poorkalam

(252) மிரள வைத்த எஃப்.ஐ.ஆர். பட்டியல்! -நக்கீரன் வாசகர்கள்!

போன இதழ்ல கூடுதலா 16 பக்கங்களோட நக்கீரன் இதழ் வெளிவந்தது எல்லாருக்கும் தெரியும். "போர்க்களம்' தொடர் மாத்திரமே 20 பக்கம் அதுல இடம் பெற்றிருக்கும். அந்தப் போர்க்களம் தொடர்ல நம்ம மேல தமிழ்நாடு முழுசும் பதிவான எஃப்.ஐ.ஆர பத்தி சொல்லியிருக்கோம். இந்தியாவுல ஒரு பத்திரிகை மேல இத்தன எஃப்.ஐ.ஆர ஒரே நாள்ல போட்டது, போடப்பட்டது, எல்லாத்துக்கும் காரணம் ஜெயலலிதாவும், ஜெயலலிதாவோட கட்சிக் காரங்களும். எந்த பத்திரிகை? நக்கீரன் பத்திரிகை மேலதான். அத நாம தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருப்போம். எல்லா மேடைகள்லயும் சொன்னோம்.... ஒரே நாள்ல எங்க மேல இவ்வளவு எஃப்.ஐ.ஆர். விழுந்ததுன்னு சொல்லிச் ... சொல்லி வாயே வலிச்சுருச்சு.

ஒண்ணு தெரியுமாண்ணே...

Advertisment

விரோதிகள போராடி சமாளிச்சிடுறோம். துரோகிகள கண்டுபிடிக்கிறதுல தோத்துப் போயிடுறோம். ஏன்னா... அவன் நம்மளோடயே கலந்து இருந்ததால...''

மேப்படி வீணாப்போன பரதேசிங்க... "புல்லா புரூடா... இப்படியெல்லாம் நடக்குமா? உலகத்துல எங்கயாவது இப்படி ஒருத்தருமேல இத்தன எஃப்.ஐ.ஆர். போடுவாய்ங்களா? சும்மா சொல்லிக் கிட்டுத் திரியுறாரு மீசைக்காரரு'' அப்படின்னு குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்தத என்னால உணர முடிஞ்சது, கேக்கவும் முடிஞ்சது.

இவ்வளவு எஃப்.ஐ.ஆர். ஒரு பத்திரிகை மேல விழுந்தா என்ன ஆகும்? நீங்களே சொல்லுங்க மக்களே...?

Advertisment

இந்த எஃப்.ஐ.ஆர். லிஸ்ட்ட பாத்ததும் மூச்சடைச்சு பாடையில போயிருப்பான். இல்ல... பெரிய, பெரிய மொரட்டு பூட்டப் போட்டுட்டு துண்டக் காணோம், துணியக்காணோம்னு அவன் அவன் ஓடீருக்கணும்... இல்ல, தூக்குப் போட்டு செத்துருக்கணும். இது எதுவும் நடக்காம இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, இன்னைக்கு வரைக்கும் நக்கீரன் கம்பீரமா பவனி வர்றதுக்கான முக்கிய பலமே எங்க நக்கீரன் குடும்பம்தான்.

அது ஒரு பக்கம்!

இப்ப அந்த அட்டவணை, தமிழ்நாடு முழுவதுமா போட்ட அந்த எஃப்.ஐ.ஆர். காப்பிகள் எல்லாத்தையும் நக்கீரன் தம்பிகள் மூலமாவும் த.ப.ஒ. மூலமாவும் கலெக்ட்பண்ணி, அத ஒரு அட்டவணையாக்கி உங்களுக்கு நாங்க குடுத்திருக்கோம். இது எல்லாத்தையும் கலெக்ட்பண்ணி ஃபைல் போட்டு வச்சது அட்வகேட் சிவகுமார். இப்ப அவரு நம்மகிட்ட இல்ல. அந்தப் பணிய மறுபடியும் இப்ப சிரமேற்கொண்டு செஞ்சது என்னுடைய ரெண்டாவது மகள் ஆர்.வி.சாருமதி. அவங்க லண்டன்ல பாரிஸ்டர் முடிச்சிருக்காங்க. இப்ப நம்ம வழக்குகள் எல்லாத்தையும் அட்வகேட் தம்பி சுபாஷோட சேர்ந்து பாத்துக்கிறாங்க. எஃப்.ஐ.ஆர். சம்பந்தப்பட்ட பொறுப்ப அவங்க உடனே செஞ்சு குடுத்தாங்க. நான் அவங்கள்ட்ட தான் கேட்டேன், அந்த மொத்த லிஸ்ட்டும் இந்த இதழுக்குத் தேவைப்படுது, கலெக்ட் பண்ணி குடுங்கப்பான்னு. சொன்னவுடனே, அந்த அட்டவணைய கையில குடுத்தாங்க. அதுல முக்கியமா அந்த கேஸ் கட்டுல இருந்து ஒரு விஷயத்த எடுத்துக் குடுத்தாங்க.

ff

அப்ப இருந்த டி.ஜி.பி. சைடுல இருந்தே "நக்கீரன் கோபால் மேல தமிழ்நாடு பூராவும் எத்தன எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கு?'ன்னு சொல்லி கோர்ட்ல தாக்கல் பண்ணுன சர்ட்டிபைடு காப்பிய எடுத்து "போலீஸ் தரப்புலயே குடுத்துருக்காங்கப்பா'ன்னு சொல்லி என் மக எடுத்துக் குடுத்தாங்க. அதத்தான் போன இதழ்ல நடுப்பக்கத்துல பிரசண்ட் பண்ணி யிருந்தோம் தனியா.

போனமுறை போட்ட அட்டவணையில என்னென்ன போட்டிருந்தோம்னா, எஃப்.ஐ.ஆர். நம்பரு, எந்த எந்த ஊரு, என்னென்ன செக்ஷன்? அப்புறம் புகார் குடுத்த அந்த அ.தி.மு.க. கட்சியச் சேர்ந்த அந்த நபரோட பேரு. இத மாவட்ட வாரியா வரிசைப்படுத்தி நாம குடுத்தோம். அத எல்லாருமே வாய் பிளந்துதான் பாத்தாங்கன்னு வச்சுக்கங்களேன்.

தம்பி சந்திரமோகன் (நக்கீரன் அலுவலக கணக்கு மேலாளர்), "அண்ணே... எஃப்.ஐ.ஆர். லிஸ்ட்ட படிச்சுப் பாத்துட்டு நான் மிரண்டு போயிட்டேன். இப்ப நினைச்சாக்கூட அந்தப் பயம் எங்களவிட்டுப் போகல. அப்போ நாங்க ஆபீஸ்ல இருந்தப்ப, ஒவ்வொரு ஊருல இருந்தும் அங்கங்க எஃ.ப்.ஆர். போடுறாங்கன்னு வரிசையா செய்தி வர வர... உண்மையச் சொல்லணும்னா... ரொம்பவே பயந்துட்டோம்''னு வார்த்த வராம மென்னு... மென்னு முழுங்கிச் சொன்னாரு.

"சும்மா சொல்லுங்க சந்திரமோகன்''ன்னு சொன்னேன்.

"இதோட நக்கீரன முடிச்சி, மூட வச்சிரு வாங்க. நக்கீரன் இனிமேல் அவ்வளவுதான்னு நினைச்சோம்னு சொல்லுங்க...''ன்னேன்.

வேண்டா வெறுப்பா தலைய ஆட்டினார்.

"விளக்கமா சொல்லணும்னா நக்கீரனுக்கு சங்கு ஊதிருவாங்க அப்படின்னு நினைச் சோம்னாரு.''

"அது பொய்யில்ல சந்திரமோகன், உண்மைதான். அந்தச் சூழல் அப்படித்தான் இருந்துச்சு''ன்னேன்.

நக்கீரன இதோட குளோஸ் பண்ணீர ணும்ங்கிறதுதான் அவங்களோட திட் டம். அதுக்காக டெல்லி வரைக்கும் மூவ் பண்ணியிருக் காங்க. பிரஸ் கவுன்சில், மெட்ராஸ் சி.எம்.எம். கோர்ட், அப்புறம் டெல்லி பிரஸ் அத்தாரிட்டி எல்லாம் இருக்கு துல்ல அங்க... இங்க...ன்னு அவங்க ஒரு குரூப் மெனக் கெட்டு அலைஞ் சாய்ங்க, நக்கீரன் பத்திரிகைய குளோஸ் பண்ணியேபுட ணும்னு. நக்கீரனுக்கு முடிவுரை எழுதிர ணும்னு ஜெயலலிதாவும் வெறிகொண்டு அடிச்சாங்க.

என்னைய குளோஸ்பண்ணீரணும்ங்கிறது ஒரு பக்கம், ஆபீஸ அடிச்சு தரைமட்டமாக்கணும்னு அது ஒரு பக்கம், அதோட நக்கீரன் இருக்கக் கூடாது... நக்கீரன் பத்திரிகைன்னு ஒண்ணு இருந்த தடமே இருக்கக்கூடாதுன்னு பெருந்திட்டம் போட்டி ருக்காங்க. அதத்தான் சந்திரமோகன் எங்கிட்டச் சொன்னாரு. இதச் சொன்னப்ப அவர் கண்ணும் கலங்கிருச்சு. இது சந்திரமோகனோட நினைப்பு மட்டும் இல்ல. அப்ப இருந்த நக்கீரன் தம்பிகள் எல்லாருமே ஈரக்கொலைய கையில புடிச்சுக் கிட்டுத்தான் ஆபீஸ்ல இருந்திருக்காங்க.

ஏன் போன இதழ்ல நாம இலவசமா 16 பக்கத்த சேர்த்து இவ்வளவு மெனக்கெட்டு போர்க்களத்துல கொடுத்தோம்ங்கிறது தெரியுதா... இதுக்குத்தான். போன இதழ் நக்கீரன புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கிட்டிருக்கேன். பிரிண்டாகுறதுக்கு முன்னாடி வரைக்கும். அத ரொம்ப நேர்த்தியா தம்பி கணேசன், செந்தில் எல்லாரும் டீமா சேர்ந்து நேர்த்தியா அட்ட வணை பண்ணிருப்பாங்க. எனக்கு ரொம்பவே புடிச்சிருந்தது. இப்பகூட அத புரட்டிப் பார்க் கையில பிரமிப்பாவே இருக்கும். தம்பி இரா.த. சக்திவேலும், அட்டவணையப் பாத்துட்டு, "ரொம்ப பிரமிப்பா இருந்ததுண்ணே. எஃப்.ஐ.ஆர். இவ்வளவா... இவ்வளவா? நக்கீரன் வரலாற்றுல இந்த நக்கீரன் ரொம்ப முக்கியம். நம்ம கடந்த ஆபத்தான பாதைய உரிச்சுக் காமிச்சிருச்சு''ன்னாரு.

ஆங்... சொல்ல மறந்துட்டேன். நாம போட்ட எஃப்.ஐ.ஆர். பட்டியலப் பாத்துட்டு, எனக்குத் தொலைபேசியில, "ரொம்ப பரபரப்பாவும், ஆச்சரியமாவும், அதிர்ச்சியாவும் பேசுன இன்னொரு தம்பி யாருன்னா... சினிமா டைரக்டர், தம்பி திருவாரூர் பாபு. "மிரண்டே போயிட்டேண்ணே.... நீங்க போட்ட எஃப்.ஐ. ஆர். லிஸ்ட்ட பாத்துட்டு. ஏன்னா, என் காது படவே சொன்னாங்க... "ஏதோ போற போக்குல பேசிட்டுப் போறாரு'ன்னு சொன்னவன்லாம் இருக்கான். இதப் பாத்து அவன்லாம் தூக்குப் போட்டுக்குவான். உண்மையிலேயே ஒரு மிரட்சிய குடுக்குதுணே''ன்னாரு. மிரட்டலுக்கு இன்னொரு வார்த்தை இருந்தா அதைக்கூட பயன்படுத்தலாம், அந்த அளவுக்கு பட்ட கஷ்டங்கள்...! எவ்வளவு பெரிய விஷயம். ஒரு பத்திரிகை இவ்வளவையும் தாங்கி, அதுக்குமேல எல்லாத்தையும் கலெக்ட்பண்ணி, இவ்வளவு கோர்வையா பண்றதுங்கிறது பெரிய விஷயம்ணே. இந்தியாவுல எந்த பத்திரிகைலயும் நான் இதுவரைக்கும் இப்படிப் பாத்தது இல்ல. நக்கீரன் இவ்வளவு பெரிய கஷ்டங்களையும் தாங்கி, அந்த கஷ்டத்த லிஸ்ட் போட்டுக் குடுத்திருக்கீங்க... ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். உங்க நக்கீரன் டீமுக்கு பாராட்டு''ன்னு ஆச்சரியப்பட்டு என்கிட்ட சொன்னாரு.

இப்ப இது பிரிண்டான பிறகு நாம இலகுவா பாக்குறோம். ஆனா அன்னைக்கி நாம எதிர்கொண்டது இருக்கு பாத்தீங்களா? போர்க் களத்துடைய உச்சமே அதுதான். கொடூர மனம் கொண்ட பெண் ஆட்சி பண்ணுனா... எந்த நேரத்துல என்ன நடக்கும்? அப்படிங் கிறதுக்குக்கான ஒரு உதாரணம்தான். அதுமாதிரி இனிமே யாருக்கும் நடக்காது...! ஏன்னா, இன்னொரு ஜெயலலிதா பிறக்க வாய்ப்பில்ல. இதுக்கு முன்னாடியும் ஜெயலலிதா மாதிரி யாராவது இருந்தாங்களான்னும் தெரியாது. ஆனா இந்திய அளவுல இதுதான் முதல் முறையா வும்... இதுவே கடைசி முறையாவும் இருக்கும்.

நக்கீரன்ங்கிற பத்திரிகை இந்த அடக்கு முறைய எல்லாம் எதிர்கொண்டு, அர்ப்பணிப் போட மக்கள்ட்ட செய்திகள கொண்டுபோய் சேர்த்துக்கிட்டிருக்கோம்.

எல்லாருமே ஆச்சரியப்படறதும், அதிர்ச்சி யடையுறதும் இந்த எஃப்.ஐ.ஆர். லிஸ்ட்ட பாத்துதான். மறுபடியும், மறுபடியும் ஏன் நான் இதுக்குள்ளயே சுத்திச் சுத்திச் சொல்லிக்கிட்டிருக்கேன்னா... எனக்கே இது ஒரு பிரமிப்ப குடுக்குது. அவ்வளவு பெரிய பிரமிப்பு! போன இதழ் "போர்க்களம்' அத்தியாயத்துக்கு, தம்பி ஷ்யாம் போட்டுருக்கிற படம்... அந்த ஃபைல் எல்லாம் டேபிள்ல இருக்கிற மாதிரி இருக்கு பாத்தீங்களா... எல்லாமே நிஜம்! ஒவ்வொரு ஊரு லயும் எஃப்.ஐ.ஆர். எல்லா எஃப்.ஐ.ஆர்.களும் கையில இருக்கு. எல்லாமே தனித்தனி ஃபைல் களா வச்சிருக்கோம். இப்ப, அட்டவணை போட்டுட்டோம். என்னென்ன செக்ஷன்னு சொல்லிட்டோம். எந்த ஊரு, எஃப்.ஐ.நம்பர் எல்லாமே போட்டாச்சு. இப்ப அந்த எஃப்.ஐ.ஆருக்குள்ள என்ன எழவு இருக்கு அப்படின்னு ஒரு கேள்வி இருக்கும் இல்லியா?

அதுல முக்கியமான ஷரத்து கள்ல 5 எப்படியும் வேணும்னு என் மக அட்வகேட் சாருமதி கிட்ட கேட்டேன்.

மொத்த எஃப்.ஐ.ஆரை யும் பொறுமையா புரட்டிப் பாத்து, அதுல இருந்து முக்கியமான ஏரியாக்கள்ல உள்ள 5 எஃப்.ஐ.ஆர எடுத்துக் குடுத்தாங்க. அதுக்குள்ள என்ன இருக்கு + அதோட சாராம்சம் எல்லாத்தையும் சேர்த்து, அந்த 5 எஃப்.ஐ.ஆரோட காப்பிய உங்களுக்காக பிரசுரம் பண்ணுறோம்.

(புழுதி பறக்கும்)

ff