(251) மலைக்க வைத்த எஃப்.ஐ.ஆர்.கள்!
தம்பி வக்கீல் சிவா மொத்த எஃப்.ஐ.ஆரையும் டேபிள்ல வைக்கிறாரு. விடுபட்டது எல்லாத்தையும் ஒவ்வொண்ணா சேர்த்துச் சேர்த்து கொண்டுவந்து வைக்கிறாரு. அப்படியே ஏற, இறங்க லிஸ்ட்ட பாக்குறேன்... அவ்வளவு எஃப்.ஐ.ஆரையும். நம்ம ஊருல சொல்லுவாய்ங்கள்ல... அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே போகுதுன்னு. அது மாதிரி, அந்த லிஸ்ட்ட கைல வச்சுப் பாத்தோம்னா, நிசமாவே படத்துல வர்ற அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே போகும். அத, நான் இப்பதான் நெனைச்சுப் பாக்குறேன். "உலக கின்னஸ் சாதனைக்கு நாம அப்ளை பண்ணி யிருக்கணும்... விட்டுட்டியேடா கோவாலு''ன்னு...
ஆமா...! ஒரு பத்திரிகை... ஒரே நாள்ல இத்தன எஃப்.ஐ.ஆரு. அதுல எத்தனை வகையான புகார் தெரியுங்களா? அத நீங்க படிச்சுப் பாத்தீங்கன்னா தெரியும். சாம்பிளுக்கு ஒவ்வொரு பகுதியிலயும் பதிவான 5, 6 எஃப்.ஐ.ஆர். புகார்ல என்ன எழுதியிருக்காங்களோ அத அப்படியே உங்களுக்குச் சொல்றேன். ஏன்னா... ஒவ்வொருத்தரும் டிசைன், டிசைனா புகார் கொடுத்திருக்காங்கன்னு அப்பதான் உங்களுக்குத் தெரியும். அத பின்னாடி சொல்றேன்.
"பிஹைண்ட்வுட்ஸ்'ங்கிற யு-டியூப் சேனல்ல நல்லகண்ணு ஐயாவுக்கும், எனக்கும்தான் ஒரே நேரத்துல "கோல்டன் அவார்டு' குடுத்தாங்க. அப்ப மேடையில நான் என் மேல இருக்கிற எஃப்.ஐ.ஆர். கணக்க சொன்னேன். "இன்னிக்கு வரைக்கும் என்னையப் பாக்குறவங்க அந்த எஃப்.ஐ.ஆர். பத்திதான் சொல்லுவாங்க."அந்த மேடையில சொன்னீங்களேண்ணே. ... அத்தனை எஃப்.ஐ.ஆர். இருக்கு, இத்தன வழக்கு இருக்கு' அப்படீன்னு, இன்னைக்கு வரைக்கும் ஆச்சரியமாவே சொல்லுவாங்க. நான் என்மேல இருக்கிற வழக்க பத்தி போற போக்குல சொன்னேன். ஆனா அதுதான் உலக அதிசயமாப் போச்சு. இப்படி ஒருத்தனுக்கு இருநூத்து சொச்சம் எஃப்.ஐ.ஆர். இருக்குங்கிறத எல்லாரும் பேசினாங்க. "நான் பாக்குற எல்லாரும் அந்த பிஹைண்ட்ஸ்வுட்ல வந்த செய்திய, நான் பேசுனத பார்க்காத ஆளே இல்ல' அப்படிங்கிற அளவுக்கு, எத்தன கோடி பேரு பாத்தாங்கன்னு எனக்குத் தெரியாது.
ஏன்னா... நான் வெகுஜனங்கள் நெறையபேர சந்திக்கிறேன். அந்த நிகழ்ச்சியில நான் சொன்னத எத வச்சி சொன்னேன்ங்கிறீங்க? அந்த மேடையில சொன்னது என் மேஜையில குவிஞ்சிருக்கிற அத்தனை எஃப்.ஐ.ஆரையும் வச்சுத்தான்.
அதனாலதான் அனுமார் வால் மாதிரின்னு கற்பனையையும் சேர்த்துச் சொன்னேன். அதாவது பலசரக்கு சாமான் இவ்வளவு வாங்கிட்டு வான்னு விளையாட்டுக்குச் சொல்வாங்க. அத அப்படியே கம்ப்யூட்டர் பேப்பர் மாதிரி பிரிச்சா "சல்'னு உருண்டு ஓடும் பாத்தீங்களா... அது மாதிரி இருந்துச்சு. டேபிள்ல இருக்கிற அந்த எஃப்.ஐ.ஆர். எல்லாத்தையும் பாத்துப் பாத்து மலைச்சுப் போயிட்டேன். ஆத்தாடி... இத்தன எழவுல இருந்தும் என்னைக்கு நாம கரை சேர்றது? நம்ம வாழ்க்கைய திட்டம் போட்டு காலிபண்ணீருச்சு அந்தப் பொம்பள ஜெயலலிதா.
அது எல்லாத்தையும் ஒவ்வொண்ணா பாக்குறேன். அப்போ தம்பி சிவகுமார் என்ன பண்ணுனாருன்னா, தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா ஊருலயும் பதிவான எஃப்.ஐ.ஆரையும் மாவட்ட வாரியா பிரிச்சு அதுக்கான அட்டவணைய போட்டு வச்சிருந்தாரு. அதத்தான் இந்த இதழ்ல கூடுதல் பக்கங்களா சேர்த்து தர்றோம்.
எல்லாரும் "வார்த்தைக்கு வார்த்த இருநூத்து சொச்சம் எஃப்.ஐ.ஆர்... எஃப்.ஐ.ஆர்'ங்கிறாரு, சும்மா போற போக்குல சொல்லிட்டுப் போறாரே'ங்கிற மாதிரி நெனச்சிறக்கூடாதுல்ல.
ஏன்னா, நமக்கு துரோகம் பண்ணிட்டுப் போன சொறிநாய்கள் கொஞ்சம் இருக்கு. ஒரு சுலோகம் சொல்லுவாங்க. "துரோகம் செஞ்சவன்கிட்ட எப்பவுமே விலகி இருங்க... தூக்குக் கயிறும் சரி, துரோகியும் சரி... கழுத்த நெரிக்காம விடாது'ன்னு. அது மாதிரி ஒரு துரோகி நம்ம கழுத்த நெரிக்கிற மாதிரி நமக்கு எதிரா அவ்வளவு விஷயத்த... நம்மளாலயே உருவாகி, நம்மளாலயே வளர்ந்து, நமக்கு எதிரா புழுதிய வாரி ஒரு துரோகி தூற்றிக்கிட்டிருக்கு. அதுல கூட்டணி வேற போட்டுக்குது மூதேவி... நாங்கதான் அப்படிங்கிற மாதிரி. (சரி... இந்த நேரத்துல அது வேண்டாம் விட்டுரலாம்...)
அந்த மாதிரி துரோகம் பண்ணுன கொஞ்சம்பேரு ஆளுகள சேர்த்துக்கிட்டு சேறு வாரி இறைக்குதுங்க. அதுக்கும் சேர்த்துதான் இந்த அட்டவணை.
சோர்வடைந்துவிடாதே, வாழ்க்கை நீ எதிர்பாராத நேரத்தில்தான் பல ஆச்சரியங்களைக் கொண்டுவரும்' -முதுமொழி.
"ஏன் இந்த நேரத்துல முதுமொழிய சொல்ற' அப்படின்னு எல்லாருக்கும் ஒரு கேள்வி இருக்கும். சின்ன பிரேக்தான்!
"கூசே முனுசாமி வீரப்பன்'னு சொல்லிட்டு ஒரு டாக்கு சீரிஸ்... (டாகுமென்டரி படம்) என் பெரிய மக ஆர்.வி.பிரபாவதியும் அவங்க டீமும் இந்த டாக்கு சீரிஸ "தீரன் புரொடக்ஷன்ஸ்' மூலமா தயாரிச்சு வெளியிட்டாங்க, டிசம். 14ந் தேதி ழஊஊ 5 ஓ.டி.டி. தளத்துல. இன்னியோட 50 நாள் தாண்டுது.
நான் ஏற்கனவே சொன்னது மாதிரிதான் "வாழ்க்கையில் நீ எதிர்பாராத நேரத்தில்தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்'ங்கிறது மாதிரி.
28 ஆண்டுகளுக்கு முன்னாடி வீரப்பனுடைய நேர்காணல நக்கீரன் எடுத்து அத ஒரு பொக்கிஷமா பத்திரப்படுத்தி வச்சிருந்தோம். ஏன்னா, பிற்காலத்துல அது பயன்படும் அப்படிங்கிறதுக்காகல்லாம் இல்ல. வீரப்பன்ங்கிறவரு, அவரோட வாழ்க்கையப் பத்தி வீடியோல அவரே சொல்றாரு. அத நாம எடுத்து வச்சிருந்தோம். நெறையபேரு அதுக்கு முட்டி மோதுனாங்க. நாம யாருக்கும் இசையல. அதேநேரத்துல, எங்களோடயே இருந்து எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு மொத்தத்தையும்... நான் முதல்ல சொன்னேன்னு சொன்னான் பாருங்க...!
நம்ம வாழ்க்கையில நாம படிச்ச படிப்பு சொல்லித் தர்றத விட... நம்மகூடவே இருந்து ... ஒண்ணுமண்ணா இருந்து, நம்மோடவே நடிச்சிக் கிட்டு... அதுமாதிரி இருந்த சிலரோட நடிப்பு கற்றுத் தரும் பாடம் இருக்கு பாத்தீங்களா... வாழ்க்கைப் பாடம்! அது ரொம்ப பெரிசு. அதுல நெறைய கத்துக்கிட்டோம்.
இப்ப அந்த சகுனியோட திட்டத்துல இருந்து, இத காப்பாத்தி.. சகுனி போட்ட வலையில இருந்து தப்புச்சி, என்னுடைய மகள் டீம் உலகமே மெச்சுற அளவுக்கு மிகப்பெரிய டாக்கு சீரிஸ் ஒண்ண வெளியிட்டிருக்காங்க. அத நெனைச்சு நாம இந்த நேரம் கர்வம் கொள்ளலாம். கர்வம் கொள்ற அளவுக்கு அது ஆகச்சிறந்த டாகுமெண்ட்ரில ஒண்ணுன்னு உலக அளவுல பேசப்பட்டிருக்கு... பேசப்பட்டுக்கிட்டிருக்கு.
IMDB அதாவது Internet Movie Data Base அப்படிங்கிற இணையதளத்துல "கூசே முனிசாமி வீரப்பன்' எபிஸோடுக்கு ரேட்டிங் 9.2. அதாவது 10-க்கு 9.2ன்னு குடுத்துருக்காங்க. இது உலக அளவுல ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாவும், நம்பகத்தன்மை இருக்கிறதாவும் பேசிக்கிட்டிருக்காங்க.
மேப்படி IMDBல் 10-க்கு 7 மதிப்பெண்ணுக்கு அதிகமா வாங்குற படைப்புக்கு உலக அளவுல பெரிய பேர் உண்டுன்னு சொல்றாங்க. ஆனா நம்மோட வீரப்பன் டாகுமெண்டரி 9.2 மதிப்பெண் வாங்கி இன்னும் உலக அளவுல முதல் ரெண்டு, மூணு இடத்துல இருப்பது நமக்குக் கெடைச்ச மாபெரும் வெற்றி.
இந்த நேரத்துல இது எதுக்கு? அப்படின்னு எல்லாரும் ஒரு கேள்வி வரலாம். ஏன்னா, நம்முடைய நக்கீரன் 35 ஆண்டுகள கடந்து 36-வது ஆண்டு நடக்குது. இந்த அத்தியாயத்துல முக்கிய பங்கு அந்த வீரப்பன் எபிசோடுக்கு இருக்கு. அத பெருவாரியான மக்கள் நேசிக்கிற அளவுக்கு நல்ல ஒரு டாகு மெண்ட்டா (டாக்கு சீரிஸ்) மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்த்த எங்க நக்கீரன் டீம்... நக்கீரன் டீம்னா நான் சொல்றது, என் மகள் பிரபாவதியுடைய டீம்,
என் மகள் R.V.பிரபாவதி, தம்பி வசந்த், தம்பி ஜெய் ஹாஸ்மி, அதனுடைய டைரக்டர் சரத், அதோட... ZEE 5 டீம், இவங்க எல்லாரும் சேர்ந்து ரொம்ப நேர்த்தியா மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்த்திருக்காங்க.
"கூசே முனிசாமி வீரப்பன்' டாகுமெண்ட்ரி, நக்கீரனுக்கு உலக அளவுல ஒரு மிகப் பெரிய பேர வாங்கிக் குடுத்துச்சு. ஏன்னா, உண்மை என்னைக்காவது ஒருநாள் வெளிவரும்னு சொல்லுவாங்கள்லியா? அதுமாதிரி... நக்கீரன் டீம்ல இருக்கிற உண்மை. நாங்க உயிரப் பணயம் வச்சு வெளிக்கொண்டுவந்த அந்த உண்மை! நரித்தனம் பண்ணாம சேர்த்து வச்ச அந்த உண்மை...! இப்ப 28 வருஷத்துக்குப் பின்னாடி அது பேசப்பட்டிருக்கு. உண்மையிலேயே நக்கீரன் குடும்பத்துல உள்ள எல்லாருமே மார் தட்டுற அளவுக்கு பெரிய வெற்றியா கிடைச்சிருக்கு. இந்த வெற்றிய உங்களோட நான் இந்த நேரத்துல பகிர்ந்துக்கிறேன். ஏன்னா... ஒரே ஜெயிலு, கைது, எஃப்.ஐ.ஆரு, ஓடுறது, ஒளியுறது...ன்னு இப்படியே ஓடிக்கிட்டி ருந்தமா? இதுக்கிடையில ஒரு சந்தோஷம்ங் கிறத ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப சமீபத்துலதான் அனுபவிச்சோம்ங்கிறதச் சொல்றேன்.
மறுபடியும் விட்ட இடத்துக்கு வர்றேன்.
இ ப்ப அந்த எஃப்.ஐ.ஆர். மொத்தத்தை யும் எடுக்குறோம். மொத்தத்தையும் எடுத்து மாவட்ட வாரியா தம்பி சிவா பிரிச்சு வச்சிருந்தத, அட்டவணையா தம்பி கணேஷ்ட்ட சொல்லி உங்களுக்காக குடுக்கச் சொல்லியிருக்கேன்.
எஃப்.ஐ.ஆர். அட்டவனை இதோ... .... ...!
இப்ப நீங்க மேல பாத்ததுபூராவும் எம்பேர்லயும், என்னுடைய தம்பிகள் பேர்லயும் தமிழ்நாடு முழுசும் பதிவான எஃப்.ஐ.ஆர். இதுல நாங்க முடிஞ்சவரையும் சேகரிச்சு உங்களுக்கு அட்டவணையா குடுத்துருக் கோம். இதுல சொல்லாததும் கொஞ்சம் கெடக்கு... அப்படியே. நடுப்பக்கம் ஒரு அட்டவணை இருக்கு பாத்தீங்களா...? அது, போலீஸ் தரப்புல இருந்து கோர்ட்டுக்கு குடுத்தது. இந்தமாதிரி இவங்க பேர்ல, இந்தந்த மாவட்டங்கள்ல, இந்தெந்த ஊர்கள்ல இவ்வளவு இருக்கு அப்படின்னு சொல்லி, அவங்களே கைப்பட அட்டவணை போட்டு தயாரிச்சு, அதுல போலீஸ் அதிகாரிகள் கையெழுத்துப் போட்டும் குடுத்திருப்பாங்க. அத நடுப்பக்கத்துல நாங்க வச்சி ருக்கோம். அந்த எஃப்.ஐ.ஆர்.கள்ல சாம்பிளுக்கு ஒரு நாலஞ்சு எப்.ஐ.ஆர்.கள படிச்சீங்கன்னா தெரியும். அவன்... அவன் இஷ்டத்துக்கு கதையளந்திருப் பாங்க. நம்ம மேல குண்டக்க மண்டக்கன்னு குற்றம்சாட்டியிருப் பாங்க. அத வர்ற இதழ்ல பார்ப்பீங்க...!
(புழுதி பறக்கும்)