(91) ஜெ.வை எச்சரித்த பிரஸ் கவுன்சில்!
"சார்... பிரஸ் கவுன்சில்ல நானும் என்னோட தம்பிகளும் வீரப்பன் காட்டுக்குப் போகையில, காட்டுல வச்சு என்னையும் என்கூட வர்ற ரிப்போர்ட்டர், போட்டோகிராபரையும் சுட்டுக் கொல்லணும்னு தமிழ்நாடு எஸ்.டி.எப். தலைவரா இருந்தா தேவாரம் ஒரு ஆர்டர் போட்டுருந்தாரு. அந்த ஆர்டர் போட்டதுக்கான ஆதாரம் நமக்கு அவங்க சைடுல இருந்தே கெடைச்சிது. உடனே அதவச்சி பிரஸ் கவுன்சில்ல நவம்பர் 1995-ல தந்தியும், புகாரும் கொடுத்தோம். பிரஸ் கவுன்சில் அத சீரியஸா எடுத்துக்கிட்டாங்க. அப்போ பிரஸ் கவுன்சில் ஒரு பவர்ஃபுல் பாடியா இருந்ததுனால, உடனே அந்தக் கம்ப்ளைண்ட்டுக்கு பதில் விளக்கம் கேட்டு ஜெயலலிதாவுக்கு பார்வேர்டு பண்ணுனாங்க. அந்த லெட்டர்ல கொஞ்சம் கடுமையாகவே எழுதியிருந்தாங்க சார், எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. பிரஸ் கவுன்சில்ல இருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், கர்நாடகா முதலமைச்சர், தலைமைச் செயலாளர், மற்றும் உள்துறை செயலாளர் எல்லாருக்கும் கடிதம் எழுதியிருந்தாங்க. அந்தக் கடிதங்களோட தமிழாக்கத்த அப்படியே எழுதுறேன்... நீங்களே அதப் படிச்சுப் பாருங்க.
பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (Press Council of India) வோட செயலாளர் ஜி.கே.பத்ரா அவர்கள், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பின் சேர்மன் ஜஸ்டிஸ் சாவந்த் அவர்களுக்கு நமது புகாரின் அடிப்படையில் கடிதம் எழுதுறார். அந்தக் கடிதத்தில்...
பொருள்:
ஆர்.கோபால்,
நக்கீரன்,
தமிழ் வாராந்தரி ஆசிரியரின்,
தமிழக, கர்நாடக போலீஸுக்கு எதிரான புகார்.
ஐயா,
சந்தனக் கடத்தல் வீரப்பனுடனான நேர்காணல், செய்திகளைத் தொடர்ந்து, நக்கீரன் செய்தியாளர்களை வழிமறித்து கைதுசெய்யவோ, சுடவோ சிறப்புக் காவல் படைக்கு உயரதிகாரிகளால் ரகசிய உத்தரவுகள் வழங்கப் பட்டுள்ளதாக, சென்னையில் செயல்படும், நக்கீரன் ஆசிரியருக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக, அவர் அனுப்பி 21-11-1995-ல் கிடைத்த தந்தி மற்றும் 15-11-1995-ல் கிடைத்த கடிதங்களின் நகல்களை உங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். மேலும் அந்தக் கடிதத்தில், அவர்களது செய்தியாளர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பு, ஜீவா தங்கவேலு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மாநில போலீஸால் நக்கீரன் பத்திரிகைக்கு எதிராக அபாயகரமான திட்டம் தீட்டப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்சொல்லப் படும் நிகழ்வுகள் உண்மையாயிருக்கும் பட்சத்தில், கவுன்சில் கவலைப்படுவதற்குக் காரணமிருக்கிறது.
மேலும் கவுன்சிலின் மரியாதைக்குரிய தலைவரின் விருப்பப்படி, நீங்கள் இந்த விவகாரத்தை தனிப்பட்ட விதத்தில் கவனித்து, மாநிலத்தில் ஊடகங்கள் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் செயல்படுவதற்காக, அந்தப் பத்திரிகையின் ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பும் காவலும் அளிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
ஜி.கே.பத்ரா
செயலாளர்
பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (Press Council of India) சேர்மன் ஜஸ்டிஸ் சாவந்த் அவர்கள் நம் புகாரின் அடிப்படையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவிற்கு எச்சரிக்கை கடிதம் எழுதுனாரு. அதன் தமிழாக்கம் இதோ...
அனுப்புநர்
பி. சாவந்த்,
தலைவர் - பிரஸ் கிளப் ஆப் இந்தியா,
ஃபரித்காட் ஹவுஸ், (தரைத்தளம்),
கோபர்நிக்கஸ் மார்க், நியூடெல்லி-110 001
பெறுநர்
மதிப்புக்குரிய செல்வி ஜெ.ஜெயலலிதா,
தமிழக முதல்வர், சென்னை
அன்புக்குரிய திரு. ஜெயலலிதா அவர்களுக்கு,
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தைக் காக்கவும், பத்திரிகை அமைப்புகள், செய்தித்தாள்களின் தரத்தை மேம்படுத்தி நிலைநிறுத்தவும், 1978, பிரஸ் கவுன்சில் சட்டத்தின்கீழ், (நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன) பிரஸ் கிளப் ஆப் இந்தியா அமைப்பு, தன்னாட்சி அமைப்பாகத் தொடங்கப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
திருவாளர் ஆர். கோபால், நக்கீரன் ஆசிரியர், 15-11-1995 தேதியிட்ட அவரது கடிதத்திலும், 21-11-1995-ல் பெறப்பட்ட தந்தியிலும் குறிப்பிட்டுள்ள படி (நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன), சந்தனக் கடத்தல் வீரப்பனை சந்தித்து நேர்காணல் வழங்கியதை அடுத்து நக்கீரன் செய்தியாளர்களைக் கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ சிறப்புக் காவல் படைக்கு, உயரதிகாரிகள் ரகசிய உத்தரவுகள் தந்துள்ளதாக உறுதியான செய்திகள் கிடைத்துள்ளதாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார். அவர், தங்களுடைய செய்தியாளர்களான சிவசுப்பிரமணியன், சுப்பு, ஜீவா தங்கவேல் உயிர்கள், போலீஸ் அதிகாரிகளின் கையில் அபாயத்தில் இருப்பதாக அஞ்சுகிறார். மேலும், போலீஸ் நக்கீரனுக்கு எதிராக அபாயமான திட்டங்களை வைத்திருப்பதாகவும் பயப்படுகிறார். இவ்வாறு சொல்லப்படும் நிகழ்வுகள் உண்மையாயிருக்கும் பட்சத்தில், கவுன்சில் கவலைப்படுவதற்குக் காரணமிருக்கிறது.
சுதந்திரமான, இடையூறில்லாத ஊடகச் செயல்பாட்டுக்காக, பத்திரிகை பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பும் காவலும் வழங்குமாறும், இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிடுமாறும் உங்களிடம் நான் வேண்டிக்கோள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
பி.பி. சாவந்த்
நீதியரசர் சாவந்த், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மட்டுமில்ல, கர்நாடக முதலமைச்சர் கௌடாவுக்கும், கர்நாடகா தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர்னு மூணுபேருக்குமே இதே போல எச்சரிக்கை கடிதம் எழுதி, நம்மள பாதுகாக்கச் சொல்லி அனுப்பியிருந்தாரு. ஆனா கர்நாடகாக்காரனுக்கு வராத கோபம், அம்மணிக்குத்தான் பொத்துக் கிட்டு வந்துச்சு. நீதியரசர் சாவந்த், செல்வி.ஜெயலலிதாவுக்கு எழுதுனதை படிச்சாவே தெரியும்... ஏன் அந்தம்மாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சுன்னு. இப்படியெல்லாம் ஜெயலலிதாட்ட சுதந்திரமா, இடையூறு இல்லாம பத்திரிகைய செயல்படணும்னு அந்த அம்மாவுக்கு ஜஸ்டிஸ் சாவந்த் ஆர்டர் போட்டாரு.
நாமளும் அதோட விடல. இதே புகார சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் அனுப்பியிருந்தோம். சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்புன புகார் நகல, உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யரிடம் மதுரை சோகா அறக்கட்டளை பாட்ஷா அண்ணன் மூலமா நேர்ல கொடுக்கச் செய்தோம்.
நீதியரசர் கிருஷ்ணய்யர் நாம் கொடுத்த புகாரின் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்து நக்கீரனையும், கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்கணும்னு ஒரு அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கை எல்லா ஆங்கி லச் செய்தித்தாள்கள்லயும் வந்தது. முக்கியமா "தி ஹிந்து' ஆங்கில நாளிதழ்ல வெளியாச்சு. அதன் தாக்கம்தான்... 3-1-1996 அன்னிக்கு, உச்சநீதிமன்ற அசிஸ்டெண்ட் ரிஜிஸ்ட் ரார் அவர்கள் (டஒக ஈஊகக), தமிழக டி.ஜி.பி.க்கும் கர்காடகா டி.ஜி.பி.க்கும், நக்கீரன் கொடுத்த புகார் நகலை அனுப்பி "உடனடியா இதற்கு தகுந்த நடவடிக்கை எடுங்க'ன்னு பதில் எழுதி, அதோட கடிதத்தோட நகல, தனக்கு கீழ் இருந்த டி.ஜி.பி.க்கும் அனுப்புனது ஜெ.வை இன்னும் அதிகமா கோபம்கொள்ள வச்சுது.
தன்ன எதுக்கிறதுக்கு இந்த இந்தியாவுல... ஏன் உலகத்துலயே எவனும் கிடையாதுன்னு மமதை புடிச்சு இறுமாப்பா இருந்த ஜெயலலிதாட்ட ஆஃப்டரால்.... ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி (ஜெ. தன்னத் தவிர, எல்லாரையும் ஆஃப்டராலாத்தான் பார்க்கும்), சொன்னதுக்காக, அதுவும்... எவனோ ஒரு மீசைக்கார பத்திரிகைக் காரன்... அவன் பேச்சக் கேட்டு அவனுக்கும் அவனுக ஆட்களுக்கும் நாம பாதுகாப்பு குடுக்கணுமா... நெவர்... இதுக்காகவே அவனுகள கொல்லாம விடமாட்டேன்னு கங்கணம் கட்டீருச்சு. ஜெயலலிதாவா கொக்கா...!
அப்போ தேவாரம் தலைமையில இருந்த எஸ்.டி.எஃப். போலீஸ் கொஞ் சம்பேர நமக்கு எதிரா கண்ணுல விளக் கெண்ணய் போட்டுட்டு காட்டுக் குள்ள தேட ஆரம்பிச்சிட்டாய்ங்க. அதுவும் ஒரு பெரிய கதை... (அப்புறமா சொல்றேன்)
"இதுதான் சார்... நமக்கும் அம்மணி ஜெயலலிதாவுக்கும் நடந்த வாய்க்கா வரப்புச் சண்டை' 'ன்னு சொல்லி மூச்சுவிட்டேன்.
"அண்ணாச்சி, அந்தம்மா பிரஸ் கவுன்சில்காரங்க கிட்ட காட்டுன கோவத்த, போலீஸ்காரங்க எல்லாரும் சேர்ந்து இப்ப ஒங்க மேல காட்டுறாங்க''ன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாருன்னு, பெருமாள் சார் எங்கிட்ட சொன்னப்ப...
"நான் சொன்னேன்ல ஜெயலலிதா போலீஸ்னு... அதுதான்! நக்கீரன இருந்த சுவடு எதுவுமே இல் லாம அழிச்சிரணும்னு அந்தம்மா முடிவெடுத்த துக்கு முக்கிய காரணமே அந்த சம்பவம்தான்னு இப்பத்தான் புரியுது. அதாவது எதுவுமே இருக் கக்கூடாது. எப்படின்னா யானை மாதிரி... எப்பவோ ஆரம்ப காலத்துல, அதுவும் 1996-ல நடந்தத... இப்ப 17 வருஷம் ஆன பிறகும் நடந்த சம்பவத்த மதம் புடிச்ச யானை மாதிரி மறக்கல பாருங்க. தேட் இஸ் ஜெயலலிதா''ன்னு சொல்லிட்டு, "திரும்ப கூப்பிடுறேன் சார்'னு பெருமாள் சார்ட்ட பேசிக்கிட்டிருந்தத கட் பண்ணுனேன்.
(புழுதி பறக்கும்)