ss

(266) "தென்னாட்டு அருண்ஷோரி'' -ஏர்வாடி இராதாகிருஷ்ணன்

ர்வாடி இராதாகிருஷ்ணன்...

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, இலக்கிய வாதி, விருதுகள் பல வாங்குனவர், சிறந்த கவிஞர், நெறைய நூல்கள் எழுதியிருக்கார். ஜெயகாந்தன், கண்ணதாசன் ரெண்டுபேர் கூடவும் நெருங்கிப் பழகுனவர். எக்கச்சக்க நண்பர்கள் இவருக்கு.

Advertisment

"ஹலோ... எதுக்கு இந்த பில்டப்?' -உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. மேப்படி அண்ணன் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் இலக்கியப் பத்திரிகை நடத்துறார். "கவிதை உறவு'ன்னு பேரு.

இப்ப கதைக்கு வர்றேன்...

இந்தக் கரையான்னு சொன்னேன்ல... இந்தக் கரையான் சனியனால வீட்டுல கொஞ்சநாளா என் துணைவியாருக்கும் என் பிள்ளைகளுக்கும் நிம்மதி போயே போச்சு... எனக்கும்தான். நைட்டு நல்லா நடு ஹால்ல உக்காந்து பேசிக்கிட்டிருப்பேன். சடசடன்னு ஈசல் பறக்கும். உடனே என் பிள்ளைங்க, "அம்மா... கரையான்'னு கத்துவாங்க. சடசடன்னு லைட்ட எல்லாம் ஆஃப் பண்ணுவாங்க. வெளி வாசல் லைட்ட மட்டும் போடுவாங்க. மொத்த ஈசலும் வாசப்பக்கம் படையெடுக்கும். டப்... டப்புன்னு உள் கதவை சாத்தி அப்பாடான்னு குத்த வைப்பாங்க.

Advertisment

என் துணைவியார் கவலையா, "ஏங்க... இந்த ஈசலுக்கும் கரையானுக்கும் ஏதாவது பண்ணுங்க. என் துணிமணி, பிள்ளைங்க துணிமணி, நல்ல நல்ல சேலை, உங்க பேண்ட் -சட்டை, தம்பிங்க சட்டை எல்லாத்தையும் கரையான் அரிச்சிருச்சு. நல்ல... நல்ல புடவைய எல்லாம் நாசமாக்கிருச்சு. நிம்மதியா வீட்டுல இருக்க முடியல''ன்னு... ஜெயலலிதாங்கிற ஆபத்து நம்ம பாடுபடுத்துனதைவிட பெரிய ஆபத்துன்னு புலம்புனாங்க.

எனக்கும் கரையான் எப்ப, எந்தப் பக்கம் பொத்துக்கிட்டு வரும், எப்ப துண்டக் காணோம், துணிய காணோம்னு ஆளாளுக்கு இருட்டுல உக்காரணுமேன்னு ஒரு எண்ணம்.

என் துணைவியார் + என் ரெண் டாவது மகள் சாருமதி + என் மூத்த மச்சினன் மகன் ஈஸ்வர் மூணுபேரும்... இதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணுன்னு கூட்டணியா வீடு மொத்தத்தையும் பிரிச்சு வேலைய ஆரம்பிச்சாங்க. வீட்டுல அப்பப்போ என்னப் பத்தி பத்திரிகைகள்ல வர்ற கட்டுரைகள அங்கங்க, என் துணைவியார் சேர்த்து, சேர்த்து வச்சுருப்பாங்க. அதுலயும் இந்த எழவு கரையான் புடிச்சுருச்சு. அந்தப் புத்தகங்கள பொசுக்குன்னு எடுத்து தூக்கிப் போடாம பதமா சுத்தப்படுத்தி வச்சிருந்தாங்க.

முந்தா நாள் இரவு நான் வீட் டுக்குப் போறப்ப, என் துணைவியார் கையில ஒரு பத்திரிகைய சுருட்டி வச்சுக்கிட்டு க்ளீன் பண்ணுனாங்க. அரைமணி நேரமாச்சு.... கையில இருந்த புத்தகத்த கீழயும் வைக்கல. சடார்னு இடுப்புல சொருகி வச்சுக் கிட்டாங்க. அப்புறம் மறுபடி கொஞ்ச நேரம் க்ளீன் பண்ணுறத நிறுத்திட்டு, அந்தப் புத்தகத்த கையில எடுத்து சுவத்துல சாஞ்சுக்கிட்டே படிச்சாங்க. நான் வந்ததக்கூட கண்டுக்கல. "இருங்க இந்தா வர்றேன்'னு சொல்லிட்டு அத படிக்கிறதுல கவனம்காட்ட...

ds

நான் பைய்ய, "ஏங்க... அது என்ன பத்திரிகை? கீழயே வைக்காம கையிலயும், இடுப்புலயும் மாறி, மாறி வச்சுப் படிக்கிறீங்க. அப்படி என்ன கதை புக்''னு கேட்டேன். ஏன்னா, அவங்க, எழுத்தாளர் அம்மா ரமணி சந்திரன் வாசகி. அவங்க எழுத்த ஒண்ணு விடாம படிப்பாங்க... நல்ல ரீடர்.

"டக்'னு திரும்பி... "இந்தா பாருங்க... இதுல ஒரு கட்டுரை உங்களப் பத்தி வந்தி ருக்கு. அவ்வளவு நல்லா எழுதியிருக்காங்க. 2008ல வந்தது... இப்ப படிச்சாலும் ஆச்சரி யமா இருக்கு. இந்தாங்க, நான் படிச்சுட்டேன்''னு சொல்லி கையில குடுத்தாங்க.

"கவிதை உறவு'

அண்ணன் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் சொந்தமா நடத்துற "கவிதை உறவு' மாத இதழ்ல "மனதில் பதிந்தவர்கள்'ங்கிற தலைப்புல ஒரு தொடர் எழுதுறாரு. அந்த தொடர்ல என்னைப் பற்றி வந்திருந்தது ரொம்ப தரமா... ஆழ மாவும் இருந்துச்சு. அவர் இலக்கியவாதி யாச்சே... எழுத்துக்கு சொல்லவா வேணும்!

உயர்ந்த இலக்கிய படைப்பாளிங்க நக்கீரன் மேல வச்சி ருக்கிற மதிப்ப உங்க ளுக்கும் சொல்லணும், அதான் வரலாறு... நாம உசுர குடுத்து வாழ்ந்த வரலாறு. அதுக்காகத் தான் இந்தப் பதிவு. கொஞ்சம் பாதை மாறிப்போகுதேன்னு வருத்தப்பட்டுடாதீங்க. ஏர்வாடி ராதாகிருஷ் ணன் எழுத்து போல... நூறு வருஷம் இருக்கிற இந்த இலக்கியப் பதிவுகளுக்கு நாம தலை வணங்குறோம்.

அந்த "கவிதை உறவு' கட்டுரை இதோ...

"வங்கிப் பணியிலிருந்தபோது நான் ஒரு தணிக்கை தொடர்பாக திருச்சிக்குச் செல்வதற்காக குருவாயூர் துரித வண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தேன். நான்கு பேர் அமர் கிற அறை. மூவர் வந்துவிட்டோம், நான்காமவர் வரவேண்டும். வண்டி புறப்படுகிற நேரம், படு உற்சாகமாக, துடிப்பாக வேகமாக வந்து ஏறினார் நாடறிந்த பத்திரிகையாளர் திரு.நக்கீரன் கோபால். நக்கீரன் கோபால் அவர்களை எல்லோருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். இருந்தாலும் என்னை நான் அறிமுகம் செய்துகொண்டேன்.

"அண்ணே... உங்களைத் தெரியாமல் யார் இருக்கமுடியும்? எழுபதுகள்லே வானொலியைத் திறந்தால் ஏர்வாடி அண்ணன் பேர்தானே. அது மட்டுமில்லே, வலம்புரிஜான் சாரைப் பார்க்க வருவீங்களே...! இப்ப கொஞ்சம் பூசினாப்போல இருக்கீங்க. முடியும் கொஞ்சம் கொட்டிப் போயிருக்கு. மறக்க முடியுமா உங்களை?'' என்றவர் திருச்சிவரை சிறிது கண்ணயர்வதும், பிறகு பேசுவதுமாக கலகலப்பாகப் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டு வந்தார். உடன் வந்தவர்களுக்கெல்லாம் உற்சாகம், பெருமை. அவருடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதும் தெரியவில்லை, திருச்சி வந்ததும் தெரியவில்லை. திருச்சியில் நான் இறங்கிக் கொண்டேன்... அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.

அதற்குப் பிறகு அவ்வப்போது விழாக்களி லும், புத்தகக் கண்காட்சிகளிலும் சந்தித்துக்கொள் வோம். வாய்ப்பிருக்கும்போது தொலைபேசியிலும் அளவளாவிக் கொள்வோம். அவரும் நானும், நாங்கள் வெளியிடும் நூல்களில் தேர்ந்து சிலவற்றைப் பரிமாறியும் கொள்வோம். அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் அவர் எனக்குப் பரிசாக அனுப்பிய "சேலஞ்ச்' நூல் கிடைத்தது. அதில் "சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்' என்று சாதித்துச் சிறந்திருக்கிற அவரே, என்னைப் பாராட்டிக் கையெழுத்திட்டிருந்தார். பெருமையாக இருந்தது.

நக்கீரன் கோபால் எல்லோருக்கும் தெரிந்த புகழாளர், பிரபலமான புலனாய்வுப் பத்திரிகை யாளர், அவர் சங்ககால நக்கீரனைப் போல் குறை மட்டும் கண்டுபிடிக்கிறவர் அல்லர். தீர்வுகளுக் காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்பவரும்கூட. அஞ்சாநெஞ்சர். ஆனால் அடிதடிக்காரர் அல்லர். சமூகப் பிரக்ஞை கொண்ட தமிழ்ப் பத்திரிகை யாளர். "எழுதுகிற கை இதுதானே...' என்று யாரேனும் உருட்டினால் மிரண்டுபோய் பேனாவைப் பையில் போட்டுக் கொள்கிற பயம் அறியாதவர். பத்திரிகையாளர்களின் பெருமைக்கும், புகழுக்குமான சிறந்த எடுத்துக்காட்டு. தென்னாட்டு அருண்ஷோரி என்று பெருமையோடு கருதத்தக்க புகழுக்குரியவர் நண்பர் இராஜகோபால் என்கிற நமது நக்கீரன் கோபால்.

இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் பெயரளவில்தான் இருக்கிறதே தவிர பெருமளவு இல்லை என்கிற பெரிய குறை எப்போதும் நமக்குண்டு. உச்சநீதிமன்ற நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் நக்கீரன் கோபால் அவர்களின் "சேலஞ்ச்' என்ற நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் குறிப்பிட்டபடி "பல பத்திரிகைகள் மக்களுக்கான காவல்காரனாக இருப்பதற்குப் பதிலாக அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்ல நாய்க்குட்டிகளாக இருப்பது வருந்தத்தக்கது'' என்ற கருத்தை மறுக்க முடியாது. இன்று பல பத்திரிகை கள் அவ்வாறன்று என்று நக்கீரன் போன்ற விதி விலக்குகளை வரலாறு பதிவு செய்துகொண்டுள் ளது. ஐயர் அவர்கள் இதை ‘"நக்கீரனிசம்' என்று பாராட்டுவது குறிப்பிடத்தக்கது. மேலும் நமது நீதியரசர் புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையாள ரான ஜாக் ஆண்டர்சனின் கருத்தை மேற்கோள் காட்டியிருப்பது கவனத்திற்குரியது. தலை நிமிர்ந்திருக்கிற உலகறிந்த ஒரு சிலருள் (ராஜ) கோபால் அவர்களும் ஒருவர்.

பத்திரிகை நடத்துவது சாதாரண விஷய மல்ல; அதற்கு அசாத்திய பொறுமை வேண்டும். அதிலும் புலனாய்வுப் பத்திரிகையென்றால் பொறுமை மட்டுமல்ல, அசாதாரணத் துணிவும் வேண்டும். அந்தத் துணிவும், தெளிவும் நக்கீரன் கோபால் அவர்களிடம் நிரம்ப இருக்கிறது. நக்கீரனின் சொத்தாகத் திகழ்வது நேர்மையான புலனாய்வு. மக்களுக்குத் தகவல் அளிப்பதைக் கடமையாகக் கொள்வது. அதற்காகத் துணிச்ச லோடு செயல்படுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்றவையாகும். முகமூடிகளை அல்ல, முகங்களையே மாற்றிக்கொண்டு திரிகிற "மாண்புமிகு' முகங்கள் பலவற்றைப் பல சந்தர்ப் பங்களில் கிழித்து, நிஜ முகங்களை நாட்டு மக்களுக்குக் காட்டுபவர் நண்பர் நக்கீரன் கோபால் அவர்கள். இதனால் சிலருக்கு வேண்டுமானால் இவர் பகையாகிப் போகலாம். ஆனால் நல்லதை நாடும் நாட்டு மக்கள் பலருக்கு நண்பராக இருக்கிறார். தமிழில் இன்றி ருக்கிற புலனாய்வு இதழ்களில் முதலிடத்தில் இருப்பது நக்கீரன். வாரமிருமுறையாத லால் வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழ் வந்துவிடுமளவு வேகமும் வேண்டும். செய்தி களைத் திரட்டியாகவும் வேண் டும். மூன்று லட்சத்துக்கும் அதிகமான இதழ்கள், ஆசிரியர், செய்தியாளர்கள், அச்சகம், விற்பனை என்று அந்த வளை யம், வளைய வளைய உழைத் தாக வேண்டும். இவற்றிற்கெல் லாம் மிகப்பெரிய அர்ப்பணிப்பு, தியாகம், உழைப்பு, போராட் டம் ஆகியவை வேண்டும். எல்லாமும் இருப்பதால் "நக்கீரன்' நிமிர்ந்து நிற்கிறது.

நக்கீரன் ஒரு சமூகப் பிரக்ஞையுள்ள வாரமிருமுறை இதழ். திடம், துணிவு, தெளிவு, தீர்க்கமான இலக்கு இவற்றி லெல்லாம் சரியாக இருக்கிற சரித்திரம் படைத்த இதழ். தேர்தல் நேரங்களில் நக்கீரனின் கருத்துக் கணிப்பு தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும். கருத்து வெளியிடுவதில் வேண் டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடுகளே நக்கீரனுக்கு கிடையாது. நக்கீரன் நிமிர்ந்து நிற்கிறது.

குற்றங்களின் பின்னணி யில் அரசியல், அதிகாரம், ஆள் பலம், அடிதடி போன்றவை இருப்பதை வெளிச்ச உலகிற்கு வரவழைக்கிற ஆண்மைக்காக நக்கீரனை நமது நாடே நன்றியுணர்வுடன் பாராட்டு கிறது.

நக்கீரன் கோபால் அவர்களைப் பற்றி...

"கவிதை உறவு' கட்டுரைத் தொடர்ச்சி அடுத்த இதழில்...

(புழுதி பறக்கும்)

_______

தேர்தல் கூத்து

d

விருதுநகர் தொகுதியில் சிவகாசி சுற்று வட்டாரங்களில் பட்டாசுத் தொழில்தான் பிரதானமென்பதால், "பட்டாசுத் தொழிலைக் காக்க வேண்டு மென்றால் மோடியே மீண்டும் வரவேண்டுமென்றும், அதற்கு ராதிகா சரத்குமாரை ஆதரிக்க வேண்டுமென்றும்' கூறி, பட்டாசு உற்பத்தியாளர்களைச் சந்தித்துவருகிறார் சரத்குமார். காவிகளோ, "அடுத்து மோடிதான்.. பார்த்துக்கங்க.. அப்புறம் உங்க இஷ்டம். இந்தத் தொகுதில பா.ஜ.க. ஜெயிக்க லைன்னா.. பட்டாசுத் தொழிலுக்கு கஷ்டம்.'’ என மிரட்டல் ரீதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்படியே போனால், பட்டாசு உற்பத்தியாளர் களும், தொழிலாளர்களும் பா.ஜ.க. ஆதரவுநிலை எடுத்துவிடுவார்களோ வென்று பதறிய சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன், பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினரை விருதுநகருக்கு அழைத்துவந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவைத்தார். "பட்டாசுத் தொழிலுக்கு அதிகாரிகளால் இடைஞ்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று சங்கத்தினர் சில கோரிக் கைகளை முன்வைத்தபோது, “"பட்டாசு விபத்துகளில் தொழி லாளர்கள் உயிரிழப்பது தொடர் கிறதே...''’என்று வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர். இச் சந்திப்பின்போது, "இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்' என்று மேம்போக்காகச் சொல்லப்பட்டிருக்கிறதாம்! பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டுவதென்பது இதுதானோ?

-ராம்கி

டந்த 24ஆம் தேதி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைக் கண்டதும், "மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கு, ஆனால் மோடி பிரதமராக வரக்கூடாது. மோடி ஆட்சியில் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறவில்லை. வெளியுறவுக் கொள்கைகளிலும் சிறப்பாக செயல்படாததால், சீனாவின் அச்சுறுத்தல் நமக்குள்ளது. அதனால் மோடி பிரதமராகக்கூடாது. 400 தொகுதிகளில் வெற்றி என்பதெல்லாம் சும்மா அடிச்சுவிடுறது. சும்மா கணவு கண்டுண்டே இருக்கா. தமிழகத்தில் தி.மு.க. -பா.ஜ.க. என்று களம் மாறிவிட்டதாக இவாளாதான் சும்மா சொல்லிண்டிருக்கா. மற்றவர்கள் பேசவேண்டும். பணத்தைக் கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் வெற்றி பெறமுடியாது. அதை மக்கள் நம்பவேண்டும். மோடி என்னை தூரமாக வைத்துள்ளார். நா என்னமோ எல்லாத்தையும் பையில் எடுத்துண்டு போயிடுவேன்னு நினைக்கிறா'' என்று நகைச்சுவையாகக் கூறினார். பா.ஜ.க.வுக்கு உள்ளுக்குள்ளேயே எதிரி!

-அண்ணல்