(317) ஆர்.எம்.வீ. கடிதம்! கொந்தளித்த எம்.ஜி.ஆர்!
"அரசியலில் எனக்கு ஆர்வமில்லை; புரட்சித்தலைவர் அழைத்ததால்தான் அரசியலுக்கு வந்தேன்' என பின்னாளில் (1996 காலகட்டத்தில்) ஜெயலலிதா சில ஆங்கில பத்திரிகைகளில் பேட்டியளித்திருந்தார்.
ஜெயலலிதா அ.தி.மு.க.வில் சேர விரும்பியபோது "அண்ணாயிஸம்' எனப்படும் கட்சிக் கொள்கை மற்றும் பைலிலா புத்தகத்தை நன்கு படித்துவிட்டு, "உடன்பாடிருந்தால் கட்சியில் சேரலாம்' என எம்.ஜி.ஆர்., சொன்னதன் மூலம் ஜெ.வுக்கு அரசியல் விருப்பம் இருந்ததையும், அதற்கு பல வருடங்களுக்கு முன்பே... 1972 மதுரை தி.மு.க. மாநாடு அன்று தி.மு.க.வில் ஜெ. சேர விரும்பியதையும், இதற்காக எம்.ஜி.ஆரை நச்சரித்து அனுமதி பெற்றதையும், இதை ஆர்.எம்.வீ. காரண காரியங்களோடு தடுத்ததையும், ஆர்.எம்.வீரப்பன் தனது "எம்.ஜி.ஆர் யார்?' நூலில் சொல்லியிருந்தார்.
அதை அத்தியாயம் 316-ல் வாசகர்கள் படித்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சி இதோ...
ஒரு சுவையான சம்பவம்...
ஒருநாள் நான் சத்யா ஸ்டுடியோவிற்குச் சென் றேன். அப்பொழுது புரட்சித் தலைவருடைய படப்பிடிப்பு அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் அங்கு போன நேரத் தில், புரட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டவர்கள் சிலர் கலக்கத்தோடும், கவலையோடும் சில செய்திகளை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அதுதான் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு புரட்சித் தலைவர், ஜெயலலிதாவையும் கூடவே அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென்று மதுரை முத்துவுக்கு சொல்லியிருக்கிறார் என்பது.
ஜெயலலிதா, மாநாட்டின் ஊர்வலத்தைப் பார்ப்பதற்காக ஒரு தனி இடம் ஏற்பாடு செய்து, அங்கேயிருந்து ஊர்வலத்தைப் புரட்சித் தலைவரோடு அமர்ந்து பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார் என்றும், மாநாட்டு மேடையிலே பல்லாயிரவர் முன்னிலையில் தன்னைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொள்ள விரும்புகிறார் என்றும், அதற்கு புரட்சித் தலைவரைச் சம்மதிக்க வைத்துவிட்டார் என்றும் கேள்விப்பட்டேன்.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை யைக் கட்சியில் தலைவர்கள் விரும்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலர், புரட்சித் தலைவரோடு நெருங்கிய நட்புகொண்டவர்கள், அன்றைக்கு இதைப்பற்றி விவாதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றும் நான் கேள்விப்பட்டேன். அந்த விவாதம் சுமுகமான சூழ்நிலையில் நடைபெறவில்லை என்பதும், புரட்சித் தலைவருக்கும், மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற நட்பையே அசைக்கிற மாதிரி ஒரு நிலைமையை அந்த விவாதங்கள் ஏற்படுத்தியது என்பதையும், கேள்விப்பட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தலையெடுக்கக்கூடாது. அதைத் தடுத்தே தீரவேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். நான் எப்பொழுதும் புரட்சித் தலைவரிடம் என்னுடைய கருத்துக்களைத் தெரிவிப் பதற்கு கடிதம் எழுதும் முறையைக் கையாளுவதுபோல் அன்றைக்கும் அதே முறையைக் கையாண்டேன். அங்கேயே உட்கார்ந்து ஒரு சில பக்கங்களில் சுருக்கமாக, ஆனால் புரட்சித் தலைவரின் உள்ளத்திலே சுருக்கென்று தைக்கும்படியாக என்னுடைய உணர்வுகளையெல்லாம் அதிலே கொட்டி உணர்ச்சிமயமான ஒரு கடிதத்தை, என்னுடைய கவலையைக் குழைத்து எழுதி, அதைச் சபாபதி (எம்.ஜி.ஆரின் உதவியாளர்) மூலம் புரட்சித் தலைவரிடத்திலே சேர்த்துவிட வேண்டும் என்று கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். படப்பிடிப்பு பகல் உணவிற்காக நிறுத்தப்பட்டு மேக்கப் அறைக்கு புரட்சித் தலைவர் வந்தவுடன், சபாபதி அந்தக் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.
அது வெறும் கடிதம் அல்ல, கனல். புரட்சித்தலைவரின் உள்ளத்தைச் சுடும் நெருப்பு. ஆனால் அவரைப் பத்தரைமாற்றுத் தங்கமாக மாற்றுவதற்கு மூட்டிய நெருப்பு. அவரைச் சுட்டெரிப்பதற்கு அல்ல, அவருடைய பெருமையின் மீது படர்ந்திருக்கும் மாசு மருவையெல்லாம் நீக்குவதற்கு, எழுதப்பட்ட நெருப்பைப் போன்ற கடிதம் அது.
ஆனால் நெருப்பு என்றால் முதலில் சுடத்தானே செய்யும். அதற்குப் பிறகுதானே தூய்மைப்படுத்தும். ஆகவே அவருடைய உள்ளத்தைக் கடித நெருப்பு சுட்டது என்றாலும் உள்ளம் தூய்மையடைந்துவிட்டது. இந்த உணர்வுகளோடு என்னைத் தொலைபேசியிலே தொடர்புகொண்டார். நான் சத்யா ஸ்டுடியோவிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைகிறேன். என்னுடைய தொலைபேசி ஒலிக்கிறது.
நான் தொலைபேசி யை எடுத்து ஹலோ என்றவுடன், அவர் வழக்கம் போல "நான்தான் எம்.ஜி. ஆர். பேசுறேன்' என்று தொடங்கினார். நான் அவ்வளவு சீக்கிரமாக, அவ்வளவு விரைவாக அவரிடத்திலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்க வில்லை. ஆகவே கொஞ் சம் அதிர்ச்சியடைந்தேன். என்ன சொல்லப்போகிறார் என்று எண்ணுகிற அடுத்த நொடியில், அவரே தொடர்ந்து பேசத் தொடங்கினார். இல்லை... ஆத்திரத்தை வார்த்தை களாகக் கொட்டினார். வழக்கமாகப் புரட்சித் தலைவரிடத்திலே இருந்து வருகிற அமைதியான வார்த்தைகள் இல்லை, இனிமையான வார்த்தைகள் இல்லை. என்னுடைய பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. “
"என்ன கடிதம் எழுதிக் கொடுத் திருக்கிறீர்கள்? யார் உங்களுக்குச் சொன் னார்கள்?' என்றுதான் தொடங்கினார். யாரை யும் மரியாதையோடு அழைக்கின்ற புரட்சித் தலைவர் அன்றைக்கு அந்தத் தொலை பேசியில் பயன்படுத்திய வார்த்தைகளைக் கண்டு நான் பதட்டமடையவில்லை. அவருக்கு அப்படிப்பட்ட கோபம் வரும் என்று எனக்குத் தெரியும். காரணம், அவருடைய கோபத்தை, அதனுடைய தாக்குதலை நான் 1967ம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் நாள் சந்தித்தவன். ஆனால் அன்றைக்கு அவருடைய கோபத் தாக்குதல் என்மீது, என்னுடைய சொந்தப் பிரசினையின் மீது நான் வைத்த விவாதத்தைத் தொடர்ந்து அவருக்குக் கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபம் கூட நேரிலே அல்ல. அருமைச் சகோதரர் வித்வான் லட்சுமணன் அவர்கள் மூலம்தான் அன்றைக்கு எழுந்தது. ஆனால் அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் அவர் இவ்வளவு கோபப்பட்டு, கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்தியதை நான் தொலை பேசியின் மூலம் கேட்கிற வாய்ப்பைப் பெற்றேன்.
"இதை உங்களுக்கு யார் சொன்னது?' என்று தொடங்கி அவர்களைப் பற்றியெல்லாம் விமர்சிக்கத் தொடங்கினார். "அவர் என்ன யோக்கியரா... இவர் என்ன யோக்கியரா?' என்றெல்லாம் கடுமையாகச் சொல்லி "இவர்கள் எல்லாம் எனக்குப் புத்தி சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?'’ என்று கேட்டதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. அவருடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்ததற்குப் பிறகு ஒரு கணம் அவர் நிறுத்தி, இறுதி யாக ஒன்றைச் சொன்னார். "நீங்கள் சொல்கிறீர்கள், உங்களுக்கு உரிமையிருக்கிறது. நீங்கள் எதுவும் என் நன்மைக்காகத்தான் சொல்வீர்கள். அது எனக்குத் தெரியும். ஆனால் மற்றவர்களெல்லாம் எந்த உரிமையோடு எனக்கு புத்தி சொல்ல வருகிறார்கள்?' என்று சொல்லி முடித்தார்.
எம்.ஜி.ஆர். அமைதி ஆனதற்குப் பிறகு பொறுமையாக ஒன்றைச் சொன் னேன்.
"நீங்கள் மற்றவர்களைப் பற்றியெல்லாம் குறை சொல்கிறீர்கள்... நியாயம்தான். ஆனால் மற்றவர்களுக்கு எத்தனை பெண்டாட்டிகள் என்று யாரும் கவலைப்படுவதில்லை. மற்றவர்களெல்லாம் உத்தமர்களா? என்று யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் நீங்கள் மற்றவர்களைப்போல் இருக்கக்கூடாது என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். நாங்களும் எதிர்பார்க்கிறோம். அதற்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் நான் இவ்வளவு வேதனையோடு உங்களுக்கு இந்த அளவிற்குக் கோபம் வருகிற ஒரு சூழ்நிலைக்குக் காரணமான கடிதம் எழுதினேன்'' என்று சொன்னவுடன்... அவர் நெருப்பிலே வாட்டிய தங்கம் தண்ணீர் பட்டவுடன் குளிர்ந்துவிடுவதைப் போல கோபம் எல்லாம் குறைந்து, தணிந்து அவர் பொன்மனச் செம்மலாக மாறிவிட்டார் என்பதை அவர் இறுதியாகச் சொன்ன பதில் எனக்கு எடுத்துக்காட்டியது.
"இல்லை, இல்லை. அதெல்லாம் தப்பு. நான் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு போவதாக இல்லை, போகப் போவதும் இல்லை' என்று சொல்லிவிட்டு, நான் என்ன சொல்லப்போகிறேன் என்று எதிர்பார்க்காமல் தொலைபேசியை வைத்து விட்டார்.
ஒரு பெரிய இயக்கத்தினுடைய ஒற்றுமைக்கு வரவிருந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்திவிட்ட மகிழ்ச்சியோடு உடனடியாக மதுரை முத்து அவர்களை தொலைபேசியிலே தொடர்புகொண்டேன். ஆனால் புரட்சித் தலைவர் என்னுடன் பேசி வைத்தவுடனேயே, மதுரை முத்து அவர்களிடம் தொடர்புகொண்டு ஜெயலலிதா அவர்கள் வரவில்லை என்பதையும், அதற்காகச் செய்யச் சொன்ன ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாமென்றும் அவர்கள் தெரிவித்து விட்டார்கள் என்பதையும் மதுரை முத்து அவர்களிடத்தில் பேசுகிறபோது நான் தெரிந்துகொண்டேன்.
முத்து அவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டவுடனே...
"என்ன எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஜெயலலிதாவும் உடன் வருகிறாரா? அது உண்மையா...?''
(புழுதி பறக்கும்)