(94) ஆபீஸ் கதவுக்கு ராயல் சல்யூட்!
"விட்ட குறை தொட்ட குறை'ன்னு சொல்லுவாங்க பாருங்க, அதுமாதிரி நமக்கும் அந்தம்மாவுக்கும் பகை வரும்னு நெனைச்சிப் பாத்திருப்பமா? நான் அவுங்க வீட்டுல போய் நாலஞ்சு நாளு தேவுடு காத்து உக்காந்திருக்கேன். அப்படியிருந்தும் அந்தம்மாவ பாத்தது கிடையாது. முரட்டு பங்களாதான் அது. ஏற்கனவே நான் சொன்னது மாதிரி நமக்கு இள ரத்தம்... வேலை பாக்குற இடத்துக்கு எதாவது பண்ணணும்னு நெனைச்சித்தான் அங்க போய்த் தொலைஞ்சேன்.
அது என்ன எழவு... "ரொம்ப நாளைக்குப் பின்னாடி அவிய்ங்களுக்கும் நமக்கும் இத்தாத்தண்டி பிரச்சினையா வரும்... அந்தம்மா தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா ஆகும், அதப்பத்தி நாம எழுதுவோம்... அதுக்காக நம்மள பழிவாங்கும், ஓட ஓட வெரட்டும்...'னு அப்ப நெனைச்சிப் பாத்துருப்பமா? சத்தியமா கெடையாது. இன்னிக்கு நெனைச்சிப் பார்க்குறோம். காலக்கெரகம் நம்மளோட 30 வருஷமும் இந்த அம்மாவோடயே போராடிப் போராடி ஏதோ கை, காலு பாதி சொகத்தோட உங்க முன்னாடி நடந்த எல்லா சுக துக்கங்கள யும் பதிவு பண்ணுறோம்... அம்புட்டுதான்.
இத்தனை எழவையும் பண்ணி குடம் குடமா நம்மள தண்ணி குடிக்க வச்சு, அதுவும் அண்டா... அண்டாவா தண்ணியக் குடிச்சு, அதுக்குப் பலனா ஜெயிலுக்குப் போய்... கடைசியில என்னத்த கண்டுச்சு. சாகுறப்போ ரெண்டு காலும் இல்லாம அனாதையா போய்ச் சேந்துச்சு. இப்ப அடிச்சுக்கிறாய்ங்க பாருங்க...
ஓ.பி.எஸ். இப்ப சொல்றாரு...
"மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரா இருந்த (ஹெல்த் மினிஸ்டர்) விஜயபாஸ்கர்ட்ட நானே சொன்னேன். "விஜயபாஸ்கர், அம்மா வுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டனும், பொதுமக்க ளும் நம்மை வீடு தேடி வந்து அடிப்பான்... ஞாபகத்தில் வைத்துக் கொள்' என்று சொல்லி, அம்மாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கலாம் என்று சொன்னபொழுது, அவர் என்ன காரணத் தாலோ மறுத்தார்.''
அதுக்குப் பதிலா நம்ம அண்ணன் விஜயபாஸ்கர்... "அபாண்டமான, தவறான பொய்ச் செய்தியை சொல்வது என்பது, தாம் கோட்டைக் கொத்தளத்துல ஆட்சி, அதிகாரம், படை, பரிவாரம், சுழல் விளக்கு, சல்யூட் இவ்வளவும் இருந்தப்ப... எதுவுமே பேசாம வாய்மூடி மௌனியாக இருந்த ஓ.பன்னீர்செல் வம், இன்னிக்கு பதவி இல்லைங்கிற காரணத்து னால விரக்தியில, அவர் மனம் குழம்பிப்போய் தவறான கருத்துக்களை இந்த நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கிறார்''னு பதில் சொல்ல...
அதுக்கு குழாயடி சண்டகணக்கா... நம்ம ஓ.பி.எஸ்., "ரெண்டாவது ப்ளோர்ல மாண்புமிகு அம்மா இருந்தாங்கள்ல. அப்ப.... 7 பேர அவ ரோட கையாளுகளா போட்டு வச்சிருந்தாரு...''
7 பேரு கையாளுகளா? இது புதுக்கதையா இருக்கே...
என்னவெல்லாம் ப்ளான் பண்ணி அந்தம்மாவ குளோஸ் பண்ணியிருக்காய்ங்க பாருங்க மக்களே...!
அதுக்குப் பதிலா நம்ம வி.பாஸ்கரு, "அவர் தரம்தாழ்ந்து போய்விட்டார் என்பதை உங்களிடம் நான் பகிர்ந்துகொள்கின்றேன். தொடர்ந்து விசாரணைக் கமிஷன், விசாரணைக் கமிஷன் என்று சொல்கிறார்கள்... விசாரணைக் கமிஷன் என்று சொன்னால்... விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் ஓ.பன்னீர்செல் வம்''தான்னு சொல்றாரு.
அட்றா சக்க... அட்றா சக்க... இப்பதான் நல்லா சூடு புடிக்குது. எப்படியும் காலு வெட்டுனதச் சொல்லுவாய்ங்கன்னுதான் நான் வெயிட்பண்றேன். கொஞ்சம் வெயிட்பண்ணு வோம் சொல்லுவாய்ங்க... என்ன, என்ன மாதிரி கால எடுத்தோம், எதுக்காக... யாரு சொல்லின்னு சொல்லீருவாய்ங்க... சொல்லீருவாய்ங்க ம்... இருக்கட்டும்... இருக்கட்டும்!
இந்த ஜெயலலிதா நம்மள எப்படியெல் லாம் ஆட்டுவிச்சிதுன்னு, பெருமாள் சார்கிட்ட ஒரு இன்ஸ்பெக்டரு நல்லவன் மாதிரி நடிச்சு பேசுனாரு பாத்தீங்களா?... அதாவது "உங்க ஆளுக்கும் அவங்களுக்கும் 95-லேயே ஒரு பகை இருக்கு, பிரஸ் கவுன்சில்ல அவங்க மேல கம்ப்ளைண்ட் குடுத்துட்டாரு'ன்னு சொன்னா ருல்ல...
அதுக்கு முன்னாடி 90-லயே, அந்தம்மாவுக்கு மகள் இருக்குன்னு செய்தி போட்டது நாமதான். சாகிறவரைக்கும் அந்தம்மா, அது தன்னோட மக இல்லன்னு சொல்லவே இல்ல. நாம சொன்னதுக்கு மறுப்பும் விடல.
நம்மமேல உள்ள பகைக்கு அந்த விஷயமும் ஒரு காரணமா இருக்கலாம்னு நம்மளப் பத்துன பழைய விஷயங்கள எல்லாம் ரீ-கலெக்ட் பண்ணுனேன். அதனாலதான் எல் லாத்தையும் ஒங்கள்ட்ட பதிவு பண்ணுனேன். தொடர்ந்து பாத்துக்கிட்டிருக்கிற சீனியர் பத்திரி கையாளரும் இதையேதான் காதக் கடிச்சார்.
இப்ப "ஷாட்'ட கட் பண்ணி மறுபடியும் ராயப்பேட்டை ஆபீசுக்கு வர்றேன். இங்க வந்தா போலீஸ் என்னைத் தேடி ஆபீசுக்குள்ள எங்கெங்கெல்லாமோ போய் சுத்தியும் உருப்படியா ஒரு தகவலும் கெடைக்காம வெறுங்கையோட வெளியே துப்பு ஒண்ணு கிடைச்சிதுன்னு ஓடுனாங்கள்ல... அங்க ஒண்ணும் பேரல... நான்தான் மாறுவேஷத்துல பரதேசி மாதிரி சுத்துறேன்... நம்மள இவிய்ங்க எப்படிப் புடிப்பாய்ங்க.
15 அடி உயரத்துல இருக்கிற ஆபீஸ் கதவ நாம லாக் பண்ணிட்டதுனால யாராலயும் மறுபடியும் உள்ள வர முடியல. அந்த நேரத்துல கதவுதான் நம்மள காப்பாத்திச்சு. இப்பகூட அந்தக் கதவை பாக்கும்போதெல்லாம் ஒரு ராயல் சல்யூட் அடிக்கத் தோணும். இப்ப அந்த டோர்ல "விக்கெட் கேட்'ட மட்டும் தொறந்து, தேவைப்பட்டா திறந்து விடுறது மாதிரி நம்ம செக்யூரிட்டி சிவகுமாரும், எலக்ட்ரிஷியன் ரவி, டிரைவருங்க, பைண்டிங்ல உள்ள தம்பிங்க எல்லாருமா சேர்ந்து அந்த கதவு பக்கத்துல நின்னு ஆபீசுக்குப் பாதுகாப்பா மக்யா நாளும் கால் கடுக்க நின்னாங்க.
அந்த நேரத்துல பேங்குக்கு போயிட்டு வந்த தம்பி பிரான்ஸிஸ், கேட் பூட்டியிருந்தது னால வெளிய நின்னிருக்காரு. பெருமாள் சார், சிவகுமார், எட்விக், வர்கீஸ் எல்லாரும் ஆபீஸ்ல தான் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, உடனே பெருமாள் சாருக்கு போன் பண்ணி, "சார் கொஞ்சம் குரூப் குரூப்பா மறுபடியும் போலீஸ் வந்து மஃப்டில நிக்கிறாங்க. கொஞ்சம் அதிகமாவே தென்படுறாங்க. ஏதோ ப்ளான் பண்ற மாதிரிதான் யூனிபார்ம் போலீஸ பாத்தா தெரியுது''ன்னு சொல்லி வாய மூடல...
அடுத்த கட்ட நடவடிக்கைகள தீவிரமா பார்க்கணும்னு ஆபீஸ்ல எல்லாரும் வேக, வேகமா பாத்துக்கிட்டிருக்காங்க. அப்போ ஆபீஸ்ல இருந்து ஒருத்தரு வெளிய போக கேட்ட திறந்திருக்காங்க அவ்வளவுதான்... கெடைச்சிதுடா சான்ஸ்னு அந்தக் கதவ படார்னு இடிச்சுத் தள்ளிட்டு... கும்பலா வெளிய நின்னிருந்த போலீஸ்காரய்ங்க அத்தனபேரும் பொத... பொத...ன்னு உள்ள வந்துட்டாய்ங்க. எப்படி யும் 40, 50 பேருக்கு மேல இருப்பாய்ங்க. இது ராத்திரி நேரத்துல நடக்குது. வந்தவங்க சட... சட..ன்னு வேகமா ஆபீசுக்கு மேல ஏறுறாய்ங்க.
என்ன ப்ளானோட வர்றாய்ங்களோ, வேற என்ன... என்ன... கழிசடத் திட்டம்லாம் போட்டு ருக்காய்ங்களோ? பக்.. பக்...னு இருந்துச்சு.
அந்த நேரத்துல போட்டோகிராபர் தம்பி ஸ்டாலின் ஆபீசுக்குள்ளதான் இருந்திருக்காரு. அவரு ரொம்ப வேகமா மேல ஏறி வந்த எல்லா போலீஸ்காரய்ங்களயும் போட்டோவா எடுத்துத் தள்ளிட்டாரு.
அப்ப வந்திருந்த ராஜேந்திரன்ங்கிற ஜாம் பஜார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரு, ஸ்டாலினைப் பாத்து, "ஏய்யா... நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்... இல்ல, சினிமா நடிகரா...? நீ எடுத்துக்கிட்டே இருக்க. இனியும் நீ போட்டா எடுத்தேன்னா நான் வேற மாதிரி ஆக்ஷன் எடுக்கவேண்டியிருக்கும்''ன்னுருக்காரு.
தம்பி ஸ்டாலின் கொஞ்சம் சாப்ட் கேரக்டர். இருந்தாலும் இதையெல்லாம் மதிக்கிற ஆளு கெடையாது. "நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க... இது எங்க இடம்...'னு அவரு வேலைய கரெக்ட்டா பாத்துக்கிட்டிருந்திருக்காரு.
இந்த முறை நடக்கிறது ஒரேநாள்ல... ரெண்டாவது ரெய்டு. இப்ப வந்தவய்ங்க பெரிய இன்ஸ்ட்ரக்ஷன்களோட வந்துருக்காங்கன்றது மட்டும் தெரியுது.
போலீஸ்காரங்க வந்த நோக்கமே, நான் உள்ளுக்குள்ளதான் எங்கேயோ பதுங்கி இருக் கேங்கிற எண்ணத்தோடதான் வந்திருக்காய்ங்க. நான் தப்பிச்சிப் போனது எதுவுமே அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாததுனால, "அவர உள்ள வச்சிக்கிட்டு எங்கள ஏமாத்துறீங்க'ன்னு சொல்லிருக்காய்ங்க. ஏன்னா... அவங்க, ஸ்காட்லாந்து போலீஸுக்கு அடுத்த இடத்துல இருக்கிறவங்கள்ல?
"ஸார்... நாங்க ஸ்ட்ரிக்ட்டா பாத்துக்கிட்டி ருக்கோம். அவரு வெளிய போறதுக்கு வாய்ப்பே இல்ல. நாங்க எல்லா இடத்துலயும் தரோவ்வா செக் பண்ணிக்கிட்டிருக்கோம் ஸார். அந்த ஆளு எங்கயும் போகல... உள்ளதான் இருக்காரு, எப்படியும் இந்த நைட்டுக்குள்ள ஆளத் தூக்கிருவோம் ஸார்...!'
(புழுதி பறக்கும்)