pp

(11) வீட்டையும் விட்டு வைக்காத தாக்குதல்!

ன் வளர்மதி அக்காவையும், கலை ராஜனையும் அடிக்கடி, சுத்திச் சுத்திச் சொல்றேன்னா, அவங்க குரூப்போட அட்டாக் பின்னணி அப்படி.

அண்ணன் வடிவேலு நடித்த "23-ஆம் புலிகேசி' படத்துல... "முடியல... முடியல... ஒரு புறாவை தின்றுவிட்டு நான் படும்பாடு... ஒரு சிறிய புறாவுக்கு போரா... பெரிய அக்கப்போராவல்லவா இருக்கிறது...'' என்பார். அதுபோல, பத்திரிகைல ஒரு செய்தி போட்டதுக்காக, உலகத்துலயே இப்படி ஒரு மோசமான அட்டாக்க நடத்துன ஒரே ’"பொம்பளயாளு'’ஜெயலிதாவாத்தான் இருக்க முடியும்.

Advertisment

தன்கிட்ட இருந்த மோசமான அத்தனை அதிகாரத்தையும் கையில எடுத்து, நக்கீரனை நாசம் பண்ணணும், துவம்சம் பண்ணணும், தன் ராட்சஸக் காலுக்குக் கீழ வச்சி, ’நறநறன்னு நசுக்கணும்னு ஒரு வெறில மேடம் ஜெயலலிதா இருந்துச்சு.

அந்த ஹாட்கோர் கிரிமினல்ஸ் வந்தாங்கன்னா... அவிய்ங்க மட்டுமா வந்தி ருப்பாய்ங்க... அவிய்ங்ககூட எத்தனை அடிப் பொடிங்க வந்திருப்பாங்க,… எவ்வளவு ரோக்குகள் வந்திருப்பானுங்க,… அதையெல்லாம் நினைச்சா சுகர் வந்தவங்க பட்டுன்னுட்டு தலசுத்தி விழற மாதிரி… நாம அப்படியே கிறுகிறுத்து உழுந்துடுவோம். இப்படி எல்லாம் ஆபத்து இருந்துச்சுன்னு சொன்னா யாரும் நம்பவும் மாட்டாங்க.

செய்தி சேகரிக்க வந்த பத்திரிகைக்காரங்க, டி.வி.காரங்க தெறிச்சி ஓடறதை, அப்ப நாம எடுத்த படங்களப் பாத்தாலே தெரியும். அடுத்தடுத்த நாள்ல, எல்லா பத்திரிகைலயும்,…அது தினத்தந்தியாகட்டும், தினமலராகட்டும், தினகரனாகட்டும், மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசாகட்டும்... எல்லா பத்திரிகைலயும் அந்தக் கொடுமையான அட்டாக்க பத்தி செய்தி வந்துச்சு. எல்லாருமே அத டச் பண்ணியிருந்தாங்க..

Advertisment

இதுக்கிடைல, நம்ம ஆபீச அட்டாக் பண்ண பொம்பளைங்க டீம் பொதபொதன்னு வந்துட்டாங்க.

அதுல, குறிப்பா அஞ்சுலட்சுமின்னு மகளிரணி அக்கா. அதப்பத்தி இந்த உலகத்துக்கே தெரியும். ஒரு பெரிய டீமோட வந்து ஆட்டத்த ஆரம்பிச்சிடிச்சி. அந்த அக்காவை யார் மறக்கறாங்களோ இல்லையோ, சுப்பிரமணியசாமி மறக்கவே மாட்டார். மேப்படி வரவேற்பு பத்துன மேட்டர போனவாட்டி சொல்லியிருந்தேன்.

அந்த சாதனைக் காக அஞ்சுலட்சுமிய, ஜெயலலிதா கூப்பிட்டுப் பாராட்டி கௌரவப் படுத்துனதையும் படிச் சிருப்பீங்க. இதுதான் அந்தம்மாவோட குணம். அவுங்க எதிரிய அசிங்கப் படுத்தினா, பாராட்டு வாங்க. அட்டாக் பண்ணினா பதவியைக் கொடுத்து கௌரப் படுத்துவாங்க. இது அவர் கடைப்பிடிச்ச பாலிஸி.

pp

மேற்படி அஞ்சுலட்சுமி அக்கா, நம்ம ஆபீசுக்கு முன்னாடி, அன்னைக்கு வந்து அப்படி ஒரு ஆட்டம் போட்டுச்சு. படத்தப் பாத்தாவே அந்த ஆட்டம் எப்படிப் பட்ட ஆட்டம்ன்னு தெரியும் . நம்ம ஆபீசுக்கு வர்ற வழியில, ஏதோ ஒரு பத்திரிகை கடையில இருந்த பூரா நக்கீரனை யும் அந்தக்கா அலேக்கா உருவிக்கிட்டு வந்துடுச்சு.

நீங்க பெட்டிக் கடைகள்ல பாத்திங் கன்னா, கொடிக்கயிறு மாதிரி குறுக்க ஒரு சணலக் கட்டி, அதுல பத்திரிகைகள தொங்க விட்ருப்பாங்க. அப்படி ஏதோ ஒரு கடைல தொங்கவிட்ருந்த பூரா நக்கீரனயும், அந்தக் கொடிக்கயிறோட அந்தப் பொம்பள அறுத்துட்டு வந்திருக்கு.

அத கைல வச்சிக்கிட்டு, நம்ம நக்கீரன ஒண்ணு ஒண்ணா எரிக்கிது. அதோட நிக்காம, ” "அவன் வீடு, இங்கதான் எங்கயோ பக்கத்துல இருக்கு... சும்மா வுடக்கூடாது. அந்த வீட்டுக்குள்ள நாம பூந்துறணும்''னு, அது அடுத்த திட்டத்த சொல்ல ஆரம்பிச்சிடிச்சி. அந்த அட்டாக்க காட்டியும், ஜெயலிதாகிட்ட வீராங்கனைன்னு பேரு வாங்கணுமே... அதுக்காக. இது நம்ம காதுக்கு வந்தப்ப, மனசு பக்குன்னு ஆயிருச்சு.

ஏன்னா... நாமளா தேர்ந்தெடுத்ததுதான் இந்த பத்திரிகைத் தொழில். திட்டமிட்டெல்லாம் இந்தத் தொழிலுக்கு நாம வரலை. ஊர்ல இருந்து வரும்போது எங்க அப்பா, நாலு கோணிப்பை நிறைய ரூவா நோட்ட நிரப்பிக் கொடுத்து, "இந்தா...…இந்த நாட்ட திருத்திட்டு வாடா'ன்னு என்னைய அனுப்பல. பொழப்பு தேடி சென்னைக்கு வந்தோம். வந்த எடத்துல நக்கீரன ஆரம்பிச்சோம். நம்பிக்கையான தம்பிகள் பக்கபலமா இருந்தாங்க. கொஞ்சம் நெஞ்சுல வலு இருந்துச்சு. இதை வச்சிக்கிட்டு நக்கீரன் மூலம் தப்ப... தப்புன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்.

தப்ப தப்புன்னு சொன்னதுக்காக, நம்மள ’தப்பு... தப்புன்னு சாத்துறானுங்க படுபாவிய்ங்க.

ஆக, இது நாமளா தேர்ந்தெடுத்த தொழில். அதனால, சம்பந்தமில்லாம நம்ம குடும்பம், எதுக்கு இதுங்கக்கிட்ட சிக்கணும்னு மனசு படபடக்க ஆரம்பிச்சிடிச்சி.

ஆபீஸுக்குப் பக்கத்துலயே நமக்கு வீடு. ஏன் பக்கத்துலயே வீடுன்னா, எந்தப் பிரச்சினை வந்தாலும் பாத்துக்கலாமேன்னு நெனைச்சிதான் அப்படி. அதுல ப்ளசும் இருக்கு. மைனஸும் இருக்கு. இப்ப, அது மைனசாயிடுமோன்னு கொஞ்சம் திகைச்சிப்போயிட்டேன்.

வீடு, உள்ளுக்குள்ள பாதுகாப்பான பிளாட் வீடுதான். இருந்தாலும் உடனே வெளி கேட்டையெல்லாம் பூட்டி, பாதுகாப்புக்கு ஆளுங்களயும் நாம நிறுத்திட்டோம். அந்த அட்டாக் நேரத்தில் வீட்டுக்குள்ள இருந்தவங்க எப்படி ஃபீல் பண்ணுனாங்க.… அவங்க அந்த நேரத்தில் என்ன மனநிலைல இருந்தாங்கன்னும் நான் சொல்லியாகணும்.

oo

ஷாட்டை கட் பண்ணி வீட்டுக்குப் போவோம்...

நம்ம ஆபீஸ்ல அட்டாக் ஆரம்பிச்சப்ப, எங்க வீட்ல என் துணைவியாரும், என் பெரிய மக பிரபாவதியும் மட்டும்தான் இருந்தாங்க. பிரபா, அந்த சமயம் மணிப்பூர்ல எம்.எஸ். கம்யூனிகேசன் படிச்சிக்கிட்டு இருந்தாங்க. பொங்கல் லீவுக்காக ஒரு 10 நாளைக்கு முன்னாடியே வந்துட்டாங்க. என் தம்பி குருசாமிக்கு பிரசாந்த்து, ராமுன்னு ரெண்டு பையன்ங்க. என் ரெண்டாவது பொண்ணு சாருமதி. இவங்க மூணு பேரையும் அழைச்சிக்கிட்டு … என் தம்பியோட துணைவியார், அவங்க ஸ்கூல் ஓப்பன் டேவுக்காகப் போயிட்டாங்க.

அப்ப எங்க அப்பாவும் வீட்ல இல்ல, அக்குபஞ்சர் சிகிச்சைக்காக டாக்டர் நாசர்கிட்ட போயிருந்தாங்க. அதனால் அந்த நேரத்தில் என் வீட்டம்மாவும், என் பெரிய மகளும்தான் வீட்ல இருந்தாங்க. கூட அப்ப இருந்த இணை ஆசிரியரின் மகன் அஸ்வந்த் தம்பியும் இருந்தார்.

அன்னைக்கு (7-1-2012) காலையில அட்டாக் ஆரம்பிச்சதும்…’அக்கா... அக்கா...…அக்கா...ண்ட்டு கூ....கூ...ன்னு வீட்டுக்குக் கீழ் போர்ஷன்ல இருந்த பொம்பளைங்களும், பைண்டிங்ல வேல செஞ்ச பொம்பளைங்களும் சத்தம் போட்டுக்கிட்டே மேல ஓடியிருக்காங்க. வெளிக்கதவு லாக் பண்ணியிருக்கும்... அதனால வீட்டுப் படியேறி வந்து, கதவ படபடன்னு தட்டி “அக்கா, "நம்ம ஆபீச கும்பல் கும்பலா வந்து அடிக்கிறாங்க. எல்லாத்தையும் உடைக்கிறாங்க'’ன்னு அவங்க ’குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்ருக்காய்ங்க.

இதப் பார்த்துட்டு, எங்க வீட்டம்மா...

நீங்க நினைக்கிற மாதிரி என் வீட்டுக்காரம்மா "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துல வர்ற ஜக்கம்மா கிடையாது. அந்தப் படத்துல... கட்டபொம்மன் போருக்குப் போகும்போது, தன் மனைவி ராணி ஜக்கம்மாவிடம் விடைபெற்றுச் செல்வார்.

அந்தக் காட்சியில்....

"எதிரியின் ரத்தம் குபுகுபுவென்று கொப்பளித்து மேலெழும்பி... களத்தில் நிறையப் போவதுதான்... அதனால் விளையப் போவது... அதுதானே உன் ஆசை... அதுதானே உன் ஆசி ஜக்கம்மா...'' என்பார்.

பதிலுக்கு ஜக்கம்மா...

"ஆம்! என் கணவர் எத்தனை சிரம் கொணர்ந்தார் என எண்ணி எண்ணி எண்ணி மாளாது... அது ஒரு கோடி இருக்கும் போ... கொண்டுபோய் கொள்ளைக் காட்டிலே கொட்டு. அதில் எருக்கு முளைத்து அதை எருவாக்கி...'' -இப்படி வசனம் இருக்கும்.

எங்க வீட்டம்மா ஒண்ணும் வீரபாண்டிய கட்டபொம்மன் பொண்டாட்டி ஜக்கம்மா மாதிரி தைரியமா... "இந்தாங்க வாள்... வாசல்ல கத்துறவனுங்கள விடாதீங்கன்னு சொல்ற அளவுக்கு வீரப்பெண்மணி கிடையாது. ..அவுங்களப் பார்த்தீங்கன்னா... நீங்க மிரண்டுருவீங்க. அப்படியே நமக்கு ர்ல்ல்ர்ள்ண்ற்ங். நானும் கட்டபொம்மன் கிடையாது.

என் துணைவியார் ரொம்ப அப்புராணி. பார்க்க ரொம்ப சாது. அதனாலதான் எல்லாரும் அவுங்க தலையில மொளகா அரைப்பாங்க. நல்லவேளயா அன்னைக்கி என் பெரிய மக கூட இருந்தாங்க. இல்லன்னா ரொம்ப கஷ்டம். எங்க வீட்டம்மாவும் பதறிப்போயி, எனக்குப் போன் பண்றாங்க. "ஐயய்யோ... பொம்பளைங்கள்லாம் அலறிக்கிட்டு வர்றாங்களே.. .என்ன ஆச்சுங்க?''ன்னு கேட்கறாங்க.

நானோ, "ஒண்ணும் இல்லீங்க... கொஞ்சம் பேரு அடிச்சிட்டு போயிட்டாங்க. இன்னும் கொஞ்ச ஆளுங்க வாசல்ல இருக்காங்க. போலீஸுக்குத் தகவல் சொல்லி, அவங்களும் வந்துட்டாங்க. (இந்த எழவு போலீஸ் அப்ப வரவே இல்லை) அதனால... "ஒண்ணும் பயமில்ல''ன்னு சொன்னேன். ஆனாலும் அவங்க "ஓ'ன்னு அழறாங்க.

அந்த நேரத்துல குடும்பத்துல இருக்குறவங்க, அந்த வெறிக்கும்பல்கிட்ட மாட்டிக்கக் கூடாதேன்னு அதிரடியா சில வேலைகளச் செய்யறேன்...

(புழுதி பறக்கும்)