(277) "கர்நாடகா முதல்வருக்கு போன் போடுய்யா'' -கொந்தளித்த கலைஞர்!
30 வருஷம் கழிச்சு நான் இந்த விஷயத்தப் பத்தி பேசுறேன்.
இந்த எழவப் பேசுறதுக்கு 30 வருஷமா இந்த ஜெயலலிதா, சசிகலா, தேவாரம்... தாவரம், மோகன்நிவாஸ்... மோகாத நிவாஸுன்னு இவிய்ங்கட்ட இருந்து நம்ம உசுர காப்பாத்த எத்தன குட்டிக்கரணம் அடிச்சுருப்போம். இத்தனைக்கும் எங்க கை வெறுங்கை. பேனா மட்டும்தான். அவிய்ங்க கையில ஆயுதம், போலீஸ் படை எல்லாம். தப்பிச்சது தம்புரான் புண்ணியம்தான்.
படத்துல நடிக்கிற ஹீரோ மாதிரி... "எஸ்... நான் துப்பாக்கி எடுத்துட்டுப் போறேன்... என்ன வந்தாலும் பாத்துக்கிறேன்.. அவனா? நானா?' அப்படீங்கிற மாதிரி வீர, தீரமால்லாம் வசனம் பேசிட்டு நாங்க போகல. இதுக்கு ரொம்ப சாதுர்யம் வேண்டியிருந்தது. அந்த சாதுர்யத் தோட போனதுனாலதான் 30 வருஷம் கழிச்சும் உங்க முன்னாடி உசுரோட நின்னு இத பேசுறோம்.
ஒருவேள இவனுவ போட்ட கொலைகாரத் திட்டத்துல நான் செத்தே போயிருந்தா... இன்னைக்கு எத்தாதண்டி பழியோட நம்ம நக்கீரன் இருந்திருக்கும். தீராத கெட்ட பேரோட நக்கீரன குழிதோண்டிப் புதைச்சிருப்பாய்ங்க படுபாவிப் பசங்க. நம்மளோட மட்டும் இல்லாம... கலைஞர் மேலயும், அவர் செய்ற ஆட்சி மேலயும் காலத்துக்கும் நிலைச்சு நிக்கிற மாதிரி அவப்பேர கல்வெட்டுல செதுக்கியிருப்பாய்ங்க செதுக்கி...
தேவாரம் அந்த புக்குல 458-ஆம் பக்கத்துல 18-ஆவது பாயிண்டா எழுதி யிருப்பாரு...
"சிறப்பு அதிரடிப்படையின் நகர்வுகளைக் கணித்த அரசு மொத்த அதிரடிப்படையையும் வனத்திற்குள்ளிருந்து வெளியேறுமாறு உத்தர விட்டது. அதில் அதிதீவிரமாக இருந்தவர்கள் அவர்கள் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் சிலர் இன்னமும் துறையில் பணிபுரி கிறார்கள். பலர் காட்டிலிருந்து வெகுதூரத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். உதவி ஆய்வாளர் மோகன் நிவாஸ் காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலேயே காலையிலிருந்து இரவுவரை இருத்தி வைக்கப்பட்டார்.'
எப்படி? ரொம்ப கவலையா எழுதியிருக்காரு அவரு!
"ஹலோ வால்டர் சார்... நிவாஸ காவல்துறை இயக்குநர் ஆபீஸிலேயே இருத்தி வச்சாங்க தெரியுமா...?''
இவரு எழுதுறதப் பாத்தா, இந்தப் புத்தகத்தப் படிக்கிறவங்க "அய்யய்யோ... ஐயோ... கடமையில அவ்வளவு கண்ணும் கருத்துமா இருந்தவங்கள, அர்த்தமே இல்லாம கலைஞர் வெளியே போன்னுட்டாரே. வீரப்பன புடிக்கணும்ங்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாம, அதாவது அல்லும் பகலும் வீரப்பன புடிக்க வெறியா இருக்கிற எங்கள மாதிரி எஸ்.டி.எஃப்.காரங்கள உதாசீனப்படுத்திட்டாரு. எங்கள மதிக்கவே இல்ல, நாங்க ராப்பகலா சோறு, தண்ணி இல்லாம கெடந்தோம். ஆனா எங்கள இந்த தி.மு.க. அரசு துச்சமா நெனைச்சிருச்சு' அப்படீங்கிற அர்த்தத்துலதான் தேவாரம் சொல்றாரு அதுல. முக்கியமா அவரு சொல்ல வர்றது யாரைன்னா... கலைஞரத்தான் குத்தம் சொல்றாரு. கலைஞர்தான், வீரப்பன வேட்டையாட விடாம எங்கள கட்டிப் போட்டுட்டாருங்கிறாரு.
அந்த கலைஞர் பேர்ல நடக்குற நடப்பு அரசுலதான் அவர... அவர் நடத்துன ஆட்சிய தப்பும் தவறுமா குறை சொன்ன புத்தகத்த விக்கிறாய்ங்க. சூப்பர்... சூப்பர்!
ஆனா, உள்ளுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு இந்த புக்க மட்டும் படிக்கிறவங்களுக்குத் தெரியாதுல்ல? அதச் சொல்லவேண்டிய கடமை நமக்கு இருக்குல்ல.
அதாவது... என்ன காட்டுக்குப் போகச் சொல்றாங்க. நான் போகணும். போகணும்னா...
பூர்ணலிங்கம்னு ஒரு ஹோம்செகரட்டரி அப்ப இருந்தாரு. அவரு எடுத்தவுடனே, "நீங்க உடனே கிளம்புங்க கோபால், குயிக்... குயிக்...''ன்னாரு. (அதுல ஒரு கதை இருக்கு... அப்புறம் நான் சொல்றேன்)
இதுக்கு இடையில என் தம்பி சுப்பு. காட்டப் பத்தி நல்லா கரைச்சுக் குடிச்சு வச்சுருப்பாப்டி. ஏன்னா... அவரும் அந்த காட்டுப் பகுதியில உள்ள ட்ரைபல் இனத்தச் சேர்ந்தவரு தான். அந்த தம்பிகிட்ட நான் ஒரு அசைன்மெண்ட் குடுத்துருந்தேன்.
அதாவது... இந்த மாதிரி, இந்த மாதிரி நாம ரிஸ்க் எடுக்கப்போறோம். எனக்கு இந்த போலீஸ்காரங்க மேல நம்பிக்கை இல்ல. போலீஸ்னா... எல்லா எஸ்.டி.எஃப். போலீஸயும் நான் சொல்லல. குறிப்பா... அந்த மோகன் நிவாஸு, தேவாரம்... தேவாரம் தலைமையில மூணு, நாலு பெரிய ஆபீஸருங்க. அவங்களுக்குக் கீழ 100, 200 பேரு இருப்பாங்கன்னு வச்சுக்கங்களேன்.
எப்பவுமே ஒரு செயல்ல நாம இறங்கும்போது சில விஷயங்கள் மனச தப்புத் தப்பா உறுத்தும் பாத்தீங்களா. அது அசரீரியா... இல்ல... ஏதோ ஒண்ணு. அதனால உள்ளுக்குள்ள ஒரு பயம் கவ்விச்சு. "போனா திரும்பி வரமாட்டோம் போலயேடா கோவாலு. உள்ளுக்குள்ள நமக்கு பால ஊத்திருவாய்ங்க போலயேடா கோவாலு. நமக்கு எதிரா ஏதோ மொரட்டு சதி நடக்கறது போல இருக்கே'ன்னு மனசுக்குள்ள தோணுச்சு. அத உணர்ந்துதான், நான் தம்பி சுப்புகிட்ட சொல்றேன். "தம்பி எதுக்கும் நீங்க முன்னாடி வீரப்பன் காட்டுக்குப் போயி நிலவரம் எப்படின்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க''ன்னு சொன்னதும், வீரப்பன் காட்டுக்குக் கிளம்பிப் போயிட்டாரு.
சுப்புவுக்கு கர்நாடக பத்திரிகைக்காரங்க நன்கு பரிச்சயம். 'ஐஹஹ் இஹய்ஞ்ஹப்ன்ழ்ங்' பத்திரிகை ஆசிரியர் திரு.ரவி பிலிகிரி, அப்புறம் நேத்ரா ராஜு இவங்களும் சுப்புவும் சேர்ந்து வீரப்பன் காட்டுப்பக்கம் கிளம்புறாங்க. சுப்புவுக்கும் இவங்க துணையா போனது நல்லதாப் போச்சு.
போயிட்டு, அப்புறமா என் தொலைபேசியில தொடர்புகொள்றாரு. "அண்ணே இந்த மாதிரி கொள்ளேகால் அடுத்து குண்டல் டேம், அதுக்கு மேல வந்து அப்படியே போனா அங்க புரூடு பங்களா ஒண்ணு இருக்கும். அந்த ஏரியா கர்நாடகா. அங்க ஒரு கர்நாடகா எஸ்.டி.எஃப். கேம்ப் ஒண்ணு இருக்கு. அந்த பங்களாவுக்கு கீழ வந்தா ஆசனூரு. (ஆசனூர், அதச்சுத்தி பல மைலுக்கு மோகன் நிவாஸோட ராஜ்ஜியம்) அங்க புரூடு பங்களாவுல எஸ்.டி.எஃப். கேம்ப் அப்படியே இருக்கு. அங்க நம்ம தமிழ்நாட்டுக்காரங்களும் சரி, கர்நாடகா போலீஸும் சரி... நெறைய பேரு வந்துபோய்க்கிட்டிருக்காங்க. எப்படியும் குறைஞ்சது ஒரு 50 பேருக்கு மேல அங்க இருப்பாங்கண்ணே'' அப்படின்னு சொல்றாரு.
அங்க இருந்து கீழ இறங்குனா ஆசனூர்... அதுக்குக் கீழதான் திம்பம்... அதுக்கு கீழதான் பண்ணாரி.
இப்ப "அந்த ஆசனூர் காட்டுக்குள்ள எஸ்.டி.எஃப். போலீஸ்காரங்க எல்லாரும் அவங்க அவங்க அபீசியல் யூனிஃபார்ம், அதுபோக காக்கி யூனிஃபார்ம், அப்புறம் கொஞ்சபேர் கைலி, டி-சர்ட், கொஞ்சம்பேர் பேண்ட் டி-சர்ட்... இப்படி ஆள் ஆளாளுக்கு கையில துப்பாக்கியோட அலையுறாய்ங்க. வீரப்பன் இந்தப் பக்கம் மேல போனாப்டின்னு ஒரு போலீஸ் ஆள்காட்டி ஒருத்தன் சொன்னானாம். அதுனால நீங்களும் இந்தப் பக்கம்தான் வருவீங்கன்னு பிளானப் போட்டு அங்கங்க நிக்கிறாங்க. சுத்திக்கிட்டே இருக்காங்க. எங்களப் பாத்து சுட வந்தாங்க. ரவி சார்தான் அவரு ஐ.டி. கார்டு எல்லாம் காமிச்சு, என்ன அவங்க போட்டோகிராபர்னு சொல்லி தப்பிச்சு வந்தோம். அத நான் போட்டோ எடுத்திருக்கேன். பக்கத்துல மைசூர் போய் படம் போட்டு கொண்டுவர்றேன்''னு சொன்னாரு.
நான் உடனே தம்பிட்ட, "அது எந்தெந்த பகுதின்னு நோட்பண்ணி வச்சுக்கங்க தம்பி. ஃபிலிம்ரோல அனுப்பிருங்க, நான் பிரிண்ட் போட்டுக்கிறேன்''னு தம்பிகிட்ட சொன்னேன்.
இதுக்கு இடையில கர்நாடகா சி.எம். பாட்டீல், "வீரப்பன் காட்டுல இருக்கிற கர்நாடகா எஸ்.டி.எஃப். எல்லாரையும் உடனே திரும்ப வரச் சொல்லிட்டேன். தூது போறதுக்காக அவங்கள நான் க்ளீயர் பண்ணிட்டேன்''னு அவரும் ரேடியோல சொல்லிட்டாரு. இங்க தமிழ்நாட்டுலயும் அதையே சொல்லிட்டாங்க.
இந்த விவரத்தையெல்லாம்... உடனே நியூஸா சுப்புக்கு பாஸ் பண்றேன்.
"தம்பி, கர்நாடகா சி.எம். அங்க உள்ள எல்லா எஸ்.டி.எஃப்.பையும் அப்புறப்படுத்திட்டாராமே? எஸ்.டி.எஃப்.ல இப்ப யாருமே இல்லன்னு சொல்லி, நம்ம தமிழ்நாடு சி.எம். கலைஞருக்கு அவரு உத்தர வாதம் குடுத்திருக்காரு. அங்க யாருமே இல்லன்னு அவரு அடிச்சுச் சொல்றாராம். ஏ.டி.ஜி.பி. அலெக்ஸ் சார்தான் சொன்னாரு''ன்னேன்.
அப்ப, தம்பி மறுபடியும் "இல்லண்ணே... புரூடு பங்களால கர்நாடகா எஸ்.டி.எஃப். இருக்கிறத நான் படமே எடுத்திருக்கேன். அத நான் உங்களுக்கு அனுப்புறேன்''னாரு.
இதுக்கிடையில ஆசனூரு, ஆசனூர சுத்தி இருக்கிற கெத்தேசால்.. அந்த ஏரியாக்கள்ல தமிழ்நாடு எஸ்.டி.எஃப். போலீஸ், டிரஸ்ஸோடவும், லுங்கியோடவும் மாறுவேஷத்துல அங்க, இங்க இருக்கிறதையும் தம்பி படமா எடுத்து அனுப்புன ஃபிலிம் ரோல், போர்க்கால அடிப்படையில இங்க வந்துருச்சு.
எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு கலைஞர்ட்ட குடுத்து, "இந்த மாதிரிண்ணே... நீங்க என்னைப் போகச் சொல்றீங்க. பாருங்கண்ணே... எப்படிண்ணே நான் போகமுடியும்?''னு கேட்டேன். இவங்கள்லாம் உள்ள இருக்கும்போது... சாத்தியமே இல்லண்ணே''ன்னேன்.
ஏன்னா "அவங்க வீரப்பனவிட எங்க மேலதான் கொலவெறியோட இருக்காய்ங்க. அப்படியிருக்கும்போது காட்டுக்குப் போயிட்டு எப்படி உசுரோட நாங்க திரும்பி வரமுடியும்? சொல்லுங்கண்ணே...''ன்னு சொன்னவுடனே...
அந்தப் படத்தையெல்லாம் பாத்தாரு. படத்த காட்டி விளக்கிச் சொன்னேன். அதான்... அதான் கலைஞர்! அதத் தூக்கி மேஜை மேல எறிஞ்சாரு.
முன்னாடி டி.ஜி.பி. எல்லாருமே உக் காந்திருந்தாங்க... "என்னய்யா இது...? இத பாருங்கய்யா... இதுக்கு முதல்ல பதில் சொல் லுங்கய்யா டி.ஜி.பி.''ன்னு சொல்லி கடுமையா பேசுனாங்க.
கலைஞருக்கு உள்ள இருக்கிற மனிதம்... "நம்மள நம்பிப் போறாரு. நாமதான் அனுப்புறோம். அவனுக்கான பாதுகாப்புல எவ்வளவு குறைபாடு இருக்குதுங்கிறதப் பாத்து கோவப்படுறது... ஏன்னா அங்க கர்நாடகா முதல்வரும் பொய் சொல்றாரு. "அந்த பாட்டீலுக்கு "டக்'னு போன் போட்டுக் குடுய்யா. என்ன நெனச்சுக்கிட்டிருக்காங்க'' அப்படீன்னு சண்முகநாதன்கிட்ட கத்துறாரு...
தேவாரம் சார், மோகன் நிவாஸ சென்னை காவல்துறை தலைமை ஆபீஸிலேயே இருக்கச் சொன்னது ஏன்னு இப்ப விளங்குதா...
(புழுதி பறக்கும்)