ss

(316) தி.மு.க.வில் சேர ஜெ. போட்ட திட்டம்!

ன்னோட கையெழுத்த மிஸ்யூஸ் பண்ணி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதாவும், ஜெயலலிதா வேற கட்சிக்குப் போக சதி செய்றதாவும்... -இப்படி பல பரபரப்பான குற்றச்சாட்டுகள பொதுக்குழுவுல எம்.ஜி.ஆர். முன்வச்சார்.

அ.தி.மு.க. கொ.ப.செ. பதவிய ஜெயலலிதா ராஜினாமா செஞ்சார். அந்த ராஜினாமா கடிதத்த கட்சிப் பொதுக்குழுவுல வச்சு விவாதிச்சாங்க. இதுசம்பந்தமா "அண்ணா' பத்திரிகைல செய்தி வந்தத போன அத்தியாயத்துல சொல்லியிருந் தோம். அந்த பொதுக்குழுவுல எம்.ஜி.ஆர். என்ன பேசுனாருங்கிற விவரத்த "அண்ணா' பத்திரிகைல பிரசுரிச்சிருந்தத இப்ப பாப்போம்...

Advertisment

புரட்சித்தலைவர் பொதுக்குழு வில் பேசும்போது கூறியதாவது...

"கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள ஜெயலலிதாவின் ராஜினாமாவை நானே பொதுச்செயலாளர் ப.உ.ச. அவர்களிடம் சொல்லி, ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி அறிவித்திருக்கலாம். ஆனால், அவருடைய கடிதத்தை பொதுக்குழுவில் வைத்து ஏற்றுக்கொள்வது நலம் என்று கருதித்தான் இதுவரை காலம் தாழ்த்தினேன். இந்த விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளும்படி உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்''

சில உறுப்பினர்கள், "மறுபரிசீலனை செய்யக்கூடாதா?' என்று கேட்டனர்.

Advertisment

"மறுபரிசீலனைக்கே இடமில்லை. வயதுக்கும் தகுதிக்கும் மீறிய பொறுப்பில் அந்த அம்மையாரை உட்கார வைத்தது என்னுடைய தவறு. 1977 மற்றும் 80ஆம் ஆண்டு தேர்தலிலும் இந்த அம்மையார் நம்மோடு இல்லை. என்னைக் கேட்காமலேயே என் பெயராலேயே அறிக்கைகள் விடுவது, குறிப்பாக... ஆந்திர மாநிலத்தில் என்.டி.ராமாராவ் அவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து அறிக்கை விட்டது கண்டிக்கத்தக்கது. இவை எதுவும் கட்சியையோ, என்னையோ கலந்து பேசி தெரிவித்த கருத்துக்கள் இல்லை. இப்படி பலமுறை எனக்குத் தெரியாமல், பல இடங்களில் என்னுடைய பெயரை பயன்படுத்துவதை என்னாலே இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.

ஜெயலலிதா வேறு கட்சிக்குப் போவதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அந்த அம்மையாரைப் பிடித்து காரியங்கள் செய்து கொள்ளலாம் என்று நம்பியிருப்பவர்கள், அந்த அம்மையார் பின்னாலே போவது பற்றியும் எனக்குக் கவலையில்லை''

ss

இவ்வாறு பொதுக்குழுவில் இதயதெய்வம் புரட்சித் தலைவர், ஜெயலலிதா பற்றிய பகீர் தகவலைப் போட்டு உடைத்தார்.

புரட்சித் தலைவர் பேசி முடித்ததும், "புரட்சித் தலைவர் வாழ்க!' என கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் விண்ணதிர முழக்கமிட்டு ஜெயலலிதாவின் ராஜினாமாவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.

இப்படி "அண்ணா' பத்திரிகையில பொதுக் குழுவுல நடந்ததப் பத்துன செய்தி மறுபிரசுரமா வெளியாச்சு.

எம்.ஜி.ஆர்., ஜெ. மேல வச்ச குற்றச்சாட்டுகள்ல முக்கியமானது, "ஜெயலலிதா வேறு கட்சிக்குப் போக சதி செய்கிறார்' அப்படீங்கிறதுதான்.

ஜெயலலிதா அப்படி வேறு கட்சிக்குப் போயிருந்தா, அது எந்தக் கட்சியா இருந்திருக்கும்? ராஜீவ்காந்தி கூட ரொம்ப குளோஸா இருந்தாலும்கூட... நிச்சயமா காங்கிரஸ் கட்சிக்குப் போயிருக்கமாட் டாரு. தனிக்கட்சியயும் அவரால நடத்த முடியாது. அப்ப அவரோட சாய்ஸ்... தி.மு.க.வாத்தான் இருந்திருக்கணும். இதுக்கு முன்னுதாரணமா ஒரு சம்பவம் இருக்கு. அதேசமயம் ஜெ., தி.மு.க.வுக்கு வர்றத கலைஞர் ஏத்துக்கலங்கிறதுக்கும் ஆதாரங் கள் இருக்கு.

இப்ப அதப்பத்தி பாப்போம்...

எம்.ஜி.ஆர். கூட 35 வருஷமா இருந்து அவரோட ஒவ்வொரு செயல்பாட்டையும் உன்னிப்பா கவனிச்சு... எம்.ஜி.ஆரோட சினிமா, அரசியல் வளர்ச்சிக்கு பக்கத் துணையா இருந்த ஆர்.எம். வீரப்பன், தான் எழுதுன "எம்.ஜி.ஆர். யார்?' புத்தகத்துல குறிப்பிட்டுச் சொன்ன விஷயம்தான் அந்த ஆதாரம்...! ஆர்.எம்.வீ. சொன்னத அவர் வார்த்தைகள்லயே படிங்க...

dd

"செல்வி. ஜெயலலிதா அவர்கள் தனக்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் இருந்ததில்லை என்றும் புரட்சித் தலைவர் தான் தன்னை அரசியலில் அறிமுகப்படுத்தி னார் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். புரட்சித் தலைவரே விரும்பி வேண்டிக் கேட்டுக்கொண்டு அவரை அரசியலுக்கு அழைத்தார்; கொண்டு வந்தார் என்றும், இது 1980ம் ஆண்டிலே நடைபெற்றது என்றும், எல்லோ ரும் ஏமாளிகளாகி நம்புவார்கள் என்கிற தைரியத்திலே மனதறிந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லிக்கொண்டி ருக்கிறார். ஆனால் இவர் புரட்சித் தலை வரை விட்டு விலகிக் காணாமல் போவதற்கு முன்பு, 1972ம் ஆண்டு தொடக்கத்திலே மதுரையில் நடைபெற்ற திராவிட முன்னேற் றக் கழக மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆசைப்பட்டார். மேடையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேருவதற்கும் திட்டமிட்டிருந்தார். அன்று கழகத்தில் யாரும் விரும்பாத ஒரு சூழ்நிலையில் மதுரை மாநாட்டில் கலந்துகொள்ளவும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரவும் புரட்சித்தலைவர் மூலம் இவர் திட்ட மிட்டார் என்பதை அறிந்த என்னைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறோம். அவர் மறந்துவிடக்கூடாது.

ஆனால் இது நடைபெறாமல் போய் விட்டது என்பதும், அப்படி நடைபெறா மல் செய்ததற்கு இந்த ஆர்.எம்.வீரப்பன்தான் காரணம் என்பதும் இந்த அம்மையாருக்குத் தெரியும். ஆனாலும் இது ஊருக்குத் தெரி யாத ரகசியம் என்று எண்ணிக்கொண்டு 1980ல் நான் புரட்சித் தலைவரால் அரசிய லில் சேர்க்கப்பட்டேன் என்று இப்போது சொல்லி வருகிறார். இவர் 1972ஆம் ஆண்டி லேயே தி.மு.க.வில் சேரவேண்டும் என்று ஆசைப்பட்டதையும் அது எப்படி தடுக்கப் பட்டது என்பதையும் இனி சொல்கிறேன்.

1972ம் ஆண்டு, மே மாதம் என்று நினைவு, மதுரையில் மிகப்பெரிய அளவில் திராவிட முன்னேற்றக் கழக மாநாடு ஒன்று நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக இருந்தார்கள். அந்த மாநாட்டிற்குத் தானும் வரவேண்டும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகச் சேரவேண்டும் என்றும் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அதற்குப் புரட்சித் தலைவருடைய ஒப்புதலையும் பெற்றுவிட்டார். திரைப்பட உலகில் புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருக்கிற ஜெயலலிதா, ஏன் அரசியலுக்கு வரவேண் டும் என்று விரும்பினார்?

1971ம் ஆண்டிலே "ரிக்ஷாக்காரன்' திரைப்படம் வெளியானதற்குப் பிறகு ஜெயலலிதா அவர்களுடைய திரையுலக வாழ்க்கை அஸ்தமிக்கத் தொடங்கிவிட்டது. புதிதாகச் செல்வி. மஞ்சுளா, செல்வி. லதா போன்றவர்கள் நடிக்கத் தொடங்கினார்கள். இந்தப் புதிய நடிகைகளின் நுழைவுகள் ஜெயலலிதா அவர்களுடைய ஆதிக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கியது.

poorkalam

இனிமேல் திரைப்பட உலகைப் பொறுத்தவரை தனக்குப் பிரகாசமான எதிர்காலம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா, அரசியலுக்குள்ளே நுழைவது என்ற முடிவை எடுத்திருக்கலாம். திரையுலக வாழ்க்கையில் தான் பெற்ற செல் வாக்கையும், சிறப்பையும் ஒரு கட்டத்தில் இழக்கிற சூழ்நிலை ஏற்பட்டவுடன் மக்களிடத்திலே ஒரு புதிய அரங்கில் தனக்குச் செல்வாக்கைத் தேடிக்கொள்வதற்கு அரசியலிலே ஜெயலலிதா நுழைய விரும்பினார். அதனுடைய விளைவுதான் மதுரை மாநாட்டிலே பங்கு பெற வேண்டும் என்று எடுத்த முயற்சி. ஆனால் அவர் அந்த முயற்சியிலே வெற்றிபெற முடியவில்லை.

அரசியலில் சேர வேண்டுமானால், திராவிட முன்னேற்றக் கழகத்திலே ஏன் சேர வேண்டும்? 1971ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தி னுடைய வளர்ச்சி உச்சகட்டத்தில் இருந் தது. தமிழகத்தில் காங்கிரஸ் பிளவுண்டு செல்வாக்கை இழந்து கொண்டிருந்த சூழ்நிலையில், வலுவான மாற்றுக் கட்சியே இல்லாத நிலையில் திராவிட முன் னேற்றக்கழகம்தான் மாபெரும் சக்தியாக விளங்கிக்கொண்டிருந்தது.

மேலும் அது ஆட்சியிலும் இருந்தது. அதனாலே அந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் அரசியல் வாழ்க்கையில் சிறப்பான இடத் திற்கு வரலாம் என்பதுதான் ஜெயலலிதாவின் கணக்கு. அவர் போட்ட கணக்கு சரியாக இருந்தது. ஆனால் விடைதான் தவறாகப் போய்விட்டது.

எப்படி?

-எப்படின்னு ஆர்.எம்.வீ., அவர் எழுதுன அதே "எம்.ஜி.ஆர். யார்'ங்கிற புத்தகத்துல விளக்குறாரு...

(புழுதி பறக்கும்)