(313) அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பை சிவாஜியிடம் ஒப்படைக்க நினைத்த எம்.ஜி.ஆர்!
சிகிச்சை முடிஞ்சு எம்.ஜி.ஆர். சென்னை திரும்புனதும், சிவாஜிய தன்னோட வீட்டுக்கு வரச் சொன்னாரு. சிவாஜியும் அவர போய் பார்த்தாரு. எம்.ஜி.ஆரால சரிவர பேச முடியலன்னாலும், சிரமப்பட்டு உச்சரிச்ச வார்த்தைங்க மூலமாவும், சைகை மூலமாவும் சொன்னது என்னன்னா...
நாம சொல்றத விட சிவாஜி சாரே, சிவாஜி சார் பெயரிலேயே... "எனது சுயசரிதை'ங்கிற தலைப்புல டாக்டர் டி.எஸ்.நாராயணசாமி, தொகுத்து எழுதி 2006ல வெளிவந்த நூல்ல சொல்லியிருக்காரு.
"ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் இன்னும் ஒருவாரம்... பத்து நாள்ல ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்காக சென்னைக்கு வர்றாரு. அவரு வந்துட்டுப் போனதும் நீ இங்க வரணும். அப்ப நான் உங்கிட்ட ஒரு பெரிய பொறுப்ப ஒப்படைக்கணும்னு அண்ணன் எம்.ஜி.ஆர். எங்கிட்ட சொன்னார்."
ஆனா எம்.ஜி.ஆர். அப்படிச் சொன்ன நாலஞ்சு நாள்லயே இறந்துட்டாரு. ஒருவேள அப்போ எம்.ஜி.ஆர். மரணமடையாம சொன்ன தேதியில சிவாஜியும் அவர சந்திச்சிருந்தா... தமிழக அரசியல் நிலமையே மாறியிருக்கும்!
அ.தி.மு.க.வோட தலைமைப் பொறுப்ப சிவாஜிகிட்ட ஒப்படைக்க எம்.ஜி.ஆர். விரும்பியிருந்தாருங்கிறது.... நாளடைவுல ஆஃப் த ரெக்கார்டா பேசப்பட்டுச்சு.
குடும்பத்தோட போய் துக்கம் விசாரிக்கிற வழக்கம்னு ஒண்ணு இருக்கு. அந்த வழக்கப்படி எம்.ஜி.ஆர். இறந்தப்ப... தன் மனைவி கமலாம்மாவ கூட்டிட்டு துக்கம் விசாரிக்கப் போன சிவாஜி சார்கிட்ட, ஜானகி அம்மாவும்... "என் தம்பி கணேசன் வீட்டுக்கு வரப்போறான்... அவன்கிட்ட ஒரு முக்கியமான பொறுப்ப ஒப்படைக்கப்போறேன்னு சொல்லிக் கிட்டேயிருந்தாரு. ஆனா அதுக்குள்ள நம்மள விட்டுப் போயிட்டாரே''ன்னு சிவாஜியப் பாத்து அழுதுருக்காரு.
கொஞ்சம் நெனைச்சிப் பாருங்கண்ணே... அந்த மாதிரி அரசியல் மாற்றம் நடந்திருந்தா, புண்ணியவதி ஜெ.கிட்ட சிக்கி தமிழ்நாடு இத்தன இம்சைப்பட்டுருக்குமா?
அ.தி.மு.க.வோட தலைமைப் பொறுப்ப சிவாஜிகிட்ட ஒப்படைக்க எம்.ஜி.ஆர்., எண்ணுனது, எம்.ஜி.ஆரோட மரணத்துக்குப் பின்னாடி, அரசியல்ல தனக்கு ஆதரவா இருக்காம, வி.என்.ஜானகி அணிய ஆதரிச்சது; ராஜீவ்காந்திகிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்ங்கிற முறையில, (அப்ப தமிழ்நாடு காங். கமிட்டி தலைவரா சிவாஜி சார்தான் இருந்தாரு) அப்ப போல்டா "ஜானகி அணியத் தான் ஆதரிக்கணும்'னு சொன்னது, ராஜீவ் அத நிராகரிச்சதுனால புதிய கட்சி தொடங்கி அ.தி.மு.க. (ஜா.) அணியோட கூட்டணி வைச்சது...
-இப்படி அரசியல் ரீதியா "ஜெ.'வுக்கு எதி ரான நிலைப்பாட்டத்தான் சிவாஜி எடுத்தாரு.
பழிவாங்குறதுக்கு காரணமே தேவைப் படாத ஜெ. மேடத்துக்கு, இம்புட்டு காரணங்கள் பத்தாதா என்ன...?
இதெல்லாம் மனசுல வச்சு அண்ணன் சிவாஜி சார பாடாய்படுத்தி எடுத்திருச்சு அந்தம்மா.
சரி... இதுலகூட ஒரு லாஜிக் இருக்குன்னு வச்சுக்குவோம்...
எம்.ஜி.ஆர். கூட நடிச்சதுனால சினிமாவுல கொடிகட்டிப் பறந்த "ஜெ', ஒரு கட்டத்துல எம்.ஜி.ஆர். படங்கள்ல வாய்ப்பு கிடைக்காம போகவும், " "ரிக்ஷாக்காரன்' படம் வரவே வராது, "உலகம் சுற்றும் வாலிபன்' படம் எடுக்குறதுக்காக ஜப்பான் போகல... சும்மா ஜாலி டிரிப்' என தன்னோட விசுவாசிகளை வச்சு செய்தியப் பரப்புனாரு "ஜெ'.
அரசியல்லயும் எம்.ஜி.ஆருக்கு எதிரா ஏகப்பட்ட அக்கப்போர் பண்ணீருக்காரு.
தன்னோட அறிக்கைகள்ல "புரட்சித் தலைவர், என் இதய தெய்வம், எனது அரசியல் ஆசான்' அப்படின்னு எழுதுன ஜெ; மேடைகள்ல எம்.ஜி.ஆரை புகழ்ந்த ஜெ., எம்.ஜி.ஆருக்கு எதிரா ஏன் ஏகப்பட்ட இம்சைகளக் குடுத்தாரு தெரியுமா? சொல்றேன்...
கட்சிக்குள்ள நடக்குற விஷயங்கள பொதுவெளியில பேசுறதும், எம்.ஜி.ஆரை குறை சொல்லி ராஜீவுக்கு கடிதம் எழுதுனதும், எம்.ஜி.ஆரோட முதல்வர் நாற்காலிய குறுக்கு வழியில கைப்பத்த நினைச்சதும், துணை முதலமைச்சர் பதவி கேட்டு வீம்பு பண்ணின தும், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களை தன்னோட இஷ்டப்படி ஆட்டிவைக்க நினைச்சதும், அது முடியாததுனால எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மேல கடுப்பக் காட்டினதும், எம்.ஜி.ஆர்., உடல்நலமில்லாம இருந்தப்பவே எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்துக்கு போட்டியா "ஜெயலலிதா பேரவை'ன்னு ஒரு அமைப்பை, தன்னோட அபிமானிகளை வச்சு உருவாக்க நினைச்சதும்... செல்வாக்கு ரீதியா பலவீனப் படுத்த முடியாத எம்.ஜி.ஆரை, உளவியல் ரீதியா -மனரீதியா பலவீனப்படுத்தியதும், ராஜீவ் காந்திகிட்ட தனக்கிருந்த செல்வாக்க வச்சு, எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட குடைச்சல் குடுத்ததும், அதுக்கு ராஜீவும் உடந்தையா இருந்ததும், அப்பப்பா...
முதல்ல சொன்ன மாதிரி, எம்.ஜி.ஆர பத்தி ராஜீவுக்கு கோள்மூட்டிய கடிதத்த நீங்களே பாருங்க...
25-11-1987 தேதியிட்டு ராஜீவ்காந்திக்கு, ஜெயலலிதா எழுதுன ஆங்கில கடிதத்தோட தமிழாக்கம்...
பிரியத்துக்குரிய ராஜ் சாப்.
என்னுடைய தனிப்பட்ட வேண்டுதல்களை யும், நான் அளித்த குறிப்புப் பட்டியலையும் பார்த் தும், ஜனாதிபதி திரும்பவும் அசிரத்தையாக இருப் பது துரதிர்ஷ்டமே. நான் சொல்வது மாநில நிலை மையையும், அரசு நிலையையும் பற்றியதாகும்.
என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. திறமையற்ற, அடிமுட்டாள்தனமான, (யார அடிமுட்டாள்னு சொல்றாருன்னு தெரியுதா...? மக்களே...) ஊழல் அரசு நடப்பதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. முதல்வர் (எம்.ஜி.ஆர்.) ஒட்டுமொத்தமாக உணர்விழந்த நிலையில் இருக்கிறார். அவருக்கு தொடர்பே இல்லை. அவர் முடமாகிக் கிடக்கிறார்.
நீங்கள் செயல்பட வேண்டிய கட்டம் இது. நான் மேலும் இதை விவரித்து சொல்லிக் கொண்டிருக்கப் போவதில்லை. ஏற்கனவே எல்லாவற்றையும் பட்டியலிட்டுத் தந்திருக்கிறேன்.
கட்டாயப்படுத்தி விலகச் சொல்லுங்கள். அல்லது அவரிடம் சொல்லி குறைந்தபட்சமாக என்னை துணை முதல்வராக்கி, அரசை நடத்த அனுமதிக்கச் சொல்லுங்கள். இதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவாக செய்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. இல்லையென்றால் நான் மு.க.வோடு சேர்ந்து இந்தக் கிழவனை எதிர்த்து நேரடியாகப் போராடுவேன். இது உங்களுக்கும் சங்கடத்தைக் கொடுக்கும். ஆகவே நடவடிக்கை எடுங்கள்.
உங்கள் நம்பிக்கைக்குரிய
ஜெ.ஜெயலலிதா
இந்தக் கடிதத்தைக் கண்ட ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்தக் கடிதத்தில்... "தங்களின் உடல்நிலை இன்னமும் சீராகவில்லை என்பதை கேள்விப் பட்டு வருத்தம் அடைகிறேன். தங்களின் உடல்நிலை முழுஅளவில் குணமாக ஆண்டவ னையும் பிரார்த்திக்கிறேன். தற்பொழுது தங்களுக் குத் தேவை முழு ஓய்வு.
எனவே ஜெயலலிதாவை துணை முதல்வ ராக நியமித்துக்கொண்டால் தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். இதையே தான் ஜெயலலிதாவும் விரும்புகிறார்'' என அந்தக் கடிதத்தில் ராஜீவ் குறிப்பிட்டிருந்தார்.
மேப்படி கடிதத்த படிச்சவுடனே எம்.ஜி.ஆர். கண் கலங்கி அழுதுருக்காரு.
எம்.ஜி.ஆருக்கு ஆதாரமா இருந்ததே அவரோட ரசிகர் மன்றங்கள்தான். பட்டாளம் போல செயல்படுவாங்க. அந்தப் பட்டாளத்தை யே தனக்குப் பட்டா போட நினைச்சாரு ஜெய லலிதா. அந்தச் சம்பவத்தையும் சொல்றேன்...
1950-கள்லயே மதுரையில ஒரு ஓட்டல் தொழிலாளி மூலமா எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுச்சு. இப்படி ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக தனித்தனியே இருந்தவங்களை "எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்'ங்கிற பேர்ல ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைச்சார்.
அறிஞர் அண்ணா தன் கூட இருந்த ஆர்.எம்.வீரப்பன்கிட்ட "நீ எம்.ஜி.ராமச்சந்திர னுக்கு துணையா இருக்கணும்'னு சொன்னது னால எம்.ஜி.ஆரிடம் வந்து சேர்ந்தார். அந்த அசைன்மெண்ட்டோட முக்கிய அம்சம்தான் "எம்.ஜி.ஆர் மன்றம்'.
அப்புறமா தி.மு.க.வோட ஒரு அமைப்பா "அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம்'னு மாறுச்சு. அ.தி.மு.க.வோட அரசியல் செல்வாக்குக்கு அடிப்படையா அமைஞ்சது எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்தான்.
(சிவாஜி சார், ரசிகர்கள "சிகர' மன்றங்கள் என்கிற பேர்ல ஒருங்கிணைச்சவர் சின்ன அண்ணாமலை)
எம்.ஜி.ஆருக்கு ஜோடியா ஜெயலலிதா "ஆயிரத்தில் ஒருவன்'ல ஆரம்பிச்சு, "பட்டிக் காட்டுப் பொன்னையா' படம் வரைக்கும் மொத்தம் 28 படங்கள்ல நடிச்சார். இந்த ஜோடி ரசிகர்களால ரசிக்கப்பட்டாலும்கூட... மஞ்சுளாவும், லதாவும் எம்.ஜி.ஆர் கூட நடிக்க ஆரம்பிச்ச பிறகு ஜெ.வுக்கு சினிமா மார்க்கெட் இல்ல. மார்க்கெட் போயி, செல்வாக்கு போயி... ரொம்ப வருஷங்களா எம்.ஜி.ஆர். கூட தொடர்பிலேயே இல்லாம இருந்த "ஜெ.' 1980-ல மறுபடி எம்.ஜி.ஆரோட தொடர்பு எல்லைக் குள்ள வந்தார். ஜெ.வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஆர்.எம்.வீ.தான், ஜெ.வோட அரசியல் என்ட்ரிக்கு காரணமாவும் ஆனாரு.
அது என்னன்னா...
(புழுதி பறக்கும்)