pp

(302) ஜெயிலில் "ஜெ.' போட்ட சபதம்!

"ஜெ.' வீட்டுல ரெய்டு நடத்துன போலீஸ் அதிகாரி நல்லம நாயுடுவின் பேட்டி தொடருது...

"செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திராட்சை தோட்ட பண்ணை வீட்டை சோதனை செய்ய திரு.கதிரேசன் என்ற உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அவரிடம் நீதிமன்ற ஆணையை கொடுத்து திரு.ராம்விஜயனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு செல்வி ஜெ.ஜெய லலிதா அவர்களின் எண்:36 மற்றும் 31-ஆ வீட்டிற்கு சென்று செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிரதிநிதியான திரு.பாஸ்கரன் என்பவரை பார்த்து வீட்டு சோதனைக்கு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கொடுத் திருந்த கடிதத்தைக் காட்டினோம். அவர் சோதனையின்போது உடனிருந்து உதவி செய்ய ஒப்புக் கொண்டார். என்னுடன் அழைத்துச் சென்றிருந்த என் உதவி கண் காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் களை 4 குழுக்களாக பிரித்து ஒவ்வொருவருக் கும் ஒரு வேலை கொடுத்தேன். இன்னொரு குழு சோதனையில் ஈடுபட்டிருந்த குழுக் களுக்கு உணவு, தேநீர் மற்றும் பொருட்கள் அவ்வப்போது கொடுக்க அமைக்கப்பட்டது. என் உயரதிகாரி திரு.வி.சி.பெருமாள் அவர்கள் இந்த சோதனையை மேற்பார்வை செய்தார். 2 வருவாய் துறை அதிகாரிகளின் முன்னிலை யில் இந்த சோதனை நடந்தது. சோதனை விபரம் வெளியில் தெரியக்கூடாது என்பதற் காக வீட்டில் இருந்த எல்லா தொலைபேசி களையும் துண்டித்துவிட்டோம்.

Advertisment

இந்த வீட்டு சோதனை நடந்த சில நொடிகளில் சன் டி.வி. நிருபர்கள் சிலர் வாயில்காப்பாளர்கள் தடுப்பையும் மீறி வீட்டு முற்றம்வரை வந்து "சோதனை நிகழ்வுகளை வீடியோ படம் எடுக்க வந்ததாக' கூறினார்கள். "வீடியோ படம் எடுக்க யாரையும் அனுமதிக்க முடியாது' என்று கூறினோம். அன்றைய தினம் சன் டி.வி., ஆளும் கட்சிக்கு சொந்தமானது. அதனால் அதிகார தோரணையில் வம்பு வழக்கு செய்தார்கள். "பலவந்தமாக அகற்றப்படுவார்கள்' என எச்சரித்த பின் படம் எடுக்காமல் வெளியில் சென்று விட்டார்கள்.

வீட்டு சோதனைகள் தொடர்ந்து சில தினங்கள் நடத்தப்பட்டது. எண்.36 மற்றும் 13-ஆ ஆகியவற்றில் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள், தோல்பெட்டிகள் மற்றும் வழக்குக்கு சம்பந்தமான ஆவணங்கள் இருப்பது கண்ட றியப்பட்டது. அதற்கு பார்வை மகஜர் தயாரிக் கப்பட்டது. பிறகு மேற்படி பொருட்களை அந்த துறையை சார்ந்த நிபுணர்களை வைத்து மதிப்பீடு செய்யப்பட்டது. தங்க, வைர நகைகள் அமலாக்கத்துறை நிபுணர் திரு.வாசு தேவன் என்பவரை வைத்து மதிப்பீடு செய்யப் பட்டது. எண்.36, போயஸ் தோட்ட வீட்டில் 23.113 கிலோ மற்றும் எண்.31-ஆ வீட்டில் 4.47 கிலோ ஆக மொத்தம் 27.583 கிலோ தங்க, வைர நகை கள் மதிப்பு ரூ.3,88,11,859/- (இப்ப மதிப்பு எவ்வ ளவு தெரியுமா? 17 1/2 கோடி. தங்கம் ரேட்டுக்கு வைரத்தையும் கணக்குப் போட்டிருக்கு. வைரம் தனியா போட்டா அது போகும் பெரிய பட் ஜெட்டா... புள்ளையா? குட்டியா...? எனக்குன்னு கேட்டுக்கிட்டிருந்த ஜெயலலிதாவுக்கு 17.5 கோடிக்கு தங்கம், வைர நகைங்க. இருக்கட்டும்... இருக்கட்டும்...!) இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. கைப்பற்றுதல் மகஜர் ஒன்றினை தயார் செய்தோம். மற்ற பொருட்களை பாதுகாப்பாக அந்தந்த அறைகளில் வைத்து பூட்டி சீல் வைத்து அவற்றை திரு.பாஸ்கரனிடம் ஒப்படைத்தோம்.

f

Advertisment

தங்க, வைர நகைகளை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயத்தில் சுமார் 20 வழக் கறிஞர்கள் காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே வந்து பலமாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நாங்கள் கைப்பற்றிய தங்க, வைர நகைகள் யாவும் ஏற்கனவே வருமான வரித் துறைக்கு கணக்கு காட்டப்பட்டுவிட்டது, அத னால் அவற்றை கைப்பற்றக்கூடாது என்று கூச்சல் போட்டார்கள். அதையே திரு.பாஸ்கர னும் கூறினார். "நாங்கள் அந்த நகைகளை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுவோம் என்றும், அதை அங்கே சென்று எடுத்துக்கூறி பெற்றுக் கொள்ளலாமே' என்றும் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பிறகு "நாங்கள் கைப்பற்றியிருக்கும் நகைகளை வருமானவரித் துறைக்கு காட்டப்பட்ட நகைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்யலாம்...' என்று கூறியதை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் நகைகளை மறுபடியும் அந்த வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்து திரு.பாஸ்கரனிடம் ஒப்படைத்தோம். பாதுகாப்புக்கு காவலர்களை நியமித்தோம். இந்த நடவடிக்கையைப் பற்றி நீதிமன்றத்திற்கு தகவல் கொடுத்தோம். எனவே, இன்னொரு நாளில் திரு.வாசுதேவன் அவர்களை மறுபடியும் வரவழைத்து மேற்படி ஒப்பிடும் வேலையை செய்தோம். ஒரு சில நகைகள் மட்டும் ஒன்றாக தெரிந்தது. பெரும்பாலான நகைகள் வேறுபட்டன. எனவே, அந்த வழக்கறிஞர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஒப்பிடும் வேலை அன்றிரவு வரை நீடித்ததால் நீதிமன்றத்திற்கு நகைகளை அனுப்ப முடியவில்லை. எனவே, அந்த நகைகளை சைதாப்பேட்டை -நந்தனம் கருவூல பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்து காவலர் நியமித்து காவலுக்கு இருக்க வைத்தோம்.

அதன்பிறகு திரு.வாசுதேவன் அவர்களின் உதவியுடன் மேற்சொன்ன நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம். அப்போது நீதிபதி அவர்கள், "செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தினம் அணிய விரும்பும் நகைகளை மட்டும் அவரிடமே கொடுத்துவிடலாம்' என அறிவுரை வழங்கினார். அதன்பேரில் சென்னை மத்திய சிறையில் இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை பார்த்து, நீதிபதி கொடுத்த அறிவுரையை சொன்னேன்.

அவர் தன் வீட்டு சோதனையின்போது எடுக்கப்பட்ட கைக்கடிகாரத்தின் உள் பகுதியில் தான் வெளிநாட்டில் வைத்துள்ள வங்கிக் கணக்கு எண் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப் பட்டதாகக் கூறி கோபப்பட்டு, "தான் இந்த வழக்கு முடித்து நகைகளை திரும்பப் பெறும்வரை எந்த நகையும் அணியப்போவதில்லை' என்று சபதம் செய்து என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். இந்த நிகழ்ச்சி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி கைப்பற்றப்பட்ட நகைகள் யாவும் சென்னை ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 27-12-1996 முதல் 31-12-1996 வரையிலும் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை எனது குழுவின் பெண் ஆய்வாளர் ஒருவருடன் சென்னை மத்திய சிறையில் சந்தித்து விசாரணை நடத்தினேன். அப்போது முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்றை அவரிடம் கொடுத்தேன். அந்த விசாரணை யாவும் மத்திய சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணைக்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதலில் நானும் எனது உதவியாளர்களும் அந்த அறையில் உட்கார்ந்தோம். பிறகு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சிறையில் இருந்து கூட்டிவரப்பட்டார். நாங்கள் அனைவரும் எழுந்து வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். அவரை உட்காரும்படி கேட்டுக் கொண்டேன். அவர் உட்காரவில்லை. திடீரென கோபம் கொண்டவராக...

"நான் மட்டும்தானா சொத்து சேர்த்திருக்கிறேன். மற்ற கட்சி தலைவர்கள் யாரும் சொத்து சேர்க்கவில்லையா? என் மீது மட்டும் ஏன் இந்த விசாரணை?''என்று உரக்க கூறினார். பிறகு கொஞ்ச நேரத்தில் அமைதியானார்.

dd

நான் மெதுவாக பேச ஆரம்பித்தேன். "அம்மா தற்சமயம் உங்கள் மீது உள்ள வழக்கை விசாரிக்க என்னை நியமித்திருக்கிறார்கள்; அதனால் நான் விசாரிக்க வந்தேன். பின்னாளில் நீங்கள் மறுபடி தமிழக முதல்வர் ஆவீர்கள்; அப்போது எதிர்கட்சித் தலைவர்கள் மீது இந்த மாதிரி வழக்கு விசாரணையை என்னிடம் கொடுத்தால் இதே வேகத்தில் ஆர்வத்தோடு நடந்துகொள்வேன்'' என்று கூறினேன். அவர் கொஞ்சம் கோபம் தணிந்தவராக, அவருக்காக போட்டு வைத்திருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது அவர் சொத்து சேர்த்தது, பெற்ற வருமானம், செலவு, சசிகலா மற்றவர்களின் சேர்க்கை முதலியவை குறித்து விளக்கம் கேட்டோம். சுமார் 1000க்கும் அதிகமாக கேள்விகளுக்கு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடமிருந்து "இல்லை', "தெரியாது', "ஞாபகமில்லை', "சசிகலாவை கேட்க வேண்டும்', "ஆடிட்டர், வழக்கறிஞர்களுக்கு தெரியும்' போன்ற தெளிவில்லாத பதில்களே வந்தது. அவரது பதிலை பதிவு செய்து கொண்டோம். இந்த விசாரணையின்போது, பெண் ஆய்வாளர் ஒருவரும், பெண் சுருக் கெழுத்து தட்டச்சர் ஒருவரும் உதவினார்கள்.''

நல்லம நாயுடு சார் சொல்றதப் பாத்தா, "எனக்கு எதுவும் தெரியாது... தெரியாது... தெரியாது...'ன்னு சொல்லித்தான் மழுப்பி யிருக்காரு ஜெயலலிதா!

இப்ப... நம்ம வீட்டுல என்னென்ன சாமான்கள் இருக்குங்கிற விஷயம் நமக்குத் தெரியாதுன்னு சொன்னா, யாராவது நம்புவாங்களா?

நம்பமாட்டாங்க!

ஜெ.வும் அப்படித்தான்... நம்பமுடியாத பதிலச் சொன்னாரு.

அவரோட வீட்டுல இருபத்தி ஏழு கிலோ சொச்சம் தங்க நகையும், வைர நகையும் இருந்திருக்கு. ஒரு மனுஷிக்கு இத்தன கிலோவுல தங்க நகைக இருந்தது தெரியாதா... அப்படீன்னா... யாரு காதுல பூ வைக்கிறாய்ங்க...!

அவருக்குத் தெரியாதுங்கிறது உண்மைன்னா... வீட்டுல ஒரே ரூம்ல ஜெ.வை அடைச்சு வச்சிருந்தாங்களா?

இதுல எது உண்மை?

(புழுதி பறக்கும்)