(280) காவேரிக்கரை பிராமணன் அல்லன்! கரிசல்காட்டுத் தமிழன்! -திருச்சி செல்வேந்திரன்
அசோக்குமார்ங்கற போலீஸ்காரர், அதே ஆணையத்துல என்ன சொல்றாருன்னா... அவரு வேற யாரும் இல்ல, தேவாரம் தலைமையில இருந்த எஸ்.டி.எஃப்.ல கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் -சிறப்பு அதிரடிப்படை.
அவர் குடுத்த ஒரு வாக்குமூலம்...
அதுக்கு முன்னாடி போன இதழ்ல தேவாரம் ஆணைத்துல சொன்ன வாக்குமூலத்துல.. தங்கம்மாவ பற்றி அந்தக் கேள்விக்கு அவரு என்ன சொல்றாரு, "அதப்பத்தி எனக்குத் தெரியாது. தங்கம்மா என்ற பெண்ணை எனக்குத் தெரியாது''ன்னு சொல்றாரு.
அதுக்கு அடுத்து, அதவிட முக்கியமா வீரப்பனுடைய தம்பி அர்ஜுனனைப் பத்திச் சொல்லும்போது, இதெல்லாம் தெரியாது... தெரியாது...ன்னு சொல்லிட்டு அர்ஜுனனப் பத்தி சொல்லும்போது மட்டும்... "அவர் மணமானவரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவனுக்குப் பல பெண்களுடன் உறவு இருந்தது'' அப்படின்னு மாத்திரம் சொல்றாரு.
அதாவது... "வீரப்பன் சகோதரர் அர்ஜுனன், 1994, டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு சிறப்பு அதிரப்படையால் கைது செய்யப்பட்டான்...'' -தேவாரம் சொல்றாரு.
அர்ஜுனனை கைது செய்யவே இல்ல. அதுவே புரூடா. அவன் தூது வந்தவன். தூது வந்தவன அப்படியே மயக்க ஊசி போட்டு படுக்கப் போட்டுட்டாய்ங்க. தூது வந்தவன அரெஸ்ட்பண்ணி அப்படியே உள்ள வச்சுட்டாய்ங்க. அர்ஜுனன் கைதுங்கிறது ஒரு மகா பொய். அப்புறம், "பல பெண்களுடன் உறவு இருந்தது'' அப்படீங்கிறது...
அதுவும் மகா பச்சைப்பொய். வீரப்பனும், அவரது தம்பியும் பெண் ஒழுக்கசீலர்கள்.
தேவாரம்... இவரப் பத்தி ஒரு அம்மா அடிச்சு சொல் லுது... "அவரால பாதிக்கப்பட்டது நான்தான்... நான்தான்''னு.
அர்ஜுனனப் பத்தி பெண்கள் யாரும் வந்து, "இவர் என்கூட உறவு வச்சாரு'' அப்படின்னு சொல்லல.
ஆனா, "தேவாரம் என்னைக் கெடுத்தார்''னு ஒரு அம்மா... அதான் தங்கம்மா ஓபனா சொல்லுதே...
"தங்கம்மா என்ற பெண்ணை எனக்குத் தெரியாது. அவர் தடா கைதியா இருந்தாரா என்பது எனக்கு ஞாபகம் இல்லை''
"அதெப்படிண்ணே உங்களுக்கு ஞாபகம் இருக்கும். வந்தவன், போனவன் எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு தூக்கி, பொணக் கெடங்குல போடுற மாதிரில்ல ஒர்க்ஷாப்புலயும், தடா ஜெயில்லயும்... ஒத்துவராதவன கொண்டு போட்டீக. உங்களுக்கு எப்படி இதெல்லாம் ஞாபகம் இருக்கும்? ஒண்ணா... ரெண்டா... ஞாபகம் வர!''
அசோக்குமார்ங்கிற போலீஸ்காரரு, அதே ஆணையத்துல என்ன சொல்றாருன்னா...
திருமதி.தங்கம்மாள் உட்பட சிலரை நான் குழுவின் உறுப்பினராக இருந்தபோது கைது செய்திருக்கலாம். 1993 மற்றும் 1994இல் நான் குழுவின் உறுப்பினராக இருந்த கால கட்டத் தில் திருமதி.தங்கம்மாளை தவிர எந்தப் பெண்ணையும் கைது செய்யவில்லை. (சாட்சி, இன்னொரு பெண்ணை தான் கைது செய் திருக்கலாம் என்று பின்னர் சொல்கிறார்). நான் கொளத்தூர், நாயகன் தண்டா, மேட்டுப் பனையூர் ஆகிய இடங்களில் இருந்து திருமதி.தங்கம்மாளை தவிர யாரையும் கைது செய்ததில்லை. (சாட்சி, முதல் தகவல் அறிக் கையைப் பார்த்த பிறகு திருமதி. தங்கம்மா ளையும், திரு.பாண்டுவின் மனைவி திருமதி மணியையும் கொளத்தூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் கள்ளட்டி கண்வாயில் கைது செய்தார் என்றும் அவர்கள் கிராமத்தில் இருந்து கைது செய்ய வில்லை) என்றும் கூறுகிறார்.
இந்த அசோக்குமார் சொன்னத கவனிச்சீங்களா... தேவாரம் "தங்கம்மாவை எனக்குத் தெரியாது''ன்னு சத்தியம் பண்ணுறாரு.
ஆனா இவரு, "ஆமா... தங்கம்மாவைத் தவிர யாரையும் கைது பண்ணலை''ங்கிறாரு.
தேவாரம் பொய் சொல்றாருன்னு விளங்கிச்சா...
ஒரு சின்ன இடைவேளை...
அண்ணன் திருச்சி செல்வேந்திரன்.
பெரியார் கூட இருந்தவரு. பெரியார் எப்படி ராமாயணத்த, மகாபாரதத்த படிச்சுப் பேசுவாரோ... அதேபோல "ஆண்டாள் பாசுரம்", "நாலாயிர திவ்யப் பிரபந்தம்" இதெல்லாம் படிச்சுட்டு ஸ்ரீரங்கத்துல கூட்டம் போட்டு பேசுவார். கருத்துல மாறுபாடு இருந்தாலும் இவர் பேச்சை அக்ரஹாரத்துல விரும்பிக் கேப்பாங்க.
எல்லாருக்கும் கலைஞர் பேச்சு புடிக்கும். கலைஞருக்கு இவர் பேச்சு புடிக்கும்.
இன்னிக்கு இருக்கிற எம்.பி., அமைச் சர்கள் எல்லாருக்கும் திராவிடம் பற்றி கொள்கை வகுப்பு எடுத்தவர். அவர் திருச்சியில இருக்கலாம், அவர் கத்துக் குடுத்த பாடம் டில்லி செங்கோட்டையில ஒலிச்சுக்கிட்டிருக் கும். இவர் இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும்.
1957-ல பெரியார் நடத்துன அரசியல் சட்ட எதிர்ப்பு போராட்டத்துல 3000 பேரு ஜெயில்ல. அதுல 18 பேர் செத்துப்போறாங்க. சுதந்திர இந்தியாவுல நடந்த மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம் இது. இதை முதல் முதலில் ஆவணப்படுத்தியவர் அண்ணன் திருச்சி செல்வேந்திரன். அவர் நக்கீரன்... நக்கீரனோட போராட்டம் பத்தி எழுதி யிருக்காரு. கொஞ்சம் நீளமா இருக்கும். இந்த நேரம் அவசியமானதுன்னு இங்க பிரசுரிக்கிறோம்.
"நக்கீரன் இதழில் 275 அத்தியாயங்களைக் கடந்தும் சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்களை புல்லரிக்க வைத்துக்கொண்டிருக்கும் தொடர்தான் "போர்க்களம்.'
நக்கீரன் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை யில் தொடங்கி, அடுக்கடுக்காய் எதிர்கொண்ட அதி காரமட்ட நெருக்குதல்களை விவரித்து, சங்கிலிக் கண்ணிகளைப் போன்று ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்துக்கு மாறி, கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு தமிழகத்தின் அரசியல் கதை களையே வாசகர் கண் முன்பு நிகழ்த்திக் காட்டிவிட்டார்.
பேனாவையே வாளெனச் சுழற்றிக்கொண்டு, மக்களிடம் எப்போதும் உண்மையைப் பேச விரும்பும் பத்திரிகையாளனுக்கு ஒவ்வொரு நாளுமே யுத்த தினம்தான்... செல்லும் இடமெல்லாம் போர்க்களம்தான்!
ஒரு காலத்தில் பம்பாயில் இருந்து வெளி வரும் "பிளிட்ஸ்' என்ற வார இதழ் பலரால் விரும் பிப் படிக்கப்பட்ட இதழ். சிலர் அதன் பரபரப்பான செய்திகளுக்காக, சிலர் அதன் ஆசிரியர் கரஞ்சியா என்ற பார்சி மேல்சாதிக்காரரின் ஆங்கில நடைக்காக, சிலர் கடைசிப் பக்கத்தில் வெளிவரும் கவர்ச்சிப் படத்திற்காகவென பல மாதிரி இலட்சக்கணக்கான வாசகர்கள் அதற்கு.
அதன் ஆசிரியர் ஆர்.கே.கரஞ்சியா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் படுத்திருந்தார். அவருடைய பழைய துணை ஆசிரியர், அவரைப் பார்க்கப் போயிருந்தாராம். கரஞ்சியாவுக்கு கடைசிக் காலத்தில் முதுமையால் ஞாபக மறதி நோய் வந்திருந்த நேரமது.
தன்னுடைய பழைய துணை ஆசிரியரைப் பார்த்தவுடன் கரஞ்சியா முகமலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். அப்போது துணை ஆசிரியர் கரஞ்சியாவிடமிருந்து விலகி வேறு இதழில் பணியாற்றிக்கொண்டிருந்தார். கரஞ்சியா அவரிடம் பழைய நினைப்பில்... "என்ன சாய்நாத், இந்த வார இதழுக்கு வேலையை முடித்துவிட்டீர்களா? இதழ் வெளியாவதில் தாமதம் கூடாது'' என்றாராம், கரஞ்சியா இறந்த பிறகு துணை ஆசிரியர் கண்ணீரோடு,
"கரஞ்சியாவுக்கு நோயே நினைவு மறதிதான். ஆனால் மரணப் படுக்கையில் கூட அவருக்கு, தான் ஒரு பத்திரிகையாளன் என்ற நினைவு மட்டும் அப்படியே இருந்தது'' என்று எழுதினார்.
விருதுநகர் மாவட்டம் -அருப்புக்கோட்டை யில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியரான கோபக்கார முரட்டுத் தந்தையின் மகனான நக்கீரன் கோபால் எந்த நேரமும் பத்திரிகையை ஒரு தொழிலாய் செய்யாமல், "தவமாய்' நினைக்கிறவர். செய்கிற வேலையில் தன்னை முழுவதுமாய் ஈடுபடுத்திக்கொண்டு, சில நேரங்களில் பலரின் வருத்தத்துக்கு ஆளாகித் தன்னை வருத்தி கொண்டிருப்பதற்குப் பெயர்தான் தவம் என்றால் திரு.கோபால் செய்வது தவம்தான்!
கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பு படித்தவர் என்றாலும், இரும்புப் பட்டறைத் தொழிலாளியாய் வாழ்க்கையைத் தொடங்கியவர். கோபம் வந்தால் கண் மண் தெரியாமல் அடித்துவிடும் தந்தையிடம் இன்னும் அடிமனத்தில் அன்போடும், பாசத் தோடும் இருந்தாலும் பழைய பயம் தனக்கு அப்பாவிடம் உண்டு என்பதை வெள்ளந்தியாய் ஒப்புக்கொள்கிறார் இந்தப் பிரமாண்டமான பத்திரிகையாளர், அச்சக நிறுவனத்தின் உரிமை யாளரான கோபால்.
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்பது அருமையான கவிதை வரி. அதற்கு இன்றைய அனுபவப் பொருள் வேறு. கூட்டுக் குடும்பத்தில் ஓர் அண்ணனாய் இருந்து தம்பிகள் படுத்துகிற பாட்டைச் சமாளித்துவிடுகிறவன், பின்னால் பெரும் படையையே கண்டாலும் அஞ்சமாட்டான் என்பதுதான் இன்றைய நிலை.
கோபால் அதிலும் கொடுத்து வைத்தவர். தம்பி, அவரது துணைவியார், பிள்ளைகள், (மாமனார் இல்லை) மாமியார், மைத்துனர்கள், சகோதரிகள் குடும்பம், அவருடன் பணியாற்றும் சகோதரர்களின் குடும்பம் என எல்லோரும் காட்டுகின்ற அன்பும் அரவணைப்புமே பல சோதனைகளை கோபால் தாண்டி நிற்கத் துணைபுரியும் சக்திகள். கோபால் என்ற இந்த ஆலமரத்தின் நிழலில் எத்தனை பேர், கிளையில் எத்தனை பறவைகள்!
கோபாலின் துணைவியார் "தற்கொண்டான் பேணுகிறவர்' என்பதை வீட்டிற்குப் போய் உட னிருந்து பார்க்க வேண்டாம். சின்ன குத்தூசி அவர் களுக்கு மதிய உணவாக அவருடைய துணைவியார் திருமதி.விஜயலட்சுமி, சின்னச்சின்ன கிண்ணங் களில் வகை, வகையாக ஆனால் வண்ண வண்ண மாய் அனுப்பும் சோறு, காய்கறிகளைப் பார்த் தாலே போதும். ஓவியராய் பத்திரிகைத் துறையில் நுழைந்து "தராசு', எம்.ஜி.ஆரின் "தாய்' என பல இதழ்களில் வடிவமைப்பாளராய் பணியாற்றி, தன் சொந்த முயற்சியால் "நக்கீரன்' இதழைத் தொடங்கிய கோபால், இந்தப் பத்திரிகை பல்கலைக்கழகத்தின் வேந்தரானார். (Chancellor).
பல்சுவை இதழ்களை இது வெளியிடுவதால் பல்கலைக்கழகம். கோபால், தானே உருவான பத்திரிகையாளர். (SELF MADE MAN).
மற்ற இதழாளர்கள் வேறு இதழ்களில் பணியாற்றும் திறமைசாலிகளைக் கவர்ந்து வந்தும், சிலர் கடத்தி வந்தும்தான் இதழ்களை நடத்துகிறார்கள். கோபாலும் நக்கீரனும் இதில் மாறுபட்டவர்கள். நக்கீரன் ஆசிரியர் குழுவில் பெரும்பாலோர் பிழை திருத்துவோரி லிருந்து பலர், எளிய நிலையிலிருந்து பயின்று உயர்ந்தவர்கள்.
மேல்குடிமக்கள் இதழ்கள் புலனாய்வுக் கட்டுரைகள் என்பவை குளிர்பதன அறைகளிலிருந்தபடியே தொலைபேசியில் சம்பவம் நடைபெற்ற ஊர்களில் வாழும் அவர்களின் அத்திம்பேர் -அம்மாஞ்சிகளிடம் சேகரித்த செய்திகளைத்தான் வெளியிட்டு "கர்மானுஷ்டானம்' செய்துவந்தார்கள். "துக்ளக்' சோ ராமசாமி போன்ற மனவக்கிரங்களின் புலனாய்வுகள் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
புலனாய்வுக் கட்டுரையைச் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்றும், சம்பந்தப்பட்டவர்களிடமே நேரில் கேட்டும், அவற்றைக் கட்டுரைகளாக வடிவமைத்த கோபால் மற்றும் துணை ஆசிரியர்களின் பாணியும் -பணியும் தமிழ்ப் பத்திரிகையுலகின் மைல்கற்கள்.
பெரிய பத்திரிகை ஜாம்பவான்கள் என்று பரிவட்டம் கட்டிக்கொண்டு ஆடியவர்களின் இதழ்களும் -கட்டுரைகளும், நாற்காலியில் ஓய்ந்துபோய் சாய்ந்து கிடக்கும் முழுக்கிழடுகளையும், முக்கால் பிணங்களையும்தாம் போய்ச் சேர்ந்தன.
குக்கிராமத்தில் தேநீர்க் கடைகளிலும் படிக்கப் பட்ட நாளிதழ் தினத்தந்தி என்றால் -கட்சி சாராத இதழ் "நக்கீரன்'தான். இது ஆராய்ச்சி அல்ல... நேரில் கண்ட அனுபவம். இதற்காக கோபாலும் -அவருடைய குழுவினரும் பட்ட அவமானங்கள் லிஅடிதடிகள் -வழக்குகள் -அது பெரிய கதை!
பெரும்பாலும் தமிழ்நாட்டில் கட்சி சார்பற்ற வார, மாத இதழ் நடத்திய எல்லோரும் பல தொழில்களில் இருந்து பின்னர், பத்திரிகைத் தொழிலுக்கு வந்தவர்கள். பெரும் பொருளீட்டிய கோடீஸ்வரர்கள். (உதாரணமாய்) குமுதம், கல்கி, ஆனந்த விகடன் முதலாளிகள். ஒரு தொழிலாளியால் தொடங்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கு வாழ்வு தரும் தொழிலாளி கோபால்.
கோபால். முன்னின்று நடத்தும் எந்தச் செயலும் ஒரு முக்கியத்துவம் பெற்றுவிடும் அல்லது அந்த நோக்கத்தோடுதான் நிகழ்ச்சியே ஏற்பாடு செய்வார்.
அப்படியொன்றுதான் நிறுவன ஊழியர் "தம்பி' காமராஜின் திருமணம். பல்வேறு மகாமேருக்களின் எதிர்ப்புகள் -தடைகள் -இவற்றுக்கு மத்தியில் கலைஞரின் தலைமையில் நடைபெற்ற அந்த திருமணத்தில், பின்னாளில் அமைந்த தேர்தல் கூட்டணிக்குக் கால்கோள் இடப்பட்டது. ஜெயலலிதாவின் எதிர்ப் பாளர்களையும், மூலைக்கொருவராய்த் திரும்பிக்கொண்டிருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களையும் தம்பி காமராஜின் மணமேடையில்தான் கோபால் இணைத்தார்.
கொள்கைப் பிடிப்புக்காகவும் -நன்றி மறவாமைக்காகவும் -தரும நியாயமின்றி ஜெயலலிதாவின் அரசால் கொலைக்குற்ற வழக்கு உட்பட அனைத்து வழக்குகளிலும் தளைப்படுத்தி -சிறைப்படுத்தித் துன்புறுத் தப்பட்டபோதும் தளராத போராளி கோபால். இந்தியாவிலேயே வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் கூட திலகர் போன்ற இதழாசிரியர்கள் இதுபோன்று துன்புறுத்தப்பட்டதில்லை. இந்த வகையில் இந்தியாவிலேயே கோபால் ஒருவராகத்தான் இருப்பார். யாரையும் நெருக்கிக் குனிய வைக்கும் "ஜெயா'வின் வித்தை தோற்றுப்போனது நக்கீரனிடம்தான்.
இவ்வளவுக்கும் காரணம் கோபால் ஒரு பக்தர். அதிலும் குறிப்பாக காளி, காமாட்சி, மாரி, மாடன், சுடலை, கருப்பசாமி மற்றும் அவரது தாய் இராஜமாணிக்கம் போன்ற சிறு தெய்வங்களை வழிபடுபவர்.
சிவன், இராமன், கிருஷ்ணர் போன்ற அகில இந்திய பெருந்தெய்வங்கள் சராசரி குற்றவாளி களைவிடக் கீழிறங்கிக் கொடுஞ்செயல் செய்தவர்கள் என்பதுதான் இதிகாசப் புராணங்களே சொல்லும் செய்தி.
சிறு தெய்வங்கள் எனப் போற்றப்படுபவர்கள் எல்லாம் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி அவர்களெல்லாம் உரிமைக்காகக் களம் கண்டு மாண்ட போராளிகள் என்பதுதான் அவர்களே சொல்லும் கதை.
"ஆட்டோ சங்கர், சந்தனக்காட்டு வீரப்பன் போன்றவர்களின் செயல்களை நியாயப்படுத்தி சமூகவிரோதிகளைக் கதாநாயகர்கள் (ஐங்ழ்ர்) ஆக்குகின்ற தவறை கோபால் செய்கிறார். நேர்மையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய -வழிகாட்ட வேண்டிய இதழாசிரியர் களே இதுபோன்ற தவறுகளைச் செய்வது அண்மைக்காலப் பத்திரிகை உலகில் கோபால் போன்றவர்கள் ஏற்படுத்தும் தவறான போக்கு (Hero) என்கிறார்கள். இப்படிச் சொல்கிறவர் துக்ளக் "சோ' போன்றவர்களும் அவரை வழிமொழிகின்ற, அவரைச் சார்ந்த பத்திரிகை யாளர்களும், பத்திரிகைகளுமே!
இப்படிப்பட்ட குற்றம் சொல்கிறவர்களின் குற்றச்சாட்டு உண்மையா?
வன்முறையாளர்களும், சமூகவிரோதிகளும் எப்படி உருவாகின்றார்கள் என்ற கோணத்தில் செய்யப்படும் ஆய்வுக் கட்டுரைகள் நக்கீரனுடையவை. ஆட்டோ சங்கர் போன்றவர்கள் பற்றிய கட்டுரைகளைப் படித்து (எல்லோரும் அல்லர்) ஒருசாரார் அனுதாபம் கொள்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய மனநிலையைப் பொறுத்ததாகும். எழுதுகிறவன் பொறுப்பாக மாட்டான்.
நக்கீரனாவது அப்படிப்பட்டவர்களின் செயல்களுக்குரிய அவனுடைய சைக்கோ மனப்போக்கிற்குரிய காரணங்களைச் சொல்வதோடு நிறுத்திக்கொண்டது.
பழைய வன்முறைக் கொலையாளியான வாஞ்சிநாதனையும், ஆயுதக் கடத்தல் வ.வே.சு.அய்யரையும் கொலைக் குற்றத்திலிருந்து தப்பியோடி வந்த அரவிந்தகோஷையும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று இதே மேல்சாதி பத்திரிகையாளர்கள் போற்றுகிறார்கள் -புகழ்கிறார்கள் -பூசிக்கிறார்கள்.
இப்போது மதவாத வெறியர்களையும் -இராமர்கோயில் கட்டுதல் -கரசேவை என்ற பெயரால் இந்தியா பூராவையும் இரத்தக் களரியாக்கிய ஆர்.எஸ்.எஸ். வெறியர்களையும் நியாயப்படுத்துகின்ற குருமூர்த்தி போன்றவர்களை எழுத இடம் கொடுத்து ஊக்குவிக்கும் துக்ளக் -தினமணி போன்ற இதழ்களை என்ன செய்வது? சமூக ஒழுக்கம் கெட்டுப்போகின்றதே என்கிற கவலையல்ல அவர்களுக்கு! அறிவு ஆதிக்கம் என்ற இந்த சாதிக்காரர்களின் அனைத்து ஆதிக்கமும் தமிழர்களின் கைக்குப் போய்விட்டன. மிச்சமிருக்கிற புலனாய்வு பத்திரிகை என்ற கடைசி ஆயுதமும் கோபால் போன்ற கரிசல்காட்டுத் தமிழர்களிடம் கைமாறிப்போன கவலைதான்!
பக்தரான கோபாலின் அலுவலக அறையில் பிரம்மாண்டமாய் -மொத்தச் சுவரையும் அடைத்துக்கொண்டு கடவுள் படங்கள் கூட இல்லை. பெரும் போராட்டம் -சிறைவாசம் -நீதிமன்றப் போர் (legal battle)க்குப்பின் விடுலையாகி வெளிவரும்பேது உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகை -தொலைக்காட்சி நிருபர்களும் சூழ்ந்திருக்கும் படம்தான் அது!
பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு அதிகார மாற்றம் செய்து கொடுத்துவிட்டுப் போக முடிவு செய்தபோது, அதை சிறப்பாய் செய்யக்கூடியவர் மவுண்ட் பேட்டனே என்று பிரதமர் ஆட்லி முடிவு செய்தாராம். இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபு. அதற்கு முன்னர் பிரிட்டிஷ் கப்பற்படையின் தலைமைத் தளபதியாய் இருந்தவர்.
அப்போது மவுண்ட்பேட்டன் ஒரு கோரிக்கை வைத்தார். வைசிராய் பதவிக் காலம் முடிந்த பின் மீண்டும் பழைய கடற்படைத் தலைவர் பதவியில் அமர்த்தவேண்டும், ஏனென்றால் கடைசிவரையில் நான் இராணுவ வீரனாகவே இருக்க வேண்டும் என்றாராம் மவுண்ட் பேட்டன்.
பிரிட்டிஷ் அரசின் மரியாதை வாரியாக (டழ்ர்ற்ர்ஸ்ரீர்ப்) வைசிராயின் இடம் சக்கரவர்த்திக்கு அடுத்தது, கடற்படைத் தலைமைத் தளபதியின் இடம் ஏழாவதாம்.
கோபாலின் இருக்கையின் பின்னணியில் உள்ள படம் எனக்கு மேற்சொன்ன செய்தியையே நினைவூட்டுகிறது.''
(புழுதி பறக்கும்)