகாதசியை லைவ் ரிலே பண்றதுக்கு ஜெயா டி.வி.யும் வந்திருச்சு. அதனால் பொதுமக்களை கோயிலுக்குள் விடாம ஏக கெடுபிடி பண்ணினாங்க. ஏகாதசி சொர்க்கவாசல் தொறந்தா முதல்ல பசுமாட்டை உள்ளே கொண்டுபோவாங்க. அதுக்கு அடுத்து சசிகலாதான் போவார். அதுக்கப்புறம்தான் வி.ஐ.பி.க்கள், பக்தர்கள் எல்லாம். இந்தமுறை பசுமாடும் வந்துடுச்சு... சசிகலா வரலை. அதனால பக்தர்களை உள்ளே அனுப்ப ஆரம்பிச்சிட் டாங்க. கோயில் நிர்வாகத்துக்கிட்ட நம்ம ஆளுங்க அதுபத்தி விசாரிச்சப்ப...
"அவாளுக்கு பாஸ்கூட அனுப்பக் கூடாதுன்னு மேலிடத்தில் இருந்து ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டுட்டா. அந்தம்மாவோட கோபம், சசி மேல் இன்னும் குறையலைன்னு தெரியுது'ன்னு சந்தோஷமா சொன்னாங்க அவாள்லாம்.
இந்த சமயத்துல ஜெ.வுக்கு "மயிலாப்பூர் மாஃபியா'ங்கிற புதிய அடைமொழி கிளம்புச்சு. மயிலாப்பூர்ங்கிறது பிராமண லாபிக்கான குறியீடு. இதை கலைஞரும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் சொன்னதா, ஜெயலலிதாவின் காதுக்குத் தகவல் போயிருக்கு. அப்ப அடிக்கடி கார்டனுக்கு போய்க்கிட்டு இருந்த முன்னாள் அமைச்சர் பொன்னைய னிடம் இதுபத்திப் பேசிய ஜெயலலிதா...
"இவங்க ரெண்டுபேரும் என்கூட இருக்குறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்றாங்க. இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர். காலத்துலயே கட்சிக்குள்ள இருந்துச்சு. அப்ப எம்.ஜி.ஆர். என்ன சொன்னார் தெரியுமா?''ன்னு கேட்டு அதுக்கான பதிலயும் அவரே சொல்ல ஆரம்பிச்சிருக்கார்.
"அது, நான் அரசியல்ல நுழைஞ்ச நேரம். எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால் ஊர் ஊராச் சுத்த முடியாதுன்னும், அதேபோல கலைஞருக்குப் போட்டியா ஜானகியையும் கொண்டுவர முடியாதுன்னும் சொல்லி, அதுக்கு இனி அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்ட்ட சொன்னார். அதோட கொ.ப.செ. பதவியையும் கொடுத்தார். அப்ப கே.ஏ.கே., எஸ்.டி.எஸ். போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப நீங்களும் (பொன்னையன்) இருந்தீங்க. ’நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடுதான் இருக்கு. அதன் கொள்கையப் பரப்ப, ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காதுன்னு நீங்களும் சொன்னீங்க. அப்ப எம்.ஜி.ஆர்., "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கறீங்களா? பிராமின்னா குழைஞ்சி குழைஞ்சி பேசி, காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட் பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம் இங்க இருக்கும் நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு, ஸ்பென்சரில் இருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி வரச்சொல்லி, எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால் அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை ஏன் பிராமினா பாக்குறீங்க'ன்னு எம்.ஜி.ஆர். கேட்டார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் என்னை மயிலாப்பூர் மாஃபியான்னு சொல்றாங்க''ன்னு சிரிச்சிருக்கார்.
நமக்கு இதெல்லாம் தெரிய வந்துச்சு. பிராமணர்கள்ட்ட மட்டுமே நல்லபேர் இருக்குற "ஜெ.'வுக்கு நக்கீரன்ல இந்தக் கட்டுரை வந்தா, அ.தி.மு.க. தொண்டர்கள்ட்டயும் பாசிட்டிவ் இமேஜ் வரும்னு மடத்தனமா யோசிச்சு... அட்டைப்படக் கட்டுரை ஒண்ண வெளியிட்டோம்.
ஏழரைய எட்டு வட்டிக்கு வாங்குனது போல இருந்துச்சு அந்த அட்டைப்படக் கட்டுரைத் தலைப்பு...
"மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்.''
(புழுதி பறக்கும்)