(88) "ஆஹா ஜாலி....! ஜெ. ஆட்சி காலி!''
"போன அத்தி யாயத்துல எஸ்.வீ. சேகரும், ஞானியும்... நமக்கு எதிரா நல்லாவே பண்ணுனாங்க' அப்படின்னு முடிச்சிருப்போம்.
ரெண்டு பேரும் வெவ்வேற செய்திச் சேனல்ல உக்காந்து ரொம்ப கடுமையா பேசுனாய்ங்க. ஞானி, "நக்கீரன இழுத்து மூடணும்'ங்கிறாரு. எஸ்.வீ.சேகரும், அந்த ஆபீஸே இருக்கக்கூடா துங்கிற அளவுக்குப் பேசுறாரு. "நக்கீரன் ஆபீஸ் இருக்கக் கூடாது... இழுத்து மூடணும்'ங்கிற அவங்க ளோட எண்ணம்தான் ரெண்டாவது நாள் அன்னிக்கு பிரதி பலிக்குது.
போலீஸ்காரங்க வந்து இறங்குறாங்க. ஒரு குரூப் மஃப்டில வந்து முதல்லயே இறங்கிட்டாய்ங்க. அதுக்கப் புறமா வேன்ல வந்து ஒரு குரூப் இறங்கி திமுதிமுன்னு ஆபீசுக்குள்ள வந்து மிஷின் இருக்கிற ரூமுக்குள்ள போகுது. வெளிய யாரையும் விடமாட்டேங்கிறான். இப்படி யெல்லாம் பயங்கரமான திட்டம் போட்டு, என்ன செய்யப்போறாங்கன்றத முதநாளே டி.வி.ல உக்காந்து எஸ்.வீ.சேகர், ஞானி ரெண்டு பேருமே பேசிட்டாய்ங்க.
அதத்தான் "ரெண்டு பேருமே நக்கீரனுக்கு எதிரா நல்லாவே கல்லெறிஞ் சாய்ங்க'ன்னு நாம சொல்லியிருப்போம். அவங்க என்ன பேசுனாய்ங்களோ அத நோக்கித்தான் போலீஸ் காரய்ங்களும்... நக்கீரனும், ஆபீசும் இருக்கக் கூடாதுன்னு வந்தாய்ங்க.
முதல்நாளு அந்தம்மா மூணு வகையில நம்மள அழிச்சிரணும்னு ப்ளான் பண்ணிச்சு. அது நடக்கல. அதுல அவங்களுக்கு ஃபெயிலியர்தான். அதுக்கே நாம நெறைய தண்ணி குடிச்சுட்டோம்.
முதல்நாள் காலைல பத்திரிகைல மேட்டர் வந்த வுடனே, தி.நகர் எம்.எல்.ஏ. கலைராஜன கூப்புட்டு, "அவன் உயிரோடவே இருக்கக்கூடாது... நீ என்ன செய்வியோ தெரியாது... எவன வேணும்னாலும் கொண்டுவந்து அவன முடிச்சிரு... இனிமேலும் அவன் உயிரோட வாழக்கூடாது''ன்னு ஆர்டர் போடுது. அவங்க ஆளுங்கள ஏற்பாடு பண்றதுக்குள்ள வளர்மதி அக்கா கொஞ்சம்பேர கூட்டிட்டு வந்து தகராறு பண்ணுனது னால அந்தக் கண்டத்துல இருந்து தப்பிச்சோம்.
ரெண்டாவதா 100 பேருக்கு மேல போலீஸ் வயர்லெஸ், துப்பாக்கி சகிதமா என்கவுன்ட்டர் பண்ண 6:30க்கு திட்டம் போடுறாய்ங்க... 6:20-க்கு நான் தப்பிச்சு ஓடிப் போயி டுறேன். அதுக்கு கலைஞர் புண்ணியம் கட்டிக்கிட்டாரு.
அதுக்கடுத்து ஊர விட்டு தாண்டிப் போயிறக் கூடாதுங்கிறதுக்காக சென்னையச் சுத்தி உள்ள செக்போஸ்ட், டோல்கேட் எல்லாத்துலயும் ஃபுல்லா கம்ப்ளீட்டா ரவுண்ட் பண்ணி, பாத்த இடத்துல சுடச்சொல்லி அந்தம்மா ஒரு ஆர்டர் போடுது. நல்லவேள நான் சென்னைய விட்டு வெளியேறல. யார் செஞ்ச புண்ணியமோ... அதுலயும் நாம தப்பிச்சுட்டோம்.
அடுத்தநாளு காலை யில 8:30 மணிக்கு சீஃப் செகரட்டரி, ஹைலெவல் ஆபீசர்ஸ், சீனியர் மந்திரி கள்னு எல்லாரும் வந்து அந்தம்மாவப் பார்த்து... "நக்கீரனோட கத நேத்தோட முடிஞ்சது. இனி நம்ம வம்புக்கே வரமாட்டான்'னு சொன்னாங்களாம்.
அப்ப சுத்தி இருந்தவங் கள ஒரு முறைப்பு முறைச் சிட்டு, "நான் என்ன சொன் னேன்... நீங்க என்ன செஞ் சுட்டு வந்திருக்கீங்க..? வெறும் கண்ணாடிய மட்டும் உடைச் சிருக்கீங்க அவ்வளவு தான...?''ன்னு கூலா சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிடுச்சாம்.
இதோட அர்த்தம் புரியுதா ஒங்களுக்கு?
அதாவது, "நான் ஒண்ணு செய்யச் சொன்னா, நீங்க ஒண்ண செஞ்சிருக்கீங்க. கண்ணாடிய மட்டும்தான உடைச்சிருக் கீங்க... அவ்வளவுதானா...?''ன்னு வெறித் தனமா கோபத்தக் காட்டிட்டுப் போவுது.
அம்மா எதிர்பார்த்தது வேற... நாம இப்படிப் பண்ணிட்டு வந்து நிக்கிறோம்... இன்னும்... இதுக்குமேல அவங்க எதிர்பார்க்கிறாங்க அப்படிங்கிறதுக்கான அடுத்த கட்டம்தான் ஸர்ச்ங்கிற பேர்ல அவங்க போட்ட ஆட்டம். அந்த ஆட்டத்தோட ஆரம்பத்ததான், அதாவது க்ரவுண்ட் ப்ளோர்ல அவனவன் ஜேம்ஸ் பாண்ட் பாணியில போலீஸ்காரய்ங்க டார்ச்லாம் அடிச்சி, தட்டி... தட்டி... பாத்துக்கிட்டிருப்பாங்க பாருங்க, அதத்தான் ரெண்டு இதழுக்கு முன்னால பார்த்தோம்.
ஞானிக்கு அண்ணன் ஒருத்தரு இருக்காரு... "சோ'ன்னு. அவரு இதுக்கெல்லாம் முன்னாடி நம்ம மேல பெரிய கல் எல்லாம் தூக்கிப் போட் டாரு. அதுக்குப் பதிலடியா பெரிய பாறாங் கல்லாவே அவருமேல தூக்கிப் போட்டாரு ஐயா சின்ன குத்தூசி. (அத பின்னாடி சொல்றேன்)
இந்த அறிவுஜீவிகள்லாம் இப்படி பேசிக்கிட்டிருக்கும் போது... 2003-ல நான் துப்பாக்கி வச்சிருந்ததா பொய்ப் பழி சுமத்தி, பொடாவுல என்ன அரெஸ்ட் பண்ணுனப்ப, நான் ஜெயில்ல இருக்கும்போது... இலக்கியப் படைப்பாளிகள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத் தாளர்கள் எல்லாரும் சேர்ந்து எனக்கு பெரிய அளவுல ஆதரவுக் குரல் குடுத்தாங்க.
நம்ம மேல பொடா ஏவப்பட்டதுக்கு எதிரா குரல் குடுத்தவங்கள்ல அண்ணன் கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் இன்குலாப், அண்ணன் அறிவுமதி, சகோதரி கனிமொழி, "இந்தியா டுடே' வாசந்தி, அண்ணன் பகவான்சிங், "தி இந்து' ஏ.எஸ்.பன்னீர்செல்வம், "இந்தியன் எக்ஸ்பிரஸ்' டி.என். கோபாலன், "டைம்ஸ் ஆப் இந்தியா' ஜெயா மேனன், "மிட் டே' மினி, "தீக்கதிர்' வைத்தியலிங்கம் மற்றும் சக பத்திரிகையாளர்கள்... இவங்களோடு சேர்ந்து பிரபல எழுத்தாளர் சுஜாதா சாரும் நக்கீரனுக்கு ஆதரவா குரல் குடுத்திருந்தாரு.
எழுத்தாளர் சுஜாதா சாரை தெரியாதவங்க இருக்க முடியாது. மிகப்பெரிய அறிவுஜீவி. நச நசன்னு பேசமாட்டார். யாருக்கு மரியாதை குடுக்கணுமோ, அவங்களுக்கு மட்டும்தான் குடுப்பார். அந்த வகையில தம்பி ஓவியர் ஸ்யாம், பெரிய வேலைக்காரர், வேகமானவரும் கூட. இந்த "போர்க்களம்' தொடருக்குப் படம் வரையும் எங்கள் நக்கீரன் குடும்ப தம்பி ஸ்யாமை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்மீது சுஜாதா நல்ல அன்பு வைத்திருப்பார். அதேபோல் நக்கீரன் மீதும் அவருக்கு அன்பு உண்டு. அடிக்கடி என்னிடம் பேசுவார். வீட்டுக்கு வரச்சொல்லுவார். நானும் சுஜாதா சாரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப் போம். தம்பி ஸ்யாம் அவரைப் பற்றி சொன்ன சில வரிகளை அவர் வாயாலேயே பதிவு செய்கிறேன்...
"குமுதம் வார இதழின் ஆசிரியரா சுஜாதா சார் பொறுப்பேற்றிருந்த சமயம். திடீர்னு ஒருநாள் "நீங்க நக்கீரனுக்கு படம் போடுறீங்களா?' அப்படின்னு கேட்டாரு.
"ஆமா ஸார் போட்டுக்கிட்டிருக்கேன்'னு சொன்னேன். சில தொடர்களுக்கு படம் போட்டுக்கிட்டிருந்த சமயம் அது.
"அதையெல்லாம் நான் பாத்தேன், நல்லா ருக்கு... தொடர்ந்து பண்ணுங்க'ன்னு சொன்னாரு.
அவரு எங்கிட்ட என்ன சொல்ல வராரு... நக்கீரன் சார பத்தி சொல்றாரா? இல்ல என்கிட்ட அவரப் பத்தி விசாரிக்கிறாரான்னு அப்ப எனக்குத் தெரியல. ஆனா தொடர்ந்து நீங்க அத பண்ணுங்க அப்படின்னு சொன்னது... ஒரு பத்திரிகையில இருந்துட்டு இன்னொரு பத்திரிகையப் மத்தவங்க பாராட்டிச் சொல்லமாட்டாங்க, ஆனா சுஜாதா சார் சொன்னாரு. சாதாரணமாவே அவரு யாரை யும் பாராட்ட மாட்டாரு... அந்த மாதிரி ஒரு மனி தர். சுஜாதா பாராட்டிட்டாருன்னா எல்லாருமே சந்தோஷமாயிருவாங்க. கொஞ்சநாள்ல குமுதத்துல இருந்து நின்னுட்டாங்க. அதுக்கப்புறம் ஒருநாள், எனக்கு அவர்ட்ட இருந்து போன் வந்தது.
"நாளைக்கு காத்தால எட்டு, எட்டரைக்கு ஆத்துக்கு வா'ன்னு சொன்னாரு.
"சரி சார்'னு சொன்னேன்.
மறுநாள் நான் போனேன். போனப்போ, எப்பவும் போல மாமி இட்லி, காபி எல்லாம் குடுத்தாங்க. சாப்பிட்டுட்டு அங்க உக்காந்து சார்ட்ட பேசிட்டிருந்தேன். அந்த நேரங்கள்ல சார் வீடு சாத்தியிருக்காது. ப்ளாட் சிஸ்டமா இருந்தாலும், பெரிய ப்ளாட். லக்ஸுரி ப்ளாட் மாதிரி இருக்கும் அது. இருந்தாலும்... கதவு சாத்தி இருக்காது, ஓப்பன்லதான் இருக்கும். ஓப்பன் பண்ணுன கதவுக்கு இடையில திடீர்னு ஒரு கை தட்டிக்கிட்டிருந்தது. உடனே இவரு அப்படி திரும்பிப் பாத்தாரு. அப்ப ஒரு டைரக்டரு வந்தாரு. அன்னிக்கு தேதியில மெஹா ஹிட் குடுத்து எல்லாரோட உள்ளத்தையும் ஒரே அள்ளா அள்ளுன டைரக்டரு அவரு. வந்தவரு, இவர பாத்தவுடனே "வணக்கம் சார்'னு சொன்னாரு.
"என்னய்யா படம் எடுக்குறீங்க? நல்ல படமே எடுக்கத் தெரியாதா?'ன்னு சார் சொன்னாரு.
அவரு அப்படிச் சொன்னதும் எனக்கு ஒண்ணுமே புரியல. வாங்க, வந்து உக்காருங்கன்னு சொல்லப்போறாருன்னு நெனைச்சா... டக்குன்னு அவரு சொன்னது இதுதான்... "என்னய்யா படம் எடுக்குறீங்க? நல்ல படமா எடுக்க மாட்டீங்களா? போங்க... அப்புறம் பாக்கலாம்'ன்னாரு.
அவ்வளவுதான்... அப்புறம் அவரு திரும்பியே பாக்கல. அந்த டைரக்டரு வெலவெலத்துப் போய் நின்னுட்டாரு. எதுக்கு சொன்னாரு, என்ன சொல்ல வந்தாருன்னு தெரியல. ஏன்னா, அவரு ரொம்ப பிரிப்ரேஷனோடத்தான் வந்துருப்பாரு. நம்மள எதாவது பாராட்டுவாரா அப்படின்னு எதை யாவது ஒண்ண மனசுல நெனைச்சிருப்பாரு.
இப்படிச் சொன்னதும் எனக்கே வியப்பா இருந்தது. அப்புறம் அவரு திரும்பியே பாக்கல, கொஞ்சநேரம் அப்படியே நின்னுட்டு கௌம்பிப் போயிட்டாரு'' அப்படீன்னு தம்பி ஸ்யாம் சொல்லி பெருமூச்சு விட்டார்.
அதே குமுதத்துல சுஜாதா சார் "சுஜாதா கேள்விலிபதில்'னு எழுதிக்கிட்டிருந்தார். ஒரு குமுதம் வாசகர், "நாளை உலகம் அழியப் போகிறது, நக்கீரன் எப்படி தலைப்பு வைக்கும்?'' என்ற கேள்விக்கு...
"ஆஹா ஜாலி...!
ஜெ. ஆட்சி காலி...''
என்று தலைப்பு வைப்பார்கள் என எழுதியிருப்பார். பேசுறதுலயும் எழுதுறதுலயும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுதான்.
பொடாவுல நான் அரெஸ்ட். அத கண்டிச்சு பிரஸ் கிளப்ல ஒரு கண்டனக் கூட்டம் நடத்துறாங்க. அந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டதப் பத்தி "ஆனந்த விகடன்'ல ஒரு பதிவு பண்ணுனாரு எழுத்தாளர் சுஜாதா. ரொம்ப சுவாரஸ்யமா அத பதிவு பண்ணியிருப்பாரு.
ஒரு கடமையா நெனைச்சு அந்தப் பதிவ நான் அப்படியே சொல்றேன். ஏன்னா... எந்தப் பக்கத்துல இருந்தெல்லாம் நமக்கு ஆதரவுக் கரங்கள் நீண்டுச்சுங்கிறதுக்காகத்தான் இதச் சொல்றேன்.
(புழுதி பறக்கும்)