(261) பரப்பன அக்ரஹார சிறை!
செல் அறை 23 -கைதி எண்:7402 -வெள்ளை சேலை! -சிறையில் ஜெ.
30ஆம் நாள்... பரப்பன அக்ரஹார சிறை, பெங்களூரு. சிறை மருத்துவமனையில பரிசோதனை. டாக்டர் செக்கப் முடிச்சு, வலதோ, இடதோ கால் எடுத்துவச்சு சிறைக்குள்ள இருக்கிற 23-ம் நம்பர் அறையில் இருக்கிற செல்லுக்கு உள்ள ஜெயலலிதா போறாங்க. கைதி எண்:7402. அதவிடக் கொடும... தண்டனை பெற்ற சிறைவாசிங்கிறதுனால வெள்ளச் சேல + சாப்பிடுற தட்டெல்லாம் கொடுக்குறாங்க. கைத்தாங்கலா செல்லுக்குள்ள...
வெளியே ஒரே பதட்டம். இருக்காதா பின்ன... "மத்தியானம் சோறு திங்க நம்ம வூட்டுக்குப் போயிடலாம், வெயிட் பண்ணுங்க...'ன்னு டிரைவர்ட்ட சொல்லிட்டு கோர்ட்டுக்குள்ள போனவங்கள, அப்படியே பூப்போல தூக்கிட்டுப் போயி ஜெயில்ல... அதுவும் முரட்டு ஜெயில்ல 23ம் நம்பர் ரூம்ல குத்தவைக்கச் சொன்னது வெளிய தெரிஞ்சு உடன்பிறப்புக, அமைச்சருக, மன்னார்குடி சொந்தங்க எல்லாரும் எச்சி முழுங்காம "ஹே...'ன்னு பார்த்து... ஒரே ஓலம்.
நமக்கே கொஞ்சம் வருத்தம்தான். அந்தம்மாவாவது பதவி கெடச்சதும் இப்படி காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி சொத்தா வாங்கி குவிச்சிருக்கக்கூடாதுதான். அரசியல்வாதி எவன் சொத்து வாங்காம இருக்கான். எல்லாருமே பயங்கரமா வாங்குறான், விக்கிறான், நேக்கா நடந்துக்கிறான். நம்மள எவன் என்ன செய்யமுடியும்ங்கிற மமதையில ஆடுன ஆட்டம்தான் இப்ப பரப்பன அக்ரஹார சிறையில ஒடுங்கிப்போயி உக்காந்து கெடக்கக் காரணம். நமக்குத்தான் எதிரியே கெடயாதேங்கிற இறுமாப்பு. ஏன் இல்லைன்னா எழுதுனவங்கள கை, கால உடைக்க ஆட்டோல ஆள் அனுப்புறது, மீறி எவன் கேட்டாலும் கஞ்சா வழக்கு, நீதிபதி எதிர்த்துக் கேட்டா மருமகன்மேல கஞ்சா வழக்கு.
நம்ம மேல வழக்கு. கைது செய்ய ஆட்கள வீட்டுக்கு அனுப்புறது, கரண்ட கட் பண்றது, எவனாவது பிரிண்ட் பண்ணுனான்னா அவனுக் கும் கரண்டு கட்டு... ஆத்தாடி ஆத்தா நீண்டுக்கிட்டே போச்சே!
ஒரு ஐ.ஏ.எஸ். பொம்பள தனக்கு சாதகமா கையெழுத்துப் போடலைன்னதுக்கு மூஞ்சில ஆசிட். அவங்க எம்.எல்.ஏ.வுக்கே கை, கால் உடைப்பு. தெரியாத்தனமா எதுத்துக் கேட்ட சு.சாமி உயிர் பயத்துல மெட்ராஸ விட்டே ஓட்டம். எதிரா கருத்துச் சொன்ன தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனுக்கு அடி. அவர் தங்குன ஸ்டார் ஹோட்டல நொறுக்கி ஒரு கூடைல அள்ளிட்டாங்க. அத ஒரு புகாராக்கூட கொடுக்கல தாஜ் ஸ்டார் ஹோட்டல். இப்படியே லிஸ்ட் போட்டோம்னா நீண்டுக்கிட்டே போகும்...! இப்ப வேணாம்... "நீங்களும் மறுபடியும் முதல்லயிருந்தா'ன்னு மூஞ்சிய சுளிக்க ஆரம்பிச்சிருவீங்க.
அய்யன் திருவள்ளுவர் ஒரு குறள்ல சொல்வாரு...
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்''
-கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணையில்லாத காவலற்ற அரசன் (அரசி) தன்னைக் கெடுக்கும் பகைவன் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
தங்கத் தட்டுல சாப்பிட்டு, திரும்புன பக்கமெல்லாம் ஏவலுக்கு வேலை செய்ய ஆள். அம்பு சேனைன்னு இருந்தவங்கள கொண்டுபோயி, பாதாளச்சிறை மாதிரி இருக்குற (அவங்க பார்வைக்கு பரப்பன அக்ரஹார சிறை பாதாளச் சிறைதான்) இடத்துல குடிவச்சா... நெனச்சா பகீருங் குது. எங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு இந்தம்மாவால சிறைக்குப் போன ஏராளம் பேர் (அதுல நானும் ஒருத்தன்) நெனப்பாங்களா இல்லையா...?
அது சரி... பொதுவாக தண்டனை சிறைவாசின்னா சிறையில ஏதாவது ஒரு வேலை செய்யணும். மேடத்துக்கு என்ன வேலை கொடுத்தாய்ங்கன்னு ஜெ. சொத்துக் குவிப்பு வழக்க, ஒரு வக்கீலைப் போல அதுலயே கெடந்து கரைச்சு குடிச்சவரு நம்ம தம்பி. அவருட்டே கேட்டேன்.
அவரு உடனே பிச்சைமுத்துங்கிற பெஞ்ச் கிளார்க்... அப்ப குன்ஹா நீதிபதிட்ட இருந்தவர்ட்ட கேட்டுச் சொன்னாரு.
தம்பி பிரகாஷ், பெஞ்ச் கிளார்க் பிச்சை முத்துக்கிட்ட கேட்டு லைனுக்கு வந்தார். "அண்ணே... அந்தம்மா தண்டனைக் கைதிங்கிற தால அவங்களுக்கு ஊதுபத்தி உருட்டுற வேலை குடுத்தாங்களாம். வேலை குடுத்தாங்களேயொழிய, அந்தம்மா அந்த வேலையே செய்யலையாம்''னு ஒரே மூச்சுல சொன்னார். இது பரப்பன அக்ரஹார சிறை சம்பவம். இதாச்சா...
அடுத்து...
அவசர, அவசரமா கர்நாடக உயர்நீதிமன்றத் துல பெயில் போட்டாங்க.
டெல்லியில இருந்து அந்தம்மாக்காக ஆஜரானவரு பெருசு ராம்ஜெத்மலானி, தி கிரேட் அட்வகேட். அது புட்டுக்கிச்சு... பெயில் டிஸ்மிஸ்.
அடுத்து சட்டுப்புட்டுன்னு டெல்லிக்கு ஒரே ஓட்டம். உச்சநீதிமன்றத்துல ஃபைட், பெயில். இதுக்கு ஆஜரானவரு மூத்த வழக்கறிஞர் நாரிமன். இவரும் ரொம்பப் பெருசு. பல கோடி ஃபீஸ். ஆனா சக்ஸஸ்ஸ்ஸ்... பெயில் கிராண்டட். "அப்பா டா'ன்னு மூச்சு விட்டாங்க எல்லாரும்.
சரியா 30 நாள் களி திண்டாக மேடம். பெயில்ல வெளிய வந்துட் டாங்க. அதோட சும்மா விடல. குன்ஹா தீர்ப்ப எடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்துல அப்பீல். நீதியரசர் குமாரசாமியின் நீதிமன்றம்.
நம்ம தம்பி சீனியர் நிருபர் பிரகாஷ், "ஜெ.' வழக்கே கதின்னு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வாசல்லயே கிடந் தார். அவரும், அவ ரோட நம்ம போட் டோகிராபர்கள் அசோக் மற்றும் ஸ்டாலினும் அங்கேயே ஜாகை. அதற்கு அடுத்தடுத்து ஃபாலோ-அப் ஆக பெங்களூரு நீதிமன்றம்.
நீதிபதி குமாரசாமி தீர்ப்பு பத்தி தன் நடையிலேயே தம்பி பிரகாஷ் விவரிக்கிறார்...
மே 11, 2015 திங்களன்று கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பை வாசிக்க அவருக்கு மூன்றே நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.
18 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அப்பீல் மனு மீது தீர்ப்பு வழங்கு வதற்கு சரியாக 11 மணிக்கு தனது இருக்கையில் உட்கார்ந்தார் நீதிபதி குமாரசாமி. 3 நிமிடங்களில் தீர்ப்பின் முக்கிய பகுதிகளைப் படித்தார்.
அதில் ஜெ. உள்ளிட்ட நால்வரும் விடுதலை என அவர் சொல்வதற்கு 30 நொடிகள் மட்டுமே தேவைப்பட்டன. சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லாது என்பதுதான் நீதிபதி குமாரசாமி அளித்த விடுதலைத் தீர்ப்புக்கு அடிப்படை காரணம். முழுமையான தீர்ப்பில் அது பற்றித் தெரிவித்திருக்கிறார் என்ற ஜெ. வழக்கறிஞர்கள், பின்னர் அந்தப் பகுதிகள் குறித்து நம்மிடம் விளக்கினர்.
"வருமானத்திற்கு அதிகமாக ஜெ. 55 கோடி ரூபாய்க்கு சொத்துக்களைக் குவித்தார் என்பதுதான் குன்ஹாவின் தீர்ப்பு. அதை ஏற்கவில்லையென்றும், ஆவணங்களில் உள்ள விவரங்களைப் பார்க்கும் போது தன் வருமானத்தை விட 8.2% அளவிற்குத் தான் அதிக சொத்துக்களை ஜெ. வாங்கியிருக்கிறார் என்றும், உச்சநிதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இதனை வருமானத்திற்கு அதிகமான சொத்தாகக் கருத முடியாது (10%க்கு மேல் இருக்க வேண்டும்) என நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஒரே வீட் டில்தான் தங்கியிருந்தனர். அதனால் நால்வரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு சொத்துக்களைச் சேர்த் தனர் என்பதற்கான ஆதாரங்களை சந்தேகத்திற் கிடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா தனது சொத்துக்களுக்காக செலுத்தி யுள்ள வருமானவரிக் கணக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அது வருமானத்திற்குட்பட்ட சொத் தாகக் கருதுவதாகவும் நீதிபதி கூறியிருக்கிறார். அத்துடன், வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தில் செலவிட்டது ஜெயலலிதாவின் பணமல்ல எனவும் தீர்ப்பில் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவும் மற்றவர்களும் பல வங்கி களில் 21 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். கடன் தொகையை சொத்து என கணக்கிட முடியாது. அதுபோல போயஸ் தோட் டம் உட்பட புதுப்பிக் கப்பட்ட கட்டடங்கள், வாங்கப்பட்ட கட்டடங் கள்... இவற்றின் மதிப்பீடு சரியாக இல்லை. இது தொடர்பான வருமானத் தை மீறிய 27 கோடி ரூபாய்க்கு அரசுத் தரப்பு முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்தே நால்வரையும் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார்.''
இந்தத் தீர்ப்பு குறித்து பழைய நிகழ்வு ஒன்றை கலைஞர் அப்போது நினைவுகூர்ந்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், "இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தமக்கு நினைவுக்கு வருவதாக தெரிவித்திருக்கும் கலைஞர், "29-1-2015 அன்று விசாரணையின்போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, “சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ் வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்லவேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை’என்று கூறினார். நீதிபதி குமாரசாமி தெரிவித்த அந்த முடிச்சுகள் இப்போது அவிழ்க்கப்பட்டு விட்டனவா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மீண்டும் ஒரு முறை நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம், “"தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82-92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களைக் காட்டவும் இல்லை. 30-35 சதவிகிதம் வரைதான் வாதிட்டி ருக்கிறீர்கள்' என்றார்.
அப்போது ஜெயலலிதா வழக்கறிஞர், “"35 மார்க் எடுத்தாலே பாஸ்தான்'’என்றார். அதற்கு நீதிபதி குமாரசாமி, "பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் எதிர் தரப்பைவிட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ்பண்ண முடியும். அப்படிப் பார்த்தால் உங்களைவிட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ்'’என்று பதிலளித்தார். தற்போது ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கிவிட்டதாக நீதிபதி குமாரசாமி முடிவுக்கு வர என்ன நடைபெற்றது? எங்கே நடைபெற்றது?'' என்றும் கலைஞர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பெரிய பெருமூச்சு போயஸ் கார்டன்ல இருந்து... "நம்மளத்தான் யோக்கியச்சின்னு நீதிமன்றமே சொல்லிருச்சே'ன்னு கொஞ்சம் பெரிய்ய்ய... மூச்சா விட்டாங்களா? அதுல ஒரு கட்டையப் போட்டு அடைச்ச மாதிரி தமிழ்நாடு உளவுத்துறை அவசர, அவசரமா ஒரு சேதிய...
(புழுதி பறக்கும்)